Sunday, December 26, 2010

Bits & Bytes

தமிழகத்தில் ஒரு பேருந்து ஓட்டுநருக்கு இருக்கும் செல்வாக்கு கூட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இல்லாமல் இருப்பது காலத்தின் கோலம். சில நாட்களுக்கு முன்னதாக ஏதோ ஒரு அரசு விழாவில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரை வழிமறித்து , போஸ்டரில் தங்கள் கட்சியினரின் பேரை ஏன் போடவில்லை எனக் கேட்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டராழ்வார்கள் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் போஸ்டர் அடிப்பதற்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவருடன் மோதலில் ஈடுபட்ட சில பல பெயர்களையும் அவர்களின் கட்சிப் பதவி டைட்டிலையும் (!) படித்தபோது இவர்களில் யாருக்காவது குறைந்தபட்சம் IAS என்பதற்கு Expanded Meaning தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் வலுத்துவிட்டது. போதாத குறைக்கு யாரோ ஒரு கதர்வேட்டி மைனர் ஆட்சித்தலைவரை உடனடியாக மாற்றவேண்டும் என குரலை உயர்த்தியிருக்கிறார். அண்ணே இது வட்டச் செயலாளர் பதவி இல்லைன்னே. உயிரை கொடுத்து படிச்சாதான் Preliminary Exam-யையே Clear பண்ண முடியும். ஆட்சித்தலைவர் பதவியெல்லாம் வேட்டிய மாத்திக் கட்டிக்கிட்டா உடனே கொடுக்குற பதவி இல்லைங்கன்னா. அதுக்கெல்லாம் நிறைய உழைக்கனும். காமராஜர் ஆட்சியெல்லாம் அமைக்க போறதா அடிக்கடி ஏதோ சொல்லுறீங்க, அவரு ஆட்சியில் அதிகாரிகள எவ்வளவு கண்ணியத்தோட நடத்துனாருன்னு கொஞ்சம் பழைய பேப்பரையெல்லாம் படிச்சு தெரிஞ்சுகிட்டிங்கின்னா நல்லது. நீங்க ஆட்சித்தலைவரை வழிமறிச்சு கோதாவுல இறங்குனா கலவரத்த கட்டுப்படுத்த அவருக்கு முழு அதிகாரமும் இருக்குங்குற Basic Knowledge-யாவது யாராவது படிச்ச புள்ளகிட்ட கேட்டு தெரிஞ்சிகிடுங்கன்னா. துப்பாக்கி சூட்டில் தொடங்கி ஊரடங்கு உத்தரவு வரை எல்லாமே ஆட்சித்தலைவரின் அதிகாரத்திற்குட்பட்டது என்ற மினிமம் அறிவையாவது இனிமேல் கொஞ்சம் டெவலப் பண்ணிக்கோங்கன்னா, இல்லைன்னா சில்லரை/பிரியாணி/டாஸ்மாக் வஸ்து என எதைக் கொடுத்தாலும் ஓட்டு போடுறதுக்கு மக்கள் நிறையவே யோசிப்பாங்க……யாரோட கவனத்தையோ கவர்வதற்காக நீங்கள் போடும் இந்த சில்லி ஆட்டத்தையெல்லாம் மக்களோடு சேர்ந்து அந்த அருணாச்சலேஸ்வரரும் பார்த்துக்கிட்டு இருக்காரு….கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க தலைவா…..தேர்தல் வேற நெருங்கிகிட்டே இருக்கு :-)
----------------------------------------------------------------------------------

Social Responsibility இந்த வார்த்தையை தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை பேரையும் தினமும் நூறு முறை எழுத சொல்லி ஆர்டர் போட்டே ஆகவேண்டும். குறிப்பாக பெரிய நகரங்களில் வசிக்கும் படித்தவர்களுக்கு இதை கட்டாயமாக்கியே தீரவேண்டும். ஒவ்வொரு முறை தண்ணீர் பிரச்சனை தலையெடுக்கும்போதும் பழியை இயற்கையின் மீதும் ஆள்பவர்களின் மீதும் (தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மழையே வாராது போன்ற டுபாக்கூர் பிரச்சாரங்கள்) போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளும் நம்மவர்கள், மூன்று வாரங்களுக்கு மேலாக கொட்டித்தீர்த்த மழை நீரை சேகரிப்பதற்கு எத்தனை தூரம் மெனக்கெட்டார்கள் என்று தெரியவில்லை. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை உயர்த்தவேண்டும் என்பதை சொல்வதற்கு ஜெயலலிதாவோ, கருணாநிதியோ தேவை இல்லை. கொஞ்சம் Common Sense இருந்தால் போதும். கிடைக்கும் மழைநீரை எல்லாம் சேமிக்காமல் அலட்சியம் செய்துவிட்டு ஆறுமாதம் கழித்து ஒப்பாரி வைப்பது என்பது ஏறக்குறைய Routine Procedure ஆகவே மாறிவிட்டது. முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் மழைநீர் சேகரிப்பை மிகவும் Aggressive ஆக அவர்களின் அரசாங்கம் செயல்படுத்திய விதம் கட்சி பேதமின்றி பாரட்டுக்குறிய விஷயம். எல்லா வீடுகளிலும் கட்டாயப்படுத்தி இதை செய்ய வைத்ததற்காகவே எழுந்து நின்று கை தட்டலாம். இன்னொருபுறம் மழைநீர் சேகரிப்பு என்ற அடிப்படை விஷயத்தைக்கூட அரசாங்கம் கட்டாயபடுத்திய பின்னரே செய்வேன் என மக்கள் அடம்பிடிப்பது மிகவும் மோசமான Democracy. இருபதாம் நூற்றாண்டின் விதியை தீர்மானித்தது பெட்ரோல். இருபத்தொன்றாவது நூற்றாண்டை தீர்மானிக்கப்போவது யுரேனியமோ அல்லது புளுட்டோனியமோ அல்ல..நம்ம உபேந்திராவின் H2O தான். சீக்கிரமாக விழித்துக்கொண்டால் அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் நல்ல குடிநீரை வழங்கமுடியும்..இல்லையென்றால் அடிதடி நிச்சயம்.
----------------------------------------------------------------------------------

சென்ற முறை ஊருக்கு சென்றிருந்த போது சில இடங்களில் கீழே உள்ள வாசகத்தை காண முடிந்தது. “இந்த கட்டிடம் ---------- தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.------------------MLA அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது”. அந்த கட்டிடங்களை கட்டுவதற்காக செலவான தொகையையும் குறிப்பிட்டிருந்தார்கள். கட்டப்பட்டிருந்த கட்டடத்தையும் தொகையையும் பார்த்தபோது எனது காதை நானே ஒரு முறை தடவி பார்த்து சமாதானம் அடைந்துக்கொண்டேன். அடிப்படையில் சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களின் வரிப்பணத்திலிருந்தே வழங்கப்படுகிறது. விஷயம் இப்படியிருக்க, தொகுதி உறுப்பினர் ஏதோ தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து செலவழித்தது போல மார்க்கெட்டிங் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் மக்கள் வரி பணத்தைக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிவிப்பு பலகைகளில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருப்பார்கள், “இந்த பணிகள் அனைத்தும் உங்கள் வரிப்பணத்தில் இருந்தே செயல்படுத்தப்படுகின்றன” என பட்டவர்த்தனமாக எழுதி வைத்து விட்டுதான் கையில் மண்வெட்டியையே எடுப்பார்கள். நம்மூரிலும் இப்படி செய்தால், நேர்மையாக வரி கட்டும் மக்கள் கொஞ்சம் சந்தோஷப்படுவார்கள். கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்துக்கொள்வார்கள். எல்லாவற்றையும் அரசாங்கமே செய்கிறது என்ற மாயையை உருவாக்கிவிட்டதால்தான் சாமான்ய மனிதன் எந்த அக்கறையும் இல்லாமல் நடந்துக்கொள்கிறான். இனிமேலாவது நம்மூரில் இம்மாதிரியான போர்டுகள் வைக்கும்போது மக்களின் Contribution-ஐ முன்னிலைப்படுத்தினால் நாடு கொஞ்சம் செழிக்கும். தஞ்சாவூரில் நஞ்சையும் புஞ்ஜையும் நாலு போகம் நல்லபடியாக விளையும்.
----------------------------------------------------------------------------------

நீண்ட நாட்களாக குடைந்துக்கொண்டிருக்கும் கேள்வி…இதுவரை இந்தியாவில் நடைபெற்ற ஊழல் வழக்குகளில், இழந்த பணத்தில் அட்லீஸ்ட் 5% Recover செய்யப்பட்டிருக்கிறதா என்று…..தனியார் நிறுவனங்களிலும் அரசாங்களிலும் பணிபுரியும் ஊழியர்களிடம் சம்பளத்தை தருவதற்கு முன்பாகவே வரியை வசூல் செய்யும் நேர்மை தவறாத அரசுகள், இதுவரை எத்தனை ஊழல்களில் பணத்தை திரும்ப வசூல் செய்து அரசு Treasury இல் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யாராவது விஷயம் தெரிந்த புண்ணியவான் RTI போட்டால் மக்களுக்கு கொஞ்சம் குழப்பம் தீரும். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு ஊழல் நடைபெறும் போது அரசாங்கத்தின் அத்தனை இயந்திரமும் முடுக்கி விடப்பட்டு விசாரணைக்காக மட்டுமே கோடிகளில் செலவழிப்பது என்பது Fashion ஆக மாறிவிட்டது. End Result மட்டும் இதுவரை மக்கள் முன் வைக்கப்படாமல் இருப்பது அரசாங்களுக்கு Shame, Shame, Puppy, Shame. All the Monkeys know your name. ஊழல் பணத்தில் ஒரு நையா பைசாவை கூட மீட்டுக்கொண்டு வரமுடியவில்லை என்றால் அதற்கெதற்கு இத்தனை பில்டப் கொடுக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை. பார்லிமெண்ட் கேண்டினில் Subsidy Rate இல் கிடைக்கும் பஜ்ஜியை சாப்பிட்டு விட்டு தூங்கிவழியும் மக்கள் பிரதிநிதிகள் ஊழல் என யாரோ கூவியவுடன் பார்லிமெண்டிற்கே வாராமல் கட் அடித்துவிட்டு வெளியில் நின்று கொஞ்சநேரம் கூவிவிட்டு சிக்கன் பிரியாணி சாப்பிட வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். பதினாலு வருஷத்துக்கு முன்னால் சுக்ராம் a.k.a பண்டிட்ஜி என்ற தில்லாலங்கடி மினிஸ்டர் DoT-ஐ ஆல்மோஸ்ட் ஊத்தி மூடிவிடும் அளவிற்கு ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதெல்லாம் செய்யப்பட்டார். ஜெயிலில் இருந்தபடியே தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். போன வருடம் வெறும் இரண்டு லட்ச ரூபாய் அபராதத்துடன் கேஸை ஊத்தி மூடி பைலை தூக்கி பரண்மேல் போட்டுவிட்டார்கள். போபர்ஸ், பங்குச்சந்தை, தெஹல்கா டீம் வெளியே கொண்டுவந்த பாதுகாப்பு துறை ஊழல் என எல்லாவற்றையும் அமுக்கியபின் இன்னமும் ஊழலைப்பற்றி விசாரிப்பதாக மக்களை எத்தனை காலம் ஏமாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் நேர பேரத்திற்காகவும், தங்கள் பங்கு சரியாக வந்து சேராத காரணத்திற்காகவும் கத்தரிக்காயை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து Mr. பொதுஜனத்தை ஏன் நோகடிக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை.

Sunday, December 19, 2010

சச்சின் - Made In India



50 Test Centuries - Well Done Sachin !!!Keep Going.

Thursday, December 9, 2010

ஆழம் பார்த்த காங்கிரஸ், அவசரப்பட்ட ஜெகன் – பகுதி 2

1992-இல் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் இவர் வீட்டின் வாசல் வரை வந்திருக்கிறது….ஆந்திராவின் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் சென்னா ரெட்டி ஊழல் பிரச்சனைகளில் சிக்கி பதவி விலக நேரிட, அரியணையை பிடித்துவிடலாம் என துள்ளி எழுந்தவரை அப்படியே அமுக்கி ஓரங்கட்டியிருக்கிறார் அப்போதைய பிரதமர் P.V.நரசிம்மராவ் காரு. தனது வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அதிர்ஷ்ட தேவதையை Re-Route செய்து விஜய பாஸ்கர ரெட்டியின் வீட்டுக் அனுப்பி வைத்துவிட்டதில், PVN மீது YSR-க்கு ஏக காட்டம், ஆனால் பொங்கி எழ முடியாத நிலை. கடுமையாக கட்சிக்கு உழைத்திருந்தும் இரண்டாம் முறையாக வாய்ப்பு தவறியதில் மனிதருக்கு ஏகப்பட்ட ஏமாற்றம், வலி. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் அமைதியாக மூன்றாவது சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க தொடங்கியிருக்கிறார். இவ்வளவு நடந்துக்கொண்டிருந்த போதும் கட்சியில் இருந்து தன்னை எந்த நிலையிலும் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொண்டது இவரது தனித்தன்மை. ஜெகனிடம் இந்த Quality சுத்தமாக மிஸ்ஸிங்.

1999-2004 வரை அசுர பலத்துடன் ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹைடெக் நாயுடுகாருவை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் புதுதில்லியில் இருந்த காங்கிரஸ்வாலாக்கள் கையை பிசைந்து நிற்க, வழக்கம்போல ஆந்திர காங்கிரஸின் பெரிய தலைகள் ஜுப்ளி ஹில்ஸுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். எதிர்ப்பார்த்ததை போலவே கடப்பாவில் உட்கார்ந்திருந்த YSR-ஐ தூக்கிவந்து ஹைதராபாத்தில் எதிர்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர வைத்து கட்சியை காப்பாற்றும் உன்னத வேலையை தந்துவிட்டனர். 1983-இல் மாமனாரை எதிர்க்க களமிறக்கப்பட்டவர், பதினாறு வருடங்களுக்குப்பிறகு மருமகனை எதிர்ப்பதற்காக மறுபடியும் கொம்பு சீவப்பட்டு களமிறக்கப்பட்டார். எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தன்னை பயன்படுத்திக் கொண்டு, கட்சி வெல்லும் போதெல்லாம் சீனியர் தலை ஒன்றை முதல்வராக்கிவிட்டு தனக்கு அல்வா கொடுப்பதை இருமுறை தாங்கிக்கொண்டவர், இம்முறை விடுவதில்லை என தீர்மானத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார். தன்னை எதிர்ப்பதற்கு ஆந்திர காங்கிரஸ் கட்சியில் இனி ஆட்களே இருக்கக்கூடாது என நினைத்தவர், அப்போதைய முதல்வர் நாயுடுவின் ஒவ்வொரு மூவ்-வையும் கவுன்டர் அட்டாக் செய்து, ஆந்திர காங்கிரஸின் ஒரே முகம் தான் மட்டுமே என்ற இமேஜை சத்தமே இல்லாமல் வெகு வேகமாக வளர்த்துக்கொண்டார். ஒருபுறம் தெலுங்கு தேசத்தை வலுவிழக்கச் செய்வது, மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வராக தன்னை புரஜெக்ட் செய்து கொள்வது என இரண்டையும் ஒரே நேரத்தில் கனகச்சிதமாக அரங்கேற்றியிருக்கிறார் மனிதர். பரீட்சை நெருங்கும் போது மட்டுமே புத்தகத்தை பற்றி யோசிக்கும் சில புத்திசாலி Students-ஐ போலவே, 2003 இல் தேர்தல் நெருங்குவது தெரிந்தவுடன், அதுவரை ஏனோ தானோவென்று தெலுங்கு தேசத்தின் பார்டருக்குள் மட்டும் அரசியல் செய்து கொண்டிருந்தவர் தடாலடியாக ஆந்திரா முழுவதும் பாத யாத்திரை செய்யப்போவதாக அறிவித்துவிட்டு பஞ்ச கச்சத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு ரோட்டில் இறங்கிவிட்டார். இவர் பாத யாத்திரையை தொடர்ந்து கொண்டிருந்த போது, சூரியன் ஒட்டு மொத்த இந்தியாவையும் Deep Fry செய்துக் கொண்டிருந்தார்…அப்படி ஒரு வெயில்…கொளுத்தும் வெயிலோடு சேர்ந்து அதி தீவிரமாக ஆந்திர மக்களை உஷ்ணப் படுத்திக்கொண்டே வந்தவர் இறுதியில் 2004 இல் அரியணையை பிடித்தே விட்டார். 1983 மற்றும் 1992 இல் தவறவிட்ட வாய்ப்புக்காக 2004 வரை காத்திருந்தவரின் புதல்வருக்கு இந்த சிம்பிள் Maths கூட தெரியவில்லையா அல்லது தெரியாதது போல நடந்து கொள்கிறாரா என்பது அந்த வெங்கடாஜலபதிக்கே வெளிச்சம்.

