Showing posts with label Bits N Bytes. Show all posts
Showing posts with label Bits N Bytes. Show all posts

Wednesday, May 9, 2012

நித்தி-யிஸம்-பவர்


முடி துறந்து சாமியார் ஆனவர்களை பற்றி படித்து படித்து போரடித்திருந்த வேளையில் மாடர்ன் டே சாமியார்கள் துறவை மறந்து லெளதீக வாழ்க்கைக்கு திரும்பி வருவதற்காக ஏகத்துக்கும் மெனக்கெடுவதை பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. மதுரை ஆதீனமாக “நித்தியை” நியமித்த ஒலி-ஒளியைப் பார்த்த போது சிறுவயதில் இராமாயணத் தொலைக்காட்சித் தொடரில் பார்த்த ராமர் பட்டாபிஷேக வைபவம் நினைவில் நுழைந்து சடாரென விலகியது. இப்பொழுது ஆதீனமாக இருப்பவரும் நித்தியும் ஒருவருக்கொருவர் கிரீடத்தை தங்கள் தலைகளில் மாற்றி மாற்றி வைத்து புளங்காகிதம் அடைவதை எல்லா தொலைக்காட்சியும் ஐபிஎல் கிரிக்கெட் மேட்சுக்கு இணையாக கவர் செய்தது காணக் கிடைக்காதது. கூடிய விரைவில் மக்கள் காதில் இவர்கள் வைக்கபோகும் பூவையும் அப்படியே படம் பிடிக்க நம்மூர் மீடியாக்காரர்கள் இதே போல தயாராக இருப்பார்கள் என நம்புகிறேன்.

மக்கள் மத்தியில் சாமியார்கள் சர்வலோக வலி நிவாரணி மாதிரி மாறிவிட்டார்கள், இல்லாவிட்டால் சர்வ சாதரணமாக ஒரு கோடி ரூபாயை ஆதீனத்திற்கு அள்ளித் தெளித்துவிட்டு இன்னும் பல கோடியை பிறகு தருவேன் என நித்தி பேசுவதை எல்லாம் மக்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலைக்கு நாடு சென்றிருக்காது. ஐந்துக்கும் பத்துக்கும் இப்படி கீ-போர்டை தட்டிக்கொண்டிருப்பதற்கு பதிலாக சுவாமி ஜில்பானாந்தா மாதிரி ஏதாவது செய்து பார்க்கலாமா என்பதைப் போன்ற விபரீத கேள்விகளையெல்லாம் சில நண்பர்கள் விளையாட்டாக கேட்பதைப் பார்த்தால் விரக்தியின் உச்சியின் இருப்பவன் எவனாவது நிஜமாலுமே காவியை கையில் எடுத்து களங்கப்படுத்திவிடுவானோ என அடிவயிற்றில் கிலி பிடிக்கிறது.

கடவுள் பெயரை சொல்லி எவன் எவ்வளவு கறுப்பு பணத்தை சேர்த்தாலும் வருமானத்துறை அதிகாரிகள் கண்ணை கட்டிக்கொள்வார்கள் போலத் தெரிகிறது. முற்றும் துறந்தவனுக்கு எதற்கு தங்கத்தில் கிரீடமும் கேளிக்கை விடுதியை மிஞ்சும் செட்டப்பில் மடங்களும் என்பது மண்டையை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. மூன்று வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவல பாதையில் மூன்றாம் ஜாமத்தில் கஞ்சாவை உறிஞ்சியபடி அமாவாசை கரும் இருளில் நண்பர்களுடன் பேசியபடியே வந்த பேர் தெரியாத சித்தர் பாடிய பட்டினத்தார் பாடல் இன்றைய சாமியார்களுக்கு சாலப் பொருத்தம்.

“பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின் திருவடிக்கண்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் கச்சியேகம்பனே”
=============================================================================================
ஆட்களை கடத்துவது நிச்சயமாக மாவோயிஸமும் இல்லை ஹீரோயிஸமும்  இல்லை என்பதை யாரவது ஒரு பக்கா கம்யூனிஸ்ட் தோழர், மாவோயிஸ்ட்டுகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் கூட்டத்திடம் சொல்லிவிடுவது நல்லது. எம்.எல்.ஏ, கலெக்டர் என இவர்கள் தொடர்ந்து மனிதர்களை கடத்துவதால் மார்க்ஸியம் மீதான தவறான இமேஜை தொடந்து உருவாக்கி கொண்டேயிருக்கிறார்கள். புரட்சி செய்பவனாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் சேகுவாரே-வின் டி-சர்ட்டை அணிந்து கொள்வதால் மட்டுமே பெரிய ஹீரோவாக மாறிவிடமுடியாது என்பதை யாராவது இவர்களுக்கு ஒதி விடுவது நலம்.

மாவோ-வும், இன்ன பிற கம்யூனிஸ்ட் பெருந்தலைகளும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவர்கள் போராட்டம் உழைக்கும் வர்க்கத்தை முன்னிறுத்தி மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய அதிரி புதிரிகள் வெறும் கப்பம் வசூலிப்பதற்காக அந்த கொள்கைகளை பயன்படுத்திக் கொள்வது சகிக்கவில்லை. இதற்கு பேசாமல் முதலாளித்துவத்தை தழுவிவிடலாம் அட்லீஸ்ட் பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். நாடோடி மன்னனில் எம்ஜியார் செய்த சாகஸகங்களையெல்லாம் கி.பி.2012 இல் செய்வேன் என இவர்கள் அடம்பிடிப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது அதுவும் நிஜத்தில். அப்படியே எதையாவது செய்தே தீருவேன் என அடம்பிடிப்பவர்கள் மக்களை நிஜமாகவே கொள்ளையடிப்பவர்களை கவனித்துக்கொண்டால் இந்தியாவின் 99.9% மக்கள் ஏன் என்று கூட கேட்கமாட்டார்கள். அதை விட்டுவிட்டு அமைதியாக தங்கள் பணியை செய்பவர்களையெல்லாம் சீண்டிக்கொண்டிருப்பதும் ஒன்றும் அறியாத கடைநிலை ஊழியர்களை சுட்டுக்கொல்வதும் மன்னிக்கவேமுடியாத குற்றம்.  

