Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Saturday, January 19, 2013

என்ன தலைப்பிடுவது இதற்கு...



இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெற போராடிக்கொண்டிருக்கிறது, இரண்டு மேட்ச் ஜெயிக்கவில்லை என்றால் உடனடியாக “கேப்டனை மாற்று” போன்ற கோமாளித்தனமான கோஷங்கள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, இந்திய-பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, எப்போதெல்லாம் பெட்டி காலியாகிறதோ அப்போதெல்லாம் அப்பாவி மக்களை உசுப்பிவிட்டு தெலுங்கானாவை தாறுமாறுக்கும் கே..சீ.ஆர் போன்றவர்கள் திரும்பவும் கொடிபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலையை இனி மாதந்தோறும் உயர்த்தப்போவதாக அறிவித்து மக்களை அச்சத்திலேயே வைத்திருப்பது என அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது, டெல்லி குளிருக்காக சரத்குமார் கம்பளி வாங்கி கொடுத்த நிகழ்ச்சி முதல் பக்கத்தில் வந்துக்கொண்டிருக்கிறது, தன்னுடைய பணத்தை செலவு செய்து படம் பார்க்கப் போகும் ரசிகனை இப்படித்தான் நீ இந்த படத்தை பார்க்கவேண்டும் என மறைமுகமாக (சட்டத்திற்குட்பட்டு) கமலும் தியேட்டர் முதலாளிகளும் பல நாளாய் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்…..கடந்த இரண்டு வாரங்களாக மேலே சொன்ன விஷயங்கள்தான் நம்மூர் மீடியாக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் ஒபாமா பதவி ஏற்கும் நிகழ்ச்சியை வைத்து ஒருசில நாட்கள் தள்ளிவிடுவார்கள் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம். இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடிவிட்டது, டெல்லியில் நடந்த கொடூர சம்பவம் முடிந்து. மெழுவர்த்தியை ஏந்தியவர்களும், வஜ்ரா வண்டியின் முன் வீரத் தோள்களை காட்டியவர்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்குள் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். இறந்து விட்ட பெண்ணை வைத்து முடிந்தவரை தங்கள் பிழைப்பை ஒட்டிவிட்ட மீடியாக்களும், பத்திரிகைகளும், சாமியார்களும், அரசியல்வாதிகளும் இனி அடுத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்களை திசைதிருப்புவது எப்படி என அநேகமாக இந்நேரம் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள், இப்படி ஒரு கொடூரம் எதிர்காலத்தில் ஒருவேளைத் தப்பி தவறி நடந்தால் மீண்டும் அந்தப் பெண்ணை நினைவு கூர்ந்து அவர் பற்றிய செய்தியை முதல் பக்கத்தில் கொண்டுவருவார்கள் அல்லது காலந் தாழ்ந்து வழங்கபோகும் நீதியின் போது மீண்டும் அவரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

அதுவரை GOOD BYE & RIP MY BRAVE LADY

Friday, March 23, 2012

மின்சார கனவு

இந்திய அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் அறிவியல் பேசுகிறார்கள். சந்தோஷமான விஷயம். இன்னும் எத்தனை நாளைக்குதான் படிக்காத மேதை என சொல்லிக்கொண்டே இருப்பது என யோசித்திருப்பார்கள் போலத் தெரிகிறது. மத்திய அமைச்சர் திரு.நாராயணசாமி சில நாட்களுக்கு முன்பாக ஒரு கருத்தை சொல்லியிருந்தார். விமானம் மோதினால் கூட கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எந்த ஆபத்தும் நிகழாது என்பதுதான் அது. விமானம் என பொதுவில் சொல்லிவிட்டார், நல்ல வேளையாக இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கிள் என்ஜின் செஸ்னா-172 அல்லது போயிங்-747 என எதையாவது சொல்லியிருந்தால் கேட்ட மக்களுக்கு காது குளிர்ந்து போயிருக்கும். அட நம்ம அமைச்சர் இவ்வளவு பெரிய தகவல் களஞ்சியமா என மெய் மறந்து போயிருப்பார்கள். பொய் சொல்பவர்களை விட தவறான தகவல்களை அள்ளித் தெளிப்பவர்கள் ஆபத்தானவர்கள். அறிவியலை அரசியலுக்கு பயன்படுத்துவது ஏறக்குறைய மார்கரீட்டாவில் காபியை கலப்பதற்கு சமம். உள்ளே போனவுடனே வெளியே வந்துவிடும், போன வழியிலேயே.

வைகைப்புயல் வடிவேல் ஒரு படத்தில் தன்னோட அஸிஸ்டெண்ட்டிடம் சொல்வார். “நான் எடுத்துக் குடுக்குறேன் அடிச்சு விட்றா ஆளக்கான்னு”. நம்ம மத்திய அமைச்சரின் சமீபத்திய அறிக்கைகளைப் பார்த்தால் அப்படிதான் அடிச்சு விடுகிறாரோ என யோசிக்கவேண்டி இருக்கிறது. பார்லிமெண்ட் எலக்ஷன் சீக்கிரமா வரும்போல தெரியுது கொஞ்சம் பார்த்துபேசுவது நல்லது. மக்கள் ஓட்ட மாத்திப் போட்டுட்டா அப்புறம் நாம என்னதான் பேசினாலும் ஒரு பயலும் பத்திரிகையில அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. .

அரசியல்வாதிகள் தான் தங்கள் அறிவு திறனை இப்படி போட்டு உடைக்கிறாங்கன்னு பார்த்தா, தமிழ்நாட்டுல இருக்குற இன்னொரு கூட்டம் கூடங்குளம் மின்நிலையத்துல ஆப்ரேஷன் தொடங்கினா அடுத்த நாளே தமிழ்நாட்டோட மின் தட்டுப்பாடு குறைஞ்சுடும்ன்னு கூச்சமே இல்லாம ஒரு பொய்யை சொல்லிக்கிட்டு இருக்கு. இதை பொய்யுன்னு கூட சொல்ல முடியாது, முட்டாள்தனம்னு வேணும்னா சொல்லலாம். அப்பா சாமிகளா நெய்வேலி, கல்பாக்கம், ராமகுண்டம், தாராப்பூர் என இப்படி எந்த இடத்துல மின்சாரத்தை உற்பத்தி பண்ணாலும் எல்லா அவுட்புட்டும் நேரா சென்ட்ரல் கிரிட்ல (central grid) போய் சங்கமம் ஆயிடும். அதுக்கப்புறம் அதை ஸ்டோர் பண்ணி வச்சுகிட்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமா பங்கு பிரிச்சு குடுப்பாங்க நம்ம டெல்லி கில்லிகள். இது கூடங்குளத்துக்கும் பொருந்தும்.

