Thursday, January 27, 2011
ஜீவநதி
கேரளாவிலும் கோவாவிலும் பயணம் செய்கையில் எந்தவித சுவடும், முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் திடீரென தோன்றி கண்களை செல்லமாக துளைத்துவிட்டுச் செல்லும் சின்ன சின்ன கிளைநதிகள் பரவசமூட்டிய அனுபவங்கள். வட கர்நாடகா மற்றும் கோவாவை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலையை அணைத்தபடி செல்லும் காளி நதி இந்தியாவின் மிக அழகான நதிகளில் ஒன்று. பெளர்ணமி நிலவின் பிம்பம் காளி நதியின் நீரில் கரைந்தபடி மெல்ல ஆடிக்கொண்டிருந்ததை, நண்பர் ஒருவரின் Tree House இன் பால்கனியில் அமர்ந்தபடி இரவு முழுவதும் ரசித்த கணங்கள் வார்த்தைகளை கொண்டு வர்ணிக்க முடியாதவை.
பொக்காரோ ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸில் ஆந்திர பிரதேசத்தின் வழியாக பயணிக்கும் போதெல்லாம் இடைமறிக்கும் கிருஷ்ணாவும், கோதாவரியும் உண்டாக்கிய கிறக்கம் Hennessy-யிலும் Remy Martin-லும் தேடினாலும் கிடைக்காதவை. பரபரப்பான விஜயவாடா நகரை அமைதியாக தழுவியபடி ஒடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணா நதியை ரயில் பெட்டியின் ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி அமைதியாக ரசிப்பது கோடி சுகம்.
Will the Cooum river be Chennai’s Thames? – இந்த செய்தியை ஏதேச்சையாக பார்த்தவுடன் மேலே சொன்ன அத்தனை நினைவுகளும் முட்டி மோதிக்கொண்டு வெளியே வந்துவிட்டன. நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்த ஒரு நதி இன்று பெயரைக் கேட்டாலே முகத்தை சுளிக்கும் அளவிற்கு சென்றுவிட்டதை நினைக்கும் போது வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. தங்கள் வீட்டின் கிணற்று நீர் அசுத்தமாகமல் இருக்க கடுமையாக மெனக்கெடும் மக்கள் தங்கள் ஊரில் உள்ள நதியின் தூய்மையைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பது கடைந்தெடுத்த சுயநலம். வீட்டில் காட்டும் சுயநலத்தில் பத்தில் ஒரு பங்கை சமூகத்தின் மேல் காட்டினாலே போதும், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அழகான படகு சவாரியை கூவத்தில் கொண்டுவந்து அசத்திவிடலாம். இரு கரைகளிலும் அமர்ந்தபடி மக்கள் இந்த நதியின் பேரழகை ரசிக்கலாம். 100% இது சாத்தியம்.
தென்னிந்தியாவின் மற்ற எந்த ஒரு மாநில தலைநகரிலும் இவ்வளவு நீளத்திற்கு ஒரு நதி, அதுவும் நகரின் பிரதானப் பகுதியில் அமையவில்லை. Indeed it’s a treasure for Chennai. சென்னை மக்களும் சரி, தமிழகத்தை இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளும் சரி இதை புரிந்துக்கொள்ளவே இல்லை. பெங்களூரில் செயற்கையாக ஏரிகளை ஆழப்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். ஹைதராபாத்தில் புத்தரை கொண்டு வந்து ஹுசைன் சாகரின் மத்தியில் நிறுத்தி காசு பார்த்து கொண்டிருக்கிறார்கள். நம்மூரில் இயற்கையாகவே கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஹட்சனும், தேம்ஸும் சுற்றுலா மூலமும் போக்குவரத்து மூலமும் வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கும் போது அதே அளவிற்கான இயற்கை அமைப்பை கொண்டிருக்கும் கூவம் நதியிலும் இதை ஏன் நம்மால் செயல்படுத்த முடியாது என்பதை உணர்வுபூர்வமாக யோசித்து விடுவது நல்லது. செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்புவதை விட இம்மாதிரியான சின்ன சின்ன ப்ராஜெக்ட்களை ஒழுங்காக செயல்படுத்தினாலே போதும் நாடு எங்கேயோ போய்விடும். இல்லாவிட்டால் யூப்ரடிஸ், டைகரிஸ் நதிகளின் கரைகளில் தோன்றிய நாகரிகம் கூவம் நதியின் கரைகளில் முடிந்துபோனது என கி.பி. 3011 இல் மாணவர்களுக்கு மென் திரையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் Humanoid-கள் செப்பிக் கொண்டிருக்கும்.