உள்கட்சி அரசியல் நெருக்கடிகளில் சிக்கித் திணறியிருந்தாலும், எந்த நேரத்திலும் கட்சியில் தான் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாகாமால் சாமர்த்தியமாக செயல்பட்டிருக்கிறார் YSR. அதே சமயம் தனது முதல்வர் கனவை அடைவதற்காக கடுமையாக போரடியும் வந்திருக்கிறார். இத்தனைக்கும் ஜெகனுக்கு கிடைத்திருக்கும் முதல்வரின் மகன் என்ற Privilege Tag-ஓ அல்லது வேறு எந்த ஒரு பெரிய அரசியல் பின்புலமோ இல்லாமல் தனித்து போராடியே கரையேறியிருக்கிறார் மனிதர். இப்படிப்பட்டவரின் நிழலிலேயே ஏறக்குறைய 37 ஆண்டுகள் வளர்ந்தவர் கொஞ்சம் பொறுமையாக காயை நகர்த்தியிருந்தால் இன்னும் சில வருடங்களில் டார்கெட்டை அடைந்திருக்கலாம். பொறுமையாக இருக்கிறேன் பேர்வழி என சொல்லிக்கொண்டே பின்புறத்தில் காங்கிரஸுக்கு குடைச்சலை கொடுக்கத் தொடங்கிவிட்டார். முதல்வர் பதவியின் மீது ஆசை இல்லை என்று சொல்லிக்கொண்டே பதவியில் இருந்த ரோசய்யாவிற்கு இவர் கொடுத்த குடைச்சல் இவரது இமேஜை ஏகத்திற்கும் டேமேஜ் ஆக்கியிருப்பது உண்மை.

போதாத குறைக்கு காங்கிரஸ் கட்சி தலைமையை தாக்கி தனது டி.வி./பத்திரிகைகளில் செய்தியை வெளியிட்டுக்கொண்டே இன்னொருபுறம் தலைமைக்கு உருக்கமாக கடிதம் எழுதுவது என்ற இரட்டை நிலைப்பாட்டால் தனது குழப்பமான நிலையை இவரே வெளிக் கொணர்ந்துவிட்டார். டெல்லியில் உள்ளவர்களும் குழப்பத்தை சரியாக புரிந்து கொண்டார்கள். இவரின் உண்மையான பலம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக இவரை லூசில் விட்டு விட்டு, சுற்றியிருந்த இவரின் ஆதரவாளர்களை வளைக்க ஆரம்பித்தார்கள். 100+ எம்.எல்.ஏக்களின் சப்போர்ட்டை வெறும் 10+ ஆக சுருக்கிவிட்டார்கள். அப்போதாவது விழித்துக்கொண்டு கொஞ்சம் அடக்கிவாசித்திருக்கலாம்...ஹும்..மனிதர் முன்னைவிட அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றுவிட்டார். மிகச் சரியாக இதற்காகத்தான் டெல்லியில் இருக்கும் காங்கிரஸ்காரர்களும் காத்திருந்தார்கள். இவரை வெளியேற்றினால் கட்சிக்கு ஏற்படும் டேமஜை யோசித்துதான் அவராகவே வெளியேறும்படியான வேலையை அழகாக எக்ஸிக்யூட் செய்துவிட்டார்கள்.

உமர் அப்துல்லா, நவீன் பட்நாயக், குமாரசாமி, M.K.ஸ்டாலின் என எல்லா வாரிசுகளும் தங்கள் அப்பாக்களிடமிருந்து ஓரளவு வித்தையை கற்றுக்கொண்டதால்தான் இப்போதும் தாக்குபிடிக்கிறார்கள். சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, வருண் காந்தி போன்றவர்கள் பட்டறையில் தங்களை கூர் தீட்டிக்கொண்டே சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட ஹோம் ஒர்க் செய்து கொண்டே இருக்கும் இவர்களையே மக்கள் சில நேரம் கவிழ்த்துவிடும் போது, எந்த பாடத்தையும் படிக்காமல் மக்களிடம் போய் நிற்கத் துணிந்துவிட்ட ஜெகனுக்கு எந்த மாதிரியான ரியாக்ஷன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஒருவேளை இவர் தனிக்கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் காங்கிரஸ், தெ.தே, பி.ஆர்.பி போன்ற பெரிய கட்சிகளை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகமே. காங்கிரசும் பி.ஆர்.பி யும் மறைமுகமாக சேர்ந்து செயல்பட்டால், ஜெகனுக்கு நாயுடு முகாம் பக்கம் சாய்வதை தவிர வேறு வழியிருக்காது…எந்த நாயுடுவை இவரது தந்தை பதவியில் இருந்து இறக்கினாரோ அதே நாயுடுவை மீண்டும் அதே நாற்காலியில் கொண்டுபோய் இவர் அமர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tuesday, December 7, 2010

ஆழம் பார்த்த காங்கிரஸ், அவசரப்பட்ட ஜெகன் – பகுதி 1

“பதவி என்பது எங்கள் தோளில் இருக்கும் துண்டு” – கழகங்களின் எந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு பெரிய தலையோ அல்லது அடிபொடியே இந்த டயலாக் சொல்லிக் கொண்டிருப்பதை தவறாமல் கேட்க முடியும். காங்கிரஸ்காரர்கள் இதையே கொஞ்சம் ஆல்டர் செய்து இனி வரும் நாட்களில் “பதவி என்பது நாங்கள் போட்டிருக்கும் மேற்சட்டை” என பொதுக்கூட்டங்களில் முழங்கலாம்.…முடிந்தால் Patent ரைட்ஸ் கூட வாங்கிக் கொள்ளலாம். ஒரு பயலும் இவர்களை கேள்வி கேட்கமுடியாது எப்படியும் முதல்வராகி விடவேண்டும் என நினைப்பவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியில் உடனடியாக சேர்ந்துவிடுவது நலம். (தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர்த்து), ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகம்.

Chief Ministers are not elected but selected…இந்தியாவில் தேசிய கட்சிகளின் ஸ்லோகம் இதுதான். அதிலும் நெ.24, அக்பர் ரோட்டில் வெள்ளை வெளேரென்று இருக்கும் திவான்களின் மீது சாய்ந்து படுத்தபடியே அரசியல் செய்துக் கொண்டிருக்கும் தியாகிகள் இந்த விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அங்கு யாருக்காவது வியர்க்க ஆரம்பித்தால் உடனே நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும் காங்கிரஸ் முதல்வர்கள் யாருடைய சட்டையையாவது கழற்றிவிடுகிறார்கள். பேசாமல் இனிமேல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர்களை ரவுண்ட்-ராபின் முறையிலோ அல்லது குலுக்கல் சீட்டு முறையிலோ தேர்ந்தெடுக்கலாம். அட்லீஸ்ட் Probability அடிப்படையில் நாமும் முதல்வராகிவிடலாம் என எல்லா கோஷ்டி மற்றும் சப்-கோஷ்டிகளும் கொஞ்சம் அடக்கிவாசிப்பார்கள்.

முழுதாக இரண்டு ஆண்டுகள் கூட முடிந்திராத நிலையில் ஆந்திராவில் வெற்றிகரமாக மூன்று முதல்வர்களை மாற்றிப் போட்டு காங்கிரஸா கொக்கா என நிரூபித்துவிட்டார்கள். Workaround, Trail and Error மெத்தட் மட்டும்தான் தெரியும் போல இருக்கு இவர்களுக்கு. தெலுங்குவாடுக்களின் பிரதேசத்தில் இருக்கும் அரசியல் நிலவரத்தைப் பார்த்தால், 2014 வரை நாயுடு காத்திருக்கத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. பெரிய அளவில் இல்லையென்றாலும் Considerable Damage – ஐ ஏற்படுத்துவதற்கு சிரஞ்சீவியும், கே.சி.ஆரும் கூட காத்துக்கொண்டிருக்கிறார்கள். அசுர பலத்துடன் இருந்த காங்கிரசுக்கு ஒரே வருடத்தில் எல்லாமே தலைகீழாக மாறி தலைவலியை கொடுக்கத் தொடங்கியிருப்பது நிஜம். ஒரு தனி மனிதரின் உழைப்பால் உச்சத்தை தொட்ட காங்கிரஸ் அதே தனி மனிதரின் மரணத்தால் தள்ளாடத் தொடங்கியிருக்கிறது.

இருபத்தைந்து வருட அரசியல் வாழ்க்கை, இரண்டு முறை ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பு, கிராமப்புற மேம்பாடு, கலால், கல்வி மற்றும் சுகாதாரத்துறை Portfolio-க்களில் ஆந்திர மாநில அமைச்சராக பணியாற்றிய அனுபவம், நான்கு முறை லோக் சபாவிற்கு வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஐந்து வருடம் An Aggressive Opposistion Leader ஆக பணியாற்றிய மனிதர், தொடர்ச்சியாக இருமுறை ஆந்திர முதல்வர் பதவியை அலங்கரித்தவர்…..On top of everything, காம்ரேட் ஜோதிபாசு, தமிழக முதல்வர் மு.க. வரிசையில் தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியையே பார்த்திராதவர்….ஆந்திராவில் அரசியல் பாலபாடம் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக படித்திருக்க வேண்டிய, YSR a.k.a “கடப்பா டைகரின்” மேற்கண்ட Resume-ஐ, அவருடைய மகன் “ஜூனியர் கடப்பா டைகர்” ஜெகன் இதுவரை படிக்கவே இல்லை என்பதை காணிப்பாக்கம் பிள்ளையார் கோவிலில் கற்பூரம் அடித்து சொல்லிவிடலாம்.

“Politics for Dummies”, “முப்பது நாளில் முதல்வராவது எப்படி” போன்ற ஏதோ ஒரு உட்டாலக்கடி புத்தகத்தை சன்டே மார்க்கெட்டில் இருந்து கடத்தி வந்து, சும்மா ஒப்புக்கு பக்கங்களை மட்டும் புரட்டிவிட்டு (!), மறுநாள் காலை தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன், நான் முதல்வர் பதவிக்கு ரெடி என சொல்வது நடிகர்களுக்கு ஒ.கே. பாஸ்..ஆனால் ஒரு முன்னால் முதல்வரின் மகனுக்கு இது ஸ்வல்பா ஒவர் சாரே. இரண்டு வருட லோக் சபா எம்.பி என்ற ஒரே ஒரு அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு மாநில முதல்வர் பதவிக்கு குறி வைப்பது என்பது கத்துக்குட்டி சாஃப்ட்வேர் டெவலப்பர், ப்ராஜெக்ட் மேனேஜர் ரோலுக்கு ஆசைப்படுவது மாதிரி இருக்கிறது. “அத்தனைக்கும் ஆசைப்படு” போன்ற இன்ஸ்டெண்ட் போதனைகளை சொல்லும் பெரியவர்கள் கொஞ்சம் கூடுதலாக “அதற்கு இந்தளவிற்கு கஷ்டப்படு” என சேர்த்துச் சொன்னால் எதிர்கால அரசியல் வாரிசுகளின் வாழ்க்கை ஒகோ என இருக்கும். பொதுமக்களும் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். ஆறு மாதத்திற்கு ஒருமுறை புதிய முதல்வரின் பெயரை மனப்பாடம் செய்யவேண்டிய தேவையற்ற வேலையும் குழந்தைகளுக்கு இருக்காது.

YSR-இன் அகால மரணம் காங்கிரஸ் கட்சியைத் தாண்டி, அனைத்து ஆந்திர மக்களுக்குமே பெரும் இழப்பு என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் மறைந்த பின் காலியான புலிவெந்துலா தொகுதிக்கு அவரின் மனைவி போட்டியிட்டபோது, ஆந்திராவின் அனைத்து எதிர்கட்சிகளும் தங்கள் வேட்பாளரை நிறுத்தாமல் ஒதுங்கிக் கொண்டது, YSR என்ற தனி மனிதருக்கு ஆந்திராவில் இருந்த செல்வாக்கை உணர்த்தியது. ஆனால் அப்படி ஒரு செல்வாக்கை அடைவதற்கு மனிதர் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளார். தனது உழைப்பு, ஏமாற்றத்தின் வலிகள், தனக்கிழைக்கப்பட்ட அரசியல் துரோகங்கள் போன்றவற்றை மகனுக்கு சொல்லாமலே போய்விட்டாரோ எனத் தோன்றுகிறது.

1980-களில் என்.டி.ஆர் என்ற புயலில் சிக்கி ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தபோது, அவரை எதிர்த்து நிற்க திராணியில்லாமல் தவித்த காங்கிரஸ் கட்சி, வெறும் 34 வயதே நிரம்பியிருந்த YSR-ஐ ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்துவிட்டு கதவிற்கு பின்னால் சென்று மறைந்துகொண்டது. என்.டி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பு வரை ஆந்திர பிரதேச முதல்வர் பதவியை இறுக்கமாக பற்றிக்கொண்டிருந்த சீனியர் கதர் சட்டைகள் சரியான நேரத்தில் ஜகா வாங்கிவிட, இந்திரா காந்தியின் கெளவரவத்தை அன்றைய தேதிக்கு கொஞ்சமாவது கட்டிக்காத்தவர் இந்த கடப்பா டைகர் தான். சில வருடங்கள் கழித்து என்.டி.ஆரின் அலை அடங்கத் தொடங்கியவுடன் பதுங்கியிருந்த பெரிய காங்கிரஸ் தலைகள் அனைத்தும் மறுபடியும் முதல்வர் பதவிக்கு குறி வைத்து வெளியே வர, வழக்கம்போல டெல்லி ஹை-கமாண்ட் YSR-க்கு லாலி பாப் கொடுத்து ஓரமாக உட்கார வைத்துவிட்டது. வெறும் 37 வயதில் அலுங்காமல் குலுங்காமல் முதல்வர் ஆகிவிட துடிக்கும் “Born with Silverspoon” ஜெகன், அவர் தந்தை அதே வயதில் எவ்வளவு ஆக்ரோஷமாக அரசியலை நடத்திக்கொண்டிருந்தார் என்பதை கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிடுவது நலம். ஆந்திர காங்கிரஸில் பழம் தின்று கொட்டை போட்ட ரோசய்யா போன்ற அனுபவஸ்தர்கள் இருக்கும் போது வெறும் எமோஷனல் வேவ்வை வைத்து முதல்வர் நாற்காலிக்கு முட்டி மோதுவது இப்போதைக்கு தேவையற்ற வேலையாகவே தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிகளால் பந்தாடப்படும் போதெல்லாம் ஒரு சாரசரி தொண்டனைப்போல துணுக்குற்று எழுந்து கட்சிக்காக போராடிய YSR, முதல்வர் பதவியை நோக்கியும் நகர்ந்துக் கொண்டேதான் இருந்திருக்கிறார். ஒரே வித்தியாசம், ஜெகனைப் போல அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் காயை நகர்த்தி இருக்கிறார். 1982-83 களில் என்.டி.ஆரை ஒருவேளை YSR ஒரங்கட்டியிருந்தால் அனேகமாக இந்திரா இவருக்கு மேன் ஆப் தி மேட்ச் அவார்டை கொடுத்திருக்ககூடும். வாடிவாசல் முரட்டுக்காளை ரேஞ்சிற்கு எதிர்த்தவர்களையெல்லாம் ஒரே Attempt-இல் தூக்கி வீசிக்கொண்டிருந்த தெலுங்கு தேசத்தின் முன் மல்லுக்கு நிற்கமுடியாமல் போனதால் அப்போதைக்கு முதல்வர் பதவி ஸ்லிப் ஆகிவிட்டது சீனியர் டைகருக்கு. பழம் கிடைக்கவில்லை என்றவுடன் கொஞ்சம் அடக்கிவாசித்தவர் பொறுமையாக அடுத்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அரசியலின் அரிச்சுவடியே பொறுத்திருந்து அடிப்பதுதான். மனிதர் கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை அங்குலம் அங்குலமாக படித்திருப்பார் போலத் தெரிகிறது. காத்திருந்தவரின் நம்பிக்கை வீண்போகவில்லை.

(தொடரும்)

பி.கு. பதிவின் நீளம் கருதி இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 2, 2010

ஏர் இந்தியா – கொஞ்சம் பார்த்து செய்ங்கண்ணே

நீரா ராடியாவின் அடுத்த டேப், ஷாருக்/ரஜினி படத்தின் திருட்டு விசிடி விற்கப்படும் இடங்கள் போன்ற அதி முக்கிய சமாச்சாரங்களை இண்டு இடுக்கெல்லாம் தேடிச் சென்று அலசி ஆராய்ந்து துவைத்து காயப்போடும் இந்திய/தமிழக துப்பறியும் மீடியாக்கள் கிட்டத்தட்ட 113 பேரின் வாழ்க்கையோடு கபடி விளையாடியிருக்கின்ற ஏர் இந்தியாவின் விமான சாகச நிகழ்ச்சியை வழக்கம்போல Choice இல் விட்டு விட்டார்கள். எந்த ஒரு விஐபி-யும் பயணம் செய்திராத அந்த விமான நிகழ்வை செய்தியில் போடுவதால் சர்க்குலேஷனோ அல்லது டி.ஆர்.பி ரேட்டிங்கோ சத்தியமாக ஏறப்போவதில்லைன்னு நினைத்து லூஸ்ல விட்டுடாங்க போலத் தோன்றுகிறது.

