Thursday, December 2, 2010

ஏர் இந்தியா – கொஞ்சம் பார்த்து செய்ங்கண்ணே

நீரா ராடியாவின் அடுத்த டேப், ஷாருக்/ரஜினி படத்தின் திருட்டு விசிடி விற்கப்படும் இடங்கள் போன்ற அதி முக்கிய சமாச்சாரங்களை இண்டு இடுக்கெல்லாம் தேடிச் சென்று அலசி ஆராய்ந்து துவைத்து காயப்போடும் இந்திய/தமிழக துப்பறியும் மீடியாக்கள் கிட்டத்தட்ட 113 பேரின் வாழ்க்கையோடு கபடி விளையாடியிருக்கின்ற ஏர் இந்தியாவின் விமான சாகச நிகழ்ச்சியை வழக்கம்போல Choice இல் விட்டு விட்டார்கள். எந்த ஒரு விஐபி-யும் பயணம் செய்திராத அந்த விமான நிகழ்வை செய்தியில் போடுவதால் சர்க்குலேஷனோ அல்லது டி.ஆர்.பி ரேட்டிங்கோ சத்தியமாக ஏறப்போவதில்லைன்னு நினைத்து லூஸ்ல விட்டுடாங்க போலத் தோன்றுகிறது.

நாட்டில் இருக்கின்ற அரசியல்வாதிகள் முதல் நடுவானில் பறந்து கொண்டிருக்கின்ற விமானத்தின் பைலட் வரை எல்லோருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை…”நாற்காலி” a.k.a “சீட்” தான் போலிருக்கிறது. மே மாதம் 25ம் தேதி துபாயில் இருந்து புனே நோக்கி வந்துக் கொண்டிருந்த போயிங் 737 விமானத்தை 37000 அடி உயரத்திலிருந்து திடீரென இறக்கி 30000 அடி உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் விமானத்தின் துணை விமானி. தனது நாற்காலியை அட்ஜெஸ்ட் செய்யும்போது கை தவறி ஏதோ எசகு பிசகாகிவிட (நம்மூர் சிவில் ஏவியேஷன் என்கொயரி ரிப்போர்ட்ல இப்படிதான் சொல்லியிருக்காங்க) அதுவரை சாதுவாக 37000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பறவை வேகமாக கீழே இறங்கத் தொடங்கியிருக்கிறது. உச்சா போவதற்காக ரெஸ்ட் ரூமிற்கு சென்றிருந்த விமானத்தின் சீனியர் பைலட், நிலைமையை உணர்ந்து காக் பிட்டுக்குள் நுழைந்து விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். சினிமா ஹீரோ பாணியில் செயல்பட்டிருக்கிறார் இந்த நிஜ ஹீரோ. பாரட்டபட வேண்டிய விஷயம்.

அண்ட வெளியில் நடந்துக் கொண்டிருந்த களேபரத்தை புறந்தள்ளி, உண்டிக்கு உணவிட்டுக் கொண்டிருந்த பயணிகளுக்கு காக்பிட்டுக்குள் நடந்த விஷயம் தெரியாமலிருக்க “air pocket” அதான் பிளைட் கொஞ்சம் ட்ராப் ஆயிடுச்சுன்னு சும்மா ஒரு உம்மாவை கொடுத்து சமாதனப்படுத்தி இருக்கிறார்கள். உண்மையை சொல்லியிருந்தால் உணவிற்கு பதிலாக எனிமா கொடுத்த மாதிரி வெலவெலத்து போயிருப்பார்கள். இந்த ஏர் பாக்கெட், ஏர் டர்புளன்ஸ் போன்ற ஜிகிரி வாஸ்துக்களை எல்லாம் பொதுவாக முன்கூட்டியே டிடெக்ட் செய்து, பயணிகளுக்கு அறிவித்துவிட்டு அவர்களை சீட்டோடு Buckle-Up செய்துவிடுவார்கள். அப்போதைக்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ஒப்பேற்றியிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அதிலும் எத்தனை பேருக்கு அவர்கள் சொன்ன விஷயம் சரியாக புரிந்திருக்கும் என்பது மில்லியன் டாலர் வினா.