Sunday, May 23, 2010
ஜெஸிஃகா வாட்ஸன் – ஜோர்டன் ரொமேரோ – லைலா – மங்களூர்
-------------------------------------------------------------------------------------
ஜெஸிஃகா வாட்ஸன் எல்லாம் ரொம்ப லேட்….சொல்லாமல் சொல்கிறார் அமெரிக்காவின் ஜோர்டன் ரொமேரோ. சென்ற சனிக்கிழமை இவர் எவரெஸ்டின் உச்சியை தொட்டபோது தம்பிக்கு வயது வெறும் பதிமூன்று. எவரெஸ்டின் உச்சியை அடைந்தவர்களில் மிகவும் வயது குறைவானவர் இப்போதைக்கு இவர்தான். கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இவர் மற்ற இளம் வயதினரிடையே இம்மாதிரியான பொழுதுபோக்கு ஆர்வத்தை உண்டுபண்ணுவதற்காகவே இந்த சாதனையை மேற்கொண்டிருப்பதாக சொல்கிறார். ப்ளே ஸ்டேஷனிலும், எக்ஸ் பாக்ஸிலும் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையை எப்படியாவது வெளியே கொண்டுவரவேண்டும் என நினைக்கும் அன்பர்களும்/அன்பனிகளும், படிப்பை தவிர வேறு ஒரு உலகமே இல்லை என தங்கள் குழந்தைகளை புரட்டி எடுக்கும் பெற்றோர்களும் இவரை குருவாக பாவித்துக்கொள்வது நலம். வரலாறு படிக்கும் வயதில் வரலாறு படைப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்…ஹ்ம்ம்ம்ம்ம்ம்.
-------------------------------------------------------------------------------------
ரொம்ப நாட்களாக இருக்கும் சந்தேகம். அதென்ன புயலுக்கு மட்டும் வெறும் பெண்களின் பெயரையே வைக்கிறார்கள். பெண்களை மிகவும் சாந்தசொரூபியாகவும், அமைதியானவர்களாகவும் சித்தரிக்கும் நம்மூரில் கூட பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் புயலுக்கு “லைலா” என பெயரிட்டிருக்கிறார்கள். காத்ரீனா, லைலா என பெண்களின் பெயரை மட்டுமே வைப்பதின் பிண்ணனியில் ஏதாவது சைக்காலாஜிக்கல் விஷயம் இருக்குமோ என புயலைப்பற்றியும் சைக்காலாஜி பற்றியும் மூன்று நாட்களாக லைப்ரரியில் படித்துப் பார்த்ததில் அப்படி எந்த ஒரு தொடர்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. சரி போனால் போகட்டும் எப்போதாவது புயலுக்கு ஆண்டனி, ஆறுமுகம் என ஆண்களின் பெயரை சூட்டியிருக்கிறார்களா என கூர்ந்து படித்துப் பார்த்ததில் எந்த ஒரு புயலும் இதுவரை அந்த புண்ணியத்தை அடைந்ததாக தெரியவில்லை. பெயரே வைக்காமல் கூட இருந்திருக்கிறார்களே தவிர தப்பித்தவறி கூட ஒரு ஆணின் பெயரை இதுவரை சூட்டவில்லை. மெட்ரோலாஜி ஆசாமி யாரவது கண்ணில்படும்போது இந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்வது என முடிவு செய்துள்ளேன். சரி விஷயத்துக்கு வருவோம்...