நாட்டில் இருக்கின்ற அரசியல்வாதிகள் முதல் நடுவானில் பறந்து கொண்டிருக்கின்ற விமானத்தின் பைலட் வரை எல்லோருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை…”நாற்காலி” a.k.a “சீட்” தான் போலிருக்கிறது. மே மாதம் 25ம் தேதி துபாயில் இருந்து புனே நோக்கி வந்துக் கொண்டிருந்த போயிங் 737 விமானத்தை 37000 அடி உயரத்திலிருந்து திடீரென இறக்கி 30000 அடி உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் விமானத்தின் துணை விமானி. தனது நாற்காலியை அட்ஜெஸ்ட் செய்யும்போது கை தவறி ஏதோ எசகு பிசகாகிவிட (நம்மூர் சிவில் ஏவியேஷன் என்கொயரி ரிப்போர்ட்ல இப்படிதான் சொல்லியிருக்காங்க) அதுவரை சாதுவாக 37000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பறவை வேகமாக கீழே இறங்கத் தொடங்கியிருக்கிறது. உச்சா போவதற்காக ரெஸ்ட் ரூமிற்கு சென்றிருந்த விமானத்தின் சீனியர் பைலட், நிலைமையை உணர்ந்து காக் பிட்டுக்குள் நுழைந்து விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். சினிமா ஹீரோ பாணியில் செயல்பட்டிருக்கிறார் இந்த நிஜ ஹீரோ. பாரட்டபட வேண்டிய விஷயம்.

அண்ட வெளியில் நடந்துக் கொண்டிருந்த களேபரத்தை புறந்தள்ளி, உண்டிக்கு உணவிட்டுக் கொண்டிருந்த பயணிகளுக்கு காக்பிட்டுக்குள் நடந்த விஷயம் தெரியாமலிருக்க “air pocket” அதான் பிளைட் கொஞ்சம் ட்ராப் ஆயிடுச்சுன்னு சும்மா ஒரு உம்மாவை கொடுத்து சமாதனப்படுத்தி இருக்கிறார்கள். உண்மையை சொல்லியிருந்தால் உணவிற்கு பதிலாக எனிமா கொடுத்த மாதிரி வெலவெலத்து போயிருப்பார்கள். இந்த ஏர் பாக்கெட், ஏர் டர்புளன்ஸ் போன்ற ஜிகிரி வாஸ்துக்களை எல்லாம் பொதுவாக முன்கூட்டியே டிடெக்ட் செய்து, பயணிகளுக்கு அறிவித்துவிட்டு அவர்களை சீட்டோடு Buckle-Up செய்துவிடுவார்கள். அப்போதைக்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ஒப்பேற்றியிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அதிலும் எத்தனை பேருக்கு அவர்கள் சொன்ன விஷயம் சரியாக புரிந்திருக்கும் என்பது மில்லியன் டாலர் வினா.

2010 மே மாதம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட மங்களூர் விபத்தின் இரணங்கள் ஆறும் முன்பே, அந்த விபத்து நடந்த அடுத்த மூன்று நாட்களுக்குள் மற்றுமொரு மிகப் பெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியிருக்கிறது ஏர்-இந்தியாவின் இந்த இன்னொரு 737 பறவை. Coincidentally, இந்த இரண்டு விமான நிகழ்வுகளும் துபாயில் இருந்து புறப்பட்ட விமானங்களிலே நடந்திருப்பது வேதனையான செய்தி.

“இம்மாதிரியான எதிர்பாராத நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது என துணை விமானி அறிந்திருக்கவில்லை” “இம்மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பயிற்சியை துணை விமானி பெற்றிருக்கவில்லை” என ஏதேதோ சப்பை கட்டை காதில் சுற்றியிருக்கிறார்கள் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில். இது பற்றிய விரிவான Article-ஐ CNN-இல் வெளியிட்டிருக்கிறார்கள். TVS-50யை உருட்டிக்கொண்டு டூ-வீலர் லைசென்ஸ் எடுக்க போனாலே எட்டு போடு, பத்து போடுன்னு ஆர்.டி.ஓ ஆபிஸில் சாமன்ய மக்களை பரேட் எடுக்கிறாங்க. ஒரு விமானத்தை இயக்குவதற்கு லைசென்ஸ் பெற்றிருக்கும் நபருக்கு இது தெரிந்திருக்கவில்லை, அது தெரிந்திருக்கவில்லை என ரிப்போர்ட் கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ரிப்போர்டை கொடுப்பதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக விசாரணையை நடத்தி இருக்கிறார்கள். நீரா ராடியா டேப்பிலாவது பேசியது யார் யாரென ஒரளவிற்கு உண்மையை சொல்லிவிட்டார்கள்…ஆனால் இந்த விமான நிகழ்வு என்கொயரி ரிப்போர்டில் விமானிகளின் பெயரை குறிப்பிடாமலேயே சமாளித்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் தூர்தர்ஷன் ஒலிபரப்பில் எப்போதாவது (!) பிரச்சனை ஏற்பட்டால் “தடங்கலுக்கு வருந்துகிறோம்” என்கிற Standard Template-ஐ போடுவார்கள். பின்னர் சிறிது காலம் கழித்து என்ன நினைத்தார்களோ தெரியவில்லை Template-ஐ கொஞ்சம் மாற்றி “தடங்கல் ஏற்பட்டுள்ளது” என மாற்றிவிட்டார்கள். நேரடியாக சொல்வதென்றால் வருந்துவதை நிறுத்திவிட்டார்கள். அதுநாள் வரை விடாப்பிடியாக தூர்தர்ஷனை பார்த்துக்கொண்டிருந்த மக்களும் தூர்தர்ஷன்காரர்களை மீண்டும் வருத்தத்தில் ஆழ்த்த வேண்டாம் என முடிவு செய்து காக்காக்கள் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த அலுமினிய ஆண்டெனாவை குஜிலி பஜாரில் விற்றுவிட்டு சன்-னுக்கும் ராஜு-க்கும் தாவிவிட்டார்கள். ஏர் இந்தியாவும் ஏறக்குறைய இதே திசையை நோக்கி சென்றுக்கொண்டிருப்பது போலத் தெரிகிறது. நடந்துவிட்ட இந்த செயலுக்காக சிவில் ஏவியேஷன் சார்பாக யாரும் ஒரு சிறு மன்னிப்போ அல்லது வருத்தமோ இதுவரை தெரிவித்ததாக தெரியவில்லை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இணையான வசதிகளும், கட்டமைப்பும் இல்லாத நிலையிலும் இன்னமும் சிலர் ஏர்-இந்தியாவின் விமான சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து புதிய பயணிகளையும் கவர்ந்திழுக்கப் போகிறார்களா அல்லது இருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்கள் உதாசீனத்தால் இழக்கப் போகிறார்களா என்பதை இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Thursday, November 25, 2010

முதல்வன் – நிதிஷ் குமார்



நாலந்தா பல்கலைக்கழகம் மூலமாக இந்தியாவிற்கு முதன் முதலாக பல்கலைக்கழகம் என்ற கான்செப்டை அறிமுகப்படுத்திய மாநிலம், முற்றும் துறந்து நாடோடியாய் திரிந்த புத்தனுக்கு மெய்ஞானத்தை ஊட்டிய மாநிலம், இந்திரா ப்ரியதர்ஷினி அமல்படுத்திய எமர்ஜென்ஸியை எதிர்த்து முதலாவதாக குரலை உயர்த்திய ஜே.பி-க்கு களம் அமைத்துக்கொடுத்து, அவரின் இறுதிநாள் வரை துணை நின்ற மாநிலம், மெளரிய பேரரசின் பொற்கால மன்னர் அசோகரால் ஆளப்பட்ட மாநிலம் – இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திற்கும் இல்லாத ஒரு Unique Profile, இந்த மாநிலத்திற்கு உண்டு…அதுதான் பீகார்.

இயற்கை வளங்களை ஏராளமாக வைத்திருந்தும், லாலு & கோ-வின் பதினைந்து வருட ஏடாகூட அரசியலாலும், கதர் சட்டைகளின் உள்ளடி விளையாட்டுக்களிலும் சிக்கி சின்னா பின்னாமாகிக் கொண்டிருந்தது பீகார். ஒரு புறம் மும்பையில் ராஜ் தாக்கரே போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதிகளிடம் சிக்கி தவித்த அன்றாடங்காய்ச்சி ஏழை பீகார்வாசிகள், மறுபுறம் பீகாரையும் பீகார்வாசிகளையும் தொடர்ந்து கேலியாக கிண்டலடித்து வந்து சில பொறுப்பற்ற வட இந்திய மீடியாக்கள் என எல்லாப் பக்கமும் இடியாய் இறங்கிக்கொண்டிருந்தது பீகாரிகளுக்கு. லாலுவின் மீதும், கதர் குல்லாக்களின் மீதிருந்த நம்பிக்கையும் தேய்ந்து போன நிலையில், யாரவது மீட்பதற்கு வரமாட்டார்களா என பீகாரிகள் ஏங்கிக் கொண்டிருக்கையில், இம்மாதிரியான ஒரு சூழ்நிலைக்காகவே காத்திருந்தவர் போல சரியான நேரத்தில் மாநில அரசியலுக்கு திரும்பிவிட்டார் நிதிஷ் குமார்.

புலிக்கு வாலாய் இருப்பதைவிட பூனைக்கு தலையாய் இருப்பது பெட்டர் என முடிவு செய்து மனிதர் டெல்லியை காலி செய்துவிட்டு பாட்னாவிற்கு ஷிப்ட் ஆனதிலிருந்து எல்லாமே ஏறுமுகம்தான். தமிழகத்தின் வளர்ச்சியை 1967 முன் - 1967 க்கு பின் என பிரிப்பது போல, பீகாரின் வளர்ச்சியை 2005 க்கு முன் – 2005 க்கு பின் என பிரித்து எழுதிவிடலாம். கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, அந்நிய முதலீடு என எல்லா பக்கத்திலும் ஐந்து வருடமாக நாலு கால் பாய்ச்சலில் வேலை பார்த்திருக்கிறார்கள் நிதிஷ் & கோ ஆட்கள். விக்கிபீடியாவை புரட்டினால் இவர் அரசாங்கம் செய்து கொண்டிருக்கும் வேலைகளை பார்க்கும்போது புருவத்தை உயரச் செய்கிறார். Development Rate இந்திய அளவில் இரண்டாவது மாநிலம் என்ற அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறார் மனிதர். இந்தியாவின் கிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த சாம்பியன் மேற்கு வங்காளத்தை விட அதிகமான மக்கள் பீகாரில் வரி செலுத்தி இருக்கிறார்கள். மத்திய அரசு இன்னும் கொஞ்சம் ஒத்துழைத்திருந்தால் குஜராத்தையும், மகாராஷ்டிராவையும், தமிழகத்தையும் ஒவர் டேக் செய்திருப்பார்கள் போலத் தெரிகிறது. இதே வேகத்தில் போய்க் கொண்டிருந்தால் இன்னும் சில வருடங்களில் பீகார் மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏ.ஸி ரூமுக்குள் அமர்ந்துக்கொண்டு Ground Reality தெரியாமல் தொடர்ந்து பீகாரை வாரிக்கொண்டிருக்கும் பிரணாய் ராயும், ராஜ்தீப் சர்தேசாயும் 2005-க்கு பிறகான பீகாருக்கு ஒருமுறை விஜயம் செய்துவிடுவது நலம். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நாட்களில் இவர்களை Spoof செய்து வீடியோவை You Tube இல் ஏற்றிவிடுவார்கள் பீகாரின் ஐ.டி.குருக்கள்.

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே. பகவத் கீதையை சரியாக படித்திருக்கிறார் நிதிஷ். ஐந்து வருட உழைப்பிற்கான ஊதியத்தை எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் பீகார்வாசிகள். குரு அடிக்கடி சொல்வார் “You get big bonus when you exceed your own goals”. நிதிஷ்குமாருக்கு இதைத்தான் அவரின் எஜமானர்கள் செய்திருக்கிறார்கள். 2005 இல் வெறும் 143 தொகுதிகளை மட்டுமே இவரின் கூட்டணிக்கு கொடுத்து இவரை ஆழம் பார்த்த மக்கள் 2010 இல் 206 தொகுதிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். Performance Rating Analysis..அட்சரசுத்தமாக செய்திருக்கிறார்கள். அவுட் ஆப் 243, 206 மனிதரின் கிட்டியில் வந்துவிட்டது. படிப்பறிவில்லாத, பின் தங்கிய ஏழை மக்கள் நிறைந்த மாநிலம் என பீகாரை ஏதோ இந்தியாவின் துயரம் போல வர்ணித்து வந்த வட இந்திய மீடியாக்களுக்கு, இந்த தேர்தல் முடிவின் மூலம் தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறார்கள் பீகார் மக்கள்…தங்கள் நலனிற்காக உழைக்கும் சரியான அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு அதிகம் படித்திருக்க வேண்டியதோ அல்லது மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்று.

2010 சட்டமன்ற தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே நிதிஷ் குமாருக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் குடைச்சல் ஆரம்பமாகியிருந்தது. கூட்டணிக்குள் இருந்துக்கொண்டே பிஜேபி ஒருபக்கம் குடைச்சல் தர, எதிர்புறம் லாலு+பஸ்வான் கூட்டணி, கதர் சட்டைகளின் தனி ஆவர்த்தனம் என ஏகப்பட்ட பிரச்சனைகள். நாடகத்தின் உச்ச கட்டமாக கதர் சட்டைகள் டெல்லியிலிருந்து அனைத்து ப்ரம்மாஸ்திரத்தையும் கொண்டுவந்து பாட்னாவிற்குள் இறக்கி என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். பப்பு வேகவில்லை. மத்தியில் ஆளும் அரசாங்கமாக இருந்துக் கொண்டு எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு எந்த ஒத்துழைப்பையும் கொடுக்காமல், தேர்தலின் போது மட்டும் மாநில வளர்ச்சியை குறை சொல்லும் விநோத அரசியலை காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொள்ளாத வரை பீகார் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் அவர்கள் கரையேறுவது கஷ்டம்தான். காங்கிரஸின் இந்த Layman அரசியல் நிலைப்பாட்டை விரல் சூப்பும் குழந்தைகூட விலாவரியாக கதாகலாட்சேபம் நடத்திவிடும்.

இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும் தான் செய்திருந்த வளர்ச்சிப் பணிகளை மட்டுமே மக்கள் முன் வைத்து தனி மனிதனாகவே என்.டி.ஏ கூட்டணியை மெகா வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிட்டார் நிதிஷ். மாபெரும் வெற்றியை அடைந்த போதும் மிகவும் கேஷுவலாக, ஷேவ் செய்யாத முகத்துடன் மீடியாக்காரர்களின் சில்லி கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தவரை பார்த்துக் கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டின் இந்நாள்/முன்னால்/எதிர்கால அரசியல்வாதிகள் நினைவில் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட பதினோராயிரம் ப்ளஸ் கிலோமீட்டர் தூரம் உள்ள அமெரிக்காவிற்கு வருடத்திற்கு ஒருமுறை தப்பாமல் விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் வெறும் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாட்னாவிற்கு பல ஆண்டுகளாக விஜயம் செய்யாமல் இருந்தது வியப்பாக இருக்கிறது. எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு பிரதமர் செல்லக்கூடாது என ஏதாவது ப்ரோட்டாகால் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நார்த் பிளாக்கில் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இரு தினங்களுக்கு முன் பீகார் தேர்தல் முடிவுகள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக வந்து கொண்டிருந்த வேளையில், தொலைகாட்சி ஒன்றில் பேட்டி அளித்துக்கொண்டிருந்த நிதிஷ்குமார், பீகார் மாநிலத்திற்கு பல ஆண்டுகளாக பிரதமர் வராமல் இருந்ததை ஒருவித வருத்ததுடனே குறிப்பிட்டு பேசினார். பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் தான் பீகாரை முன்னேற்றிக் காட்டுவேன் என அவர் பேட்டியை முடித்தபோது, பீகார்வாசிகள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து நடுநிலையாளர்களும் கண்டிப்பாக உணர்ச்சி வசப்பட்டிருப்பார்கள்.

Best Wishes Mr. Nithish Kumar.

Saturday, October 16, 2010

பொதுப்பணித்துறை & சாலை போக்குவரத்துத்துறை பிதாமகன்கள்

கட்டியணைத்து, உச்சி முகர்ந்து, அப்படியே தோள் மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்து செல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது சில பொதுப்பணித்துறை/சாலை போக்குவரத்துத்துறை தலைமை பொறியாளர்களையும் அவர்களது குழுவினரையும். ரோடு (சாலை-ன்னும் சொல்லலாம்-னு கமல் ஒரு பேட்டியில சொன்னது ஞாபகத்துல வருது) போடுவதில் தொடங்கி, பாலங்கள் கட்டுவது வரை எல்லாவற்றிலும் தொடர்ந்து தங்கள் முத்திரையை பதித்துவரும் இந்த துறையின் சில அதிபுத்திசாலி பொறியாளர்களை பாராட்டாமல் இருப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறியாமையாக இருக்கும்.