========================================================================================
காற்றாலை மூலமாக கிடைத்த/கிடைக்கும் அளவிற்கு அதிகமான மின்சாரத்தை சேமித்து வைக்க போதிய வசதிகள் இல்லை என்ற மின்சார வாரிய அறிக்கையினை சமீபத்தில் படித்தவுடன் தமிழ்நாட்டில் வெய்யிலில் அலையாமலே புத்தி பேதலித்தவனை போன்ற நிலையை உணர்ந்தேன். எப்பேர்ப்பட்ட அபாரமான புத்திசாலிகள்…நினைத்தாலே புல்லரிக்கிறது. மின்சாரத்துறை அமைச்சர் எதுக்கும் அம்மா கண்களில் படாமல் இருந்துகொள்வது நலம் இல்லையென்றால் ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில்  அம்மா ராஜ்பவனுக்கு கடிதம் அனுப்பிவிடுவார்கள். அப்புறம் ஹை-வோல்டேஜை தொடாமலே ஷாக் அடித்தது போன்ற ஒரு அனுபவம் கிட்டிவிடும்.

ஒரு பக்கம் பற்றாக்குறை இன்னொரு பக்கம், அள்ளி அள்ளி கொடுத்தாலும் அதை ஒழுங்காக உபயோக படுத்திக் கொள்ளத் தெரியாத கூட்டம். தமிழ்நாட்டு மக்களை சனி பகவான் ஒரு கை பார்க்காமல் போகமாட்டர் போலத் தெரிகிறது. ஒட்டுமொத்த ஜனங்களும் திருநள்ளாறு போய் வணங்கி நின்றாலும் கருணையே காட்டமாட்டார் என நம்புவோமாக. மழை பெய்தால் அதை வீணாக கடலில் கலக்கவிட்டு விட்டு மறுநாளே தண்ணீர் பஞ்சம் என தலையில் கைவைத்துக் கொள்வது, உபரியாக மின்சாரத்தை உற்பத்தி செய்தால் Capacitor Capacity தீர்ந்து போச்சு என பொறுப்பில்லாமல் பேசுவது…என்னப்பா நடக்குது…கத்திரி வெயில் காய்ச்சி எடுக்குது அது போதாதா இன்னும் நீங்க வேற இப்படி தனியா போட்டு வறுத்தெடுக்கனுமா…...ஓட்டு போட்ட மக்களுக்கு இப்படியெல்லாம் வேட்டு வைக்கனுமா..கொஞ்சம் யோசிச்சு செய்யுங்கப்பு.

Pre-Planning, Proactive Measure போன்ற வார்த்தைகள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லை என்பதை நம்மூர் மின்சாரத்துறை ஊழியர்களிடமும் அவர்களின் அமைச்சரிடமும் எடுத்து புரியும்படியாக சொல்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் 24X7 மின்சாரவசதி கொண்ட ஏதாவது ஒரு மேற்கத்திய தேசத்தில் பிறப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகம். மனிதனாக பிறக்காவிட்டாலும் அவர்கள் வீட்டு பூனைக்குட்டியாகவோ அல்லது நாய்க்குட்டியாகவோ பிறப்பது சர்வ நிச்சயம்.

காற்றாலைகளில் இருந்து வரும் சிறிய அளவிலான மின்சாரத்தையே சேமித்து வைக்க வழிக்க தெரியாமல் திணறுபவர்கள் கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் வழங்கவேண்டும் என கேட்பது புரியாத லாஜிக்காக இருக்கிறது. அப்படியே முழுதாக வழங்கினாலும் இதே டயலாக்கை மீண்டும் சொல்லிவிடுவார்களோ என நினைத்தால் இப்போதே இருட்டிக்கொண்டு வருகிறது.


Sunday, January 8, 2012

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

இந்திய தேர்தல் ஆணையம் சில நேரங்களில் ரொம்ப சில்லியாக நடந்து கொள்கிறது. உ.பி.யில் யானை சிலைகளையும் அதன் காரணகர்த்தாவின் சிலைகளையும் துணியால் மூடினால் தான் ஆச்சு என இவர்கள் அடம்பிடிப்பது கொஞ்சம் ஒவராக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள சிலைகள் ஏதாவது ஒரு சிக்னலை அல்லது சிக்கலை மக்களுக்கு கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நான் பார்த்த எல்லா எம்.ஜி.ஆர் சிலைகளும் இரட்டை விரலை காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. நேருவும் இந்திராவும் கையை உயர்த்தியபடி நிற்கும் சிலைகள் கூட காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை மறைமுகமாக மக்களுக்கு காட்டிக்கொண்டேதான் இருக்கின்றன.

இதே போக்கில் போனால் தேர்தல் முடியும்வரை உ.பி.யில் கோயில் யானைகளைகூட மக்கள் கண்ணில் படாமல் மறைத்து வைக்கும்படி சொல்வார்கள் போலத் தெரிகிறது. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. மூடி மறைக்கும்போதுதான் மனிதனுக்கு ஒரு விஷயத்தின் மீது அதிகமான ஈர்ப்பு ஏற்படுகிறது என்ற அடிப்படை லாஜிக்கூட தெரியாமல் என்ன சார் நீங்க….ஒரு விதத்துல பார்த்தா இது அந்த கட்சிக்கு ஓசி-யில கிடைக்குற விளம்பரம் தான். ஒருவேளை இந்த விதியை நாளை தமிழத்திற்குள் கொண்டுவந்தால் அதிகாலை சூரியனையும், மரத்தில் உள்ள அத்தனை இரட்டை இலைகளையும் திரை போட்டு மறைக்கவேண்டும் என சொல்லி விடுவார்களோ என பயமாய் இருக்கிறது. சோலார் சிஸ்டத்தை மொட்டை மாடியில் வைத்திருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரணம் செய்பவர்கள் கொஞ்சம் Proactive ஆக இருந்துகொள்வது நலம்.

---------------------------------------------------------------------------------

புயல் சேதங்களை மத்திய குழு பார்வையிட்டு அறிக்கை தந்தபின் நிவாரணம் வழங்கப்படும் என்ற செய்தியை படித்தபின் உடம்பெல்லாம் புல்லரித்துப்போனது. புயல் வருவதைப்பற்றி ஒரு வாரமாக எல்லா ஊடகங்களும் கூவிக் கொண்டிருக்கும்போதே மத்திய குழுவை அந்த பகுதிக்கு முன்னெச்சரிக்கையாக அனுப்பி புயல் கரையை கடந்த உடனே சேதங்களை மதிப்பிட சொல்லியிருக்கலாம். எல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்து இப்படி ஒரு அறிக்கையை விடுவது கேனத்தனமாக இருக்கிறது. மத்திய குழு வரும்வரை எதையும் சீர்செய்யாமல் இருக்கும்படி சொல்கிறார்களா என்பது தெரியவில்லை.

வருமுன் காப்போம் போன்ற நீதிக்கதைகளை எல்லாம் இனிமேல் பாடப்புத்தகத்தில் தயவு செய்து அச்சடிக்காதீங்கப்பா….அதையெல்லாம் படிச்சிட்டு சின்ன குழந்தைங்ககூட நம்மள பார்த்து கேவலமா சிரிப்பாங்க… புயல் வர்ற வரைக்கும் அந்த செய்தியை வச்சி கல்லா கட்டுன நம்மூர் மீடியாக்காரர்கள் புயலுக்கு பிறகு அங்க நடக்குற எந்த மேட்டரையும் கண்டுக்காம கேமராவா தூக்கிகிட்டு ஆஸ்திரேலியா பக்கம் போய்ட்டாங்க…அங்க நம்மள பிரிச்சி மேய்ஞ்சிக்கிட்டு இருக்காங்க….அடுத்த மேட்டர் சிக்குற வரைக்கும் வேற வழியில்ல அததான் காட்டியாகனும்…இல்லைன்னா கல்லா காலியாயிரும்…..நல்லாயிருங்கடே.

----------------------------------------------------------------------------------

நம்ம கிரிக்கெட் டீம் இனிமே வெளியே போய் ஜெயிக்கனும்னா அதுக்கு ஒரே வழி நம்மூர் Pitch Curator ஆளுங்கள வச்சி நாம விளையாடுற எல்லா பிட்சையும் ரெடி பண்ணனும் இல்லைன்னா எல்லா மேட்சையும் நம்மூர்லேயே நடத்திக்கனும்…இது ரெண்டுல ஒன்னு நடந்தாதான் இனிமே டெஸ்ட் மேட்ச் எல்லாம் ஜெயிக்கமுடியும்னு தோணுது. ஆஸ்திரேலியாவில ஏறக்குறைய எல்லா பிட்சுமே ரொம்ப quick and bouncy. அங்க seamers பப்பு மட்டும்தான் வேகும். முட்டு சந்துல கிரிக்கெட் ஆடுற கெஜாவுக்கு கூட இந்த டெக்னிக்கல் மேட்டர் தெரியும்…ஆனா நம்ம ஆளுங்க இதையெல்லாம் கண்டுக்குற மாதிரியே தெரியல.

நம்மூர்ல எல்லாமே flat pitch..பத்து ஓவர் போட்டு முடிச்சாலே பிட்ச் படுத்துக்கும், அதுக்கப்புறம் என்னதான் லொங்கு லொங்குன்னு போட்டாலும் பந்து தரைய விட்டு எழுந்துக்கவே ரொம்ப கஷ்டப்படும்…இந்த மாதிரி பிட்ச்ல மால்கம் மார்ஷல் இல்ல அவங்க தாத்தா வந்து போட்டாலும் ஒரு கட்டத்துக்கு மேல நம்ம ஆளுங்க ஈசியா சமாளிச்சிடுவாங்க. ஆனா ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா பக்கம் போனா பந்து கடைசி நாள் அன்னைக்குகூட தலைக்கு வருது…எவ்ளோ நேரத்துக்குத்தான் குனிஞ்சி நிமிர்ந்து எஸ்கேப் ஆகிக்கிட்டே இருக்கிறது….அதான் சீக்கிரமா திரும்பி வந்துடறாங்க. இது தெரிஞ்சும் அண்ணண் சுனில் கவாஸ்கர் புத்திசாலித்தனமா பேசுறதா நினைச்சிக்கிட்டு எதையோ பேசிகிட்டு இருக்காரு. போதாத குறைக்கு ஒவருக்கு எத்தனை பந்துன்னு தெரியாத மீடியா குழந்தைங்க வேற அவர மாத்துங்க இவர மாத்துங்கன்னு சொல்லி கடுப்பேத்திகிட்டு இருக்காங்க

ஜென்டில்மேன், இப்ப இருக்குற ஆளுங்கல்ல டிராவிட், தெண்டுல்கர், லஷ்மண் மாதிரி ஆளுங்களுக்கு தான் இந்த மாதிரி பிட்ச் பத்தி கொஞ்சம் தெரியும்…அவங்க ட்ரவுசரே அங்க அவுந்து நிக்குது. So புது ஆளுங்களுக்கு கொஞ்சம் டைம் ஆகும்….அதுவரைக்கும் அவங்கள ஆட விட்டுதான் பழகனும்…..வேற வழியில்ல…..இல்லைன்னா எல்லா டூருக்கும் புதுசு புதுசாதான் ஆள அனுப்பனும். இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு நினனச்சா, வெளிநாட்டுல இருந்து ஒரு நல்ல Pitch Curator கொண்டு வந்து இங்க மைதானத்துல வேலையை பண்ணவிட்டு அதுக்கப்புறம் நம்ம Boys-ஐ ஒழுங்கா இங்க கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணச் சொன்னா மேட்டர் சால்வ் ஆகிடும்…அப்புறம் வெளிநாட்டு கோட்ச் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்ல. .இதச் சொன்னா நம்மள பைத்தியகாரன்பாங்க. பெர்த் பிட்ச் Curator கொஞ்சம் கருணை காட்டுனா அடுத்த டெஸ்ட்ல தப்பிச்சிக்கலாம்…இல்லைன்னா girls touching hand problem the same harry potter also deal the same problem, this sapter அப்படின்னு ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டிய நிலைமைக்கு போய்டுவாரு நம்ம கேப்டன் தோணி அண்ணண்.

Friday, December 23, 2011

ஆயிரத்தில் ஒருத்தி – Irom Sharmila

Flash Mob….இதுதான் இப்ப இந்தியாவில் ஹாட் டாபிக். அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பார்த்து காப்பி அடிச்ச சரக்குதான் என்றாலும் மீடியாக்களின் ஆசி இருப்பதாலும், நம்மூர் மக்களுக்கு இது கொஞ்சம் புதுசு என்பதாலும் படம் கொஞ்சம் ஓடுது. சீசனுக்கு சீசன் மாறும் சீதோஷ்ணத்தைப் போல ஏதாவது ஒரு விஷயம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நம்மூர் மீடியாக்களுக்கு கிடைத்துவிடுகிறது. எதுவுமே கிடைக்காத போது அன்னா ஹசாரே, ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் போன்ற சமாச்சாரங்கள் அந்த இடத்தை நிரப்பி கணக்கை tally செய்து விடுகின்றன.

சராசரி இந்தியனின் மூளை ஒரு மாதிரி Hypnotize செய்யப்பட்டு நையா பைசாவிற்கு உபயோகமில்லாத செய்தியை மட்டுமே அவனோ அல்லது அவளோ உள்வாங்கும் அளவிற்கு சுருக்கப்பட்டுவிட்டது. ஏதாவது ஒரு நல்ல விஷயம் உண்மையாகவே நடந்துவிட்டதை/நடந்து கொண்டிருப்பதை நண்பர்களிடம் பகிரும்போது அவர்கள் நம்மை ஏதோ புத்தி பேதலித்தவனைப் பார்ப்பது போல சந்தேகத்துடன் பார்ப்பது சில சமயங்களில் கொஞ்சம் திகைப்பைக் கொடுக்கிறது.

இந்த மனநிலையின் உச்சகட்டம்தான், இப்போதெல்லாம் யாரவது இரண்டு நாளுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்தால் கூட அதை நம்புவதற்கு மனம் மறுக்கிறது. அன்னா ஹசாரே போன்றவர்களின் இரண்டு நாள் உண்ணாவிரதத்தை மிகப்பெரிய நிகழ்வாக சித்தரிக்கும் மீடியாக்களுக்கு பத்து வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு திட ஆகாரத்தையும் எடுத்துக்கொள்ளாமல், குடிநீரை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு தனது மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஐரோம் ஷர்மிளா போன்றவர்கள் முக்கியமற்றவர்களாக போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


ஒருவேளை மீடியாக்கள் ஐரோம் ஷர்மிளாவைப் பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு சென்றால், என்னைப் போலவே மீடியாக்காரர்களையும் நம்மூர் மக்கள் ஒருவித சந்தேகத்துடன் பார்த்து விடுவார்களோ என பயமாய் இருக்கிறது. சசிகலாவை ஜெ. ஏன் நீக்கினார், சில்க் ஸ்மிதாவின் சுண்டி இழுக்கும் கண்கள் வித்யா பாலனிடம் இல்லாதது மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் போன்ற அதிமுக்கிய செய்திகளை அலசி ஆராயும் நம்மூர் நிரூபர்கள் மணிப்பூர் பக்கம் ஒரு நடை போய் வந்தால் மக்களுக்கு கொஞ்சம் உருப்படியான செய்தியை கொடுக்கலாம். சர்க்குலேஷனுக்கு அந்த சர்வேசனே கியாரண்டி கொடுப்பார்.

தீயாக உள்ளே தெளிவுற நோக்கினால் மாயாது பின்னை உடம்பு…வழக்கத்திற்கு மாறான செய்திகளை காணும் போதெல்லாம் மூளையின் செல்களில் எங்கேயோ ஒரு மூலையில் உறைந்துக்கிடக்கும் இம்மாதிரியான விவகாரமான வரிகள் மேலெழும்பி விடுகின்றன. ஐரோம் ஷர்மிளாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக படிக்க ஆரம்பித்ததில் பல விஷயங்கள் ஆச்சரியத்தையும், ஆதங்கத்தையும், அயர்ச்சியையும் கொடுத்துக் கொண்டேயிருந்தன. பத்து வருடங்களுக்கு மேலாக போராடிய பின்னரும் இன்னமும் உடல் உறுதியுடனும் மன உறுதியுடனும் இருக்கிறார். இவரைப் போன்றவர்களை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருக்கும் நம்மூர் மீடியாக்களை இனி முடிந்த வரை தவிர்த்துவிடுவது என தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டேன்.