கரைக்கு வருவதற்கு முன்னாலும் கரையை கடந்த பின்னாலும் லைலாவால் கொண்டுவரப்பட்ட அத்தனை மழைநீரையும் வழக்கம்போல சேகரிக்காமல் வீணடித்து விட்டதைப்பற்றி எந்த ஒரு செய்தி நிறுவனமும் ஒரு வரிகூட செய்தி வெளியிடாமல் தங்கள் சமூக அக்கறையை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியிருக்கிறார்கள். மூச்சுக்கு முன்னூறு தடவை “லைலா”, “லைலா” என கூவிக்கொண்டிருந்த பத்திரிகைகளில் ஏதாவது ஒரு பத்திரிகை மழைநீர் சேகரிப்பை தொட்டிருந்தால் கூட போதும்…அடுத்தமுறை அனுஷ்காவோ, தமன்னாவோ புயலாக வரும்போது மக்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டிருப்பார்கள். புரட்சிப்புயலையும், கவர்ச்சிப்புயலையும் மட்டுமே சிலாகித்து எழுதும் பத்திரிகைகள் கொஞ்சம் இம்மாதிரி உருப்படியான விஷயத்தையும் எழுதினால் நாட்டில் எப்போதும் சீராக மழை பெய்யும், அம்மா மண்டபத்தில் காவிரி இரு கரையையும் முத்தமிட்டபடி ஒடிக்கொண்டேயிருக்கும்.
-------------------------------------------------------------------------------------
தேசத்தின் துயரம் :-(
-------------------------------------------------------------------------------------
Tuesday, January 26, 2010
Paradigm Shift
வேகமாக சென்றுகொண்டிருந்த அந்த புகைவண்டியின் சத்தத்தை ஒரம்கட்டிக்கொண்டிருந்தது வண்டியின் மத்தியில் இருந்த பெட்டியில் இருந்து கிளம்பிய குழந்தைகளின் விளையாட்டு சத்தம். வண்டியை குலுக்கி எடுத்துக்கொண்டிருந்த அந்த பெட்டியில் நான்கு பேர் அமரக் கூடிய கீழ் இருக்கையின் ஜன்னல் ஒரத்தில் இரண்டு குழந்தைகளும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார்கள். ஆரம்பபள்ளியில் படிப்பவர்களை போலிருந்தனர் இருவரும். அவர்களின் அடுத்தடுத்த இரண்டு இருக்கைகளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளம் அலுவலரும் அவரது நண்பரும் அலுவலக விஷயங்களை விவாதித்தபடி பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.
இவர்களின் எதிர் இருக்கையில் இரண்டு குழந்தைகளுக்கும் நேர் எதிராக ஜன்னல் ஒரத்தில் அவன் அமர்ந்திருந்தான். நடுத்தர வயது. சமீபத்தில் சவரம் செய்யப்படாத முகத்தில் முடிகள் கதிர்விடத் தொடங்கியிருந்தன. கலைந்த கேசமும் அழுக்கேறத் தொடங்கியிருந்த உடைகளும் சக பயணிகளிடமிருந்து அவனை வேறுபடுத்திகாட்டியது. அவனுக்கு பக்கத்து இருக்கையில் ஒரு சிறிய பெட்டியும் அதன் மீது ஒரு துணிமூட்டையும், கைப்பையும் வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு சொந்தமானவை அவை.