நிலைமை இப்படி இருக்கும்போது ஏதோ கூடங்குளத்துல இருந்து 11KV லைனை நேரா வூட்டு சந்துல இருக்குற 440/230V ட்ரான்ஸ்பார்மருக்கு (“மின் மாற்றி” ன்னு அழகான தமிழ்ல சொல்லலாம்) அனுப்பிடுவாங்க அங்க இருந்து நம்ம வூட்டுக்கு 3-பேஸ் லைன் போட்டு 24X7 கரண்ட் எடுத்துக்கலாம்னுற ரேஞ்சுல பேசிக்கிட்டு இருக்காதீங்க. வர வர ஊர்ல எல்லாருமே EB office JE மாதிரி பேச ஆரம்பிச்சுடாங்கப்பா கூடங்குளத்துல இருக்குற இரண்டு ரியாக்டரும் முழுசா உற்பத்தி தொடங்கி, அதை அப்படியே முழுசா தமிழ்நாட்டுக்கே திருப்பிவிட்டாலும் அந்த அவுட்புட் தமிழ்நாட்டோட தேவையில எத்தனை சதவீதத்தை ஈடுகட்டும்னு யாரும் ஒழுங்கா எந்த டேட்டாவையும் இதுவரைக்கும் சொல்லல. ஒவ்வொரு வருஷமும் அதிகரிச்சிக்கிட்டே போகும் டிமாண்ட்டுக்கு இன்னும் பத்து உலைகளை கட்டுனா கூட சமாளிக்கமுடியுமான்னு தெரியல.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அணு மின் உலை வேணுமா வேண்டாமா அப்படிங்கற விஷயத்தை இப்ப பேசுறதுக்கு பதிலா இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும்போது பேசியிருந்தா நியாயமா இருந்திருக்கும். பத்து வருஷத்துக்கு மேலா வேலை நடந்து ப்ரடெக்ஷன் ஸ்டார்ட் பண்ணும்போது பிரச்சனையை கிளப்புறது நியாயமா படலை. ஆயிரம் ஆயிரம் கோடிகளை கொட்டித் தொடங்கும் ஒவ்வொரு ப்ராஜெக்டையும் ஏதாவது காரணத்திற்காக நிறுத்துவதால் இழப்பு நம்முடைய மக்களுக்குத்தான். அதே சமயம் இந்த உலையால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை சமாளிக்ககூடிய அளவிற்கு நம்மிடம் Infrastructure வசதி இருக்கான்னு கண்டிப்பா தெரியலை. அப்படி இல்லைன்னா அதை எப்படி சரி பண்ணலாம் என யோசிப்பதுதான் இப்போதைக்கு நல்ல வழியாக இருக்கும்.
அமைச்சர்கள்/அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் கேட்டா இங்க பாதி பேருக்கு இந்த விஷயத்தோட அடிப்படை அறிவுகூட இல்லைங்கறது தெளிவாயிடும்.

இந்தியாவைவிட பலமடங்கு தகுதியும் திறமையும் உள்ள ஜப்பான் ஆளுங்களே (இதை சொன்னா மக்களுக்கு கோபம் வரும்) இந்த விஷயத்துல சமீபத்துல ஆடிப்போயிட்டாங்க ஸோ கண்டிப்பா நம்ம ஆளுங்க எந்த அளவுக்கு Prepared-ஆ இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கலாம். போபால் விஷ வாயுவை Contain பண்ணவே திணறிட்ட நாம இந்த விஷயத்துல கொஞ்சம் Proactive ஆக இருந்துவிடுவது நல்லது. நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா (எதுவும் வராது என நம்புவோம்) எல்லாரும் யாரையாவது கை காட்டிட்டு ஒதுங்கி போய்விடுவார்கள். பல கோடிகளை கொட்டித் தொடங்கிய சேது சமுத்திர திட்டத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டார்கள் அதற்கு சொல்லப்பட்ட சில்லியான காரணத்தை விட இந்த திட்டத்திற்கு எதிரான காரணங்கள் atleast technically valid, but it’s too late now. இனிமே இந்த திட்டத்தை எப்படி பாதுகாப்பா நிறைவேற்றலாம்னு யோசிக்குறதுதான் புத்திசாலித்தனமா இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அசால்ட்டாக நின்று கொண்டிருக்கும் கோயில்களையும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறு கசிவும் இல்லாத அணைகளையும், நினைவுச்சின்னங்களையும் கட்டியெழுப்பிய ஒரு நாடு இன்றைக்கு ஒரு சாதாரண மேம்பாலத்தைக்கூட ஐந்து வருடம் நிலைத்து நிற்கும்படி கட்டமுடியாமல் ஊழலில் திணறிக்கொண்டிருப்பது மன்னிக்கமுடியாத குற்றம். இந்த அளவுகோலை மனதில் வைத்து மக்கள் பயம் கொண்டால் இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

இந்த பிரச்சனையெல்லாம் தீரணும்னா மக்களும் அரசாங்கமும் கொஞ்சம் அமைதியா யோசிச்சாதான் உண்டு, மத்த விஷயத்தை (அரசியல்/மதம்) கொஞ்சம் ஓரமா வச்சிட்டு இந்த அளவுக்கு மின்சார தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம், Alternate Source என்ன, Future requirement/growth expectation, எப்படி இருக்கும் போன்ற சமாச்சராங்களை ஒழுங்கா மனசாட்சியோட ஆராய்ந்து ஒரு நல்ல திட்டத்தை பாதுகாப்பா மக்கள் ஆதரவோடு நிறைவேற்றலாம். அட்லீஸ்ட் அடுத்த ஜெனரேஷன் பவர்கட் இல்லாத சொஸைட்டில வாழ வசதி பண்ணிட்டு போகலாம். நம்ம ஊர்ல Supply-Demand ratio gap அதிகமாயிடுச்சு, இனிமே நிலக்கரிய எரிச்சு, டேம் கட்டி, காற்றாலைய வச்சு எல்லாம் மின்சாரத்த தயாரிச்சுகிட்டு இருக்க முடியாது…அப்படியே தயாரிச்சாலும் அத வச்சி மக்களோட தேவையெல்லாம் முழுசா நிறைவேற்ற முடியாது. இதுதான் இன்றைய நிலவரம்.

ஊர்ல அவனவன் நாலு டி.வி, ரெண்டு ப்ரிட்ஜ், வீடு முழுக்க ஏ.சி-ன்னு ஏகத்துக்கும் முன்னேறிட்டாங்க. இதுக்கெல்லாம் மின்சாரம் வேணும்னா கொஞ்சம் Advanced Technology பயன்படுத்துனா தான் முடியும். போதாத குறைக்கு ஏகப்பட்ட தொழிற்சாலைகள் வேற முளைச்சிகிட்டே இருக்கு..மின்சாரம் இல்லாம அங்க வேலையே நடக்காது…நம்மூர் ஆளுங்களுக்கு தொழிற்சாலை வேணும், அங்க வேலையும் சம்பளமும் வேணும், ஏ.சி.வேணும், ஏ.சி.வச்ச கார் வேணும் ஆனா அனுமின்நிலையம் மட்டும் வேண்டாம்னு பொத்தாம் பொதுவா சொல்றது சரியா படலை. எந்த தொழில்நுட்பத்த வச்சி மின்சாரம் தாயரிச்சாலும் அதுல ரிஸ்க் இருக்கத்தான் செய்யும்…..Risk Mitigate பண்ற வழிய யோசிச்சா தான் முன்னேற முடியும்…இல்லைன்னா கஷ்டம்தான். அரசியல்வாதிகளையும் மக்கள் பிரதிநிதியாக தங்களை முன்நிறுத்திக் கொள்பவர்களையும் கொஞ்சம் ஓரமாக அமரச் சொல்லிவிட்டு இம்மாதிரியான திட்டங்களை சரியான தொழில்நுட்ப ஆட்களிடம் முழுமையாக ஒப்படைத்து அவர்களுக்கு தேவையான சப்போர்ட் மட்டும் கொடுத்தால் போதும். மற்ற விஷயங்கள் தானாகவே சரி செய்யப்பட்டுவிடும்.

இன்னொரு பக்கம் மின்சாரத்த சிக்கனமா பயன்படுத்துறதுக்கு மக்கள் பழகிக்கனும். (குடிக்கிற தண்ணியையே சிக்கனமா பயன்படுத்தாத பொதுமக்கள் மின்சாரத்தை எப்படி சிக்கனமா பயன்படுத்துவாங்க) இந்த விஷயத்துல அரசாங்கம் கொஞ்சம் கண்டிப்பாவே நடந்துக்கனும்..சும்மா ஓட்டுக்கு பயந்துகிட்டு எந்த ஆக்ஷனும் எடுக்காம இருந்தா அப்புறம் எல்லாரும் லாந்தர் விளக்குல தான் ராப்பொழுத கழிக்கவேண்டி வரும். இப்போதைக்கு Workaround கீழே உள்ள விஷயத்தை ட்ரை பண்ணலாம்.