1985-க்கு முந்தைய காலகட்டம் வரை தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டிருந்த சொற்பமான சில (நல்ல) என்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்டுடன் மோதுமளவிற்கு சக்தி கொண்ட ஒரே துறையாக விளங்கியது சாட்சாத் சிவில் டிபார்ட்மெண்ட் மட்டுமே. இந்த இரு துறைகளுக்கும் அப்போதிருந்த மவுசு அப்படி. அசின் – த்ரிஷா ரேஞ்சிற்கு ஒவ்வொரு கேம்பஸுக்குள்ளும் பனிப்போரை நடத்திக்கொண்டிருந்த இந்த இரு துறைகளையும் சமாளிக்க முடியாமல் அல்லது தெரியாமல் பம்மிக்கொண்டிருந்த துறைகளில் ஒன்றுதான் இன்றைக்கு கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் துறைகள். சரி மேட்டருக்கு வருவோம். இன்றைய தேதிக்கு என்ஜினியரிங் மார்வலாக வர்ணிக்கப்படும் பெரும்பாலான கட்டிடங்கள்/பாலங்கள் வரை எல்லாவற்றின் பிண்ணனியிலும் இருப்பது இந்த சிவில் என்ஜினியரிங் மூலைதான். டெல்லி மெட்ரோவில் தொடங்கி, நேற்று குடைந்து முடிக்கபட்ட சுவிஸ் கோத்தார்ட் பேஸ் ரெயில்வே டனல் வரை எல்லாமே இவர்களின் ஆசியால் புண்ணியம் தேடிக்கொண்ட ப்ராஜெக்ட்கள் தான்.

உலகின்/நாட்டின் பிற பகுதிகளில் இந்த துறையினர் அசத்திக்கொண்டிருக்க நம்மூரில் மட்டும் எப்படியெல்லாம் சொதப்பலாம் என ரூம் போட்டு யோசித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகிறது. அரசியல் இடையூறுகள்/குறுக்கீடுகள், பட்ஜெட்டில் துண்டு, பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற நியாயமான விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டாலும் இந்த துறையினர் சில சமயங்களில் குறைந்தபட்ச அக்கெளவ்ண்டப்பிலிட்டிகூட இல்லாமல் செயல்படுவது சில்லியாக இருக்கிறது. குறிப்பாக துறைகளின் தலைமை பொறுப்புகளில் உள்ள பொறியாளர்கள் ஏன் இப்படி அநியாயத்திற்கு போட்டு சொதப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. குறைந்தபட்ச சமூக அக்கறையுடன் செயல்பட்டால் கூட மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என தெரிந்தும் இவர்கள் சில நேரங்களில் ஏன் இப்படி கவிழ்த்துவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

சில பல வருடங்களுக்கு முன்புவரை எடை குறைவான ஹீரோ சைக்கிளை வீட்டிற்குள் ஏற்றி ஸ்டேண்ட் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இபோதெல்ல்லாம் பஜாஜ் பல்சரை நேராக நடு வீடுவரை ஒட்டிக்கொண்டே சென்றுவிடலாம். அந்த அளவிற்கு வேலையை சுலபமாக மாற்றிவிட்டார்கள் நம்மூர் பொதுப்பணித்துறையினர். ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோடு போடுகிறோம் என கிளம்பி வந்து ஒவ்வொரு முறையும் ரோட்டை அரை அடிக்கு உயர்த்தி உயர்த்தி, பெரும்பாலான வீடுகளின் அனைத்து படிகட்டுகளையும் மொகஞ்சதாரோ ஹரப்பா ரேஞ்சிற்கு பூமியின் அடி ஆழத்தில் புதைத்துவிட்டார்கள். ரோடுகள் வேகமாக மேலே வந்துவிட்டன. வீடுகள் அதைவிட வேகமாக கீழே போய்விட்டன. மிகவும் தாழ்வாக கட்டப்பட்டிருந்த பல வீடுகளின் கீழ்தளங்கள் இப்போது பங்கர்களாக மாறிவிட்டது தனிக்கதை. ரோடு போடுவது ஒப்பந்தக்காரர்கள் வேலை போன்ற சப்பைகட்டுகளை மக்கள் காதில் சுற்றிவிட்டு இவர்கள் ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது ஏனென்றால் அந்த பணி எப்படி இருக்கவேண்டும் என நிர்ணயித்து, வேலை முடிந்தவுடன் அதை இறுதியாக ஆராய்ந்து ஒகே சொல்லவேண்டியது இவர்களின் காம்.

புதிதாக ஒரு சாலையை சீரமைக்கும்போது அதை கொஞ்சம் ஆழப்படுத்தி மீண்டும் அதே உயரத்தில் புதிய சாலையை அமைக்கவேண்டும் என்ற அடிப்படை நியதியை முதலாமாண்டு சிவில் என்ஜினிரியங் மாணவனோ/மாணவியோ கூட படம்போட்டு விளக்கிவிடுவார்கள். ஆனால் பொ.ப.துறை ஆட்கள் தான் அடம்பிடிக்கிறார்கள். ஏற்கனவே உள்ள ரோட்டின் மீது கொஞ்சம் கல்லையும் மண்ணையும் போட்டு நிரப்பிவிட்டு அதற்கு மேல் சும்மா ஒரு லேயர் தார் போட்டு அந்த கிஸ்மோ இயந்திரத்தை ஒடவிட்டு ரோட்டை கொஞ்சமாக சமப்படுத்திவிட்டு பில்லை கிளியர் செய்து கொண்டு இடத்தை காலி செய்துவிடுவது பொலிட்டிக்கலி கரெக்ட்..ஆனால் மக்கள் பாவம்பா. இப்படியே ரோடு மேல் ரோடு போட்டுக்கொண்டே போனால் இன்னும் கொஞ்சநாட்களில் பல வீடுகளை அகழ்வாராய்ச்சி செய்து தான் கண்டு பிடிக்கவேண்டும். எதிர்காலத்தில் அண்டர்கிரவுண்ட் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும்போது ஏதாவது வீடோ அல்லது அலுவலகமோ ஆழத்தில் தென்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனிமேல் வீடு கட்ட போகிறவர்கள் முன்னெச்சரிக்கையாக இப்பொழுதே 50 படிகட்டுகள் வைத்து வீட்டை உயரத்தில் கட்டிவிடுவது நலம். இப்படி கட்டும் பட்சத்தில் அட்லீஸ்ட் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தாக்கு பிடிக்க முடியும். இல்லைன்னா கொஞ்சம் கஷ்டம்தான். இதில் இன்னொரு சவுகரியமும் உண்டு, வீடு பார்ப்பதற்கு முகேஷ் அம்பானியின் அல்டா மவுண்ட் ரோடு வீட்டை போலவே மிகவும் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துவிடலாம். இப்படி உயர்த்திக் கட்டுவதற்கு கூடுதலாக வரி வசூலித்தாலும் பரவாயில்லை, மக்கள் கந்துவட்டிக்கு வாங்கியாவது கட்டிவிடுவார்கள். மாநகராட்சிகளும், நகராட்சிகளும் கிடைக்கும் கேப்பில் கொஞ்சம் காசு பார்க்கலாம்.

தஞ்சை பெரிய கோவிலையும், பேளூர்-ஹலபேடு சிற்பங்களையும், மாமல்லபுரம் கல்குகைகளையும், தாஜ் மஹாலையும் பார்க்கும்போதெல்லாம் இதை செயலில் கொண்டுவந்த அந்த மாபெரும் சிவில் என்ஜினியரிங் மூளையை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. மினி ட்ராப்டரும், ட்ராயிங் போர்டும் இல்லாத காலத்திலேயே மிகவும் துல்லியமாக தொலைநோக்குடன் சிந்தித்து ஒவ்வொன்றையும் கட்டி எழுப்பி இருக்கிறார்கள்....அவர்களின் வழித்தோன்றல்களால் இருபத்தைந்து அடி அகலம் உள்ள சாலையை கூட சரிவர போட முடியாமல் போவது வியப்பாக இருக்கிறது. அடுத்த முறை புதிதாக சாலையை புணரமைக்கும்போது கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ பூமிதேவி கொஞ்சம் சந்தோஷப்படுவாள்.

Tuesday, October 12, 2010

ஸ்பிரிட் ஆப் சிலி

சிலி....வரலாற்றை மாற்றி எழுத தயாராகிக்கொண்டிருக்கிறது. இரண்டு மாதத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி ஆழத்திற்கு கீழே தவித்துக்கொண்டிருக்கும் தங்கள் நாட்டை சேர்ந்த முப்பத்து மூன்று சுரங்க தொழிலாளர்களை பத்திரமாக மீட்டெடுக்கும் முயற்சியின் தொடராக கேப்சூல் லிப்ட்டை ஆழ்துளை கிணற்றின் வழியாக உள்ளிறக்க ஏறக்குறைய அத்தனை ஏற்பாடுகளையும் முடித்துவிட்டார்கள். எந்த நேரமும் முதலாவது மீட்பு நிபுணர் உள்ளே அனுப்ப படலாம். சி.என்.என் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னம்பிக்கையுடன் பொறுமையாக காத்திருந்த அத்தனை தொழிலாளர்களையும் வரவேற்க ஒட்டுமொத்த சிலி மட்டுமல்லாமல் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. சிலி நாட்டின் அதிபர் மனைவியுடன் ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே நின்று எல்லோரையும் உற்சாகபடுத்திக் கொண்டிருப்பது மிகப்பெரிய பலம். எல்லாம் நல்லபடியாக முடிந்து அனைத்து தொழிலாளர்களும் நாளை காலைக்குள் (சிலி நேரப்படி) மீட்கப்பட்டுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விவா சிலி !!!!!!!!!!!

Tuesday, August 24, 2010

காமன்(மேன்)வெல்த் போட்டிகள்

தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், ஆப்பிரிக்காவை இன்னமும் இருண்ட கண்டம் என புத்தகங்களில் அச்சிட்டுக்கொண்டிருப்பதை அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மறுபரீசிலனை செய்துவிடுவது நலம். வெளிச்சமாக இருக்கும் கண்டங்கள் எல்லாம் காதில் புகைவிடும் அளவிற்கு உலககோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடத்தி காட்டி உலக மக்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க செய்துவிட்டார்கள் தென்னாப்பிரிக்க மக்கள்.

ரியோ-டி-ஜெனிரோ, போர்ச்சுக்கீஸ், சம்பா நடனம் என தங்களைப்பற்றி சில விஷயங்களை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் உலகின் பிற தேசத்து மக்களுக்கு தங்கள் நாட்டின் இண்டு இடுக்குகளில் புதைந்திருக்கும் மற்ற சமாச்சாரங்களை பட்டியல் போட்டு காட்ட தயாராகிக் கொண்டிருக்கிறது ப்ரேசில், 2016 ஒலிம்பிக் போட்டிகளின் மூலமாக.

தென்னாப்பிரிக்காவும், ப்ரேசிலும் அசுர வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும்போது டில்லிவாலாக்கள் தூங்கிக்கொண்டிருக்க முடியுமா..2010 காமன்வெல்த் போட்டிகளை தள்ளி கொண்டுவந்துவிட்டார்கள். ஆசிய விளையாட்டுப்போட்டிகள், சார்க் விளையாட்டு போட்டிகள் என லோக்கல் மேட்ச் ஆடியது போதும் என முடிவெடுத்து, களத்தில் இறங்கி காமன்வெல்த் போட்டியை கொண்டு வந்தது வரை எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, காந்தி சிரித்துக்கொண்டிருக்கும் காகிதம் வெளியில் வராதவரை.

போட்டிக்கான கட்டுமான வேலைகள் தொடங்கிய காலகட்டத்திலேயே சிலர் இது தேவையற்ற செலவு என குரல் எழுப்பத் தொடங்கினார்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்த பணத்தை செலவிடலாம் என்ற அந்த குரலில் ஒரளவிற்கு நியாயமும் இருந்தது. டெல்லி க்ரேட்டர் கைலாஷ் ஏரியாவின் அடிப்படை வசதிகளில் பத்தில் ஒரு பங்கு கூட பெற்றிராத கிராமங்கள் டெல்லியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவிற்குள் இன்னமும் இருக்கின்றன. பேசாமல் இந்த பணத்தை வைத்து ஒரு ஆயிரம் கிராமங்களுக்கு ஹை-ஸ்பீட் பைபர் ஆப்டிகல் கேபிள் போட்டிருக்கலாம், இப்ப இல்லைன்னாலும் பின்னாடி உபயோக இருந்திருக்கும்.

இரண்டு வருடமாகவே காமன்வெல்த் என்ற பேரை சொல்லி புதுதில்லியை ஒருவழி செய்து கொண்டிருந்தார்கள். குத்துவிளக்கேற்றி, கொடி அசைத்து, பிரதமரோ அல்லது யாரோ ஒரு வெளிநாட்டு தலைவரின் உரையுடனோ போட்டி தொடங்க இருக்கும் நிலையில் பூனை வெளியே வந்துவிட்டது. சுடுகாட்டு கொட்டகையிலே காசு பார்த்துவிட்ட பிறகு ஏழு அல்லது எட்டு இலக்கங்களில் சில்லரை புரண்டு கொண்டிருக்கும் இந்த மெகா விளையாட்டு போட்டி ஏற்பாட்டுச் செலவுகளில் கை வைக்காமல் விட்டால் அரசியலுக்கு அழகல்ல. புகுந்து விளையாடி இருப்பது போல தெரிகிறது.

சாதாரண மளிகை கடையிலேயே முதலாளி வரவு செலவு பற்றி ஒரளவிற்கு கணக்கு வைத்திருப்பார் , கடையில் இருப்பவர்கள் யாரவது கைவரிசை காட்டினால் இந்த குத்து மதிப்பான வரவு செலவு கணக்கை வைத்தே ஏறக்குறைய ஆளை கார்னர் பண்ணி அமுக்கிவிடுவார்கள். அட்லீஸ்ட் பணம் எப்படி/எங்கே தவறியது என கணித்துவிடுவார்கள்.
காமன்வெல்த் கேம்ஸ் மாதிரியான போட்டி ஏற்பாட்டுச் செலவுகளுக்கு நிச்சயம் பெரிய அளவிலான எக்ஸ்பென்ஸ் ட்ராக்கிங் சிஸ்டம் நடைமுறையில் இருக்கும். மிகப்பெரிய அளவில் ஆடிட் குழுக்கள் களத்தில் கண்காணித்து கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எங்கே யார் விளையாடி இருக்கிறார்கள் என்பதை ஒரளவிற்கு யூகித்துவிடலாம். யூகித்தும் இருப்பார்கள் இந்நேரம். நூறு, ஆயிரம் என்றால் ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்க பார்க்கலாம், கோடிகளில் நம்பர் வரும்போது எப்படி சமாளிக்கிறார்கள் என்பது அரசியல்வாதியாக மாறினால் ஒழிய தெரிந்து கொள்ள முடியாது போலத் தெரிகிறது. இந்த மாதிரியான மேட்டரை தெரிந்து கொள்வதற்காகவேனும் கொஞ்ச நாளைக்கு இருக்கும் ஜோலியை விட்டுவிட்டு பார்ட் டைம் அரசியல்வாதியாக வலம் வரவேண்டும் போலத் தோன்றுகிறது.

போட்டிகள் இன்னமும் தொடங்கியிராத நிலையில், ஏற்பாட்டுச் செலவுகளின் தில்லுமுல்லுக்கள் வெளிவந்துக்கொண்டிருக்கும் வேகத்தைப்பார்த்தால், இந்த போட்டிக்காக மெனக்கெட்டு தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் கழட்டிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பக்கத்தில் உள்ள ஒரு தேசம் ஒலிம்பிக் போட்டியை நடத்தி தங்கள் நாட்டை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கும்போது நம்மூர் ஆட்கள் காமன்வெல்த் போட்டியிலேயே இந்தியாவை காலி செய்து கொண்டிருக்கிறார்கள். போட்டிகளில் வெல்கிறோமோ இல்லையோ இந்த மேட்டரில் நம்மூர் அரசியல்வாதிகளை யாராலும் வெல்லவே முடியாது என மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டிவிட்டார்கள். ஜெய் ஹோ.

Sunday, July 25, 2010

யாத்திரை

மார்ச் 12, 1930. ஒரே ஒரு அறிக்கை. இருபத்தைந்து நாட்கள்..350+ கிலோ மீட்டர் தூரம். இடுப்பில் சாதரண வேட்டி, கையில் மூங்கில் தடி சகிதமாக அறுபது வயதை கடந்துவிட்ட ஒரு மனிதன் தெருவில் இறங்கி நடக்க ஒரு தேசமே அவர் பின்னால் நகர்ந்தது. ஏப்ரல் 6, 1930, சூரியன் மெல்ல தலையை நீட்டி எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்த அதிகாலை வேளையில் ஒட்டு மொத்த உலகமும் அந்த மனிதரை நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. தண்டி கடற்கரையில் நின்றுகொண்டு தன் சிறிய கைகளால் ஒரு பிடி உப்பை அள்ளிய காந்தி என்ற எளிய மனிதரை ஆயுத பலத்தின் மூலமாகவோ அல்லது வேறு பாணியில் அச்சுறுத்தியோ பணிய வைக்க முடியாது என்பதை உலகின் அப்போதைய மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஆழமாக உணர ஆரம்பித்தது.

சாதாரண நடைபயணத்தின் மூலமாககூட அரசாங்களை அசைக்க முடியும் என்ற செய்தியை உலகிற்கு முதன் முதலாக உணர்த்தியது அநேகமாக மகாத்மா காந்தியாக தான் இருக்கமுடியும். இவருக்கு பிறகு இதே பாணியை மார்டின் லூதர் கிங் ஒரளவிற்கு முயற்சித்தது வரலாறு. ஒரே ஒற்றுமை இவர்கள் இருவருமே தங்கள் தேசத்து மக்களுக்கு நீதி வேண்டி நடத்திய பயணங்கள் இவை.