தன் மார்பில் புதைந்து உறங்கிக்கொண்டிருந்த சிறிய குழந்தையை அணைத்தபடி ஜன்னலில் தலைசாய்த்து கண்களை மூடியவாறு அமைதியாக அமர்ந்திருந்தான். அவ்வப்போது சரிந்து கொண்டிருந்த குழந்தையை கண்களை திறக்காமலே லேசான உறக்கத்துடன் ஒவ்வொரு முறையும் சரியாக அணைத்துக்கொள்ள முயற்சி செய்தபடியே தொடர்ந்து கொண்டிருந்து அவன் பயணம். இடையில் ஒரு முறை திடீரென விழித்தெழுந்து எதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்த இரு குழந்தைகளுக்கும் கைப்பையில் இருந்து பிஸ்கெட் பாக்கெட் எடுத்து கொடுத்தான். தண்ணீர் குடிக்க வைத்தான். வாஞ்சையுடன் அவர்களின் தலையை சிறிதுநேரம் தடவி கொடுத்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் மீண்டும் கண்களை மூடித் தூங்கத் தொடங்கினான். அயர்ச்சியும் களைப்பும் அவன் முகத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தன.
அவன் வைத்திருந்த பொருட்களுக்கு பக்கத்தில் அடுத்தடுத்திருந்த இரு இருக்கைகளிலும் அமர்திருந்த வயதான தம்பதியினர் செய்தித்தாள்களை வாசித்தவாறு அவ்வப்போது தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தார்கள். இந்த இரு இருக்கைகளின் மேற்புறத்தில் உள்ள இடங்களை யார் யாரோ தங்கள் பொருட்களை கொண்டு நிரப்பியிருந்தார்கள். பிரிக்கப்படாத USHA FAN பெட்டியின் பக்கத்தில் நெருக்கியபடி அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் தன் கால்களை எதிர்புறத்தில் உள்ள இருக்கையின் சிறிய இடைவெளியில் கிடத்தியாவாறு L போன்ற கோணத்தில் அமர்ந்திருந்தான்.
சமயங்களில் அவன் செய்த அல்லது செய்ய முற்பட்ட பாவனைகள் அநேகமாக அவன் பொட்டி தட்டும் கூட்டத்தை சேர்ந்தவனாக இருக்ககூடும் என்ற சந்தேகத்தை விதைத்துக்கொண்டேயிருந்தது. அவனோ அல்லது வெளிநாடு சென்று திரும்பிய அவனது நண்பனோ / நண்பியோ அளித்திருந்த I LUV NY பொறிக்கப்பட்ட மேற்சட்டை அணிந்திருந்தான். எங்கேயும் கிழிந்திராத டெனிம் முழுக்கால் சட்டை அணிந்து 21-ம் நூற்றாண்டு இளைஞர்களை அவமதித்துக்கொண்டிருந்தான். காதுகளில் வழிந்துகொண்டிருந்த ஐபாட்-டின் இசைக்கு அவன் தலையாட்டிய விதம் தெளிவாக சொல்லியது, அங்கே கச்சேரி செய்து கொண்டிருப்பது M.S.S அல்லது K.J.Y அல்ல என்று. சர்வ நிச்சயமாக எல்விஸ் ப்ரஸ்லியோ அல்லது பாப் மார்லோவாக இருக்கக்கூடும், குறைந்த பட்சம் பப்பி லஹரி.
கீழே அமர்திருந்தவர்களின் இருக்கைகளுக்கு பக்கவாட்டில் ஒருவர் மட்டுமே அமரக்கூடிய எதிர் எதிர் இருக்கைகளை இளம் தம்பதியினர் ஆக்ரமித்திருந்தனர். தன் கைகளில் இருந்த பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் தன்னை தொலைத்துவிட்டிருந்தாள் அந்த இளம் மனைவி. எதிரே கன்னத்தில் கைகளை குவித்தவாறு அமர்ந்திருந்த அவளின் கணவன், தன் மனைவியின் அழகை முதல் முறையாக பார்ப்பவன் போல அவளை ரசித்தபடி பயணித்துக்கொண்டிருந்தான்.