--இலவச மின்சாரத்த நிறுத்திட்டு, விவசாயிகளுக்கு சலுகை விலையில கூடுதலா மின்சாரம் வழங்கலாம். இலவசமா கொடுத்து மின்சாரத்தோட அவசியத்தையே கேவலப்படுத்திட்டாங்க நம்மூர் அரசியல்வாதிங்க. சும்மா கிடைக்குது என்பதற்காக மின்சாரத்த வச்சி மக்களும் அளவுக்கு மீறி விளையாடிட்டாங்க. இப்ப வந்து குத்துது குடையுதுன்னு ஒப்பாரி வைக்கறதுல ஒரு லாபமும் இல்ல.

--வருசத்துல பத்து மாசம் சூரியன் சுட்டெரிக்குற நம்மூர்ல இன்னமும் சோலர் சிஸ்டத்த நிறைய பேர் பயன்படுத்தாம இருக்குறது மன்னிக்க முடியாத குற்றம். இனிஷியல் காஸ்ட் கொஞ்சம் அதிகம். ஆனால் நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பிச்சா விலை கண்டிப்பா குறையும். நிலத்தடி நீர் சேகரிப்பை கட்டாயம் ஆக்குன மாதிரி இதையும் கொஞ்சம் aggressive ஆக செயல்படுத்தினால் நல்லது. நாலு செல்போன் வச்சிக்கிட்டு பந்தா காட்டுற நம்ம ஆளுகளுக்கு அந்த பணத்த இந்த மாதிரி விஷயத்துல இன்வெஸ்ட் பண்றதுக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது.

--Traditional lights க்கு பதிலா CFL மாதிரி engery saver பொருள அதிகமா பயன்படுத்தலாம். பாத்ரூமுக்கு 100W பல்ப எரிய விடுற மக்கள் இன்னமும் நம்ம ஊர்ல இருக்காங்க. கேட்டா அதுதான் பளிச்சுன்னு எரியுதுன்னு விளக்கம் வேற குடுக்குறாங்க. பாத்ரூம்ல எதுக்கு பளிச்சின்னு வெளிச்சம் வேணும்னு சரியா புரியல. இதுக்கு வசதி மட்டும் காரணம் இல்ல போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம்.

--அப்புறம் இந்த Street Light சமாச்சாரம். இந்த விஷயத்துல நாம ரொம்ப மோசம். ஒன்னு அந்த பல்பு சுத்தமா எரியாது, இல்லைன்னா சும்மா கண்ணடிச்சிக்கிட்டே இருக்கும், அதுவும் இல்லைன்னா 24*7 எரிஞ்சுகிட்டே இருக்கும். இருட்டுனத்துக்கு அப்புறம் எரிய ஆரம்பிச்சு, பொழுதுவிடிஞ்ச உடனே அணைச்சாலே போதும் நிறைய எனர்ஜி சேமிக்கலாம். இந்த Street Light எல்லாத்துக்கும் சின்னதா ஒரு சோலார் சிஸ்டத்தை வச்சி அதுல இருந்தே மேனேஜ் பண்ண முடியும்.

--High-Engery Cosumption தேவைப்படுற தொழில்களை கொஞ்சம் Innovative-ஆ natural light use பண்ணுறதுக்கு ஐடியா பண்ணலாம்.

இந்த மாதிரி எதையாவது கொஞ்சம் பண்ணாத்தான் நாடு உருப்படும். இல்லைன்னா கொஞ்ச நாள்ல எல்லோரும் ஆல் இன் ஆல் அழகுராஜாவோட பெட்ரோமாக்ஸ் லைட் கடை முன்னாடி க்யூல நின்னு லைட் வாங்க வேண்டிய நிலைக்கு போயிடுவோம்.

Sunday, January 22, 2012

துர்காதேவி

தமிழ்நாட்டில் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை முன்னிறுத்தி டாக்டர் ருத்ரன் சமீபத்தில் பதிவொன்றை எழுதியிருந்தார். மருத்துவர்களின் ஒற்றுமையின்மையின் காரணமாக “ஸ்ட்ரைக்” என்னும் சுண்ணாம்பை அவர்களால் வேகவைக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். அவரது ஆதங்கத்தை ரசிக்க முடியவில்லை. மருத்துவர்கள் ஒற்றுமையுடன் “ஸ்ட்ரைக்” செய்திருந்தாலும் போய்விட்ட அந்த இரண்டு உயிர்களை திரும்ப கொண்டு வந்திருக்க முடியாது. இறுதியாக பராசக்தியிடம் சில கோரிக்கைகளை வைத்து பதிவை முடித்திருந்தார். அந்தப் பதிவின் ஈரம் காயும் முன்பாகவே மேற்கு வங்காளத்தில் பராசக்தியிடமே தங்கள் மேன்மையை காட்டிவிட்டார்கள் அரசாங்க ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர்.

பிரசவத்திற்கு வந்த ஒரு பெண்ணை இரண்டு அரசு ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் அலைகழிக்க விட்டிருக்கின்றன. விளைவு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு சாலையோரத்தில் அந்த பெண் இறந்திருக்கிறார். மனிதாபிமானமில்லாத இந்த செயலை கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய எந்த இரக்கமுள்ள மருத்துவரும் இதுவரை முன்வந்ததாக தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கைகூட இதுவரை வெளிவரவில்லை. இறந்துபோனவள் சாதாரண மனுஷி, அவளுக்கெதற்கு இரக்கம் என விட்டிருக்கலாம். இறந்து போனவளின் பெயர் உமாதேவியாம். சுடுகாட்டை காவல் காப்பவனை காத்து நிற்பவள். தங்களின் அலட்சிய போக்கால் இறந்து போனது சாட்சாத் அந்த பராசக்தியேதான் என்பதாவது இவர்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. சினங்கொண்டவளாய் தீமையை அழித்தபடி நிற்கும் அந்த துர்கா தேவியின் காலடி மண்ணிலேயே நடந்துவிட்ட செயலுக்கு யாரிடம் சென்று நியாயம் கேட்பது எனத் தெரியவில்லை.

------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை வருத்தம் தெரிவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வரவேற்கவேண்டிய விஷயம். வெறும் பரபரப்பிற்காக எதை வேண்டுமானலும் செய்தியாக போடலாம் என்ற அரிப்பில் உள்ளவர்களுக்கு இந்த தீர்ப்பு கொஞ்சம் நிதானத்தைக் கொடுக்கும்..அதே சமயம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பத்திரிகை அலுவலகத்தை தாக்கியது பற்றியோ அல்லது அவர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் பற்றியோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் நீதிமன்றம் கழண்டு கொண்டது கொஞ்சம் நெருடுகிறது.

பதவியில் இருப்பவர்களின் வழக்கை மட்டும் உடனடியாக விசாரித்து நிவாரணத்தை வழங்கும் நீதிமான்கள் அதே வேகத்தை சாமன்ய மக்களும் வழங்கினால் நீதிதேவதை நிஜமாகவே சந்தோஷப்படுவாள். மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மக்களின் வரிப்பணத்தில் கோடி கோடியாய் செலவழித்து கட்டப்படும் அரசு அலுவலங்களை ஏதாவது வெற்று காரணத்தைச் சொல்லி தங்கள் Ego-விற்காக மாற்றிக்கொண்டேயிருக்கும் போக்கு போன்றவற்றையும் இதே வேகத்தில் கண்டித்தால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.

------------------------------------------------------------------------------------

எழிலக கட்டிட தீயை அணைப்பதற்காக போராடி தனது உயிரை இழந்திருக்கிறார் ஒரு மாவீரர். RIP Sir. இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பதாக தெரிகிறது. அனைவரும் விரைவில் குணமடைந்து நல்ல நிலைக்கு திரும்ப வாழ்த்துக்கள். வெறும் ஆயிரங்களில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு தங்கள் உயிரை பணையம் வைத்து பொதுமக்களின் உடமையைக் காக்க போராடும் இவர்கள் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர்கள். தீயணைப்பு வீரர்களைப்போல வெள்ளித்திரையில் வேஷம் போடுபவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் மக்கள் நிஜமான இந்த ஹீரோக்களை நிராகரிப்பது நியாயமற்ற செயல்.

தமிழ்நாட்டில் மற்ற எல்லா அரசுத் துறைகளும் கொஞ்சம் வனப்பாக மாறிவிட்டாலும் தீயணைப்புத்துறை மட்டும் இன்னமும் அப்படியே பழமை மாறாமல் இருக்கிறது. எங்கள் பகுதியில் சிறுவயதில் பார்த்த தீயணைப்பு நிலையம் பல வருடங்கள் கடந்த பின்னும் இன்னமும் அதே நிலையில் தான் இருக்கிறது. எல்லா அரசு அலுவலகங்களும் புது புது கட்டிடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டபின்னும் இன்னமும் அதே இடத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இவர்களை வைத்திருப்பது நியாமற்றதாக இருக்கிறது.

உலகில் உள்ள வளர்ந்த தேசங்களில், அமெரிக்கா உட்பட இந்த துறைக்கு கிடைக்கும் மரியாதையே தனி. நம்மூரிலும் இதே மரியாதையை கொடுத்து இவர்களை கொண்டாடினால் நாடு இன்னும் கொஞ்சம் சுபிட்சமடையும்

Tuesday, October 12, 2010

ஸ்பிரிட் ஆப் சிலி

சிலி....வரலாற்றை மாற்றி எழுத தயாராகிக்கொண்டிருக்கிறது. இரண்டு மாதத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி ஆழத்திற்கு கீழே தவித்துக்கொண்டிருக்கும் தங்கள் நாட்டை சேர்ந்த முப்பத்து மூன்று சுரங்க தொழிலாளர்களை பத்திரமாக மீட்டெடுக்கும் முயற்சியின் தொடராக கேப்சூல் லிப்ட்டை ஆழ்துளை கிணற்றின் வழியாக உள்ளிறக்க ஏறக்குறைய அத்தனை ஏற்பாடுகளையும் முடித்துவிட்டார்கள். எந்த நேரமும் முதலாவது மீட்பு நிபுணர் உள்ளே அனுப்ப படலாம். சி.என்.என் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னம்பிக்கையுடன் பொறுமையாக காத்திருந்த அத்தனை தொழிலாளர்களையும் வரவேற்க ஒட்டுமொத்த சிலி மட்டுமல்லாமல் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. சிலி நாட்டின் அதிபர் மனைவியுடன் ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே நின்று எல்லோரையும் உற்சாகபடுத்திக் கொண்டிருப்பது மிகப்பெரிய பலம். எல்லாம் நல்லபடியாக முடிந்து அனைத்து தொழிலாளர்களும் நாளை காலைக்குள் (சிலி நேரப்படி) மீட்கப்பட்டுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விவா சிலி !!!!!!!!!!!

Sunday, June 27, 2010

கவியரசு கண்ணதாசன் – MJ

பிறர் தங்களை விமர்சனம் செய்வதையே தாங்கிக் கொள்ள முடியாத மனிதர்கள் மத்தியில் தங்களையே சுய விமர்சனம் செய்து பார்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இரண்டு புத்தகங்களை தவறாமல் படித்துவிடுவது நல்லது. ஒன்று மகாத்மா காந்தியின் “The story of My Experiments with Truth”. மற்றது கண்ணதாசனின் “வனவாசம்”

எப்படி வாழலாம் எப்படி வாழக்கூடாது என்ற இரண்டிற்கும் சரிசமமாக நியாயம் செய்திருக்கிறார் கண்ணதாசன் aka திரு. ஏ.எல்.முத்தையா. இவரைப் பற்றி படிக்கும் போதெல்லாம், கவிகள் எப்போதும் வறுமையில் வாடியதாகவும் அரசர்களின் பரிசை நம்பியே குடும்பத்தை நடத்தியதாகவும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் வரலாற்று புத்தகங்கள் மீது லேசான சந்தேகம் வருகிறது. சோம பானம், சுறா பானம் போன்ற வஸ்த்துக்களுடன் ஏறக்குறைய அரசர்களுக்கிணையான ஒரு வாழ்க்கையையே அவர்களும் வாழ்ந்திருப்பார்கள் போல தெரிகிறது.

M.K.T திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். நின்றால் பாடல், நடந்தால் பாடல் என காசு கொடுத்து வாங்கிய அத்தனை பிலிம் ரோலையும் வெறும் பாட்டுப்பாடியே நிரப்பியிருக்கும் அவர் காலத்து பாடல்களில் காதல் ரசத்தை தவிர்த்து பிற வாழ்வியல் சமாச்சாரங்கள் சல்லடை போட்டு தேடினாலும் அவ்வளவாக கிடைப்பதில்லை. கண்ணதாசன் அந்த வெற்றிடத்தை அழகாக நிரப்ப முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருப்பதாகவே தெரிகிறது.

காதல், சந்தோஷம் போன்ற விஷயங்களுக்கு அப்பால் உள்ள நடைமுறை உலகத்தை மென்மையாகவும் தைரியமாகவும் இவருக்கு முன்னும் சரி பின்னும் சரி எந்த ஒரு திரைப்பட பாடலாசிரியரும் இவரைப்போல வெற்றிகரமாக படைத்திருப்பதாக தெரியவில்லை. போனால் போகட்டும் போடா போன்ற Reality வரிகளை கண்ணதாசனுக்குப் பிறகு யாரும் தொட்டதாக தெரியவில்லை.

தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் தன் பாடல் வரிகளின் வழியாக என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசருக்கு Belated Birthday (24-June) Wishes

-----------------------------------------------------------------------------------

பேரரசு இயக்கிய படங்கள் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்போது மக்களுக்கு சாமி வருவதற்காக மஞ்சள் தண்ணி தெளிப்பது போல MJ Concert-க்கு டிக்கெட் வாங்கும்போதே மக்களை மந்திரித்து விட்டுவிடுவார்கள் போலத் தெரிகிறது. எந்த விஷுவலில் பார்த்தாலும் மக்கள் அனைவரும் ஒரு மாதிரி ஆடியபடியேதான் இருக்கிறார்கள். எல்லோரையும் ஆட்டுவித்த King of Pop மறைந்து ஒரு வருடம் ஓடிவிட்டது.

லைம் லைட்டிற்குள் வந்துவிட்டால் தும்முவதை கூட முதல் பக்கத்தில் கொண்டுவந்துவிடும் மீடியாக்காரர்களுக்கு MJ மாதிரியான ஆட்கள் அமுதசுரபி மாதிரி…..மறைந்து ஒரு வருடம் கழிந்த பின்னும் இன்னமும் பத்திரிகைகளுக்கு செய்தியை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார் மனிதர்.

உயிருடன் இருந்தபோது இருந்த fame இன்னமும் அப்படியே இருக்கிறது மனிதருக்கு. MJ வின் ஆல்பத்தின் பக்கம் தலைவைத்து படுத்திராதவர்கள் கூட சென்ற வருடம் இவர் மறைந்தவுடன் முட்டி மோதி ஒரு காப்பி Thriller-ஐ வாங்கி பத்திரப்படுத்திவிட்டார்கள். கிடைத்த கேப்பில் ரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ரிக்கார்டிங் நிறுவனங்கள் காசை அள்ளிவிட்டன. இன்னமும் அள்ளிக்கொண்டிருக்கின்றன. யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன்.

