Thursday, December 9, 2010

ஆழம் பார்த்த காங்கிரஸ், அவசரப்பட்ட ஜெகன் – பகுதி 2

1992-இல் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் இவர் வீட்டின் வாசல் வரை வந்திருக்கிறது….ஆந்திராவின் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் சென்னா ரெட்டி ஊழல் பிரச்சனைகளில் சிக்கி பதவி விலக நேரிட, அரியணையை பிடித்துவிடலாம் என துள்ளி எழுந்தவரை அப்படியே அமுக்கி ஓரங்கட்டியிருக்கிறார் அப்போதைய பிரதமர் P.V.நரசிம்மராவ் காரு. தனது வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அதிர்ஷ்ட தேவதையை Re-Route செய்து விஜய பாஸ்கர ரெட்டியின் வீட்டுக் அனுப்பி வைத்துவிட்டதில், PVN மீது YSR-க்கு ஏக காட்டம், ஆனால் பொங்கி எழ முடியாத நிலை. கடுமையாக கட்சிக்கு உழைத்திருந்தும் இரண்டாம் முறையாக வாய்ப்பு தவறியதில் மனிதருக்கு ஏகப்பட்ட ஏமாற்றம், வலி. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் அமைதியாக மூன்றாவது சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க தொடங்கியிருக்கிறார். இவ்வளவு நடந்துக்கொண்டிருந்த போதும் கட்சியில் இருந்து தன்னை எந்த நிலையிலும் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொண்டது இவரது தனித்தன்மை. ஜெகனிடம் இந்த Quality சுத்தமாக மிஸ்ஸிங்.

1999-2004 வரை அசுர பலத்துடன் ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹைடெக் நாயுடுகாருவை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் புதுதில்லியில் இருந்த காங்கிரஸ்வாலாக்கள் கையை பிசைந்து நிற்க, வழக்கம்போல ஆந்திர காங்கிரஸின் பெரிய தலைகள் ஜுப்ளி ஹில்ஸுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். எதிர்ப்பார்த்ததை போலவே கடப்பாவில் உட்கார்ந்திருந்த YSR-ஐ தூக்கிவந்து ஹைதராபாத்தில் எதிர்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர வைத்து கட்சியை காப்பாற்றும் உன்னத வேலையை தந்துவிட்டனர். 1983-இல் மாமனாரை எதிர்க்க களமிறக்கப்பட்டவர், பதினாறு வருடங்களுக்குப்பிறகு மருமகனை எதிர்ப்பதற்காக மறுபடியும் கொம்பு சீவப்பட்டு களமிறக்கப்பட்டார். எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தன்னை பயன்படுத்திக் கொண்டு, கட்சி வெல்லும் போதெல்லாம் சீனியர் தலை ஒன்றை முதல்வராக்கிவிட்டு தனக்கு அல்வா கொடுப்பதை இருமுறை தாங்கிக்கொண்டவர், இம்முறை விடுவதில்லை என தீர்மானத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார். தன்னை எதிர்ப்பதற்கு ஆந்திர காங்கிரஸ் கட்சியில் இனி ஆட்களே இருக்கக்கூடாது என நினைத்தவர், அப்போதைய முதல்வர் நாயுடுவின் ஒவ்வொரு மூவ்-வையும் கவுன்டர் அட்டாக் செய்து, ஆந்திர காங்கிரஸின் ஒரே முகம் தான் மட்டுமே என்ற இமேஜை சத்தமே இல்லாமல் வெகு வேகமாக வளர்த்துக்கொண்டார். ஒருபுறம் தெலுங்கு தேசத்தை வலுவிழக்கச் செய்வது, மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வராக தன்னை புரஜெக்ட் செய்து கொள்வது என இரண்டையும் ஒரே நேரத்தில் கனகச்சிதமாக அரங்கேற்றியிருக்கிறார் மனிதர். பரீட்சை நெருங்கும் போது மட்டுமே புத்தகத்தை பற்றி யோசிக்கும் சில புத்திசாலி Students-ஐ போலவே, 2003 இல் தேர்தல் நெருங்குவது தெரிந்தவுடன், அதுவரை ஏனோ தானோவென்று தெலுங்கு தேசத்தின் பார்டருக்குள் மட்டும் அரசியல் செய்து கொண்டிருந்தவர் தடாலடியாக ஆந்திரா முழுவதும் பாத யாத்திரை செய்யப்போவதாக அறிவித்துவிட்டு பஞ்ச கச்சத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு ரோட்டில் இறங்கிவிட்டார். இவர் பாத யாத்திரையை தொடர்ந்து கொண்டிருந்த போது, சூரியன் ஒட்டு மொத்த இந்தியாவையும் Deep Fry செய்துக் கொண்டிருந்தார்…அப்படி ஒரு வெயில்…கொளுத்தும் வெயிலோடு சேர்ந்து அதி தீவிரமாக ஆந்திர மக்களை உஷ்ணப் படுத்திக்கொண்டே வந்தவர் இறுதியில் 2004 இல் அரியணையை பிடித்தே விட்டார். 1983 மற்றும் 1992 இல் தவறவிட்ட வாய்ப்புக்காக 2004 வரை காத்திருந்தவரின் புதல்வருக்கு இந்த சிம்பிள் Maths கூட தெரியவில்லையா அல்லது தெரியாதது போல நடந்து கொள்கிறாரா என்பது அந்த வெங்கடாஜலபதிக்கே வெளிச்சம்.