பெட்டியின் பிற இருக்கைகளில் அமர்ந்திருந்த மக்கள் அவரவர் சக்திக்கு ஏற்றபடி டெஸிபலை கூட்டியோ குறைத்தோ பேசியபடியோ பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முறுக்கு விற்பவர்களும் டீ விற்பவர்களும் பெட்டியில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் தூக்கத்தை கலைத்து தங்கள் பூர்வ ஜென்ம பாவத்தை கழுவிக்கொண்டார்கள். இயல்பாய் சென்றுகொண்டிருந்த பயணத்தில் திடீரென “பர்தேசி பர்தேசி ஜானா நஹின்” என உச்சஸ்தாதியில் பாடியபடி யாசகம் கேட்கும் ஒருத்தி அந்த பெட்டிக்குள் நுழைய அதுவரை இரைச்சலாக இருந்த பெட்டி முழுவதையும் அமைதி கைப்பற்ற தொடங்கியது. அவளின் பாடலுக்கு நடுவே சில்லரைகள் தட்டில் விழும் சத்தம் சந்தத்தை கூட்டிக்கொண்டே போனது. டிக்கெட் பரிசோதகரை பார்த்த ஒரு கணம் தன் குரலை தாழ்த்தியவள் பின்பு ஏதோ நினைத்தவளாய் உச்சஸ்தாதியில் பாட ஆரம்பித்துவிட்டாள். சில்லரை இல்லாதவர்கள், இருந்தும் கொடுக்காதவர்கள் அவள் பாடிக்கொண்டிருந்ததை உள்ளுக்குள் ரசித்தபடி அமர்ந்திருந்தார்கள்.
யாசகம் கேட்பவள் நெருங்குவதற்குள் அவளுக்கு கொடுப்பதற்கு தயாராக எல்லோரும் மறந்துபோன நாலாணாவை தங்கள் பாக்கெட்டுக்களில் தேடத்தொடங்கினார்கள் அந்த இளம் கணவனும் பொட்டி தட்டும் இளைஞனும். வயதான தம்பதியினர் அவளுக்கு கொடுப்பதற்காக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டார்கள். மார்போடு குழந்தையை அணைத்திருந்த அவன் இப்போது வாயை லேசாக திறந்தபடி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
.ஜன்னல் ஓரத்தில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த இரு குழந்தைகளின் முகத்திலும் மெலிதான சந்தோஷம் பரவ தொடங்கியது. திடீரென சூழப்பட்ட இள அமைதியும் புரியாத மொழியில் பாடிக்கொண்டிருந்த யாசகம் கேட்பவளின் குரலும் அந்த இரு குழந்தைகளையும் வெட்கத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டார்கள். மறக்காமல் பிறர் தங்களை பார்க்கிறார்களா என்பதையும் ஒருவித வெட்கத்தோடு நோட்டம் விட்டுகொண்டார்கள். குறிப்பாக தங்கள் எதிரில் உள்ளவனை மெலிதான அச்சத்தோடும் குறைவான புன்னகையோடும் பார்த்துக்கொண்டார்கள்.
அவன் உறக்கம் கலையவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அந்த சிறுவன் மட்டும் மெல்ல தன் இருக்கையை விட்டு இறங்கி நேர்வாட்டில் நடப்பதற்காக இருக்கும் வழியின் தூரத்தில் பாடியபடியே வந்து கொண்டிருந்த அவளை பார்த்தபடி நின்று கொண்டான். பாடிக்கொண்டிருந்தவள் மெல்ல நடந்து முன்னேறி இவர்களின் இருக்கைக்கு அருகில் வர வர, சிறுவன் அவளைப்பார்ப்பது பின்பு ஒடிச் சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொள்வது என விளையாட ஆரம்பித்தான். பாடிக்கொண்டிருந்தவளின் தோற்றம் சிறுவனுக்கு பயத்தையும் வியப்பையும் ஒரு சேர கொடுத்தது.