R.I.P MJ

Wednesday, June 23, 2010

தேநீர் கடை -- Creative Thinking

ஒருமுறை திருச்சி நகரையொட்டிய பகுதியில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக வித்தியாசமான பெயர் பலகை கொண்ட தேநீர் கடை ஒன்று கண்ணில் பட்டது. கடையின் பெயர் “ஆத்திக்குடி”.

ராமு டீ ஸ்டால், பாம்பே டீ ஸ்டால் என ஒரே மாதிரியான பெயர்களை மட்டுமே பார்த்து பழகிவிட்டிருந்த நிலையில் இந்த வித்தியாசமான பெயர் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. பல வருடங்கள் கழிந்த பின்னும் இன்னமும் ஒவ்வொரு முறை தேநீர் கடைகளை பார்க்கும் போதெல்லாம் கடைகளின் பெயர் பலகை மீது கண்கள் படிவதையும், “ஆத்திக்குடி” போன்ற வித்தியாசமான பெயரை காண முடியுமா என்ற ஏக்கம் தலையெடுப்பதையும் தவிர்க்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன் விளம்பரத் துறையில் வேலை செய்பவர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தபோது இம்மாதிரியான மனதில் பதிந்து விடக்கூடிய ஒன் லைனர் கான்செப்ட்டுக்காக அவர்கள் எத்தனை தூரம் மெனக்கெடுகிறார்கள் என்பதை நேரடியாக பார்க்க முடிந்தது.

இம்மாதிரி வித்தியாசமாக சிந்திப்பவர்கள் ஆதிகாலத்திலிருந்தே இருந்திருக்கிறார்கள் போல தெரிகிறது. சங்கத் தமிழ் இலக்கிய படைப்பாளிகளில் Out-of-Box thin-king குரு அநேகமாக திருவள்ளுவராக தான் இருந்திருக்ககூடும். திருக்குறளை இரண்டிக்குள் சுருக்காமல் பிற இலக்கியங்களை போல பத்தியாகவோ அல்லது வேறு வடிவிலோ படைத்திருந்தால் இத்தனை தூரம் திருக்குறள் பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. எழுதுவது என முடிவு செய்தபின் அதை கொஞ்சம் க்ரியேட்டிவிட்டியுடன் செய்யலாம் என யோசித்து அதன் பின்னரே அந்த இரண்டடி கான்செப்டை கையில் எடுத்திருப்பாரோ எனத் தோன்றுகிறது.

Creative Thinking, Out-of-Box Thinking போன்ற சமாச்சாரங்களுக்காகவே பணத்தை கொட்டி கொடுத்து ஐ.ஐ.எம்மிலிருந்தும் ஜமன்லால் பஜாஜ் இன்ஸ்ட்யூடிலிருந்தும் ஆட்களை அள்ளிக் கொண்டு வரும் பல நிறுவனங்களை அருகிலிருந்து பார்த்ததுண்டு. நம்மூரில் இதே மேட்டரை ரொம்ப மெனக்கெடாமல் அதிக செலவில்லாமல் இந்த தேநீர் கடைக்காரரை போல ஜஸ்ட் லைக் தட் என செய்துவிட்டுப் போகிறார்கள்.

தேநீர் கடைக்காரருக்கு ஒன் லைனர் என்றால் நம்மூர் ஆட்டோக்களில் இரண்டு வரியில் அசால்டாக மெஸேஜ் எழுதி சில நேரங்களில் புருவத்தை உயர செய்துவிடுகிறார்கள். டீ-ஷர்ட்களில் ப்ரிண்ட் செய்வதற்காக மெஸேஜ் தேடிக்கொண்டிருப்பவர்கள் நம்மூர் ஆட்டோக்கள் பின்னால் இரண்டு நாள் சுற்றினால் போதும்…அடுத்த இரண்டு வருடத்துக்கு யோசிக்கவே தேவையில்லாத அளவிற்கு கான்செப்ட் கிடைத்துவிடும்.

அடுத்தமுறை பஸ்ஸில் பயணம் செய்யும்போதோ அல்லது ஆட்டோக்களின் பின்னால் செல்லும்போதே கண்ணை அகலமாக திறந்து வைத்திருங்கள்..வித்தியாசமான பெயரோ அல்லது வாசகமோ உங்களை ஆச்சரியப்படுத்த காத்திருக்கலாம்.

Tuesday, June 22, 2010

செம்மொழி மாநாடு மற்றும் பெஃட்னா – வாழ்த்துக்கள்

கொங்கு மண்டலத்தில் கோலகலமாக தொடங்குகிறது தமிழ் செம்மொழி மாநாடு. வாழ்த்துக்கள். வழக்கம்போல சிலப்பதிகாரத்தையும், கம்ப இராமயணத்தையும், திருக்குறளையும் மட்டுமே தொட்டுச் செல்லாமல் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தமிழ்க்கணிணி/இணையம் சார்ந்த விஷயங்களுக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்ககூடிய விஷயம். வழக்கத்திற்கு மாறாக கூடுமானவரை கரைவேட்டிகளை தவிர்த்து அரசியலுக்கு அப்பாற்பட்ட தனி நபர்களுக்கும் அவர்களது உரைகளுக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது மாற்றத்திற்கான அறிகுறி…இது தொடரும் பட்சத்தில் தமிழ் தானாக வளரும்.

இம்மாநாட்டு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதைப் போலவே, தமிழகத்தின் மிகப்பெரிய நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் மின் திரை அமைத்து இணையம் மூலமாக நேரடியாக வெப்-காஸ்ட் செய்திருந்தால் பெங்களூரில் லேண்ட் ஆகும் தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் சென்னைக்கும்/கோவைக்கும் ஒரு எட்டு வந்துவிட்டுப் போயிருப்பார்கள். மொழியோடு சேர்த்து வேலை வாய்ப்புகளையும் வளர்த்திருக்கலாம். போதுமான உள்கட்டமைப்பு, தேவைக்கதிமான பேண்ட்வித், கொட்டிக்கிடக்கும் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் என எல்லாம் இருந்தும் வாய்ப்பு கிடைக்கும்போது இம்மாதிரியான முயற்சிகளை ஏன் முன்னெடுக்ககூடாது எனத் தெரியவில்லை.

கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் மொழியை முன்னிறுத்தி நடக்கும் மாநாடுகளில் அம்மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் கலந்து கொள்வது இயல்பாக நடக்கிறது. தமிழ்நாட்டில் அம்மாதிரியான நிலையை 1970 க்கு பிறந்த தலைமுறையினர் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. கடந்த காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு இரு கழகங்களும் இம்மாதிரியான நிகழ்வுகளின் போதாவது கையை குலுக்கிக்கொண்டால் தமிழ் கொஞ்சம் தற்பெருமை கொள்ளும்.

-------------------------------------------------------------------------------------

அமெரிக்கவாழ் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பெஃட்னா தமிழ் திருவிழா ஜூலை 3,4 மற்றும் 5 தேதிகளில் கனெக்டிக்கட்டில் நடைபெறுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய நிகழ்வாக நடைபெற இருக்கும் இந்த விழாவில் திரையுலக நட்சத்திரங்கள், தமிழ் அறிஞர்கள் என பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி நீண்ட வார இறுதி விடுப்பு கிடைப்பதால் கிழக்கு கடற்கரையில் வசிக்கும் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க முயற்சிக்கலாம். வேறு பகுதிகளில் இருந்து வட கிழக்கிற்கு செல்ல/வர திட்டமிட்டிருப்பவர்கள் வாய்ப்பு கிடைத்தால் கனெடிக்கட்டை திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

எல்லோரையும் எல்லோருக்கும் நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இம்மாதிரியான நிகழ்வுகள் அந்த இடைவெளிகளை குறைத்து புதியவர்களை அறிமுகப்படுத்தலாம். பங்கேற்க வாய்ப்பும் நேரமும் உள்ளவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:

http://www.fetna.org/index.php?option=com_eventlist&view=eventlist&Itemid=34


.

