“பதினோராயிரம் முட்டாள்கள் ரசிக்க பதினோரு முட்டாள்கள் விளையாடும் விளையாட்டு”….சொன்ன ஜார்ஜ் பெர்னாட்ஷா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் சச்சினுக்கு வாழ்த்துரை எழுதியிருப்பார். டொனால்ட் பிராட்மேன் இந்நேரம் மும்பைக்கு பறந்து வந்திருப்பார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் என்பது ரிக்கி பாண்டிங் தொடங்கி ஜெயசூர்யா வரை எல்லோருக்குள்ளும் தூங்கிக்கொண்டிருந்த (கொண்டிருக்கும்) கனவு. ஒரு காலகட்டத்தில் பெளலர்களை சுளுக்கெடுப்பதை தவிர வேறென்றும் அறியேன் பராபரமே என கும்பிட்டுவிட்டு களம் இறங்கிக்கொண்டிருந்த லான்ஸ் குளுஸ்னர், ரிக்கார்டோ பெளவல் போன்றவர்கள் இரட்டை சதத்தை கடந்துவிடுவார்கள் என ஏகத்துக்கும் எதிர்பார்க்கப்பட்டது. அடித்த அடி அப்படி. எதிர்பாரத விதத்தில் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முற்று பெற்றுவிட, நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தக் கனவை நிஜமாக்கிவிட்டார் இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின். வயது, உடல் நிலை, ஆட்டத்திறன் என தன் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் தனது மட்டையின் மூலமாக மட்டுமே பதில் சொல்வது என சத்தியபிரமாணமே எடுத்திருப்பார் போல தெரிகிறது. அடித்து நொறுக்கிவிட்டார். இத்தனை வருடங்களாக ஆடியும் இன்னமும் வேகம் குறையவேயில்லை இந்த சிவாஜி பார்க் ஹீரோவிடம். இருபது வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக அலைந்த ட்ரவுசர் பாண்டிகளின் டெமி காட் சந்தேகமே இல்லாமல் சச்சின் தான். சாதனையின் கைத்தட்டல்கள் அடங்குவதற்கு முன்பே , எதிர்பார்த்தது போலவே இந்திய அரசியல்வாதிகள் அறிக்கை பட்டியலிட ஆரம்பித்துவிட்டார்கள்…தெருவுக்கு பெயர் வைப்பது, மியூசியம் அமைப்பது, பாரத் ரத்னா என ஆள் ஆளுக்கு கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசியல்வாதிகளும், தாக்ரேக்களும் சச்சினை அவர் வழியில் விட்டுவிட்டு ஒதுங்கி நின்றாலே போதும். அதைவிட பெரிய பரிசையோ அல்லது பாராட்டையோ சச்சினே இவர்களிடம் எதிர்பார்க்கமாட்டார்……..விடுவார்களா ?
-------------------------------------------------------------------------------------
பிப்ரவரி-24,
இடம்: ஃக்யூபர்டினோ, கலிஃபோர்னியா
கட்-அவுட், ஃபிளக்ஸ் பேனர், பால் குடம், ப்ளாஸ்டிக் குடம் என எதுவுமே இல்லாமல் தன் பிறந்தநாளை அமைதியாக கொண்டாடி முடித்துவிட்டார் ஆப்பிளின் ஆதர்ஷ புருஷன் ஸ்டீவ் ஜாப்ஸ். வாழ்த்துக்கள். 1985 இல் கிட்டதட்ட தனது தொழில் முறை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மனம் தளராமல் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி தொழில் ரீதியாக யாரும் நெருங்கவே முடியாத உயரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார் மனிதர். வாக்கி டாக்கி ரேஞ்சிற்கு பெரிய சைசில் இருந்த மொபைல் போன்களை ஒரே நைட்டில் பார்சல் செய்து பக்கத்தில் இருந்த பசிபிக்கில் வீசிவிட்டது இவரின் செல்லக்குழந்தை ஐஃபோன். அடுத்த தலைமுறைக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, A for Apple என சொல்லிவிட்டு, ஆப்பிள் பழத்திற்கு பதிலாக ஐஃபோன் எடுத்து காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆதாம் கடித்து முடித்து மிச்சம் வைத்த ஆப்பிளை வைத்துக்கொண்டு மைக்ரோசாப்டையும், கூகிளையும் ஒருவழி பண்ணிக்கொண்டிருக்கிறார் ஸ்டீவ். கவச குண்டலத்தோட பிறந்த கர்ணன் கதைமாதிரி இனிமேல் பிறக்கும் குழந்தைககள் காதில் ஆப்பிள் ஐபாடோடு பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. மனிதரின் ஆக்கத்தில் உருவாகும் ஒவ்வொரு பொருளும் அப்படி ஒரு ரீச். தோன்றின் புகழோடு தோன்றுக ….திருவள்ளுவர் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.
-------------------------------------------------------------------------------------
பிப்ரவரி-24
இடம்: போயஸ் கார்டன், சென்னை
அம்மாவின் பிறந்தநாள். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் நாளேடுகளை அலங்கரித்திருந்த பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை பார்க்கும்போது, பேசாமல் சினிமா வசனகர்த்தாக்களும், கவிஞர்களும் கொஞ்ச நாட்களுக்கு ஏதாவது ஒரு வட்டத்தையோ அல்லது மாவட்டத்தையோ தங்களின் மென்டராக பாவித்துக்கொண்டு பாடம் கற்றுக்கொள்வது நல்லது என தோன்றுகிறது. ரூம் போடாமலே என்னமாய் யோசிக்கிறார்கள். இந்த ரேஞ்சிற்கு யோசிக்கும் இவர்களை, தேர்தலின்போது (யோசிக்கவே தயங்கும்) பொதுமக்கள் எப்படி கவிழ்த்துவிடுகிறார்கள் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. இதே தேதியில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் அடுத்த மூலையில் அமர்ந்துகொண்டு தனது தொழில் ரீதியான போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி என யோசித்துக்கொண்டிருக்க, அம்மாவோ தேடி வருகின்ற இடைத்தேர்தல் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் கொடநாடுக்கு பறந்து விடுகிறார். பேசாமல் கொடநாட்டை அதிமுகவின் கோடைகால தலைமையகமாக அறிவித்துவிடலாம்….இவரின் இன்றைய நிலையில் கலைஞரோ அல்லது எம்ஜியாரோ இருந்திருந்தால் தங்களின் பிறந்தநாள் கொண்டாடத்தை பயன்படுத்தியே இந்நேரம் தொண்டர்களை உசுப்பேற்றி பென்னாகரத்திற்குள் அனுப்பி வைத்திருப்பார்கள். பதவியில் இருக்கும் காலங்களை விட பதவியில் இல்லாத நேரத்தில் மக்களிடம் நெருக்கமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஜெ.ஜெ.விற்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து அறிக்கைவிடுவதில் காட்டும் அதீத ஆர்வத்தையும் வேகத்தையும் இடைத்தேர்தல்களின் போது ரத்தத்தின் ரத்தங்களுக்கு நம்பிக்கையூட்டுவதிலும் காட்டினால் இரட்டை இலை கொஞ்சம் துளிர்விடும். இல்லையென்றால் அடுத்த பிறந்தநாளுக்குள் சில/பல கரைவேட்டிகள் கூடு விட்டு கூடு விட்டு பாய்ந்துவிடுவார்கள்….கவனிப்பாரா ஜெ.ஜெ.
-------------------------------------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment