Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, March 3, 2019

மாற்றம், தடுமாற்றம், இடமாற்றம்


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதை சில கட்சிகள் மேடைகளில் முழங்கி வந்தாலும் அதை அப்படியே இன்றுவரை பின்பற்றி நிறைவேற்றி வருவதில் பா...தான் மேன் ஆப் மேட்ச். ஒரு படத்தில் விவேக் சொல்வது போல லெப்டில் இன்டிக்கேட்டர் போட்டு, ரைட்டில் திரும்புவதை அரசியலில் அப்படியே செய்து காட்டி எல்லோரையும் மீண்டும் மீண்டும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று வரை ஆளும் கட்சியின் ஊழலை எதிர்ப்பதாக சொன்னவர்கள் இன்று அதே கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன போன்ற புளித்துப்போன பழைய சமாச்சாரத்தை தேர்தல் நெருங்குவதற்கு மூன்று மாதம் வரை கூவிவிட்டு பின்னர் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் தலைமையின் கீழ் அமையும் மெகா(!) கூட்டணியில் சேர்ந்துவிடுவது இம்மாதிரியான கட்சிகளின் தலைமைக்கு கை வந்தக் கலை. கேட்டால் தனியாக நின்றால் மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுவது இல்லை, எங்களால் வெல்ல முடியவில்லை என விளக்கம் தருகிறார்கள்.

கிரவுண்ட் ரியாலிட்டி உங்களுக்கே தெரிகிறது இருந்தாலும் விமர்சனம் என்ற பெயரில் ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு மூன்று மாதம் முன் வரை எதையாவது சொல்லி மக்களையும் உங்கள் கட்சியின் கடைக்கோடி தொண்டனையும் ஏமாற்றுகிறீர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தலுக்கு தேர்தல் மரம் விட்டு மரம் தாவும் குரங்கைபோல் கட்சிகள் கூட்டணிக்கு தாவுவதற்கு அச்சாரம் போட்ட கட்சிகளில் பா..-வுக்கு தனியிடம் உண்டு என்பதில் யாருக்கும் மாற்று கருத்தே இருக்க முடியாது.

டாக்டருக்கு படித்துவிட்டு ஜாதி அடிப்படையில் கட்சி நடத்தினால் மக்களுக்கு உங்கள் மீது எப்படி நம்பிக்கை வரும். ஓட்டுப் போடும் மக்களை விடுங்கள், நோயாளியாக உள்ளவர்களுக்கு உங்களிடம் வந்து வைத்தியம் பார்த்துக் கொள்ள எப்படி நம்பிக்கை வரும். போதாத குறைக்கு வாரிசு அரசியலை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்காக தங்கள் கட்சியின் வாரிசுகளையே பேச்சுவார்த்தைக்கு அனுப்புவது. இதையெல்லாம் செய்துவிட்டு மக்கள் தங்களுக்கு ஓட்டுப்போட வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம். 

சென்ற தேர்தலின்போது திரு. அன்புமணி அவர்கள் மாற்று அரசியலை விரும்புபவர்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையை எழுப்பினார். அது ஓட்டாக மாறாமல் இருந்திருக்கலாம் ஆனால் முதல் முயற்சியிலேயே எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதற்காக அந்தர்பல்டி அடிப்பது திரும்பவும் பேக் டூ ஸ்கொயர் ஸ்டேடஸ்தான். கடந்த தேர்தலின் போது நடத்திய மாறுபட்ட பிரச்சாரத்தை ஒன்று தேர்தலுக்கு வெகு காலத்திற்கு முன்பாக தொடங்கி இருக்கவேண்டும் அல்லது அதே பிரச்சாரத்தை கடந்த தேர்தலுக்கு பிறகாவது தொடர்ந்து முன்னெடுத்து சென்றிருந்தால் மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும். வெறும் தேர்தலுக்காக தொண்ணூறு நாள் பிரச்சாரம் செய்துவிட்டு மக்கள் தங்களுக்கு ஓட்டளிக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய பிழை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே உக்கிரகதியில் பிரச்சாரம் செய்துவிட்டு முடிந்தவுடன் ஹைபர்னேட் மோடிற்கு சென்றுவிடுவது பரீட்சைக்கு முந்தின நாள் இரவு புத்தகத்தை திறந்து பார்க்கும் நிகழ்விற்கு சமமானது. அது ஒருவிதமான சோம்பல்தனம் கலந்த ஓவர் கான்பிடன்ஸினால் வரும் நிலை. ஒரு சில சமயம் மட்டுமே கைகொடுக்கும். இன்றைய காலகட்ட தேர்தல் பிரசாரத்திற்கு எல்லாம் இந்த அப்ரோச் ஒத்துவராது.