Tuesday, March 23, 2010

சச்சின் – ஸ்டீவ் ஜாப்ஸ் – ஜெ.ஜெ

“பதினோராயிரம் முட்டாள்கள் ரசிக்க பதினோரு முட்டாள்கள் விளையாடும் விளையாட்டு”….சொன்ன ஜார்ஜ் பெர்னாட்ஷா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் சச்சினுக்கு வாழ்த்துரை எழுதியிருப்பார். டொனால்ட் பிராட்மேன் இந்நேரம் மும்பைக்கு பறந்து வந்திருப்பார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் என்பது ரிக்கி பாண்டிங் தொடங்கி ஜெயசூர்யா வரை எல்லோருக்குள்ளும் தூங்கிக்கொண்டிருந்த (கொண்டிருக்கும்) கனவு. ஒரு காலகட்டத்தில் பெளலர்களை சுளுக்கெடுப்பதை தவிர வேறென்றும் அறியேன் பராபரமே என கும்பிட்டுவிட்டு களம் இறங்கிக்கொண்டிருந்த லான்ஸ் குளுஸ்னர், ரிக்கார்டோ பெளவல் போன்றவர்கள் இரட்டை சதத்தை கடந்துவிடுவார்கள் என ஏகத்துக்கும் எதிர்பார்க்கப்பட்டது. அடித்த அடி அப்படி. எதிர்பாரத விதத்தில் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முற்று பெற்றுவிட, நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தக் கனவை நிஜமாக்கிவிட்டார் இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின். வயது, உடல் நிலை, ஆட்டத்திறன் என தன் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் தனது மட்டையின் மூலமாக மட்டுமே பதில் சொல்வது என சத்தியபிரமாணமே எடுத்திருப்பார் போல தெரிகிறது. அடித்து நொறுக்கிவிட்டார். இத்தனை வருடங்களாக ஆடியும் இன்னமும் வேகம் குறையவேயில்லை இந்த சிவாஜி பார்க் ஹீரோவிடம். இருபது வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக அலைந்த ட்ரவுசர் பாண்டிகளின் டெமி காட் சந்தேகமே இல்லாமல் சச்சின் தான். சாதனையின் கைத்தட்டல்கள் அடங்குவதற்கு முன்பே , எதிர்பார்த்தது போலவே இந்திய அரசியல்வாதிகள் அறிக்கை பட்டியலிட ஆரம்பித்துவிட்டார்கள்…தெருவுக்கு பெயர் வைப்பது, மியூசியம் அமைப்பது, பாரத் ரத்னா என ஆள் ஆளுக்கு கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசியல்வாதிகளும், தாக்ரேக்களும் சச்சினை அவர் வழியில் விட்டுவிட்டு ஒதுங்கி நின்றாலே போதும். அதைவிட பெரிய பரிசையோ அல்லது பாராட்டையோ சச்சினே இவர்களிடம் எதிர்பார்க்கமாட்டார்……..விடுவார்களா ?
-------------------------------------------------------------------------------------

பிப்ரவரி-24,

இடம்: ஃக்யூபர்டினோ, கலிஃபோர்னியா

கட்-அவுட், ஃபிளக்ஸ் பேனர், பால் குடம், ப்ளாஸ்டிக் குடம் என எதுவுமே இல்லாமல் தன் பிறந்தநாளை அமைதியாக கொண்டாடி முடித்துவிட்டார் ஆப்பிளின் ஆதர்ஷ புருஷன் ஸ்டீவ் ஜாப்ஸ். வாழ்த்துக்கள். 1985 இல் கிட்டதட்ட தனது தொழில் முறை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மனம் தளராமல் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி தொழில் ரீதியாக யாரும் நெருங்கவே முடியாத உயரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார் மனிதர். வாக்கி டாக்கி ரேஞ்சிற்கு பெரிய சைசில் இருந்த மொபைல் போன்களை ஒரே நைட்டில் பார்சல் செய்து பக்கத்தில் இருந்த பசிபிக்கில் வீசிவிட்டது இவரின் செல்லக்குழந்தை ஐஃபோன். அடுத்த தலைமுறைக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, A for Apple என சொல்லிவிட்டு, ஆப்பிள் பழத்திற்கு பதிலாக ஐஃபோன் எடுத்து காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆதாம் கடித்து முடித்து மிச்சம் வைத்த ஆப்பிளை வைத்துக்கொண்டு மைக்ரோசாப்டையும், கூகிளையும் ஒருவழி பண்ணிக்கொண்டிருக்கிறார் ஸ்டீவ். கவச குண்டலத்தோட பிறந்த கர்ணன் கதைமாதிரி இனிமேல் பிறக்கும் குழந்தைககள் காதில் ஆப்பிள் ஐபாடோடு பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. மனிதரின் ஆக்கத்தில் உருவாகும் ஒவ்வொரு பொருளும் அப்படி ஒரு ரீச். தோன்றின் புகழோடு தோன்றுக ….திருவள்ளுவர் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.
-------------------------------------------------------------------------------------

பிப்ரவரி-24

இடம்: போயஸ் கார்டன், சென்னை

அம்மாவின் பிறந்தநாள். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் நாளேடுகளை அலங்கரித்திருந்த பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை பார்க்கும்போது, பேசாமல் சினிமா வசனகர்த்தாக்களும், கவிஞர்களும் கொஞ்ச நாட்களுக்கு ஏதாவது ஒரு வட்டத்தையோ அல்லது மாவட்டத்தையோ தங்களின் மென்டராக பாவித்துக்கொண்டு பாடம் கற்றுக்கொள்வது நல்லது என தோன்றுகிறது. ரூம் போடாமலே என்னமாய் யோசிக்கிறார்கள். இந்த ரேஞ்சிற்கு யோசிக்கும் இவர்களை, தேர்தலின்போது (யோசிக்கவே தயங்கும்) பொதுமக்கள் எப்படி கவிழ்த்துவிடுகிறார்கள் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. இதே தேதியில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் அடுத்த மூலையில் அமர்ந்துகொண்டு தனது தொழில் ரீதியான போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி என யோசித்துக்கொண்டிருக்க, அம்மாவோ தேடி வருகின்ற இடைத்தேர்தல் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் கொடநாடுக்கு பறந்து விடுகிறார். பேசாமல் கொடநாட்டை அதிமுகவின் கோடைகால தலைமையகமாக அறிவித்துவிடலாம்….இவரின் இன்றைய நிலையில் கலைஞரோ அல்லது எம்ஜியாரோ இருந்திருந்தால் தங்களின் பிறந்தநாள் கொண்டாடத்தை பயன்படுத்தியே இந்நேரம் தொண்டர்களை உசுப்பேற்றி பென்னாகரத்திற்குள் அனுப்பி வைத்திருப்பார்கள். பதவியில் இருக்கும் காலங்களை விட பதவியில் இல்லாத நேரத்தில் மக்களிடம் நெருக்கமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஜெ.ஜெ.விற்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து அறிக்கைவிடுவதில் காட்டும் அதீத ஆர்வத்தையும் வேகத்தையும் இடைத்தேர்தல்களின் போது ரத்தத்தின் ரத்தங்களுக்கு நம்பிக்கையூட்டுவதிலும் காட்டினால் இரட்டை இலை கொஞ்சம் துளிர்விடும். இல்லையென்றால் அடுத்த பிறந்தநாளுக்குள் சில/பல கரைவேட்டிகள் கூடு விட்டு கூடு விட்டு பாய்ந்துவிடுவார்கள்….கவனிப்பாரா ஜெ.ஜெ.
-------------------------------------------------------------------------------------