ஒரு சராசரி இந்தியப் பெண் தன் இருபத்தெட்டு வயதில் எதையெல்லாம் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டாளோ அதையெல்லாம் இவர் செய்திருப்பது, தொடர்ந்து செய்து கொண்டிருப்பது மனதை தொடுகிறது. Why dis kolaveri-க்காக You Tube-ஐ துழாவிக் கொண்டிருப்பவர்கள், அப்படியே கொஞ்சம் விக்கிபீடியா பக்கமாக சென்று ஐரோம் ஷர்மிளாவைப் பற்றியும் படித்துவிடுவது நலம். இணணயத்தில் நிறைய பேர் நிறைவாகவே எழுதி இருக்கிறார்கள் இவரைப்பற்றி.

நம்மூர் தினத்தந்தியில் சிந்துபாத் கதையைப்போல இவரைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் ஏதாவது ஒரு செய்தியைப் போட்டால் சி.பா. ஆதித்தனாரின் ஆவி அந்த நிறுவனத்தை நடத்துபவர்களை ஆசிர்வதிக்கும். புஃல் ப்ளேட் சிக்கன் பிரியாணியை அடித்துவிட்டு உண்ணாவிரதம் இருக்கும் நபர்களை கட்டம் கட்டமாக கட்டி செய்தியை போடும் நல்ல உள்ளங்கள் இம்மாதிரியான நபர்களைப் பற்றிய செய்திகளை எங்கேயாவது இருந்து உருவி போட்டாலும் பாராட்டலாம்.

லோக்கல் குமுதம், குங்குமம் போன்றவர்கள் நடுப்பக்கத்தில் எந்த நடிகையை போடுவது என்ற மனக்குழப்பத்தை கொஞ்ச நாளைக்கு தவிர்த்துவிட்டு இம்மாதிரியான உருப்படியான ஆட்களின் செய்தியை வெளியிட்டால் சமீபத்தில் இடம் பெயர்ந்த சனி பகவானின் ஆசி இவர்களுக்கு என்றைக்குமே கிடைத்துக் கொண்டிருக்கும்.

Monday, November 7, 2011

அன்னா (ஹசாரே) கோர்னிக்கோவ்

சமீப காலங்களில் இந்தியாவின் எந்த மீடியாவை எட்டிப் பார்த்தாலும் அன்னா&கோ-வினரின் வாடை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. மீடியாக்களுக்கு அவர்கள் தேவையா அல்லது அவர்களுக்கு மீடியா தேவையா என்பது புரியவில்லை. போதாத குறைக்கு அண்ணாச்சி திக்விஜய்சிங் வேறு தினந்தோறும் ஏதாவது ஒரு தொலைகாட்சி சேனலில் தோன்றி அன்னா&கோ-வினரை போட்டுத்தாக்கி தானும் ரவுடிதான் என மக்கள் மனதில் திகிலை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

நிகழ்காலத்தில் இந்தியாவில் பிரபலமாவதற்கு பெரிய அறிவாளியாகவோ அல்லது முட்டாளாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை ஊழலுக்கு எதிரான பேர்வழியாக காட்டிக்கொள்ள வேண்டும், ஒரு ஆயிரம் பேரை எப்படியாவது உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணைத்துவிட்டு, தடாலடியாக ஒரு உண்ணாவிரதத்தை நடத்தினால் போதும். மது இல்லாத மலரைக்கூட முகரத் துடிக்கும் காய்ந்துப்போன வண்டைப்போல மீடியாக்கள் எல்லா பக்கத்திலும் உங்களை செய்திகளில் போட்டு தங்கள் தினத்தை ஒப்பேற்றிவிடுவார்கள். உலகெங்கிலும் உள்ள பிரபல சேனல்களில் வரும் செய்திகளை Ctrl+c & Ctrl+v செய்து கல்லா கட்டிக்கொண்டிருக்கும் பித்துக்குளி ஆசாமிகளுக்கு யார் செய்தி கொடுத்தாலும் ஒ.கே தான்.

இன்னும் ஒரு படி கொஞ்சம் மேலே போக விரும்பினால், சென்னையிலோ, டெல்லியிலோ ஒரு பத்து யுவதிகளை கையில் மெழுவர்த்தி ஏந்தி நின்று போஸ் கொடுக்கும்படி செய்துவிட்டால் போதும்…உங்கள் பிரபல பயணம் டாப்கியரில் செல்ல ஆரம்பித்துவிடும். இந்த Candle light vigil, Candle light dinner போன்ற வஸ்த்துக்களையெல்லாம் ஏதோ ஒரு வீணாய்ப்போன NRI ஆசாமி எங்கிருந்தோ தொத்திக் கொண்டு வந்து இந்தியாவில் பரப்பி இருக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் அறிந்த வரைக்கும் ஐந்து ஆண்டுக்கு முன்னால் கூட இந்த மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது போன்ற வகையறா எல்லாம் இந்தியாவில் புழக்கத்திற்கே வரவில்லை. கேரளாவில் காம்ரேடுகள் இரவு நேர போராட்டங்களின் போது தீப்பந்தத்தை கையில் ஏந்தி செல்வதை சில நேரங்களில் பார்த்ததோடு சரி….இந்தியா ஒளிர்கிறது என்பதை மக்கள் தப்பாக புரிந்துகொண்டுவிட்டார்கள் போலத் தெரிகிறது. என்ன கொடுமை சார் இது.