இறுதியாக இந்த திராவிட கட்சிகளால் தான் தமிழகம் உருப்படவில்லை என சில வட இந்திய அரசியல்வாதிகளும், டெல்லியில் .சி. ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு உளறிகொண்டிருக்கும் மீடியாக்காரர்களையும் அப்படியே காப்பி அடிக்காமல் சுயமாக சிந்தித்து பேசுங்கள். 1967-க்கு பிறகும் சரி அதற்கு முன்பும் சரி தமிழகம் தொழில் துறையிலும், முன்னேற்றத்திலும் சராசரியாக முதல் நான்கு இடங்களுக்குள்தான் இருந்து வந்திருக்கிறது. எந்த கட்சி ஆண்டாலும் முன்னேற்றம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது மக்களும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு மாறாக இரு பெரும் தேசிய கட்சிகளின் ஆளுகையின் கீழ் மாறி மாறி சிக்கிக் கொண்டிருக்கும் சில மாநிலங்கள் எல்லா திறமையும் தகுதியும் இருந்தும் இன்னமும் முன்னேற்றத்தை அடைய திணறிக் கொண்டிருக்கின்றன என்பது தான் கசப்பான உண்மை.

Saturday, February 9, 2019

ஜார்ஜ் பெர்னாண்டஸ்



இனி நாயகன் படத்தில் அந்த சின்னப்பையன் மும்பைக்கு ஒடிவரும் முதல் காட்சியை பார்க்கும் போதெல்லாம் வேலு நாயக்கருடன் சேர்த்து திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் நினைவில் வந்து போவார்கள். நம்ம நாயக்கருக்கு தூத்துக்குடி இவருக்கு மங்களூர் அஷ்டே. மற்றபடி இருவரின் வாழ்க்கையும் அவர்கள் தலை எடுத்து மேலே வரும்வரை ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. வீட்டை விட்டு மும்பைக்கு ஓடுவது, அங்கே இருக்க இடமில்லாமல் தெருவில் உறங்குவது, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக போராடி தலைவராக தலை எடுப்பது என பல ஒற்றுமைகள். வேலு நாயக்கர் கற்பனை. ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிஜம்.


இன்றைய தேதிக்கு மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்றால் அந்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்க ஒரு பேஸ்புக் பதிவு அல்லது வாட்ஸ் அப் மெஸேஜ் போதும். ஆனால் செய்தித்தாள்களே ஒழுங்காக மக்களை சென்றைடையாத 1960-70களில் மும்பை போன்ற பெரிய நகரத்தை மில் தொழிலாளர்கள் மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்களின் கூட்டணியோடு நினைத்த நேரத்தில் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் இவர்.

இந்திய ரயில்வேதான் தேசத்தின் நரம்பு மண்டலம். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அனைத்து பொருட்களும் சென்று சேர வேண்டுமென்றால் இந்த நரம்பு மண்டலம் தொடர்ந்து சீராக செயல்பட்டே ஆகவேண்டிய கட்டாயம். அப்படிப்பட்ட ஒரு பெரிய ரயில்வே நெட்வொர்க்கையே தொடர்ந்து பல நாட்களுக்கு முடக்கி போட்டிருக்கிறது இவர் தலைமையில் நடைபெற்ற ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் அதுவும் எழுபதுகளில்.

தொழிலாளர்களை திரட்டி வெற்றிகரமாக வேலை நிறுத்தத்தை மட்டுமே செய்துகொண்டிருந்தவரை அறுபதின் இறுதியில் தெற்கு மும்பை தொகுதி மக்கள் முதல்முறையாக பார்லிமெண்டிற்கும் அனுப்பியிருக்கிறார்கள். இவரால் தோற்கடிக்கப்பட்ட நபர் அன்றைய தேதிக்கு மும்பை காங்கிரஸின் அசைக்க முடியாத ஆளுமை. ஆனால் அப்போதுதான் அரசியலின் அரிச்சுவடியை படிக்க ஆரம்பித்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அடித்து தூக்கிவிட்டார். பர்கூர் தொகுதியில் திமுகவின் சுகவனம் அம்மாவை தோற்கடித்த நிகழ்ச்சியை மு.. யானையின் காதில் புகுந்த எறும்பு என வர்ணித்திருந்தார். ஆனால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் யானையின் காதில் புகுந்ததோடு மட்டுமல்லாமல் அந்த யானையை அரசியலில் இருந்தே அஸ்தமனம் செய்துவிட்டார். இவரால் தெற்கு மும்பை தொகுதியில் தோற்கடிக்கப்பட்ட பட்டீல் அவர்கள் பின்னாளில் அரசியலில் எழுந்திருக்கவேயில்லை.

இந்திராகாந்திக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஆனால் அந்த அம்மாவிற்கும் இவருக்கும் இடையேயான பனிப்போர் எமர்ஜென்ஸியின் போது உச்சத்தை தொட்டிருக்கிறது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலை மறைவாக இருந்த காலகட்டத்தில் எமர்ஜென்ஸியின் இரும்புக்கரம் இவர் குடும்பத்தினரை இறுக்கி இருக்கிறது. தமிழகத்திலும் இதேபோல் நடந்து அதன் விளைவாக புதிய தலைவர்கள் வெளிச்சத்திற்கு வந்த கதை இருக்கிறது.