ஒருகட்டத்தில் மெல்ல தன் தலையை மட்டும் வெளியே நீட்டி தங்கள் இருக்கைக்கு மிக அருகில் வந்துவிட்ட பாடுபவளை பார்த்தவுடன் சட்டென முகத்தை உள்ளிழுத்துக்கொண்டான். சிறுமியும் அவனை பாடுபவளை நோக்கி தள்ளிவிடுவதைபோல பாவனை செய்து அவனுடன் சேர்ந்து விளையாடத்தொடங்கினாள். பாடிக்கொண்டிருந்தவள் இவர்களின் இருப்பிடத்தை கடந்து சென்றவுடன் மீண்டும் சிறுவன் ஒடிச்சென்று அவளை ஒருமுறை பின்னால் இருந்து பார்த்துவிட்டு மறுபடியும் ஒடிவந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான் இந்த விளையாட்டினூடே அந்த இரு குழந்தைகளின் குதூகல குரலும் மெல்ல உயரத்தொடங்கியிருந்தது…எதிர் இருக்கையில் குழந்தையை அணைத்தபடியே தூங்கிக்கொண்டிருந்தவனின் உடலில் எந்த ஒரு சலனமும் இல்லை. மிக ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்டிருந்தான். திறந்திருந்த வாயின் ஒரங்களில் லேசாக எச்சில் ஒழுக ஆரம்பித்திருந்தது.
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த குழந்தைகள் இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் தங்கள் முகபாவனைகளால் ஒருவரை ஒருவர் பயமுறுத்திக்கொண்டும் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த தொடங்கியிருந்தார்கள். அவ்வப்போது கிறீச்சிட்டு எழுந்த அந்த மழலைகளின் குரல் சுற்றியிருந்தவர்களுக்கு எந்த ஒரு இடைஞ்சலையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. மெர்க்குரிப்பூக்களும், பத்திரிகையின் பக்கங்களும், ஐபாட்-டும் வழக்கம்போலவே இயங்கிக்கொண்டிருந்தன.
மெல்ல ஆரம்பித்த குழந்தைகளின் விளையாட்டு அவனுக்கு பக்கத்தில் இருந்த துணிமூட்டைக்கு பரவியது. தூங்கிக்கொண்டிருந்த அவனுக்கு தெரியாமல் லாவகமாக துணி மூட்டையை உருவிவிட்ட சிறுவன் அதை அந்த சிறுமியை நோக்கி வீசத்தொடங்கினான். அவளும் பதிலுக்கு அவன் மீது துணி மூட்டையை வீசி எறிந்தாள். ஒவ்வொரு முறை மூட்டையை அடுத்தவர் மீது எறியும்போது அவர்கள் எழுப்பிய ஆரவார கூச்சல் அந்த பெட்டியை லேசாக உலுக்கியது. அருகில் அமர்ந்திருந்த வயதான தம்பதியும், மெர்க்குரிப்பூவை வாசித்துக்கொண்டிருந்த பெண்மணியும் குழந்தைகளை பயமுறுத்துவதை போல பார்த்துவிட்டு மறுபடியும் தங்கள் வேலைகளில் மூழ்கத்தொடங்கினார்கள். அலுவலக நண்பர்கள் குழந்தைகளை நோக்கி ஒரு புன்முறுவலை வீசிவிட்டு தங்கள் விவாதத்தை தொடர்ந்தார்கள். மேலே அமர்ந்திருந்தவன் கொடுத்த சாக்லெட்டை வெட்கத்துடன் வாங்கிக்கொண்ட இரு குழந்தைகளும் தங்களை மறந்து அங்கும் இங்கும் ஒடி விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் கத்திக்கொண்டே துரத்துவது, மேலே விழுந்து புரள்வது, கீழே வைத்திருக்கும் பெட்டிகளின் மீது ஏறுவது என அந்த ரயில் பெட்டி முழுவதையும் தங்கள் வசப்படுத்திவிட்டார்கள்.