உள்கட்சி அரசியல் நெருக்கடிகளில் சிக்கித் திணறியிருந்தாலும், எந்த நேரத்திலும் கட்சியில் தான் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாகாமால் சாமர்த்தியமாக செயல்பட்டிருக்கிறார் YSR. அதே சமயம் தனது முதல்வர் கனவை அடைவதற்காக கடுமையாக போரடியும் வந்திருக்கிறார். இத்தனைக்கும் ஜெகனுக்கு கிடைத்திருக்கும் முதல்வரின் மகன் என்ற Privilege Tag-ஓ அல்லது வேறு எந்த ஒரு பெரிய அரசியல் பின்புலமோ இல்லாமல் தனித்து போராடியே கரையேறியிருக்கிறார் மனிதர். இப்படிப்பட்டவரின் நிழலிலேயே ஏறக்குறைய 37 ஆண்டுகள் வளர்ந்தவர் கொஞ்சம் பொறுமையாக காயை நகர்த்தியிருந்தால் இன்னும் சில வருடங்களில் டார்கெட்டை அடைந்திருக்கலாம். பொறுமையாக இருக்கிறேன் பேர்வழி என சொல்லிக்கொண்டே பின்புறத்தில் காங்கிரஸுக்கு குடைச்சலை கொடுக்கத் தொடங்கிவிட்டார். முதல்வர் பதவியின் மீது ஆசை இல்லை என்று சொல்லிக்கொண்டே பதவியில் இருந்த ரோசய்யாவிற்கு இவர் கொடுத்த குடைச்சல் இவரது இமேஜை ஏகத்திற்கும் டேமேஜ் ஆக்கியிருப்பது உண்மை.

போதாத குறைக்கு காங்கிரஸ் கட்சி தலைமையை தாக்கி தனது டி.வி./பத்திரிகைகளில் செய்தியை வெளியிட்டுக்கொண்டே இன்னொருபுறம் தலைமைக்கு உருக்கமாக கடிதம் எழுதுவது என்ற இரட்டை நிலைப்பாட்டால் தனது குழப்பமான நிலையை இவரே வெளிக் கொணர்ந்துவிட்டார். டெல்லியில் உள்ளவர்களும் குழப்பத்தை சரியாக புரிந்து கொண்டார்கள். இவரின் உண்மையான பலம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக இவரை லூசில் விட்டு விட்டு, சுற்றியிருந்த இவரின் ஆதரவாளர்களை வளைக்க ஆரம்பித்தார்கள். 100+ எம்.எல்.ஏக்களின் சப்போர்ட்டை வெறும் 10+ ஆக சுருக்கிவிட்டார்கள். அப்போதாவது விழித்துக்கொண்டு கொஞ்சம் அடக்கிவாசித்திருக்கலாம்...ஹும்..மனிதர் முன்னைவிட அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றுவிட்டார். மிகச் சரியாக இதற்காகத்தான் டெல்லியில் இருக்கும் காங்கிரஸ்காரர்களும் காத்திருந்தார்கள். இவரை வெளியேற்றினால் கட்சிக்கு ஏற்படும் டேமஜை யோசித்துதான் அவராகவே வெளியேறும்படியான வேலையை அழகாக எக்ஸிக்யூட் செய்துவிட்டார்கள்.

உமர் அப்துல்லா, நவீன் பட்நாயக், குமாரசாமி, M.K.ஸ்டாலின் என எல்லா வாரிசுகளும் தங்கள் அப்பாக்களிடமிருந்து ஓரளவு வித்தையை கற்றுக்கொண்டதால்தான் இப்போதும் தாக்குபிடிக்கிறார்கள். சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, வருண் காந்தி போன்றவர்கள் பட்டறையில் தங்களை கூர் தீட்டிக்கொண்டே சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட ஹோம் ஒர்க் செய்து கொண்டே இருக்கும் இவர்களையே மக்கள் சில நேரம் கவிழ்த்துவிடும் போது, எந்த பாடத்தையும் படிக்காமல் மக்களிடம் போய் நிற்கத் துணிந்துவிட்ட ஜெகனுக்கு எந்த மாதிரியான ரியாக்ஷன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஒருவேளை இவர் தனிக்கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் காங்கிரஸ், தெ.தே, பி.ஆர்.பி போன்ற பெரிய கட்சிகளை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகமே. காங்கிரசும் பி.ஆர்.பி யும் மறைமுகமாக சேர்ந்து செயல்பட்டால், ஜெகனுக்கு நாயுடு முகாம் பக்கம் சாய்வதை தவிர வேறு வழியிருக்காது…எந்த நாயுடுவை இவரது தந்தை பதவியில் இருந்து இறக்கினாரோ அதே நாயுடுவை மீண்டும் அதே நாற்காலியில் கொண்டுபோய் இவர் அமர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

5 comments:

எம்.எம்.அப்துல்லா said...

well said.

Rex said...

MMA..Thnx

Toto said...

அருமையான‌ க‌ட்டுரை, ரெக்ஸ்.ஜ‌க‌ன், ப‌ண‌ ப‌ல‌த்தை ம‌ட்டுமே ந‌ம்புவ‌தாக‌த் தெரிகிற‌து.

-Toto

Toto said...

அருமையான‌ க‌ட்டுரை, ரெக்ஸ்.ஜ‌க‌ன், ப‌ண‌ ப‌ல‌த்தை ம‌ட்டுமே ந‌ம்புவ‌தாக‌த் தெரிகிற‌து.

-Toto

Rex said...

Toto - Thanks