2010 மே மாதம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட மங்களூர் விபத்தின் இரணங்கள் ஆறும் முன்பே, அந்த விபத்து நடந்த அடுத்த மூன்று நாட்களுக்குள் மற்றுமொரு மிகப் பெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியிருக்கிறது ஏர்-இந்தியாவின் இந்த இன்னொரு 737 பறவை. Coincidentally, இந்த இரண்டு விமான நிகழ்வுகளும் துபாயில் இருந்து புறப்பட்ட விமானங்களிலே நடந்திருப்பது வேதனையான செய்தி.

“இம்மாதிரியான எதிர்பாராத நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது என துணை விமானி அறிந்திருக்கவில்லை” “இம்மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பயிற்சியை துணை விமானி பெற்றிருக்கவில்லை” என ஏதேதோ சப்பை கட்டை காதில் சுற்றியிருக்கிறார்கள் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில். இது பற்றிய விரிவான Article-ஐ CNN-இல் வெளியிட்டிருக்கிறார்கள். TVS-50யை உருட்டிக்கொண்டு டூ-வீலர் லைசென்ஸ் எடுக்க போனாலே எட்டு போடு, பத்து போடுன்னு ஆர்.டி.ஓ ஆபிஸில் சாமன்ய மக்களை பரேட் எடுக்கிறாங்க. ஒரு விமானத்தை இயக்குவதற்கு லைசென்ஸ் பெற்றிருக்கும் நபருக்கு இது தெரிந்திருக்கவில்லை, அது தெரிந்திருக்கவில்லை என ரிப்போர்ட் கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ரிப்போர்டை கொடுப்பதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக விசாரணையை நடத்தி இருக்கிறார்கள். நீரா ராடியா டேப்பிலாவது பேசியது யார் யாரென ஒரளவிற்கு உண்மையை சொல்லிவிட்டார்கள்…ஆனால் இந்த விமான நிகழ்வு என்கொயரி ரிப்போர்டில் விமானிகளின் பெயரை குறிப்பிடாமலேயே சமாளித்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் தூர்தர்ஷன் ஒலிபரப்பில் எப்போதாவது (!) பிரச்சனை ஏற்பட்டால் “தடங்கலுக்கு வருந்துகிறோம்” என்கிற Standard Template-ஐ போடுவார்கள். பின்னர் சிறிது காலம் கழித்து என்ன நினைத்தார்களோ தெரியவில்லை Template-ஐ கொஞ்சம் மாற்றி “தடங்கல் ஏற்பட்டுள்ளது” என மாற்றிவிட்டார்கள். நேரடியாக சொல்வதென்றால் வருந்துவதை நிறுத்திவிட்டார்கள். அதுநாள் வரை விடாப்பிடியாக தூர்தர்ஷனை பார்த்துக்கொண்டிருந்த மக்களும் தூர்தர்ஷன்காரர்களை மீண்டும் வருத்தத்தில் ஆழ்த்த வேண்டாம் என முடிவு செய்து காக்காக்கள் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த அலுமினிய ஆண்டெனாவை குஜிலி பஜாரில் விற்றுவிட்டு சன்-னுக்கும் ராஜு-க்கும் தாவிவிட்டார்கள். ஏர் இந்தியாவும் ஏறக்குறைய இதே திசையை நோக்கி சென்றுக்கொண்டிருப்பது போலத் தெரிகிறது. நடந்துவிட்ட இந்த செயலுக்காக சிவில் ஏவியேஷன் சார்பாக யாரும் ஒரு சிறு மன்னிப்போ அல்லது வருத்தமோ இதுவரை தெரிவித்ததாக தெரியவில்லை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இணையான வசதிகளும், கட்டமைப்பும் இல்லாத நிலையிலும் இன்னமும் சிலர் ஏர்-இந்தியாவின் விமான சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து புதிய பயணிகளையும் கவர்ந்திழுக்கப் போகிறார்களா அல்லது இருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்கள் உதாசீனத்தால் இழக்கப் போகிறார்களா என்பதை இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

1 comment:

எம்.எம்.அப்துல்லா said...

:((


ஒரே சந்தோஷம் இப்பல்லாம் அடிக்கடி எழுதுறீங்க :)