நேரம் செல்ல செல்ல படித்துக்கொண்டும், இசையை ரசித்துக்கொண்டும், நின்றுகொண்டும் வந்த மற்றவர்களுக்கு குழந்தைகளின் கூச்சலும், அங்குமிங்குமாக ஒடிக்கொண்டிருந்த அவர்களின் ஒட்டமும் லேசான தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்த சிறுவனை மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி மடக்கி பிடித்து ஒரு பொய்யான பயமுறுத்தலுடன் சத்தம் போடாமல் விளையாடுமாறு சொல்லிவிட்டு அவனை விடுவித்துவிட்டாள். அதன்பின் சிறிது நேரம் அமைதியாக விளையாடிய குழந்தைகள் மீண்டும் தங்களை அறியாமலேயே பெரும் சத்தத்துடன் விளையாடத் தொடங்கிவிட்டனர். ஒரு கட்டத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்த அந்த புகைவண்டியின் சத்தத்தை ஒரம்கட்டிக்கொண்டிருந்தது வண்டியின் மத்தியில் இருந்த பெட்டியில் இருந்து கிளம்பிய குழந்தைகளின் விளையாட்டு சத்தம். ஜன்னலோரம் தூங்கிக்கொண்டிருந்த அவன் லேசாக குறட்டைவிட ஆரம்பித்திருந்தான்.
பெட்டியில் இருந்தவர்கள் லேசாக பொறுமை இழந்து முணுமுணுக்க தொடங்கினார்கள். தங்கள் படிப்பிற்கும், இசைக்கும், தனிமைக்கும் குழந்தைகளின் விளையாட்டு இடைஞ்சலை ஏற்படுத்துவதாக எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்க தொடங்கியிருந்தார்கள். சிலர் குழந்தைகளிடம் நேரடியாகவே கடிந்து கொண்டார்கள், சிலர் லேசாக அதட்டல் போட்டார்கள்..அதட்டும்போது அடங்குவதும் சிறிது நேரத்தில் பழையபடி ஒடி விளையாடுவது என மாறி மாறி ரணகளபடுத்திக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள். ஜன்னல் ஒரத்தில் அமர்ந்திருந்தவன் லேசாக அசைவது போல் அசைந்து மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான். கூட்டம் வேகமாக பொறுமை இழக்கத்தொடங்கியது.
தூங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி குழந்தைகளை கண்டித்து அடக்க சொல்லலாமா அல்லது அவன் விழிக்கும் வரை காத்திருக்கலாமா என எல்லோரும் மனசுக்குள் பட்டிமன்றமே நடத்த ஆரம்பித்துவிட, எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் குழந்தைகள் தங்களின் பின்புறத்தில் இருந்த இருக்கைகளின் பக்கமாக சென்று இன்னும் ஆரவாரத்துடன் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துவிட்ட பயணிகள் சிலர் கூட்டமாக சென்று ஜன்னல் ஒரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவனின் தோள்பட்டையை தட்டி அவனை எழுப்பிவிட்டனர். லேசாக தலையை திருப்பி கண்களை திறந்தவன் எதிரில் குழந்தைகள் இல்லாததை கண்டு திடுக்கிட்டு எழ பெட்டியில் இருந்தவர்கள் இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அவன் மீது பாயத்தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளை இப்படி விளையாடவிட்டு விட்டு அப்படி என்ன தூக்கம், அவர்கள் போடும் சத்தமும் ஆட்டமும் தங்களை இடைஞ்சல் படுத்துவதாகவும் சொல்லிவிட்டு, அவர்களை கூப்பிட்டு கண்டித்து ஒரே இடத்தில் உட்கார வை என குதறி எடுத்துவிட்டார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பக்கத்து இருக்கை பக்கமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் தங்கள் இடத்தை நோக்கி ஓடி வர, விழித்த நிலையில் நின்று கொண்டிருந்த அவனை கண்டதும் மிரட்சியுடன் மெல்ல நடந்து அவன் அருகில் செல்ல, சடாரென ஒரு கையால் அவர்களை பிடித்து இழுத்தவன் முதுகில் ஒங்கி அறைந்துவிட்டு பின் ஒரு நொடி நிதானித்து அப்படியே குனிந்து குழந்தைகளை தன்னோடு அணைத்துக்கொண்டான். வலியாலும் பிறர் முன்னால் தங்களை அடித்துவிட்ட தாழ்வு மனநிலையாலும் அதுவரை சந்தோஷத்தில் பறந்துகொண்டிருந்த குழந்தைகளின் முகத்தில் வழிந்த கண்ணீர் அவன் சட்டையை ஈரமாக்கியது தன் தோளில் சாய்ந்து அழுத குழந்தைகளை அப்படியே அள்ளி தூக்கியவன் அவர்களை மார்போடு அணைத்தபடி தன் இருக்கையில் சரிந்தான். சில நொடிகளில் தலைகீழாக மாறிவிட்ட நிகழ்வுகளால் வாயடைந்து நின்றுகொண்டிருந்த ஒட்டு மொத்த கூட்டமும் அங்கிருந்து விலக மனமில்லாமல் நின்றிருக்க முதல் முறையாக மெல்ல பேசத்தொடங்கினான் அவன்….
என் குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட இடைஞ்சலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவர்களின் தாய் இரண்டு நாட்களுக்கு முன் இறந்துவிட்டாள். அவள் இறந்த சோகத்தில் இரண்டு நாட்களாக அழுதுகொண்டிருந்த குழந்தைகளுக்கு ரயில் பயணம் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு மாறுதலுக்காக அடுத்த நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அவர்களை அழைத்துகொண்டு போய்கொண்டிருக்கிறேன். சரியான தூக்கம் இல்லாததாலும் கடுமையான சோர்வினாலும் நான் சிறிது கண்ணயர்ந்து விட்டதால் குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட சிரமத்தை கவனிக்க இயலாமல் போய்விட்டது. என்னையும் என் குழந்தைகளையும் மன்னித்துவிடுங்கள். இனிமேல் இவர்களால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தயவு செய்து அவரவர் இருக்கைகளுக்கு செல்லுங்கள் என கூறிவிட்டு மூன்று குழந்தைகளையும் அணைத்தபடி ஜன்னலை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தான்.
அவனை கடிந்து கொள்வதற்காக கூடிய அத்தனை கூட்டமும் மெல்ல கலைந்து அவர் அவர் இருக்கைக்கு செல்ல தொடங்கினர். சில நிமிடத்திற்கு முன்பு வரை ஆரவாரமாக காணப்பட்ட அந்த பெட்டி சுடுகாட்டைப்போல அமைதியாக சென்றுகொண்டிருந்தது. பெட்டியில் இருந்த ஒவ்வொருவரையும் குற்ற உணர்ச்சி மெல்ல சூழத்தொடங்கியது. குழந்தைகளின் சந்தோஷ கூச்சலைவிட அப்போது நிலவிய மயான அமைதி ஒவ்வொருவரின் மனசாட்சியையும் பிடித்து உலுக்கத்தொடங்கியது. தங்கள் கவலைகளை மறந்து விளையாடிய குழந்தைகளின் மகிழ்ச்சி தங்களால் முடங்கிவிட்டதை நினைத்து மருகத்தொடங்கினார்கள். சில நிமிடத்திற்கு முன்பு வரை குழந்தைகளின் அட்டகாசத்திற்காக முகத்தை சுளுக்கியவர்கள் மீண்டும் அந்த குழந்தைகள் பழையபடி விளையாடமாட்டர்களா என ஏக்கத்துடன் காத்திருக்க……தன் மடியோடு சாய்ந்திருந்த குழந்தைகளை இறுக்கி அணைத்தபடி இருந்த அவன் தூக்கத்தை வலுக்கட்டயாமாக தவிர்த்து ஜன்னலை வெறித்தபடி பயணித்துக்கொண்டிருந்தான்.