பள்ளி நாட்களில் யாத்திரை, நடைபயணம் என்ற வார்த்தைகளை கடக்கும்போதெல்லாம் காந்தியும், தண்டி உப்பு சத்தியாகிரகமும் மட்டுமே நினைவில் வந்து போவது இயல்பாய் இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, சிப்பாய் கலகம் போன்ற நிகழ்வுகளை படிக்கும்போது ஏற்பட்ட அதிர்ச்சியோ ஆயாசமோ தண்டி யாத்திரையை படிக்கும்போது ஏனோ ஏற்பட்டதில்லை. தேர்வில் மதிப்பெண்களை பெறுவதற்காக மட்டுமே புத்தகங்களை படிப்பது என்ற மாணவ பருவ நியதிப்படி படித்து முடித்ததால் வரலாற்றை புரட்டிப்போட்ட தண்டி யாத்திரையை முழுதும் உணரமுடியாமல் போயிருந்தது.

காலம் உருண்டு வேலை, தொழில் என வாழ்க்கை பக்குவப்பட ஆரம்பித்திருந்த நிலையில் அரசியல்வாதிகளின் நடைபயணங்களும் அதற்காக அவர்கள் சொல்லிக்கொண்ட காரணங்களும் வரலாற்றின் மீது மீண்டும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ தன் சொந்த நலனை முன்னிறுத்தாமல், எந்தவித பாதுகாப்பையும், செளகரியத்தையும் கோரிப் பெறாமல் ஒரு தனி மனிதன் தன் தேசத்திற்காக மேற்கொண்ட நடைப்பயணத்தை முன்மாதிரியாக கொண்டு இன்றைய அரசியல்வாதிகள் நடத்திக்கொண்டிருக்கும் யாத்திரை/நடை பயணங்கள் திகைப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.

கர்நாடக அரசியலில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கொரு யாத்திரையை அறிவித்து அம்மாநில மக்களை ஏகத்திற்கும் வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். போதாத குறைக்கு தங்கள் யாத்திரையின் போது ஏதாவது வன்முறை ஏற்பட்டால் அதற்கு எதிர் அணியினரே பொறுப்பு என இரு தரப்புமே மாறி மாறி சொல்லிக்கொண்டிருப்பதால், வன்முறை நடந்தே தீரும் என மக்கள் ஏகப்பட்ட திகிலில் இருக்கிறார்கள். மகாத்மா நடத்திய யாத்திரையில் தாமாக முன்வந்து தைரியமாக கலந்து கொண்ட அதே மக்களின் வழித்தோன்றல்கள் இன்றைய அரசியல்வாதிகள் யாத்திரை என அறிவித்தவுடன் பயந்து வீட்டுக்குள் முடங்கிவிடுவது காலத்தின் கோலம்.

அந்தப் பக்கம் ஆந்திராவில் முன்னாள் முதல்வரின் மகன் யாத்திரை போய்க்கொண்டிருக்கிறார். கர்நாடாகாவிலாவது பரவாயில்லை ஆளும் கட்சியும் எதிர் கட்சியும்தான் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் கட்சியிலே உள்குத்து வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இராம குண்டம் சூட்டோடு சேர்த்து அரசியல்வாதிகளும் சூடேற்றிக்கொண்டிருப்ப்பதால் ஆந்திர மக்கள் மண்டை காய்ந்து போய் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் நடைபயணம் செய்திராத அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போதைய அரசியல்வாதிகள் அனைவருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மராத்தான் வாக் சென்றிருக்கிறார்கள். எல்லாமே அரசியல் கணக்குகளை சரி செய்து கொள்வதற்காகவோ அல்லது தங்கள் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திக்கொள்வதற்காகவோ மேற்கொள்ளப்பட்ட பயணங்களாகவே தெரிகிறது. மக்கள் நலனை முன்வைத்து நடந்திருந்தால் மின்சார வெட்டும், தண்ணீர் பஞ்சமும் காணாமல் போயிருக்கும்.

சுதந்திர போராட்ட காலத்தில் சுயநலமற்ற தலைவர்களால் மக்களின் எழுச்சிக்காக ஏற்படுத்தபட்ட நடைபயணங்களை இன்றைய அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்திக்கொள்வதை பார்க்கும்போது பேசாமல் வரலாற்று புத்தகங்களில் இருந்து இம்மாதிரியான முன்மாதிரி நிகழ்வுகளை நீக்கிவிடலாம் போலத் தோன்றுகிறது. அட்லீஸ்ட் அடுத்த தலைமுறையாவது கொஞ்சம் உருப்படும்.

Sunday, June 27, 2010

கவியரசு கண்ணதாசன் – MJ

பிறர் தங்களை விமர்சனம் செய்வதையே தாங்கிக் கொள்ள முடியாத மனிதர்கள் மத்தியில் தங்களையே சுய விமர்சனம் செய்து பார்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இரண்டு புத்தகங்களை தவறாமல் படித்துவிடுவது நல்லது. ஒன்று மகாத்மா காந்தியின் “The story of My Experiments with Truth”. மற்றது கண்ணதாசனின் “வனவாசம்”

எப்படி வாழலாம் எப்படி வாழக்கூடாது என்ற இரண்டிற்கும் சரிசமமாக நியாயம் செய்திருக்கிறார் கண்ணதாசன் aka திரு. ஏ.எல்.முத்தையா. இவரைப் பற்றி படிக்கும் போதெல்லாம், கவிகள் எப்போதும் வறுமையில் வாடியதாகவும் அரசர்களின் பரிசை நம்பியே குடும்பத்தை நடத்தியதாகவும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் வரலாற்று புத்தகங்கள் மீது லேசான சந்தேகம் வருகிறது. சோம பானம், சுறா பானம் போன்ற வஸ்த்துக்களுடன் ஏறக்குறைய அரசர்களுக்கிணையான ஒரு வாழ்க்கையையே அவர்களும் வாழ்ந்திருப்பார்கள் போல தெரிகிறது.

M.K.T திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். நின்றால் பாடல், நடந்தால் பாடல் என காசு கொடுத்து வாங்கிய அத்தனை பிலிம் ரோலையும் வெறும் பாட்டுப்பாடியே நிரப்பியிருக்கும் அவர் காலத்து பாடல்களில் காதல் ரசத்தை தவிர்த்து பிற வாழ்வியல் சமாச்சாரங்கள் சல்லடை போட்டு தேடினாலும் அவ்வளவாக கிடைப்பதில்லை. கண்ணதாசன் அந்த வெற்றிடத்தை அழகாக நிரப்ப முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருப்பதாகவே தெரிகிறது.

காதல், சந்தோஷம் போன்ற விஷயங்களுக்கு அப்பால் உள்ள நடைமுறை உலகத்தை மென்மையாகவும் தைரியமாகவும் இவருக்கு முன்னும் சரி பின்னும் சரி எந்த ஒரு திரைப்பட பாடலாசிரியரும் இவரைப்போல வெற்றிகரமாக படைத்திருப்பதாக தெரியவில்லை. போனால் போகட்டும் போடா போன்ற Reality வரிகளை கண்ணதாசனுக்குப் பிறகு யாரும் தொட்டதாக தெரியவில்லை.

தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் தன் பாடல் வரிகளின் வழியாக என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசருக்கு Belated Birthday (24-June) Wishes

-----------------------------------------------------------------------------------

பேரரசு இயக்கிய படங்கள் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்போது மக்களுக்கு சாமி வருவதற்காக மஞ்சள் தண்ணி தெளிப்பது போல MJ Concert-க்கு டிக்கெட் வாங்கும்போதே மக்களை மந்திரித்து விட்டுவிடுவார்கள் போலத் தெரிகிறது. எந்த விஷுவலில் பார்த்தாலும் மக்கள் அனைவரும் ஒரு மாதிரி ஆடியபடியேதான் இருக்கிறார்கள். எல்லோரையும் ஆட்டுவித்த King of Pop மறைந்து ஒரு வருடம் ஓடிவிட்டது.

லைம் லைட்டிற்குள் வந்துவிட்டால் தும்முவதை கூட முதல் பக்கத்தில் கொண்டுவந்துவிடும் மீடியாக்காரர்களுக்கு MJ மாதிரியான ஆட்கள் அமுதசுரபி மாதிரி…..மறைந்து ஒரு வருடம் கழிந்த பின்னும் இன்னமும் பத்திரிகைகளுக்கு செய்தியை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார் மனிதர்.

உயிருடன் இருந்தபோது இருந்த fame இன்னமும் அப்படியே இருக்கிறது மனிதருக்கு. MJ வின் ஆல்பத்தின் பக்கம் தலைவைத்து படுத்திராதவர்கள் கூட சென்ற வருடம் இவர் மறைந்தவுடன் முட்டி மோதி ஒரு காப்பி Thriller-ஐ வாங்கி பத்திரப்படுத்திவிட்டார்கள். கிடைத்த கேப்பில் ரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ரிக்கார்டிங் நிறுவனங்கள் காசை அள்ளிவிட்டன. இன்னமும் அள்ளிக்கொண்டிருக்கின்றன. யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன்.

R.I.P MJ

Wednesday, June 23, 2010

தேநீர் கடை -- Creative Thinking

ஒருமுறை திருச்சி நகரையொட்டிய பகுதியில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக வித்தியாசமான பெயர் பலகை கொண்ட தேநீர் கடை ஒன்று கண்ணில் பட்டது. கடையின் பெயர் “ஆத்திக்குடி”.

ராமு டீ ஸ்டால், பாம்பே டீ ஸ்டால் என ஒரே மாதிரியான பெயர்களை மட்டுமே பார்த்து பழகிவிட்டிருந்த நிலையில் இந்த வித்தியாசமான பெயர் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. பல வருடங்கள் கழிந்த பின்னும் இன்னமும் ஒவ்வொரு முறை தேநீர் கடைகளை பார்க்கும் போதெல்லாம் கடைகளின் பெயர் பலகை மீது கண்கள் படிவதையும், “ஆத்திக்குடி” போன்ற வித்தியாசமான பெயரை காண முடியுமா என்ற ஏக்கம் தலையெடுப்பதையும் தவிர்க்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன் விளம்பரத் துறையில் வேலை செய்பவர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தபோது இம்மாதிரியான மனதில் பதிந்து விடக்கூடிய ஒன் லைனர் கான்செப்ட்டுக்காக அவர்கள் எத்தனை தூரம் மெனக்கெடுகிறார்கள் என்பதை நேரடியாக பார்க்க முடிந்தது.

இம்மாதிரி வித்தியாசமாக சிந்திப்பவர்கள் ஆதிகாலத்திலிருந்தே இருந்திருக்கிறார்கள் போல தெரிகிறது. சங்கத் தமிழ் இலக்கிய படைப்பாளிகளில் Out-of-Box thin-king குரு அநேகமாக திருவள்ளுவராக தான் இருந்திருக்ககூடும். திருக்குறளை இரண்டிக்குள் சுருக்காமல் பிற இலக்கியங்களை போல பத்தியாகவோ அல்லது வேறு வடிவிலோ படைத்திருந்தால் இத்தனை தூரம் திருக்குறள் பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. எழுதுவது என முடிவு செய்தபின் அதை கொஞ்சம் க்ரியேட்டிவிட்டியுடன் செய்யலாம் என யோசித்து அதன் பின்னரே அந்த இரண்டடி கான்செப்டை கையில் எடுத்திருப்பாரோ எனத் தோன்றுகிறது.

Creative Thinking, Out-of-Box Thinking போன்ற சமாச்சாரங்களுக்காகவே பணத்தை கொட்டி கொடுத்து ஐ.ஐ.எம்மிலிருந்தும் ஜமன்லால் பஜாஜ் இன்ஸ்ட்யூடிலிருந்தும் ஆட்களை அள்ளிக் கொண்டு வரும் பல நிறுவனங்களை அருகிலிருந்து பார்த்ததுண்டு. நம்மூரில் இதே மேட்டரை ரொம்ப மெனக்கெடாமல் அதிக செலவில்லாமல் இந்த தேநீர் கடைக்காரரை போல ஜஸ்ட் லைக் தட் என செய்துவிட்டுப் போகிறார்கள்.

தேநீர் கடைக்காரருக்கு ஒன் லைனர் என்றால் நம்மூர் ஆட்டோக்களில் இரண்டு வரியில் அசால்டாக மெஸேஜ் எழுதி சில நேரங்களில் புருவத்தை உயர செய்துவிடுகிறார்கள். டீ-ஷர்ட்களில் ப்ரிண்ட் செய்வதற்காக மெஸேஜ் தேடிக்கொண்டிருப்பவர்கள் நம்மூர் ஆட்டோக்கள் பின்னால் இரண்டு நாள் சுற்றினால் போதும்…அடுத்த இரண்டு வருடத்துக்கு யோசிக்கவே தேவையில்லாத அளவிற்கு கான்செப்ட் கிடைத்துவிடும்.

அடுத்தமுறை பஸ்ஸில் பயணம் செய்யும்போதோ அல்லது ஆட்டோக்களின் பின்னால் செல்லும்போதே கண்ணை அகலமாக திறந்து வைத்திருங்கள்..வித்தியாசமான பெயரோ அல்லது வாசகமோ உங்களை ஆச்சரியப்படுத்த காத்திருக்கலாம்.

Tuesday, June 22, 2010

செம்மொழி மாநாடு மற்றும் பெஃட்னா – வாழ்த்துக்கள்

கொங்கு மண்டலத்தில் கோலகலமாக தொடங்குகிறது தமிழ் செம்மொழி மாநாடு. வாழ்த்துக்கள். வழக்கம்போல சிலப்பதிகாரத்தையும், கம்ப இராமயணத்தையும், திருக்குறளையும் மட்டுமே தொட்டுச் செல்லாமல் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தமிழ்க்கணிணி/இணையம் சார்ந்த விஷயங்களுக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்ககூடிய விஷயம். வழக்கத்திற்கு மாறாக கூடுமானவரை கரைவேட்டிகளை தவிர்த்து அரசியலுக்கு அப்பாற்பட்ட தனி நபர்களுக்கும் அவர்களது உரைகளுக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது மாற்றத்திற்கான அறிகுறி…இது தொடரும் பட்சத்தில் தமிழ் தானாக வளரும்.

இம்மாநாட்டு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதைப் போலவே, தமிழகத்தின் மிகப்பெரிய நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் மின் திரை அமைத்து இணையம் மூலமாக நேரடியாக வெப்-காஸ்ட் செய்திருந்தால் பெங்களூரில் லேண்ட் ஆகும் தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் சென்னைக்கும்/கோவைக்கும் ஒரு எட்டு வந்துவிட்டுப் போயிருப்பார்கள். மொழியோடு சேர்த்து வேலை வாய்ப்புகளையும் வளர்த்திருக்கலாம். போதுமான உள்கட்டமைப்பு, தேவைக்கதிமான பேண்ட்வித், கொட்டிக்கிடக்கும் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் என எல்லாம் இருந்தும் வாய்ப்பு கிடைக்கும்போது இம்மாதிரியான முயற்சிகளை ஏன் முன்னெடுக்ககூடாது எனத் தெரியவில்லை.

கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் மொழியை முன்னிறுத்தி நடக்கும் மாநாடுகளில் அம்மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் கலந்து கொள்வது இயல்பாக நடக்கிறது. தமிழ்நாட்டில் அம்மாதிரியான நிலையை 1970 க்கு பிறந்த தலைமுறையினர் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. கடந்த காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு இரு கழகங்களும் இம்மாதிரியான நிகழ்வுகளின் போதாவது கையை குலுக்கிக்கொண்டால் தமிழ் கொஞ்சம் தற்பெருமை கொள்ளும்.

-------------------------------------------------------------------------------------

அமெரிக்கவாழ் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பெஃட்னா தமிழ் திருவிழா ஜூலை 3,4 மற்றும் 5 தேதிகளில் கனெக்டிக்கட்டில் நடைபெறுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய நிகழ்வாக நடைபெற இருக்கும் இந்த விழாவில் திரையுலக நட்சத்திரங்கள், தமிழ் அறிஞர்கள் என பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி நீண்ட வார இறுதி விடுப்பு கிடைப்பதால் கிழக்கு கடற்கரையில் வசிக்கும் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க முயற்சிக்கலாம். வேறு பகுதிகளில் இருந்து வட கிழக்கிற்கு செல்ல/வர திட்டமிட்டிருப்பவர்கள் வாய்ப்பு கிடைத்தால் கனெடிக்கட்டை திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

எல்லோரையும் எல்லோருக்கும் நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இம்மாதிரியான நிகழ்வுகள் அந்த இடைவெளிகளை குறைத்து புதியவர்களை அறிமுகப்படுத்தலாம். பங்கேற்க வாய்ப்பும் நேரமும் உள்ளவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:

http://www.fetna.org/index.php?option=com_eventlist&view=eventlist&Itemid=34


.