Tuesday, May 5, 2009

கோபிநாத் – ஜெயபிரகாஷ் நாராயணன் – சரத்பாபு

வோட் பார் சேஞ்ச் (Vote for Change), பாரக் ஒபாமா முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை இன்றைக்கு உச்சரிக்கும் மந்திரம் இது. முழுநேர அரசியல்வாதிகள் இதை வெறும் வார்த்தையாக மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க, இதை செயலில் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது சிலர் வெளியில் வந்து முயற்சி செய்வதுண்டு. இந்த தேர்தலிலும் சிலர் அந்த முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பெங்களூர் செல்வதற்காக டெல்லி விமான நிலையத்தின் மெயின் லாபிக்குள் நுழைந்தபோது ஒரு நபர் மிக சத்தமாக “சார் ஏர் டெக்கான் குவஹாத்தி, சார் ஏர் டெக்கான் குவஹாத்தி” என இரண்டு முறை கேட்டார், நான் இல்லை என தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று அமர்ந்துவிட்டேன். என்னைத் தொடர்ந்து பின்னால் உள்ளே நுழைந்த அனைவரிடமும் அவர் அதே பாணியில் கேட்டுக் கொண்டேயிருந்தார். அந்த நபர் நின்றிருந்த இடம் குவஹாத்தி செல்லும் ஏர் டெக்கான் விமானத்தின் போர்டிங் கேட் அருகில்…குவஹாத்தி செல்லும் பயணிகளை கூவி கூவி அழைத்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார். மக்கள் சேவையை விமான நிலையத்தின் உள்ளே வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொண்டிருந்தது ஏர் டெக்கான் நிறுவனம்.

கோயலும், மல்லையாவும் விமான டிக்கெட்டின் விலையை கூட்டி கொண்டிருக்க சத்தமே இல்லாமல் ஏர் டெக்கான் விலையை குறைத்து விளையாடிக் கொண்டிருந்தது. மிக குறுகிய காலத்தில் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியோடு மட்டும் இல்லாமல் விலை குறைப்பில் இறங்கி லல்லுவின் ரெயில்வே துறையுடனும் மல்லுக்கு நின்றது ஏர் டெக்கான். கார்ப்பரேட் உலகத்தை தாண்டி சாதாரண நடுத்தர மக்களுக்கும் விமான பயணத்தை நனவாக்கிய பெருமை இந்த நிறுவத்திற்கு உண்டு, அப்படிபட்ட ஒரு துவக்கத்திற்கு முதல் புள்ளியாய் இருந்தவர் கேப்டன் கோபிநாத். தொழில் என்ற எல்லையை தாண்டி மனிதர் கொஞ்சம் மக்களைப் பற்றியும் சிந்தித்தனின் விளைவுதான் இந்த தாறுமாறான விலைகுறைப்பு ஐடியா.

மக்களை உயரத்திற்கு கொண்டு சென்றவருக்கு அந்த மாற்றம் மட்டும் போதுமானதாக தெரியவில்லை போல தெரிகிறது, மக்கள் சேவையே மகேசன் சேவை என நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார் மனிதர். கர்நாடகாவின் Hi-Fi தொகுதியான பெங்களூர் தெற்கு தொகுதியில் சுயேச்சையாக லேண்ட் ஆகி இருக்கிறார். இவரின் அறிவிப்பை தொடர்ந்து டேக்-ஆப் ஆன சலசலப்பு இன்னமும் அடங்காமல் இருப்பதுபோலத் தான் தெரிகிறது. காங்கிரஸ், பிஜேபி, ஜனதா என இங்கு போட்டியிடும் பெருந்தலைகளுக்கு இவரின் வேட்பாளர் அறிவிப்பு தூக்கத்தை கலைத்திருக்கும்.

மற்ற அரசியல்வாதிகள் போல லௌட் ஸீபீக்கர் வைத்து நோகடிக்காமல் அமைதியாக பிரசாரம் மேற்கொண்டவர். பூங்காக்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் நேரிடையாக சென்று பேசி ஒட்டு சேகரித்தது பெரும்பாலானவர்களை கவர்ந்துள்ளது. மாற்றத்தை தனது பிரசாரத்திலேயே செயல்முறைபடுத்த ஆரம்பித்தவர். தென் பெங்களூரின் பவர்புல் கார்ப்பரேட் உலகம் இவரை வெளிப்படையாக ஆதரிப்பது மிகப் பெரிய பலம்.

காற்றில் பறந்து சேவை செய்த இவருக்கு காற்றாடி சின்னத்தை வழங்கியிருக்கிறது தேர்தல் கமிஷன். எவ்வளவு உயரத்திற்கு இந்த காற்றாடியை மக்கள் பறக்க விட்டிருக்கிறார்கள் என்பது மே 16 இல் தெரிந்துவிடும்.
------------------------------------------------------------------------------------------------

குண்டூர் மிளகாவை அரைத்து கண்ணில் ஊற்றியது போல எரிந்து கொண்டிருக்கிறது மணவாடு தேசம். காங்கிரஸ், தெலுங்குதேசம், பிரஜா ராஜ்யம் என ஆள் ஆளுக்கு ஆந்திராவை ராமகுண்டம் ரேஞ்சுக்கு சூடேற்றிக் கொண்டு இருக்க, பதினாறு வயதில் பாகிஸ்தானை புரட்டி எடுத்த சச்சின் மாதிரி நேற்று முளைத்த லோக் சத்தா ஆந்திர அரசியலை தாறுமாறாக தகர்த்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.. .

கர்நாடகாவிற்கு நிஜமான கேப்டன் என்றால் ஆந்திராவிற்கு நிஜமான டாக்டர் கம் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயணன். சுருக்கமாக ஜே.பி. லோக் சத்தாவின் காட் பாதர். ஆந்திராவின் அரசியலை மையமாக வைத்து நடந்து கொண்டிருக்கும் இண்டர்நெட் யுத்தத்தில் இன்றைய தேதிக்கு இவரின் லோக் சத்தா கட்சிதான் சூப்பர் டூப்பர் ஹிட். ஈநாடு தெலுங்கு தேசத்திற்கும், சாக்-ஷி காங்கிரசுக்கும், ஆந்திரஜோதி பிரஜா ராஜ்யத்திற்கும் குடை பிடிக்க, ஒட்டுமொத்த தெலுங்கு இண்டர்நெட் உலகமும் லோக் சத்தாவின் பின்னால் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வது போல தெரிகிறது.

ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து அரசியலுக்கு வந்திருப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. மக்களின் கேள்விகளுக்கு கதையோ கவிதையோ சொல்லி திசை திருப்பாமல் தெளிவான நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தருகிறார் மனிதர். ஆந்திராவின் எல்லா தரப்பு மக்களையும் டோலிவுட் ஹீரோயின்களைவிட அதிகமாக கவர்ந்துள்ளார். அத்தனையும் ஒட்டாக மாறும்பட்சத்தில் ஆந்திரா நிஜமாகவே ஒளிருவதற்கு வாய்ப்பு இருநூறு சதவீதம் உள்ளது.