இவர்கள் போட்ட கூச்சலில் இப்போதெல்லாம் யாராவது Foot Ball, Volley Ball, கோபால் என எது சொன்னாலும் என் காதில் லோக்பால் என்றே கேட்கிறது. தங்களால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை உடனடியாக சட்டமாக அமல்படுத்தாவிட்டால் உன் பேச்சு க்கா, போ உன்கிட்டே பேசமாட்டேன்…என இவர்கள் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பது லொள்ளு சபா காமெடியை விட அதிகமாக சிரிப்பை வரவழைக்கிறது.. போதாத குறைக்கு காங்கிரஸ் மேல் உள்ள காண்டில் இவர்கள் இன்னொரு ஊழல் அரசியல்வாதியை மறைமுகமாக ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய முனைவது லூசுத்தனமாக இருக்கிறது. இவர்களின் நோக்கம் லோக்பாலை வலியுறுத்துவது மட்டுமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது Hidden Agenda இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போவாதாக சொல்பவர்கள் அந்த கட்சிக்கு மாற்றாக எந்த வேட்பாளரை ஆதரிக்கிறார்கள் என்பதை தெளிவாக்க வேண்டும். நம்மூரில் தேர்தல்களில் நடுநிலைமை எல்லாம் வகிக்க முடியாது. எந்த கட்சியும் யோக்கியர்களை நிறுத்தாதபோது காங்கிரஸை மட்டுமே இவர்கள் எதிர்ப்பது சந்தேகத்தை கிளப்புகிறது. திருடர்களில் சூப்பர் திருடன், சுமாரான திருடன் என பாகுபாடு பார்ப்பதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதைத்தான் இப்பொழுது முழு மூச்சாக இவர்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதையும் Justify செய்ய ஒரு சின்ன அறிவாளிகளின் கூட்டம் இவர்கள் பின்னால் இருக்கிறது.

இவர்கள் கொண்டுவர விரும்பும் சட்டத்தை எந்த தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும், எந்த அமைச்சர் தங்களிடம் பேசவேண்டும்/பேச கூடாது, தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டை யார் கூறினாலும் அடுத்த நிமிடமே இது ஒரு சதிவேலை என கூறி ஜகா வாங்குவது என பல பரிமாண வளர்ச்சியை அடைந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி அரசியல்வாதிகளுக்கு இணையான வேகத்துடன் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவியில் நீடிக்ககூடாது என இவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு யாரிடம் போய் லோக்பாலை நிறைவேற்ற கேட்பார்கள் எனத் தெரியவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படையே தெரியாமல் சும்மானாச்சும் வெறும் செய்திகளில் இந்த மாதிரி முட்டாள்தனமாக எதையாவது உளறிக்கொட்டிக் கொண்டிருந்தால் இருக்கும் பத்து பேரும் மெல்ல கழண்டு கொள்வார்கள்.

1.2 பில்லியன் மக்கள் தொகை கொண்ட தேசத்தில் ஒரு சில ஆயிரம் பேரை திரட்டிவிட்டதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம், கேட்கலாம் என்றால் நம்மூர் கோடம்பாக்க சுனாமி நமீதா கூட நாளையே அதைவிட ஒரு பெரிய கூட்டத்தை கூட்டிக் காட்டுவார். அப்புறம் அவர் வைக்கும் ஏதாவது ஒரு கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என மீடியாக்கள் அலற ஆரம்பித்துவிடும். இவர்கள் செய்யும் லீலைகளுக்கு மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை வேறு துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள்….காந்தி இருந்திருந்தால் தலையில் அடித்துக்கொண்டிருப்பார். இவர்களுக்கு உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையிருந்தால் முதலில் மக்களை திருத்துவதற்கு வழியை தேடியிருக்கவேண்டும் அதைவிட்டு விட்டு ஒரு சின்ன சட்டத்தின் மூலம் ஊழலை ஒழித்துவிடலாம் என நினைப்பது அறியாமையின் உச்சகட்டம். ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு சட்டத்தையும் எவனும் முழுதாக மதிக்காதபோது இந்த லோக்பால் பில் இன்னொரு சட்டமாக அரசியல் அமைப்பு சாசனத்தில் பதியப்படுவதை தவிர வேறு எந்த பெரிய மாற்றத்தையும் கண்டிப்பாக ஏற்படுத்தப்போவதில்லை. வாத்தியார் பாடியது போல “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”…அவ்ளோதான்.

----------------------------------------------------------------------------------



ஸ்டெபியும், மோனிகா செலஸும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிறுக்காவிட்டால் அவர்களை இன்றைய தேதிக்கு யாருக்குமே தெரிந்திருக்காது. ஆனால் எந்த ஒரு பெரிய பட்டத்தையும் வெல்லாமலே சிலரை அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது அல்லது பிடித்துவிடுகிறது. அம்மணி அன்னா கோர்னிக்கோவ் சந்தேகமே இல்லாமல் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். கேப்ரியாலா சபாடினிக்கு பிறகு வறண்டு போயிருந்த டென்னிஸ் உலகத்தை மீட்டெடுத்த பெருமை பேரிளம்பெண் அன்னா கோர்னிக்கோவையே சேரும்.

சில வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு விடலைப்பையன் சின்ன வைரஸ் ப்ரோகிராமை எழுதி நெட்டில் விட்டுவிட்டான். அந்த ஆசாமி செய்த ஒரே நல்ல விஷயம் அந்த ப்ரோகிராமிற்கு ஒரு நல்ல பெயரை வைத்தது தான்…அதன் பெயர் அன்னா கோர்னிக்கோவ் :-)

அன்னாவை பற்றி ஏன் இதுவரை எழுதவில்லை என்று கேட்ட நண்பர் எந்த அன்னா என்று குறிப்பிட்டு சொல்ல மறந்ததின் விளைவுதான் மேலே உள்ள மேட்டருக்கு மூல காரணம். மற்றபடி எனக்கு எப்போதும் பிடித்த டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ மட்டுமே.