Sunday, June 20, 2010

வுவுஸலாஃ – Vuvuzela

சில வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு சானலில் மீசை முருகேஷ் அவர்கள் நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் ஸ்பூன், தட்டு, அமுல் பேபி பவுடர் டின் ஆகிய பொருட்களை வைத்து வித விதமான ஓசையை ஏற்படுத்தி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தார். படிக்கும் நாட்களில் என்.சி.சி. கேம்பின் போது அலுமினியத்தால் செய்யப்பட்ட அன்ன(க்)கூடையை தலைகீழாக கவிழ்த்துப்போட்டு அடி பின்னி எடுப்பார்கள் சக மாணவர்கள்….இந்த ஓசையின் காம்பினேஷனில் கானா பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் அடுத்த பத்து தலைமுறைக்கு எந்த புண்ணியமும் செய்ய வேண்டியதில்லை :-) ஆடாத கால்களையும் ஆட வைக்கும் ஒரு துள்ளல் இசையை மிகவும் சாதாரணமாக வெளிப்படுத்திவிடுவார்கள்.

நேர்த்தியான இசைக்கருவிகளின் ஓசையை விட இம்மாதிரியான சாதாரணமான பொருட்களை கொண்டு வெளிப்படுத்தப்படும் ஒசை பல நேரங்களில் ஆளை உருக்கி எடுத்துவிடும். இரண்டு அடிக்கு இரண்டு அடி அலுமினியம் அல்லது ப்ளாஸ்டிக் துண்டை அப்படியே புனல் போல மடித்து நம்மூர் ஆட்டோக்காரர்கள் பயன்படுத்தும் பல்ப் ஹார்ன் போன்றதொரு சமாச்சாரத்தை உருவாக்கிவிட்டார்கள்…..பெயர் மட்டும் கொஞ்சம் ஆப்பிரிக்கத்தனமாக இருக்கிறது…வுவுஸலாஃ (Vu-Vu-Zela)

ஆயிரம் கொசுக்கள் காதருகே வந்து ஒரே நேரத்தில் ரீங்காரமிடுகிற மாதிரி இருக்கிறது வுவுஸலாஃவிலிருந்து வெளிவரும் ஒலியின் ஓசை. இதமாகவும் இல்லாமல் எரிச்சலையும் ஏற்படுத்தாமல் வித்தியாசமாக ஒலிக்கிறது இந்த மினி ஹார்ன். 2010 உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் இன்றைய தேதிக்கு கதாநாயகன் இந்த இசை கருவிதான். நம்மூர் நாதஸ்வரத்தில் இருக்கும் துவாரங்களை எடுத்துவிட்டு, அதை இரண்டு அடியாக உருக்கி சுருக்கி எடுத்தது மாதிரியான தோற்றம்….இதை வாசிப்பதற்கு வித்வானாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

விடலைப்பையன்கள் முதல் விவரம் தெரிந்தவர்கள் வரை ஊதுகிறார்கள்….ஊதிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியின் போதும் தொடர்ந்து தொண்ணூறு நிமிடங்கள் இந்த கருவியிலிருந்து வெளிப்படும் ஓசை பிண்ணணியில் கசிந்தபடி இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி பங்கு கொண்ட போட்டிகளின்போது கொஞ்சம் டெஸிபலை கூட்டி எதிரணி மற்றும் தொலைக்காட்சி வர்ணணையாளர்களை ஏகத்தும் சூடேற்றிக்கொண்டிருந்தார்கள் லோக்கல் கால்பந்தாட்ட ரசிகர்கள். குழுவாக செயல்பட்டு மாறி மாறி ஊதிக்கொண்டே இருப்பார்கள் போல தெரிகிறது.

ஒவர் நைட்டில் உலகப்புகழ் பெற்றுவிட்ட வுவுஸலாஃவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பல மொபைல் போன்களில் வுவுஸலாஃவின் வித்தியாசமான ஒலி தான் இப்போதைக்கு ரிங்டோன்….போட்டி ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை இந்த கருவியை விளையாட்டு மைதானத்திற்குள் பயன்படுத்த தடை விதிக்ககோரி வைக்கப்பட்ட அனைத்து வேண்டுகோளையும் பிஃபா நிராகரித்துவிட்டது. கால்பந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளை டென்னிஸ் அல்லது கோல்ப் போட்டியை ரசிப்பது போல அமைதியாக ரசிக்க ஆரம்பித்தால் மிகவும் அபத்தமாக இருக்கும். போட்டியின் சுவாரசியமே தகர்ந்து போகும்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இம்மாதிரியான போட்டிகளின் போது அங்குள்ள கலாச்சாரத்தை அம்மக்கள் பிரதிபலிக்க தவறுவதில்லை..அவர்கள் கைதட்டியும், கோரஸாக சத்தமிட்டும் தங்கள் ஆர்ப்பரிப்பை வெளிப்படுத்துவது போல ஆப்பிரிக்க மக்கள் தங்கள் தேசத்தில் ஒரு இசைக்கருவியின் மூலம் அவர்களின் கொண்டாடத்தை வெளிப்படுத்துகிறார்காள். இதை புரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு ஒன்றே ஒன்றைதான் சொல்ல முடியும்.

Be a Roman when you are in Rome

Thursday, June 17, 2010

பரிட்டோ பெளல் Vs ப்ரெஞ்ச் கிஸ்

சனி உச்சத்தில் இருக்கிறார் ப்ரெஞ்ச் கால்பந்தாட்ட குழுவிற்கு…சாண் ஏறினால் இரண்டு முழம் சறுக்குவது என சத்திய பிரமாணமே எடுத்திருப்பார்கள் போல தெரிகிறது. 1998 இல் சாம்பியன், சரியாக நாலு வருடம் கழித்து 2002 இல் செனேகல் என்ற கத்துகுட்டி அணி சாம்பியன்களை கிழிப்பது எப்படி என வகுப்பெடுத்துக் காட்டினார்கள். ஒருவழியாக அதிலிருந்து மீண்டு மறுபடியும் 2006 இல் இறுதி போட்டி வரை முன்னேறினார்கள் பாரீஸ்வாலாக்கள், 2010 இல் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது. இம்முறை செனேகல் இடத்தை மெக்ஸிகோ எடுத்துக்கொண்டது…கிழி கிழியென கிழித்துவிட்டார்கள் பிரான்ஸ் அணியை. பேசாமல் ப்ரெஞ்ச்காரர்கள் இனிமேல் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு கொஞ்சம் சேதாரத்தை குறைக்கப்பார்க்கலாம்..

படு பில்டப் கொடுத்து வெளிவரும் பாடாவதி படத்தை முதல்நாள் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகும் நம்மூர் ஆட்களைப் போலவே, ஏகத்திற்கும் எதிர்பார்ப்பில் இருந்த சில பல கால்பந்தாட்ட உடன்பிறப்புக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது டீம் பிரான்ஸ். பாண்டிச்சேரி மக்கள் மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

அர்ஜென்டினா, ப்ரேசில், ஜெர்மனி, இத்தாலி அணிகளுக்கு இணையான எதிர்பார்ப்பு இந்த அணியின் மீதும் இருந்தது….நேர்த்தியாக சொதப்பிவிட்டார்கள். எதிர்புறத்தில் விளையாடிய மெக்ஸிகோ அணியை யாராவது மலையாள மாந்தீரீக புண்ணியவான் ஆசீர்வதித்து இருப்பார் போல தெரிகிறது, அப்படி ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டார்கள்…ஊருக்கு திரும்பும்போது டகீலா கரை புரளும். ஆட்டத்தின் முதல் பாதி வரை தாக்குதலை தொடங்காமல் வீணடித்துவிட்ட பிரான்ஸ் இரண்டாவது பாதியின் பின்பகுதியில் விழித்துக்கொண்டது....பட் ரொம்ப லேட்.

மெக்ஸிகோவின் முதல் கோல் விழும் போது ப்ரெஞ்ச் அணியின் கோலியை தவிர வேறு எந்த வீரரையும் கேமிராவின் வளையத்துக்குள் காணவே முடியவில்லை……அந்த அளவிற்கு ஒரு சுறுசுறுப்புடன் ஆடிக்கொண்டிருந்தது ஒட்டு மொத்த ப்ரெஞ்ச் அணியும்….போதாத குறைக்கு வேலியில போண ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்டார்கள்....தேவையற்ற பெனால்டிக் வாய்ப்பை வாரி வழங்கிவிட்டு ஊருக்கு ரிட்டர்ன் டிக்கெட் கன்ஃபர்ம் செய்துவிட்டார்கள்….

கர்லா புரூனியும், நிக்கோலஸ் சர்க்கோஸியும் மறந்தாலும் பிரான்ஸ் கால்பந்தாட்ட ரசிகர்கள் இந்த தோல்வியை மறக்கவே மாட்டார்கள். Better Luck Next time…Adios Amigos Team France 

Tuesday, June 15, 2010

கங்குலி அண்ணே நீங்க தப்பிச்சிட்டீங்க….

ஸ்லோவாக்கியன்ஸ் யாரிடமாவது அவர்கள் உச்சரிக்க விரும்பாத பெயர் என்னவென்று கேட்டுப்பாருங்கள்…சந்தேகமேயில்லாமல் வின்ஸ்டன் ரீட் என்பார்கள். இதுநாள் வரை கிரிக்கெட்டில் மட்டும்தான் நியுசிகாரர்கள் ஸ்லோ பிக்கப் என நினைத்திருந்தேன்….கால்பந்திலும் அப்படித்தான் போலத்தெரிகிறது. ஸ்லோவாக்கியாவிற்கு எதிரான போட்டியில் மிகவும் மந்தமாக ஆடத்தொடங்கி ஆட்டத்தின் இறுதி நொடிகளில் அற்புதமாக ஒரு கோலை போட்டு போட்டியை சமன் செய்ததோடு மட்டுமல்லாமல், ஏறக்குறைய வென்றுவிட்டோம் என மதப்பில் இருந்த ஸ்லோவாக்கியன் அணிக்கு ஷாக் கொடுத்துவிட்டார்கள் நியுசிக்காரர்கள்.

நேர்த்தியான அந்த கோலை அடித்து “கிவி” தேசத்து மக்களை திக்குமுக்காடச் செய்துவிட்டார் வின்ஸ்டன் ரீட். ஆக்லாந்திலும், கிறைஸ்ட்சர்ச்சிலும் ஆட்டம் காலி என முடிவு செய்து அடித்து முடித்த பாதி பட்வைசர் பாட்டிலுடன் வீட்டுக்கு கிளம்ப தயாராக இருந்த அத்தனை நியுசிக்காரர்களும் மீண்டும் ஒருமுறை வின்ஸ்டன் பெயரைச் சொல்லி நிச்சயமாக மலையேறி இருப்பார்கள்.

சோம்பலாக ஆரம்பித்த போட்டி ஸ்லோவாக்கிய அணியின் முதல் கோலால் கொஞ்சம் சுவாரசியமாக மாறியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி முழு நேரமும் முடிந்த நிலையில் கோல் எதுவும் போட்டிராத நியுசிகாரர்கள், ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் அந்த இறுதி கோலை அடித்து ஸ்லோவாக்கிய அணியின் வெற்றிக்கனவை தகர்த்துவிட்டார்கள்.

எதிரணியின் கனவைத் தகர்த்த வின்ஸ்டன் ரீட் அநேகமாக சல்மான்கான் அல்லது சவுரவ் கங்குலியின் பரம விசிறியாக இருப்பார்/இருந்திருப்பார் போல தெரிகிறது. தனது கன்னிமுயற்சி கோலாக மாறிவிட்ட சந்தோஷத்தில் மனிதர் தனது சட்டையை கழற்றி சுற்றிக்கொண்டே ஒடி வந்ததை நியுசியில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த யுவதிகள் ரசித்திருக்கலாம் ஆனால் ஆட்ட நடுவர் ரசிக்கவில்லை….மஞ்சள் அட்டையை கையில் எடுத்துவிட்டார். என்ன கொடுமை சார் இது…இதுமாதிரியான பெரிய போட்டிகளில் இம்மாதிரியான கொண்டாட்ட நிகழ்வுகளை கூட அனுமதிக்காமல் விளையாட்டு போட்டியை மிலிட்டரி பரேட் மாதிரி மாற்றுவது ஏன் என்றே தெரியவில்லை.

நல்ல வேளை கிரிக்கெட் போட்டிகளில் இம்மாதிரியான விதி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இருந்திருந்தால் லண்டன் லார்ட்ஸில் நடந்த போட்டியின் போது ஒன்றாம் வகுப்பு பையன் மாதிரி சட்டையை கழற்றி தலைக்கு மேலே சுற்றியபடி ஓடிவந்த அண்ணன் கங்குலியை இந்நேரம் கட்டம் கட்டி இருப்பார்கள்…தப்பியது பெங்கால் டைகர் 

Sunday, May 23, 2010

ஜெஸிஃகா வாட்ஸன் – ஜோர்டன் ரொமேரோ – லைலா – மங்களூர்

கிட்டத்தட்ட ஏழு மாதம், பூமியின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய பெருங்கடல்களான பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலை தன்னந்தனியே கடந்து உலகை வலம் வந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ஜெஸிஃகா வாட்ஸன். வயது அதிகமில்லை…வெறும் பதினாறு. இவருக்கு முன்னதாக இதே சாதனையை படைத்தவர்கள் எல்லோரும் இவரைவிட வயதில் மூத்தவர்கள். தனது பதினேழாவது பிறந்தநாளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக இவர் தன் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சிட்னி துறைமுகத்திற்குள் நுழைந்ததை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, செமஸ்டர் தேர்விற்காக பதினாறு வயதில் இரவெல்லாம் கண்விழித்துப் படித்துக்கொண்டிருந்தது நினைவில் வந்து போனது. குறைந்தபட்சம் என்னுடைய ஹீரோ சைக்கிளில் தமிழ்நாட்டையாவது சுற்றி வர முயற்சி செய்திருக்கலாமோ என தோன்றுகிறது. வெறும் தோற்றத்தை வைத்து மனிதர்களின் திறமையை கணிப்பவர்களை தான் வெறுப்பதாக கூறுகிறார் இந்த கடல்கன்னி. நம்மவர்கள் கொஞ்சம் இவரைப்பற்றி தெரிந்துக்கொண்டால் வெறும் படிப்பை தாண்டி வேறு ஒரு உலகம் இருப்பது புரியவரும். வாழ்த்துக்கள் ஜெஸிஃகா.
-------------------------------------------------------------------------------------

ஜெஸிஃகா வாட்ஸன் எல்லாம் ரொம்ப லேட்….சொல்லாமல் சொல்கிறார் அமெரிக்காவின் ஜோர்டன் ரொமேரோ. சென்ற சனிக்கிழமை இவர் எவரெஸ்டின் உச்சியை தொட்டபோது தம்பிக்கு வயது வெறும் பதிமூன்று. எவரெஸ்டின் உச்சியை அடைந்தவர்களில் மிகவும் வயது குறைவானவர் இப்போதைக்கு இவர்தான். கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இவர் மற்ற இளம் வயதினரிடையே இம்மாதிரியான பொழுதுபோக்கு ஆர்வத்தை உண்டுபண்ணுவதற்காகவே இந்த சாதனையை மேற்கொண்டிருப்பதாக சொல்கிறார். ப்ளே ஸ்டேஷனிலும், எக்ஸ் பாக்ஸிலும் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையை எப்படியாவது வெளியே கொண்டுவரவேண்டும் என நினைக்கும் அன்பர்களும்/அன்பனிகளும், படிப்பை தவிர வேறு ஒரு உலகமே இல்லை என தங்கள் குழந்தைகளை புரட்டி எடுக்கும் பெற்றோர்களும் இவரை குருவாக பாவித்துக்கொள்வது நலம். வரலாறு படிக்கும் வயதில் வரலாறு படைப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்…ஹ்ம்ம்ம்ம்ம்ம்.
-------------------------------------------------------------------------------------

ரொம்ப நாட்களாக இருக்கும் சந்தேகம். அதென்ன புயலுக்கு மட்டும் வெறும் பெண்களின் பெயரையே வைக்கிறார்கள். பெண்களை மிகவும் சாந்தசொரூபியாகவும், அமைதியானவர்களாகவும் சித்தரிக்கும் நம்மூரில் கூட பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் புயலுக்கு “லைலா” என பெயரிட்டிருக்கிறார்கள். காத்ரீனா, லைலா என பெண்களின் பெயரை மட்டுமே வைப்பதின் பிண்ணனியில் ஏதாவது சைக்காலாஜிக்கல் விஷயம் இருக்குமோ என புயலைப்பற்றியும் சைக்காலாஜி பற்றியும் மூன்று நாட்களாக லைப்ரரியில் படித்துப் பார்த்ததில் அப்படி எந்த ஒரு தொடர்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. சரி போனால் போகட்டும் எப்போதாவது புயலுக்கு ஆண்டனி, ஆறுமுகம் என ஆண்களின் பெயரை சூட்டியிருக்கிறார்களா என கூர்ந்து படித்துப் பார்த்ததில் எந்த ஒரு புயலும் இதுவரை அந்த புண்ணியத்தை அடைந்ததாக தெரியவில்லை. பெயரே வைக்காமல் கூட இருந்திருக்கிறார்களே தவிர தப்பித்தவறி கூட ஒரு ஆணின் பெயரை இதுவரை சூட்டவில்லை. மெட்ரோலாஜி ஆசாமி யாரவது கண்ணில்படும்போது இந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்வது என முடிவு செய்துள்ளேன். சரி விஷயத்துக்கு வருவோம்...கரைக்கு வருவதற்கு முன்னாலும் கரையை கடந்த பின்னாலும் லைலாவால் கொண்டுவரப்பட்ட அத்தனை மழைநீரையும் வழக்கம்போல சேகரிக்காமல் வீணடித்து விட்டதைப்பற்றி எந்த ஒரு செய்தி நிறுவனமும் ஒரு வரிகூட செய்தி வெளியிடாமல் தங்கள் சமூக அக்கறையை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியிருக்கிறார்கள். மூச்சுக்கு முன்னூறு தடவை “லைலா”, “லைலா” என கூவிக்கொண்டிருந்த பத்திரிகைகளில் ஏதாவது ஒரு பத்திரிகை மழைநீர் சேகரிப்பை தொட்டிருந்தால் கூட போதும்…அடுத்தமுறை அனுஷ்காவோ, தமன்னாவோ புயலாக வரும்போது மக்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டிருப்பார்கள். புரட்சிப்புயலையும், கவர்ச்சிப்புயலையும் மட்டுமே சிலாகித்து எழுதும் பத்திரிகைகள் கொஞ்சம் இம்மாதிரி உருப்படியான விஷயத்தையும் எழுதினால் நாட்டில் எப்போதும் சீராக மழை பெய்யும், அம்மா மண்டபத்தில் காவிரி இரு கரையையும் முத்தமிட்டபடி ஒடிக்கொண்டேயிருக்கும்.
-------------------------------------------------------------------------------------