எல்லா கட்சியின் தொண்டரடிபொடிகளும் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்க மனிதர் தனி ஆளாக ஒட்டு மொத்த ஆந்திராவையும் ரயிலில் சென்று கவர் செய்து கொண்டிருக்கிறார். தகுதியான வேட்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் ஒட்டு மொத்த ஆந்திராவிற்கும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறது லோக் சத்தா. யூகித்துக் கொள்ளுங்கள் எந்த மாதிரியான கட்சி என்று. நம்மூரில் ஒரே தொகுதிக்கு ஒரே கட்சியில் முப்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள். நல்ல கட்சிக்கு வேட்பாளர் பஞ்சம்….தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சினிமா, பணம், ஆள் பலம் என்ற ஆந்திர அரசியலின் எந்த தகுதியும் இல்லாமலே மக்களை சென்றடைந்திருக்கிறார். ஆந்திர மக்களை எழுப்புவதற்காகவோ என்னவோ இவருக்கு விசில் சின்னத்தை கொடுத்திருக்கிறது தேர்தல் கமிஷன். இவர் அடிக்கும் விசில் சத்தத்தில் மக்கள் லேசாக விழித்தாலே போதும், ஹைதராபாத்தில் லோக் சத்தாவின் கொடி உயர பறக்கும். பார்க்கலாம் மே 16 அன்று என்ன நடக்கிறது என்று.
------------------------------------------------------------------------------------------------

ஒவர் டூ மடிப்பாக்கம்….முன்னவர்கள் இருவரும் சீனியர்கள் வயதிலும் அனுபவத்திலும், இருவருக்குமே ஒரளவு அரசியல் ரீதியான அனுபவம் உள்ளது. இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லை என சொல்லாமல் சொல்லி களத்தில் இறங்கிவிட்டார் சரத்பாபு. அம்மாவும், அய்யாவும், கேப்டனும் தமிழ்நாட்டை கூறு போட்டு பந்தாடிக் கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் சென்னையின் உஷ்ணத்தை இன்னும் கொஞ்சம் கூட்டி கொண்டிருக்கிறார் சரத். இவரை ஆதரித்தும் எதிர்த்தும் இணையத்தில் எழுதும் அளவிற்கு தென்சென்னையின் முக்கிய வேட்பாளராக விசுவரூபம் எடுத்து இருக்கிறார்.

இவரின் பின்புலம், படிப்பு விவரம் போன்ற இத்யாதிகளை பலரும் துவைத்து காயப்போட்டு விட்டார்கள், விதம் விதமாக அவர் அவருக்கு பிடித்த வகையில். போதாத குறைக்கு பத்திரிகைகளின் அதீதமான எழுத்துக்கள் இவரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. Indirect Marketing மனிதருக்கு நன்றாகவே வேலை செய்கிறது. இதை கன்சாலிடேட் செய்வாரா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வேட்டி கட்டிய அரசியல்வாதிகளையே பார்த்து பார்த்து புளித்து போன தமிழக வாக்காள பெருமக்களின் கண்களுக்கு இவரின் தோற்றமே ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. ஓட்டு வாங்க இது மட்டுமே போதாது என்று சரத்துக்கு தெரிந்திருக்கும் என்று நம்புவோமாக. மே 16 அன்று முடிவுகள் எப்படி இருந்தாலும் இவர் இழப்பதற்கு ஒன்றும் இல்லை, எதிர்காலத்தில் இன்னொரு சந்தர்ப்பம் வாய்த்தால் இந்த அனுபவத்தை பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் மேலே போகலாம்.

ஒரு பயலும் சரியில்லை என்ற மனநிலையில் உள்ள தமிழக வாக்காளர்கள் நிஜமாகவே ஒரு மாற்றத்தை விரும்பும் பட்சத்தில் சரத்துக்கு “டெல்லி சலோ” வாய்ப்பு நிஜமாகலாம்.

------------------------------------------------------------------------------------------------

கோபிநாத், ஜே.பி ஆகியோரின் பரீட்சை முடிந்துவிட்டது…முடிவுக்காக காத்திருக்கிறார்கள்….சரத்துக்கு இனிமேல் தான் பரீட்சையே நடக்கப் போகிறது…….மாற்றத்திற்கு தென்சென்னை மக்கள் தயாரா இல்லையா என்பது மே 16 அன்று தெரிந்துவிடும்.

-------------------------------------------------------------------------------------------------

Monday, May 4, 2009

எழுதுங்கள் படிக்கப்படும்

தனக்கென்று ஒரு தளம் இல்லாமலே இன்றைய தேதிக்கு மிக அதிகமான பாலோயர்களை வைத்திருப்பவர் அனேகமாக திருவள்ளுவராகத் தான் இருப்பார். உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் கூகுள் இவரை அள்ளிக்கொண்டு போய் மவுண்டன் வியூவில் வைத்து வழிபட்டிருப்பார்கள். அறம், பொருள், இன்பம், காதல், காமம் , சூது, வாது என எல்லா திசையிலும் புகுந்து விளையாடிய / விளையாடிக் கொண்டிருக்கின்ற எழுத்தின் ஏகபோக முதலாளி. எல்லா வயதினருக்கும் "ஏ"ற்ற படம் என சொல்வது போல், எல்லா வயதினரும் படிக்க தகுதி உடைய படைப்பு இவருடையது, பாலோ செய்வது மட்டும்தான் கொஞ்சம் சிக்கலான விஷயம்.

தலை சிறந்த (!) எழுத்தாளன் என தங்களை கூறிக்கொள்பவர்கள் கூட இதுவரை 1331 வது குறளை ஏதோவொரு பாலில் படைப்பதற்கு முயலாதது ஏன் என தெரியவில்லை. எல்லா சரக்கையும் திருவள்ளுவரே 1330-க்குள் அடக்கிவிட்டாரா அல்லது 1331 வது குறளுக்கு இவர்களிடம் சரக்கு இல்லையா என்பது தெரியவில்லை. மூன்றரை நிமிட பாடலுக்கு நம்மை குத்து போட வைக்கும் அளவிற்கு தமிழை திறமையாக கையாளும் நம்மவர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் "குறள் படைத்த குத்துவிளக்கு" என்ற டைட்டில் கார்டு நிச்சயம். இணையத்தில் இருப்பவர்கள் கூட முயற்சிக்கலாம்...இணைய குறலோன் என்ற பட்டம் உங்களுக்கு உறுதி செய்யப்பட வாய்ப்புக்கள் அதிகம். ஒரே சிக்கல் சில்லரை தேற்ற முடியாது.

எத்தனை பேர் படிப்பார்கள், எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்படும், எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்கும் என எந்த ஒரு சிந்தனையும் திருவள்ளுவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. நினைத்ததை செதுக்கிவிட்டு போய் இருக்கிறார் மனிதர் அஷ்டே. நம்மவர்கள் புதிது புதிதாக அதற்கு உரை போட்டு நாக்கில் நுரை தள்ள வைக்கிறார்கள்.

சிக்கலான புரோகிராம் ரேஞ்சில் எழுதி சின்னாபின்னம் ஆகாமல், ஜஸ்ட் ஒன்றரை வரியில் மேட்டரை அடக்கி வைத்துவிட்டு சென்றிருப்பது எப்போது நினைத்தாலும் ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. Keep It Short & Simple” (KISS), ஏசி ஹாலில் நமக்கு சொல்லி கொடுக்கும் பாடத்தை, ரொம்ப சாதரணமாக செயல்முறை படுத்தி விட்டு போய் அமைதியாக கன்னியாக்குமரி கடலில் நின்றுவிட்டார். அமைதியாக நிற்பவரை இன்னமும் படகில் ஏறி சென்று தொந்தரவு செய்கிறோம்.

இவ்வளவு பெரிய படைப்பை படைத்துவிட்டு மனிதர் எந்தவொரு ரைட்ஸும் வாங்காமல் போயிருக்கிறார். இந்த பதிவையே காப்புரிமை செய்யலாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். J. இணையத்தில் இப்போது இதுதான் பேஷன்.

சுயமாகவும் சிக்கனமாகவும் தான் சொல்ல வந்ததை எளிமையாக எழுதும் பட்சத்தில் எழுத்துக்கள் காலத்தை கடந்து நிற்கின்றன..எழுதுங்கள் உங்கள் எழுத்துக்களும் படிக்கப்படும். காலம் கடந்த பின்னும்.