Sunday, December 26, 2010

Bits & Bytes

தமிழகத்தில் ஒரு பேருந்து ஓட்டுநருக்கு இருக்கும் செல்வாக்கு கூட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இல்லாமல் இருப்பது காலத்தின் கோலம். சில நாட்களுக்கு முன்னதாக ஏதோ ஒரு அரசு விழாவில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரை வழிமறித்து , போஸ்டரில் தங்கள் கட்சியினரின் பேரை ஏன் போடவில்லை எனக் கேட்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டராழ்வார்கள் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் போஸ்டர் அடிப்பதற்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவருடன் மோதலில் ஈடுபட்ட சில பல பெயர்களையும் அவர்களின் கட்சிப் பதவி டைட்டிலையும் (!) படித்தபோது இவர்களில் யாருக்காவது குறைந்தபட்சம் IAS என்பதற்கு Expanded Meaning தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் வலுத்துவிட்டது. போதாத குறைக்கு யாரோ ஒரு கதர்வேட்டி மைனர் ஆட்சித்தலைவரை உடனடியாக மாற்றவேண்டும் என குரலை உயர்த்தியிருக்கிறார். அண்ணே இது வட்டச் செயலாளர் பதவி இல்லைன்னே. உயிரை கொடுத்து படிச்சாதான் Preliminary Exam-யையே Clear பண்ண முடியும். ஆட்சித்தலைவர் பதவியெல்லாம் வேட்டிய மாத்திக் கட்டிக்கிட்டா உடனே கொடுக்குற பதவி இல்லைங்கன்னா. அதுக்கெல்லாம் நிறைய உழைக்கனும். காமராஜர் ஆட்சியெல்லாம் அமைக்க போறதா அடிக்கடி ஏதோ சொல்லுறீங்க, அவரு ஆட்சியில் அதிகாரிகள எவ்வளவு கண்ணியத்தோட நடத்துனாருன்னு கொஞ்சம் பழைய பேப்பரையெல்லாம் படிச்சு தெரிஞ்சுகிட்டிங்கின்னா நல்லது. நீங்க ஆட்சித்தலைவரை வழிமறிச்சு கோதாவுல இறங்குனா கலவரத்த கட்டுப்படுத்த அவருக்கு முழு அதிகாரமும் இருக்குங்குற Basic Knowledge-யாவது யாராவது படிச்ச புள்ளகிட்ட கேட்டு தெரிஞ்சிகிடுங்கன்னா. துப்பாக்கி சூட்டில் தொடங்கி ஊரடங்கு உத்தரவு வரை எல்லாமே ஆட்சித்தலைவரின் அதிகாரத்திற்குட்பட்டது என்ற மினிமம் அறிவையாவது இனிமேல் கொஞ்சம் டெவலப் பண்ணிக்கோங்கன்னா, இல்லைன்னா சில்லரை/பிரியாணி/டாஸ்மாக் வஸ்து என எதைக் கொடுத்தாலும் ஓட்டு போடுறதுக்கு மக்கள் நிறையவே யோசிப்பாங்க……யாரோட கவனத்தையோ கவர்வதற்காக நீங்கள் போடும் இந்த சில்லி ஆட்டத்தையெல்லாம் மக்களோடு சேர்ந்து அந்த அருணாச்சலேஸ்வரரும் பார்த்துக்கிட்டு இருக்காரு….கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க தலைவா…..தேர்தல் வேற நெருங்கிகிட்டே இருக்கு :-)
----------------------------------------------------------------------------------

Social Responsibility இந்த வார்த்தையை தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை பேரையும் தினமும் நூறு முறை எழுத சொல்லி ஆர்டர் போட்டே ஆகவேண்டும். குறிப்பாக பெரிய நகரங்களில் வசிக்கும் படித்தவர்களுக்கு இதை கட்டாயமாக்கியே தீரவேண்டும். ஒவ்வொரு முறை தண்ணீர் பிரச்சனை தலையெடுக்கும்போதும் பழியை இயற்கையின் மீதும் ஆள்பவர்களின் மீதும் (தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மழையே வாராது போன்ற டுபாக்கூர் பிரச்சாரங்கள்) போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளும் நம்மவர்கள், மூன்று வாரங்களுக்கு மேலாக கொட்டித்தீர்த்த மழை நீரை சேகரிப்பதற்கு எத்தனை தூரம் மெனக்கெட்டார்கள் என்று தெரியவில்லை. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை உயர்த்தவேண்டும் என்பதை சொல்வதற்கு ஜெயலலிதாவோ, கருணாநிதியோ தேவை இல்லை. கொஞ்சம் Common Sense இருந்தால் போதும். கிடைக்கும் மழைநீரை எல்லாம் சேமிக்காமல் அலட்சியம் செய்துவிட்டு ஆறுமாதம் கழித்து ஒப்பாரி வைப்பது என்பது ஏறக்குறைய Routine Procedure ஆகவே மாறிவிட்டது. முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் மழைநீர் சேகரிப்பை மிகவும் Aggressive ஆக அவர்களின் அரசாங்கம் செயல்படுத்திய விதம் கட்சி பேதமின்றி பாரட்டுக்குறிய விஷயம். எல்லா வீடுகளிலும் கட்டாயப்படுத்தி இதை செய்ய வைத்ததற்காகவே எழுந்து நின்று கை தட்டலாம். இன்னொருபுறம் மழைநீர் சேகரிப்பு என்ற அடிப்படை விஷயத்தைக்கூட அரசாங்கம் கட்டாயபடுத்திய பின்னரே செய்வேன் என மக்கள் அடம்பிடிப்பது மிகவும் மோசமான Democracy. இருபதாம் நூற்றாண்டின் விதியை தீர்மானித்தது பெட்ரோல். இருபத்தொன்றாவது நூற்றாண்டை தீர்மானிக்கப்போவது யுரேனியமோ அல்லது புளுட்டோனியமோ அல்ல..நம்ம உபேந்திராவின் H2O தான். சீக்கிரமாக விழித்துக்கொண்டால் அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் நல்ல குடிநீரை வழங்கமுடியும்..இல்லையென்றால் அடிதடி நிச்சயம்.
----------------------------------------------------------------------------------