1977 தேர்தலின் போது எதிர்கட்சியினர் எல்லோரையும் விடுதலை செய்த அரசாங்கம் இவரை மட்டும் உள்ளேயே வைத்திருந்திருக்கிறது. இருந்தாலும் கைதியாக கம்பிகளுக்கு பின்னால் இருந்துக்கொண்டே பீகாரின் முசாஃபர்பூர் தொகுதியில் நின்று வென்றும் இருக்கிறார். வாக்கு வித்தியாசாம் அபாரம். இன்றைய தேதிக்கு இப்படி மாநிலம் விட்டு மாநிலம் சென்று தேர்தலில் நின்று ஜெயிப்பதெல்லாம் அத்தனை சுலபம் அல்ல. தேவைக்கு அதிகமான பணமும் தேசிய அளவில் செல்வாக்கும் இருந்தால் ஒழிய.

சிக்மளூர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தியை தோற்கடிக்க இவர் வேட்டியை மடித்துக்கொண்டு வேலை பார்த்திருக்கிறார். மேலே உள்ள புகைப்படம் அந்த நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திரா காந்திக்கு அந்த தேர்தல் வாழ்வா சாவா போரட்டம். ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு எமர்ஜென்ஸி கொடுமையின் கணக்கை சரிசெய்து கொள்ள கிடைத்த அருமையான சந்தர்ப்பம். பொறிபறந்த போட்டி. கன்னடம் பேசத் தெரியாத இந்திரா காந்தியை தேவராஜ் அர்ஸும் குண்டு ராவும் தாங்கிப் பிடித்தனர். போதாத குறைக்கு அன்றைய தேதிக்கு கர்நாடக அரசாங்கம் காங்கிரஸ் வசம் இருந்த்து.  எதிர்கட்சிகளின் ஏகோபித்த வேட்பாளர் ஜே.எச்.பட்டீல் என்றாலும் மறைமுகமான போட்டி இந்திரா காந்திக்கும் ஜார்ஜ் பெர்னான்டஸுக்குமும் தான். கடுமையான போட்டியில் இந்திரா காந்தி  வென்றாலும் பின்னாளில் கர்நாடகாவில் ஜனதாதளம் வளர்ந்து ஆட்சியை பிடிப்பதற்கு இந்த இடைத் தேர்தலும் ஜார்ஜ் பெர்னாண்டஸின் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் திறமையும் வலுவான அடித்தளத்தை உருவாக்கிவிட்டன.

90-களின் இறுதியில் அரசியலில் பக்குவப்பட்டுவிட்ட நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு இவர் செய்த பல விஷயங்கள் அந்த துறைக்கும், இவருக்கு பின்னால் அந்த துறையை ஏற்றுக்கொண்ட மந்திரிகளுக்கும் உதாரணமாக அமைந்துவிட்டன. சவுத் ப்ளாக்கிலும் நார்த் ப்ளாக்கிலும் சமோசா சாப்பிட்டுவிட்டு சாயா குடித்துக்கொண்டிருந்த தனது துறை அதிகாரிகளை அழைத்து எல்லைக்கு சென்று வீர்ர்களுடன் தங்கி அவர்களின் குறைகளை உணர்ந்து போக்குமாறு செய்வதெல்லாம் இன்றைக்கு நடக்குமா எனத் தெரியவில்லை. அதிகாரிகளை மட்டும் அனுப்பாமல் இவரே பலமுறை சென்று வீர்ர்களுடன் கேஷுவலாக பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனக்குடன் செய்து கொடுத்திருக்கிறார். இன்றைக்கு பல அரசியல்வாதிகள் இதை காப்பி அடித்துக்கொண்டிருக்கிறார்கள், அந்த இடங்களுக்கு வெறும் விஸிட் அடிப்பதில் மட்டும். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொண்ட கதை அது.

அரசியலில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் இவர் கடைபிடித்த முரட்டு வழிமுறைகளை இன்றைக்கு செய்தால் தேசவிரோதி என முத்திரை குத்திவிடுவார்கள். அன்றைக்கும் இந்திரா காந்தி இதே காரணத்தை முன்வைத்துதான் எமர்ஜென்ஸியை அமல்படுத்தினார், பின்னால் நடந்தவை வரலாறு. இவரால் கொம்பு சீவப்பட்டு இன்று கொழுத்துக்கொண்டிருக்கும் சரத் யாதவ், நிதிஷ்குமார் போன்றவர்கள் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அரசியலில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க தயாராக இருப்பது ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு இவர்கள் செய்யும் குரு துரோகம். இன்றைய இந்திய அரசியல்வாதிகளைப் பொருத்தவரை All is fair in love and war (and of course in Indian politics too).

அரசியலை தாண்டி, மனிதர் தன் சுயநினைவு இருந்தவரை கூடுமானவரை நிறைய உதவிகளை செய்து வந்திருக்கிறார். அகதிகளுக்கு தங்க இடம், கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகள் என பல விஷயங்கள். எல்லா துறைகளுக்கும் யாரோ ஒருவர் உதாரணமாக வாழ்ந்து விடுகிறார்கள். தேர்தல் கமிஷன் என்றால் திரு.டி.என்.சேஷன், ஜனாதிபதி என்றால் திரு. அப்துல்கலாம், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்த வரிசையில் முதன்மையாக திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ். RIP Sir.