தேசத்தின் துயரம் :-(


-------------------------------------------------------------------------------------

Tuesday, March 23, 2010

சச்சின் – ஸ்டீவ் ஜாப்ஸ் – ஜெ.ஜெ

“பதினோராயிரம் முட்டாள்கள் ரசிக்க பதினோரு முட்டாள்கள் விளையாடும் விளையாட்டு”….சொன்ன ஜார்ஜ் பெர்னாட்ஷா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் சச்சினுக்கு வாழ்த்துரை எழுதியிருப்பார். டொனால்ட் பிராட்மேன் இந்நேரம் மும்பைக்கு பறந்து வந்திருப்பார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் என்பது ரிக்கி பாண்டிங் தொடங்கி ஜெயசூர்யா வரை எல்லோருக்குள்ளும் தூங்கிக்கொண்டிருந்த (கொண்டிருக்கும்) கனவு. ஒரு காலகட்டத்தில் பெளலர்களை சுளுக்கெடுப்பதை தவிர வேறென்றும் அறியேன் பராபரமே என கும்பிட்டுவிட்டு களம் இறங்கிக்கொண்டிருந்த லான்ஸ் குளுஸ்னர், ரிக்கார்டோ பெளவல் போன்றவர்கள் இரட்டை சதத்தை கடந்துவிடுவார்கள் என ஏகத்துக்கும் எதிர்பார்க்கப்பட்டது. அடித்த அடி அப்படி. எதிர்பாரத விதத்தில் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முற்று பெற்றுவிட, நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தக் கனவை நிஜமாக்கிவிட்டார் இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின். வயது, உடல் நிலை, ஆட்டத்திறன் என தன் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் தனது மட்டையின் மூலமாக மட்டுமே பதில் சொல்வது என சத்தியபிரமாணமே எடுத்திருப்பார் போல தெரிகிறது. அடித்து நொறுக்கிவிட்டார். இத்தனை வருடங்களாக ஆடியும் இன்னமும் வேகம் குறையவேயில்லை இந்த சிவாஜி பார்க் ஹீரோவிடம். இருபது வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக அலைந்த ட்ரவுசர் பாண்டிகளின் டெமி காட் சந்தேகமே இல்லாமல் சச்சின் தான். சாதனையின் கைத்தட்டல்கள் அடங்குவதற்கு முன்பே , எதிர்பார்த்தது போலவே இந்திய அரசியல்வாதிகள் அறிக்கை பட்டியலிட ஆரம்பித்துவிட்டார்கள்…தெருவுக்கு பெயர் வைப்பது, மியூசியம் அமைப்பது, பாரத் ரத்னா என ஆள் ஆளுக்கு கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசியல்வாதிகளும், தாக்ரேக்களும் சச்சினை அவர் வழியில் விட்டுவிட்டு ஒதுங்கி நின்றாலே போதும். அதைவிட பெரிய பரிசையோ அல்லது பாராட்டையோ சச்சினே இவர்களிடம் எதிர்பார்க்கமாட்டார்……..விடுவார்களா ?
-------------------------------------------------------------------------------------

பிப்ரவரி-24,

இடம்: ஃக்யூபர்டினோ, கலிஃபோர்னியா

கட்-அவுட், ஃபிளக்ஸ் பேனர், பால் குடம், ப்ளாஸ்டிக் குடம் என எதுவுமே இல்லாமல் தன் பிறந்தநாளை அமைதியாக கொண்டாடி முடித்துவிட்டார் ஆப்பிளின் ஆதர்ஷ புருஷன் ஸ்டீவ் ஜாப்ஸ். வாழ்த்துக்கள். 1985 இல் கிட்டதட்ட தனது தொழில் முறை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மனம் தளராமல் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி தொழில் ரீதியாக யாரும் நெருங்கவே முடியாத உயரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார் மனிதர். வாக்கி டாக்கி ரேஞ்சிற்கு பெரிய சைசில் இருந்த மொபைல் போன்களை ஒரே நைட்டில் பார்சல் செய்து பக்கத்தில் இருந்த பசிபிக்கில் வீசிவிட்டது இவரின் செல்லக்குழந்தை ஐஃபோன். அடுத்த தலைமுறைக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, A for Apple என சொல்லிவிட்டு, ஆப்பிள் பழத்திற்கு பதிலாக ஐஃபோன் எடுத்து காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆதாம் கடித்து முடித்து மிச்சம் வைத்த ஆப்பிளை வைத்துக்கொண்டு மைக்ரோசாப்டையும், கூகிளையும் ஒருவழி பண்ணிக்கொண்டிருக்கிறார் ஸ்டீவ். கவச குண்டலத்தோட பிறந்த கர்ணன் கதைமாதிரி இனிமேல் பிறக்கும் குழந்தைககள் காதில் ஆப்பிள் ஐபாடோடு பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. மனிதரின் ஆக்கத்தில் உருவாகும் ஒவ்வொரு பொருளும் அப்படி ஒரு ரீச். தோன்றின் புகழோடு தோன்றுக ….திருவள்ளுவர் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.
-------------------------------------------------------------------------------------

பிப்ரவரி-24

இடம்: போயஸ் கார்டன், சென்னை

அம்மாவின் பிறந்தநாள். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் நாளேடுகளை அலங்கரித்திருந்த பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை பார்க்கும்போது, பேசாமல் சினிமா வசனகர்த்தாக்களும், கவிஞர்களும் கொஞ்ச நாட்களுக்கு ஏதாவது ஒரு வட்டத்தையோ அல்லது மாவட்டத்தையோ தங்களின் மென்டராக பாவித்துக்கொண்டு பாடம் கற்றுக்கொள்வது நல்லது என தோன்றுகிறது. ரூம் போடாமலே என்னமாய் யோசிக்கிறார்கள். இந்த ரேஞ்சிற்கு யோசிக்கும் இவர்களை, தேர்தலின்போது (யோசிக்கவே தயங்கும்) பொதுமக்கள் எப்படி கவிழ்த்துவிடுகிறார்கள் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. இதே தேதியில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் அடுத்த மூலையில் அமர்ந்துகொண்டு தனது தொழில் ரீதியான போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி என யோசித்துக்கொண்டிருக்க, அம்மாவோ தேடி வருகின்ற இடைத்தேர்தல் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் கொடநாடுக்கு பறந்து விடுகிறார். பேசாமல் கொடநாட்டை அதிமுகவின் கோடைகால தலைமையகமாக அறிவித்துவிடலாம்….இவரின் இன்றைய நிலையில் கலைஞரோ அல்லது எம்ஜியாரோ இருந்திருந்தால் தங்களின் பிறந்தநாள் கொண்டாடத்தை பயன்படுத்தியே இந்நேரம் தொண்டர்களை உசுப்பேற்றி பென்னாகரத்திற்குள் அனுப்பி வைத்திருப்பார்கள். பதவியில் இருக்கும் காலங்களை விட பதவியில் இல்லாத நேரத்தில் மக்களிடம் நெருக்கமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஜெ.ஜெ.விற்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து அறிக்கைவிடுவதில் காட்டும் அதீத ஆர்வத்தையும் வேகத்தையும் இடைத்தேர்தல்களின் போது ரத்தத்தின் ரத்தங்களுக்கு நம்பிக்கையூட்டுவதிலும் காட்டினால் இரட்டை இலை கொஞ்சம் துளிர்விடும். இல்லையென்றால் அடுத்த பிறந்தநாளுக்குள் சில/பல கரைவேட்டிகள் கூடு விட்டு கூடு விட்டு பாய்ந்துவிடுவார்கள்….கவனிப்பாரா ஜெ.ஜெ.
-------------------------------------------------------------------------------------

Tuesday, February 16, 2010

சித்திரப் பாவை(கள்)






வரைகலை: பெருமாள் திருச்செல்வம்

தற்போது சென்னையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் தோழர் பெருமாள் திருச்செல்வம், ஓவியங்கள் வரைவதில் ஈடுபாடு கொண்டவர். பொழுதுபோக்கிற்காக இவர் வரையும் ஒவியங்கள் புருவத்தை உயரச் செய்கின்றன. ஒய்வு நேரங்களில் சிறிது நேரத்தை வரைவதிற்கு ஒதுக்கும் பட்சத்தில் மிகச் சிறந்த ஒவியங்களை இவரின் கரங்கள் படைக்ககூடும்.

Saturday, February 13, 2010

விளையாடுகிறதா விளையாட்டுத்துறை அமைச்சகம்

கோலகலாமாக தொடங்கிவிட்டது வான்கூவர் 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள். அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடன் போட்டி போட ஆப்பிரிக்காவின் குட்டி தேசங்கள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன.

எதிர்பார்த்தது போலவே சீனா, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் மிகப் பெரிய குழுவையே போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைத்துள்ளன. மிகவும் சுவாரசியமாக இவர்களுடன் போட்டி போட கேமேன் ஐலேண்ட் (Cayman Islands) என்னும் குட்டி தீவு ஒரே ஒரு சிங்கத்தை சிங்கிளாக தங்கள் நாட்டின் சார்பாக கோதாவில் இறக்கியுள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்துக்குள் அடக்கிவிடலாம். எழுபதிலிருந்து எண்பது ஆயிரத்துக்குள் இருக்கலாம். அஷ்டே. கானாவும், எத்தியோப்பியாவும், நேபாளமும் தங்கள் பொருளாதார நிலைகளையும் மீறி வீரர்களை தயார் செய்து அனுப்பி உள்ளன. தேசபக்தி பற்றி இவர்களிடம் பாடம் கற்றுக்கொள்வது ஷேமம்.

இன்னும் பத்து வருடத்திற்குள் நாம் தான் உலக வல்லரசு என மக்கள் காதில் பூ சுற்றிக்கொண்டிருக்கும் நம்மூர் அரசியல்வாதிகள் கொஞ்சம் இந்த போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் வரலாற்றையும் அவர்கள் அனுப்பி உள்ள வீரர்களின் எண்ணிக்கையையும் புரட்டிப் பார்த்துவிடுவது நலம். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள ஒரு தேசத்தால் வெறும் மூன்று பேரை மட்டுமே இந்த போட்டிகளுக்க்காக தயார் செய்ய முடிந்திருக்கிறது. அதிலும் இருவர் ராணுவ அணியில் இருந்து வந்திருக்கிறார்கள். ஒருவர் தனியாக களத்தில் உள்ளார்.

சொந்தமாக விண்வெளிக் கலங்களையும், அனுகுண்டையும் தயாரிக்ககூடிய அளவிற்கு முன்னேறி விட்ட ஒரு தேசத்தால் இம்மாதிரியான போட்டிகளுக்கு குறைந்தபட்சம் பத்து பேரைக்கூட தயார்செய்ய முடியாமல் போவது ஆச்சரியமாக இருக்கிறது. மாநிலத்திற்கு ஒரு சிறந்த வீரரை தயார் செய்வதை இலக்காக வைத்து செயல்பட்டிருந்தால் கூட இந்நேரம் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வீரர்களை இந்த போட்டிகளுக்கு அனுப்பி இருக்கமுடியும். வாழ்க விளையாட்டுத்துறை அமைச்சகம். வளர்க விளையாட்டுத்துறை அமைச்சர்.

கத்திரிக்காயை அனுமதிக்கலாமா வேண்டாமா, ஷாருக் படம் திரையிடப்பட்டதா இல்லையா என மாய்ந்து மாய்ந்து ஆராய்ந்துக்கொண்டிருக்கும் இந்திய மீடியா உலகம் விளையாட்டுத்துறை அமைச்சரின் அலுவலத்திற்கு ஒரு நடை போய்வந்தால் இந்த வருடம் நாட்டில் கொஞ்சம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.செய்வார்களா ஜனநாயகத்தின் நான்காவது தூணின் போர்ப்படை தளபதிகள்…

பி.கு. வான்கூவர் ஒலிம்பிக் போட்டியை பற்றிய முழு விவரம் இங்கே.
http://www.vancouver2010.com/

Tuesday, January 26, 2010

Paradigm Shift

வேகமாக சென்றுகொண்டிருந்த அந்த புகைவண்டியின் சத்தத்தை ஒரம்கட்டிக்கொண்டிருந்தது வண்டியின் மத்தியில் இருந்த பெட்டியில் இருந்து கிளம்பிய குழந்தைகளின் விளையாட்டு சத்தம். வண்டியை குலுக்கி எடுத்துக்கொண்டிருந்த அந்த பெட்டியில் நான்கு பேர் அமரக் கூடிய கீழ் இருக்கையின் ஜன்னல் ஒரத்தில் இரண்டு குழந்தைகளும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார்கள். ஆரம்பபள்ளியில் படிப்பவர்களை போலிருந்தனர் இருவரும். அவர்களின் அடுத்தடுத்த இரண்டு இருக்கைகளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளம் அலுவலரும் அவரது நண்பரும் அலுவலக விஷயங்களை விவாதித்தபடி பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.

இவர்களின் எதிர் இருக்கையில் இரண்டு குழந்தைகளுக்கும் நேர் எதிராக ஜன்னல் ஒரத்தில் அவன் அமர்ந்திருந்தான். நடுத்தர வயது. சமீபத்தில் சவரம் செய்யப்படாத முகத்தில் முடிகள் கதிர்விடத் தொடங்கியிருந்தன. கலைந்த கேசமும் அழுக்கேறத் தொடங்கியிருந்த உடைகளும் சக பயணிகளிடமிருந்து அவனை வேறுபடுத்திகாட்டியது. அவனுக்கு பக்கத்து இருக்கையில் ஒரு சிறிய பெட்டியும் அதன் மீது ஒரு துணிமூட்டையும், கைப்பையும் வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு சொந்தமானவை அவை.

தன் மார்பில் புதைந்து உறங்கிக்கொண்டிருந்த சிறிய குழந்தையை அணைத்தபடி ஜன்னலில் தலைசாய்த்து கண்களை மூடியவாறு அமைதியாக அமர்ந்திருந்தான். அவ்வப்போது சரிந்து கொண்டிருந்த குழந்தையை கண்களை திறக்காமலே லேசான உறக்கத்துடன் ஒவ்வொரு முறையும் சரியாக அணைத்துக்கொள்ள முயற்சி செய்தபடியே தொடர்ந்து கொண்டிருந்து அவன் பயணம். இடையில் ஒரு முறை திடீரென விழித்தெழுந்து எதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்த இரு குழந்தைகளுக்கும் கைப்பையில் இருந்து பிஸ்கெட் பாக்கெட் எடுத்து கொடுத்தான். தண்ணீர் குடிக்க வைத்தான். வாஞ்சையுடன் அவர்களின் தலையை சிறிதுநேரம் தடவி கொடுத்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் மீண்டும் கண்களை மூடித் தூங்கத் தொடங்கினான். அயர்ச்சியும் களைப்பும் அவன் முகத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தன.

அவன் வைத்திருந்த பொருட்களுக்கு பக்கத்தில் அடுத்தடுத்திருந்த இரு இருக்கைகளிலும் அமர்திருந்த வயதான தம்பதியினர் செய்தித்தாள்களை வாசித்தவாறு அவ்வப்போது தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தார்கள். இந்த இரு இருக்கைகளின் மேற்புறத்தில் உள்ள இடங்களை யார் யாரோ தங்கள் பொருட்களை கொண்டு நிரப்பியிருந்தார்கள். பிரிக்கப்படாத USHA FAN பெட்டியின் பக்கத்தில் நெருக்கியபடி அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் தன் கால்களை எதிர்புறத்தில் உள்ள இருக்கையின் சிறிய இடைவெளியில் கிடத்தியாவாறு L போன்ற கோணத்தில் அமர்ந்திருந்தான்.

சமயங்களில் அவன் செய்த அல்லது செய்ய முற்பட்ட பாவனைகள் அநேகமாக அவன் பொட்டி தட்டும் கூட்டத்தை சேர்ந்தவனாக இருக்ககூடும் என்ற சந்தேகத்தை விதைத்துக்கொண்டேயிருந்தது. அவனோ அல்லது வெளிநாடு சென்று திரும்பிய அவனது நண்பனோ / நண்பியோ அளித்திருந்த I LUV NY பொறிக்கப்பட்ட மேற்சட்டை அணிந்திருந்தான். எங்கேயும் கிழிந்திராத டெனிம் முழுக்கால் சட்டை அணிந்து 21-ம் நூற்றாண்டு இளைஞர்களை அவமதித்துக்கொண்டிருந்தான். காதுகளில் வழிந்துகொண்டிருந்த ஐபாட்-டின் இசைக்கு அவன் தலையாட்டிய விதம் தெளிவாக சொல்லியது, அங்கே கச்சேரி செய்து கொண்டிருப்பது M.S.S அல்லது K.J.Y அல்ல என்று. சர்வ நிச்சயமாக எல்விஸ் ப்ரஸ்லியோ அல்லது பாப் மார்லோவாக இருக்கக்கூடும், குறைந்த பட்சம் பப்பி லஹரி.

கீழே அமர்திருந்தவர்களின் இருக்கைகளுக்கு பக்கவாட்டில் ஒருவர் மட்டுமே அமரக்கூடிய எதிர் எதிர் இருக்கைகளை இளம் தம்பதியினர் ஆக்ரமித்திருந்தனர். தன் கைகளில் இருந்த பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் தன்னை தொலைத்துவிட்டிருந்தாள் அந்த இளம் மனைவி. எதிரே கன்னத்தில் கைகளை குவித்தவாறு அமர்ந்திருந்த அவளின் கணவன், தன் மனைவியின் அழகை முதல் முறையாக பார்ப்பவன் போல அவளை ரசித்தபடி பயணித்துக்கொண்டிருந்தான்.

பெட்டியின் பிற இருக்கைகளில் அமர்ந்திருந்த மக்கள் அவரவர் சக்திக்கு ஏற்றபடி டெஸிபலை கூட்டியோ குறைத்தோ பேசியபடியோ பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முறுக்கு விற்பவர்களும் டீ விற்பவர்களும் பெட்டியில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் தூக்கத்தை கலைத்து தங்கள் பூர்வ ஜென்ம பாவத்தை கழுவிக்கொண்டார்கள். இயல்பாய் சென்றுகொண்டிருந்த பயணத்தில் திடீரென “பர்தேசி பர்தேசி ஜானா நஹின்” என உச்சஸ்தாதியில் பாடியபடி யாசகம் கேட்கும் ஒருத்தி அந்த பெட்டிக்குள் நுழைய அதுவரை இரைச்சலாக இருந்த பெட்டி முழுவதையும் அமைதி கைப்பற்ற தொடங்கியது. அவளின் பாடலுக்கு நடுவே சில்லரைகள் தட்டில் விழும் சத்தம் சந்தத்தை கூட்டிக்கொண்டே போனது. டிக்கெட் பரிசோதகரை பார்த்த ஒரு கணம் தன் குரலை தாழ்த்தியவள் பின்பு ஏதோ நினைத்தவளாய் உச்சஸ்தாதியில் பாட ஆரம்பித்துவிட்டாள். சில்லரை இல்லாதவர்கள், இருந்தும் கொடுக்காதவர்கள் அவள் பாடிக்கொண்டிருந்ததை உள்ளுக்குள் ரசித்தபடி அமர்ந்திருந்தார்கள்.

யாசகம் கேட்பவள் நெருங்குவதற்குள் அவளுக்கு கொடுப்பதற்கு தயாராக எல்லோரும் மறந்துபோன நாலாணாவை தங்கள் பாக்கெட்டுக்களில் தேடத்தொடங்கினார்கள் அந்த இளம் கணவனும் பொட்டி தட்டும் இளைஞனும். வயதான தம்பதியினர் அவளுக்கு கொடுப்பதற்காக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டார்கள். மார்போடு குழந்தையை அணைத்திருந்த அவன் இப்போது வாயை லேசாக திறந்தபடி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.

.ஜன்னல் ஓரத்தில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த இரு குழந்தைகளின் முகத்திலும் மெலிதான சந்தோஷம் பரவ தொடங்கியது. திடீரென சூழப்பட்ட இள அமைதியும் புரியாத மொழியில் பாடிக்கொண்டிருந்த யாசகம் கேட்பவளின் குரலும் அந்த இரு குழந்தைகளையும் வெட்கத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டார்கள். மறக்காமல் பிறர் தங்களை பார்க்கிறார்களா என்பதையும் ஒருவித வெட்கத்தோடு நோட்டம் விட்டுகொண்டார்கள். குறிப்பாக தங்கள் எதிரில் உள்ளவனை மெலிதான அச்சத்தோடும் குறைவான புன்னகையோடும் பார்த்துக்கொண்டார்கள்.

அவன் உறக்கம் கலையவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அந்த சிறுவன் மட்டும் மெல்ல தன் இருக்கையை விட்டு இறங்கி நேர்வாட்டில் நடப்பதற்காக இருக்கும் வழியின் தூரத்தில் பாடியபடியே வந்து கொண்டிருந்த அவளை பார்த்தபடி நின்று கொண்டான். பாடிக்கொண்டிருந்தவள் மெல்ல நடந்து முன்னேறி இவர்களின் இருக்கைக்கு அருகில் வர வர, சிறுவன் அவளைப்பார்ப்பது பின்பு ஒடிச் சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொள்வது என விளையாட ஆரம்பித்தான். பாடிக்கொண்டிருந்தவளின் தோற்றம் சிறுவனுக்கு பயத்தையும் வியப்பையும் ஒரு சேர கொடுத்தது.

ஒருகட்டத்தில் மெல்ல தன் தலையை மட்டும் வெளியே நீட்டி தங்கள் இருக்கைக்கு மிக அருகில் வந்துவிட்ட பாடுபவளை பார்த்தவுடன் சட்டென முகத்தை உள்ளிழுத்துக்கொண்டான். சிறுமியும் அவனை பாடுபவளை நோக்கி தள்ளிவிடுவதைபோல பாவனை செய்து அவனுடன் சேர்ந்து விளையாடத்தொடங்கினாள். பாடிக்கொண்டிருந்தவள் இவர்களின் இருப்பிடத்தை கடந்து சென்றவுடன் மீண்டும் சிறுவன் ஒடிச்சென்று அவளை ஒருமுறை பின்னால் இருந்து பார்த்துவிட்டு மறுபடியும் ஒடிவந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான் இந்த விளையாட்டினூடே அந்த இரு குழந்தைகளின் குதூகல குரலும் மெல்ல உயரத்தொடங்கியிருந்தது…எதிர் இருக்கையில் குழந்தையை அணைத்தபடியே தூங்கிக்கொண்டிருந்தவனின் உடலில் எந்த ஒரு சலனமும் இல்லை. மிக ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்டிருந்தான். திறந்திருந்த வாயின் ஒரங்களில் லேசாக எச்சில் ஒழுக ஆரம்பித்திருந்தது.

சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த குழந்தைகள் இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் தங்கள் முகபாவனைகளால் ஒருவரை ஒருவர் பயமுறுத்திக்கொண்டும் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த தொடங்கியிருந்தார்கள். அவ்வப்போது கிறீச்சிட்டு எழுந்த அந்த மழலைகளின் குரல் சுற்றியிருந்தவர்களுக்கு எந்த ஒரு இடைஞ்சலையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. மெர்க்குரிப்பூக்களும், பத்திரிகையின் பக்கங்களும், ஐபாட்-டும் வழக்கம்போலவே இயங்கிக்கொண்டிருந்தன.

மெல்ல ஆரம்பித்த குழந்தைகளின் விளையாட்டு அவனுக்கு பக்கத்தில் இருந்த துணிமூட்டைக்கு பரவியது. தூங்கிக்கொண்டிருந்த அவனுக்கு தெரியாமல் லாவகமாக துணி மூட்டையை உருவிவிட்ட சிறுவன் அதை அந்த சிறுமியை நோக்கி வீசத்தொடங்கினான். அவளும் பதிலுக்கு அவன் மீது துணி மூட்டையை வீசி எறிந்தாள். ஒவ்வொரு முறை மூட்டையை அடுத்தவர் மீது எறியும்போது அவர்கள் எழுப்பிய ஆரவார கூச்சல் அந்த பெட்டியை லேசாக உலுக்கியது. அருகில் அமர்ந்திருந்த வயதான தம்பதியும், மெர்க்குரிப்பூவை வாசித்துக்கொண்டிருந்த பெண்மணியும் குழந்தைகளை பயமுறுத்துவதை போல பார்த்துவிட்டு மறுபடியும் தங்கள் வேலைகளில் மூழ்கத்தொடங்கினார்கள். அலுவலக நண்பர்கள் குழந்தைகளை நோக்கி ஒரு புன்முறுவலை வீசிவிட்டு தங்கள் விவாதத்தை தொடர்ந்தார்கள். மேலே அமர்ந்திருந்தவன் கொடுத்த சாக்லெட்டை வெட்கத்துடன் வாங்கிக்கொண்ட இரு குழந்தைகளும் தங்களை மறந்து அங்கும் இங்கும் ஒடி விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் கத்திக்கொண்டே துரத்துவது, மேலே விழுந்து புரள்வது, கீழே வைத்திருக்கும் பெட்டிகளின் மீது ஏறுவது என அந்த ரயில் பெட்டி முழுவதையும் தங்கள் வசப்படுத்திவிட்டார்கள்.

நேரம் செல்ல செல்ல படித்துக்கொண்டும், இசையை ரசித்துக்கொண்டும், நின்றுகொண்டும் வந்த மற்றவர்களுக்கு குழந்தைகளின் கூச்சலும், அங்குமிங்குமாக ஒடிக்கொண்டிருந்த அவர்களின் ஒட்டமும் லேசான தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்த சிறுவனை மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி மடக்கி பிடித்து ஒரு பொய்யான பயமுறுத்தலுடன் சத்தம் போடாமல் விளையாடுமாறு சொல்லிவிட்டு அவனை விடுவித்துவிட்டாள். அதன்பின் சிறிது நேரம் அமைதியாக விளையாடிய குழந்தைகள் மீண்டும் தங்களை அறியாமலேயே பெரும் சத்தத்துடன் விளையாடத் தொடங்கிவிட்டனர். ஒரு கட்டத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்த அந்த புகைவண்டியின் சத்தத்தை ஒரம்கட்டிக்கொண்டிருந்தது வண்டியின் மத்தியில் இருந்த பெட்டியில் இருந்து கிளம்பிய குழந்தைகளின் விளையாட்டு சத்தம். ஜன்னலோரம் தூங்கிக்கொண்டிருந்த அவன் லேசாக குறட்டைவிட ஆரம்பித்திருந்தான்.

பெட்டியில் இருந்தவர்கள் லேசாக பொறுமை இழந்து முணுமுணுக்க தொடங்கினார்கள். தங்கள் படிப்பிற்கும், இசைக்கும், தனிமைக்கும் குழந்தைகளின் விளையாட்டு இடைஞ்சலை ஏற்படுத்துவதாக எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்க தொடங்கியிருந்தார்கள். சிலர் குழந்தைகளிடம் நேரடியாகவே கடிந்து கொண்டார்கள், சிலர் லேசாக அதட்டல் போட்டார்கள்..அதட்டும்போது அடங்குவதும் சிறிது நேரத்தில் பழையபடி ஒடி விளையாடுவது என மாறி மாறி ரணகளபடுத்திக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள். ஜன்னல் ஒரத்தில் அமர்ந்திருந்தவன் லேசாக அசைவது போல் அசைந்து மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான். கூட்டம் வேகமாக பொறுமை இழக்கத்தொடங்கியது.

தூங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி குழந்தைகளை கண்டித்து அடக்க சொல்லலாமா அல்லது அவன் விழிக்கும் வரை காத்திருக்கலாமா என எல்லோரும் மனசுக்குள் பட்டிமன்றமே நடத்த ஆரம்பித்துவிட, எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் குழந்தைகள் தங்களின் பின்புறத்தில் இருந்த இருக்கைகளின் பக்கமாக சென்று இன்னும் ஆரவாரத்துடன் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துவிட்ட பயணிகள் சிலர் கூட்டமாக சென்று ஜன்னல் ஒரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவனின் தோள்பட்டையை தட்டி அவனை எழுப்பிவிட்டனர். லேசாக தலையை திருப்பி கண்களை திறந்தவன் எதிரில் குழந்தைகள் இல்லாததை கண்டு திடுக்கிட்டு எழ பெட்டியில் இருந்தவர்கள் இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அவன் மீது பாயத்தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளை இப்படி விளையாடவிட்டு விட்டு அப்படி என்ன தூக்கம், அவர்கள் போடும் சத்தமும் ஆட்டமும் தங்களை இடைஞ்சல் படுத்துவதாகவும் சொல்லிவிட்டு, அவர்களை கூப்பிட்டு கண்டித்து ஒரே இடத்தில் உட்கார வை என குதறி எடுத்துவிட்டார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பக்கத்து இருக்கை பக்கமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் தங்கள் இடத்தை நோக்கி ஓடி வர, விழித்த நிலையில் நின்று கொண்டிருந்த அவனை கண்டதும் மிரட்சியுடன் மெல்ல நடந்து அவன் அருகில் செல்ல, சடாரென ஒரு கையால் அவர்களை பிடித்து இழுத்தவன் முதுகில் ஒங்கி அறைந்துவிட்டு பின் ஒரு நொடி நிதானித்து அப்படியே குனிந்து குழந்தைகளை தன்னோடு அணைத்துக்கொண்டான். வலியாலும் பிறர் முன்னால் தங்களை அடித்துவிட்ட தாழ்வு மனநிலையாலும் அதுவரை சந்தோஷத்தில் பறந்துகொண்டிருந்த குழந்தைகளின் முகத்தில் வழிந்த கண்ணீர் அவன் சட்டையை ஈரமாக்கியது தன் தோளில் சாய்ந்து அழுத குழந்தைகளை அப்படியே அள்ளி தூக்கியவன் அவர்களை மார்போடு அணைத்தபடி தன் இருக்கையில் சரிந்தான். சில நொடிகளில் தலைகீழாக மாறிவிட்ட நிகழ்வுகளால் வாயடைந்து நின்றுகொண்டிருந்த ஒட்டு மொத்த கூட்டமும் அங்கிருந்து விலக மனமில்லாமல் நின்றிருக்க முதல் முறையாக மெல்ல பேசத்தொடங்கினான் அவன்….

என் குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட இடைஞ்சலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவர்களின் தாய் இரண்டு நாட்களுக்கு முன் இறந்துவிட்டாள். அவள் இறந்த சோகத்தில் இரண்டு நாட்களாக அழுதுகொண்டிருந்த குழந்தைகளுக்கு ரயில் பயணம் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு மாறுதலுக்காக அடுத்த நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அவர்களை அழைத்துகொண்டு போய்கொண்டிருக்கிறேன். சரியான தூக்கம் இல்லாததாலும் கடுமையான சோர்வினாலும் நான் சிறிது கண்ணயர்ந்து விட்டதால் குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட சிரமத்தை கவனிக்க இயலாமல் போய்விட்டது. என்னையும் என் குழந்தைகளையும் மன்னித்துவிடுங்கள். இனிமேல் இவர்களால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தயவு செய்து அவரவர் இருக்கைகளுக்கு செல்லுங்கள் என கூறிவிட்டு மூன்று குழந்தைகளையும் அணைத்தபடி ஜன்னலை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தான்.

அவனை கடிந்து கொள்வதற்காக கூடிய அத்தனை கூட்டமும் மெல்ல கலைந்து அவர் அவர் இருக்கைக்கு செல்ல தொடங்கினர். சில நிமிடத்திற்கு முன்பு வரை ஆரவாரமாக காணப்பட்ட அந்த பெட்டி சுடுகாட்டைப்போல அமைதியாக சென்றுகொண்டிருந்தது. பெட்டியில் இருந்த ஒவ்வொருவரையும் குற்ற உணர்ச்சி மெல்ல சூழத்தொடங்கியது. குழந்தைகளின் சந்தோஷ கூச்சலைவிட அப்போது நிலவிய மயான அமைதி ஒவ்வொருவரின் மனசாட்சியையும் பிடித்து உலுக்கத்தொடங்கியது. தங்கள் கவலைகளை மறந்து விளையாடிய குழந்தைகளின் மகிழ்ச்சி தங்களால் முடங்கிவிட்டதை நினைத்து மருகத்தொடங்கினார்கள். சில நிமிடத்திற்கு முன்பு வரை குழந்தைகளின் அட்டகாசத்திற்காக முகத்தை சுளுக்கியவர்கள் மீண்டும் அந்த குழந்தைகள் பழையபடி விளையாடமாட்டர்களா என ஏக்கத்துடன் காத்திருக்க……தன் மடியோடு சாய்ந்திருந்த குழந்தைகளை இறுக்கி அணைத்தபடி இருந்த அவன் தூக்கத்தை வலுக்கட்டயாமாக தவிர்த்து ஜன்னலை வெறித்தபடி பயணித்துக்கொண்டிருந்தான்.