சென்ற முறை ஊருக்கு சென்றிருந்த போது சில இடங்களில் கீழே உள்ள வாசகத்தை காண முடிந்தது. “இந்த கட்டிடம் ---------- தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.------------------MLA அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது”. அந்த கட்டிடங்களை கட்டுவதற்காக செலவான தொகையையும் குறிப்பிட்டிருந்தார்கள். கட்டப்பட்டிருந்த கட்டடத்தையும் தொகையையும் பார்த்தபோது எனது காதை நானே ஒரு முறை தடவி பார்த்து சமாதானம் அடைந்துக்கொண்டேன். அடிப்படையில் சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களின் வரிப்பணத்திலிருந்தே வழங்கப்படுகிறது. விஷயம் இப்படியிருக்க, தொகுதி உறுப்பினர் ஏதோ தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து செலவழித்தது போல மார்க்கெட்டிங் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் மக்கள் வரி பணத்தைக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிவிப்பு பலகைகளில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருப்பார்கள், “இந்த பணிகள் அனைத்தும் உங்கள் வரிப்பணத்தில் இருந்தே செயல்படுத்தப்படுகின்றன” என பட்டவர்த்தனமாக எழுதி வைத்து விட்டுதான் கையில் மண்வெட்டியையே எடுப்பார்கள். நம்மூரிலும் இப்படி செய்தால், நேர்மையாக வரி கட்டும் மக்கள் கொஞ்சம் சந்தோஷப்படுவார்கள். கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்துக்கொள்வார்கள். எல்லாவற்றையும் அரசாங்கமே செய்கிறது என்ற மாயையை உருவாக்கிவிட்டதால்தான் சாமான்ய மனிதன் எந்த அக்கறையும் இல்லாமல் நடந்துக்கொள்கிறான். இனிமேலாவது நம்மூரில் இம்மாதிரியான போர்டுகள் வைக்கும்போது மக்களின் Contribution-ஐ முன்னிலைப்படுத்தினால் நாடு கொஞ்சம் செழிக்கும். தஞ்சாவூரில் நஞ்சையும் புஞ்ஜையும் நாலு போகம் நல்லபடியாக விளையும்.
----------------------------------------------------------------------------------

நீண்ட நாட்களாக குடைந்துக்கொண்டிருக்கும் கேள்வி…இதுவரை இந்தியாவில் நடைபெற்ற ஊழல் வழக்குகளில், இழந்த பணத்தில் அட்லீஸ்ட் 5% Recover செய்யப்பட்டிருக்கிறதா என்று…..தனியார் நிறுவனங்களிலும் அரசாங்களிலும் பணிபுரியும் ஊழியர்களிடம் சம்பளத்தை தருவதற்கு முன்பாகவே வரியை வசூல் செய்யும் நேர்மை தவறாத அரசுகள், இதுவரை எத்தனை ஊழல்களில் பணத்தை திரும்ப வசூல் செய்து அரசு Treasury இல் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யாராவது விஷயம் தெரிந்த புண்ணியவான் RTI போட்டால் மக்களுக்கு கொஞ்சம் குழப்பம் தீரும். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு ஊழல் நடைபெறும் போது அரசாங்கத்தின் அத்தனை இயந்திரமும் முடுக்கி விடப்பட்டு விசாரணைக்காக மட்டுமே கோடிகளில் செலவழிப்பது என்பது Fashion ஆக மாறிவிட்டது. End Result மட்டும் இதுவரை மக்கள் முன் வைக்கப்படாமல் இருப்பது அரசாங்களுக்கு Shame, Shame, Puppy, Shame. All the Monkeys know your name. ஊழல் பணத்தில் ஒரு நையா பைசாவை கூட மீட்டுக்கொண்டு வரமுடியவில்லை என்றால் அதற்கெதற்கு இத்தனை பில்டப் கொடுக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை. பார்லிமெண்ட் கேண்டினில் Subsidy Rate இல் கிடைக்கும் பஜ்ஜியை சாப்பிட்டு விட்டு தூங்கிவழியும் மக்கள் பிரதிநிதிகள் ஊழல் என யாரோ கூவியவுடன் பார்லிமெண்டிற்கே வாராமல் கட் அடித்துவிட்டு வெளியில் நின்று கொஞ்சநேரம் கூவிவிட்டு சிக்கன் பிரியாணி சாப்பிட வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். பதினாலு வருஷத்துக்கு முன்னால் சுக்ராம் a.k.a பண்டிட்ஜி என்ற தில்லாலங்கடி மினிஸ்டர் DoT-ஐ ஆல்மோஸ்ட் ஊத்தி மூடிவிடும் அளவிற்கு ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதெல்லாம் செய்யப்பட்டார். ஜெயிலில் இருந்தபடியே தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். போன வருடம் வெறும் இரண்டு லட்ச ரூபாய் அபராதத்துடன் கேஸை ஊத்தி மூடி பைலை தூக்கி பரண்மேல் போட்டுவிட்டார்கள். போபர்ஸ், பங்குச்சந்தை, தெஹல்கா டீம் வெளியே கொண்டுவந்த பாதுகாப்பு துறை ஊழல் என எல்லாவற்றையும் அமுக்கியபின் இன்னமும் ஊழலைப்பற்றி விசாரிப்பதாக மக்களை எத்தனை காலம் ஏமாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் நேர பேரத்திற்காகவும், தங்கள் பங்கு சரியாக வந்து சேராத காரணத்திற்காகவும் கத்தரிக்காயை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து Mr. பொதுஜனத்தை ஏன் நோகடிக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை.