Showing posts with label யூ நேம் இட். Show all posts
Showing posts with label யூ நேம் இட். Show all posts

Thursday, December 2, 2010

ஏர் இந்தியா – கொஞ்சம் பார்த்து செய்ங்கண்ணே

நீரா ராடியாவின் அடுத்த டேப், ஷாருக்/ரஜினி படத்தின் திருட்டு விசிடி விற்கப்படும் இடங்கள் போன்ற அதி முக்கிய சமாச்சாரங்களை இண்டு இடுக்கெல்லாம் தேடிச் சென்று அலசி ஆராய்ந்து துவைத்து காயப்போடும் இந்திய/தமிழக துப்பறியும் மீடியாக்கள் கிட்டத்தட்ட 113 பேரின் வாழ்க்கையோடு கபடி விளையாடியிருக்கின்ற ஏர் இந்தியாவின் விமான சாகச நிகழ்ச்சியை வழக்கம்போல Choice இல் விட்டு விட்டார்கள். எந்த ஒரு விஐபி-யும் பயணம் செய்திராத அந்த விமான நிகழ்வை செய்தியில் போடுவதால் சர்க்குலேஷனோ அல்லது டி.ஆர்.பி ரேட்டிங்கோ சத்தியமாக ஏறப்போவதில்லைன்னு நினைத்து லூஸ்ல விட்டுடாங்க போலத் தோன்றுகிறது.

நாட்டில் இருக்கின்ற அரசியல்வாதிகள் முதல் நடுவானில் பறந்து கொண்டிருக்கின்ற விமானத்தின் பைலட் வரை எல்லோருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை…”நாற்காலி” a.k.a “சீட்” தான் போலிருக்கிறது. மே மாதம் 25ம் தேதி துபாயில் இருந்து புனே நோக்கி வந்துக் கொண்டிருந்த போயிங் 737 விமானத்தை 37000 அடி உயரத்திலிருந்து திடீரென இறக்கி 30000 அடி உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் விமானத்தின் துணை விமானி. தனது நாற்காலியை அட்ஜெஸ்ட் செய்யும்போது கை தவறி ஏதோ எசகு பிசகாகிவிட (நம்மூர் சிவில் ஏவியேஷன் என்கொயரி ரிப்போர்ட்ல இப்படிதான் சொல்லியிருக்காங்க) அதுவரை சாதுவாக 37000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பறவை வேகமாக கீழே இறங்கத் தொடங்கியிருக்கிறது. உச்சா போவதற்காக ரெஸ்ட் ரூமிற்கு சென்றிருந்த விமானத்தின் சீனியர் பைலட், நிலைமையை உணர்ந்து காக் பிட்டுக்குள் நுழைந்து விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். சினிமா ஹீரோ பாணியில் செயல்பட்டிருக்கிறார் இந்த நிஜ ஹீரோ. பாரட்டபட வேண்டிய விஷயம்.

அண்ட வெளியில் நடந்துக் கொண்டிருந்த களேபரத்தை புறந்தள்ளி, உண்டிக்கு உணவிட்டுக் கொண்டிருந்த பயணிகளுக்கு காக்பிட்டுக்குள் நடந்த விஷயம் தெரியாமலிருக்க “air pocket” அதான் பிளைட் கொஞ்சம் ட்ராப் ஆயிடுச்சுன்னு சும்மா ஒரு உம்மாவை கொடுத்து சமாதனப்படுத்தி இருக்கிறார்கள். உண்மையை சொல்லியிருந்தால் உணவிற்கு பதிலாக எனிமா கொடுத்த மாதிரி வெலவெலத்து போயிருப்பார்கள். இந்த ஏர் பாக்கெட், ஏர் டர்புளன்ஸ் போன்ற ஜிகிரி வாஸ்துக்களை எல்லாம் பொதுவாக முன்கூட்டியே டிடெக்ட் செய்து, பயணிகளுக்கு அறிவித்துவிட்டு அவர்களை சீட்டோடு Buckle-Up செய்துவிடுவார்கள். அப்போதைக்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ஒப்பேற்றியிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அதிலும் எத்தனை பேருக்கு அவர்கள் சொன்ன விஷயம் சரியாக புரிந்திருக்கும் என்பது மில்லியன் டாலர் வினா.

2010 மே மாதம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட மங்களூர் விபத்தின் இரணங்கள் ஆறும் முன்பே, அந்த விபத்து நடந்த அடுத்த மூன்று நாட்களுக்குள் மற்றுமொரு மிகப் பெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியிருக்கிறது ஏர்-இந்தியாவின் இந்த இன்னொரு 737 பறவை. Coincidentally, இந்த இரண்டு விமான நிகழ்வுகளும் துபாயில் இருந்து புறப்பட்ட விமானங்களிலே நடந்திருப்பது வேதனையான செய்தி.

“இம்மாதிரியான எதிர்பாராத நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது என துணை விமானி அறிந்திருக்கவில்லை” “இம்மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பயிற்சியை துணை விமானி பெற்றிருக்கவில்லை” என ஏதேதோ சப்பை கட்டை காதில் சுற்றியிருக்கிறார்கள் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில். இது பற்றிய விரிவான Article-ஐ CNN-இல் வெளியிட்டிருக்கிறார்கள். TVS-50யை உருட்டிக்கொண்டு டூ-வீலர் லைசென்ஸ் எடுக்க போனாலே எட்டு போடு, பத்து போடுன்னு ஆர்.டி.ஓ ஆபிஸில் சாமன்ய மக்களை பரேட் எடுக்கிறாங்க. ஒரு விமானத்தை இயக்குவதற்கு லைசென்ஸ் பெற்றிருக்கும் நபருக்கு இது தெரிந்திருக்கவில்லை, அது தெரிந்திருக்கவில்லை என ரிப்போர்ட் கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ரிப்போர்டை கொடுப்பதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக விசாரணையை நடத்தி இருக்கிறார்கள். நீரா ராடியா டேப்பிலாவது பேசியது யார் யாரென ஒரளவிற்கு உண்மையை சொல்லிவிட்டார்கள்…ஆனால் இந்த விமான நிகழ்வு என்கொயரி ரிப்போர்டில் விமானிகளின் பெயரை குறிப்பிடாமலேயே சமாளித்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் தூர்தர்ஷன் ஒலிபரப்பில் எப்போதாவது (!) பிரச்சனை ஏற்பட்டால் “தடங்கலுக்கு வருந்துகிறோம்” என்கிற Standard Template-ஐ போடுவார்கள். பின்னர் சிறிது காலம் கழித்து என்ன நினைத்தார்களோ தெரியவில்லை Template-ஐ கொஞ்சம் மாற்றி “தடங்கல் ஏற்பட்டுள்ளது” என மாற்றிவிட்டார்கள். நேரடியாக சொல்வதென்றால் வருந்துவதை நிறுத்திவிட்டார்கள். அதுநாள் வரை விடாப்பிடியாக தூர்தர்ஷனை பார்த்துக்கொண்டிருந்த மக்களும் தூர்தர்ஷன்காரர்களை மீண்டும் வருத்தத்தில் ஆழ்த்த வேண்டாம் என முடிவு செய்து காக்காக்கள் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த அலுமினிய ஆண்டெனாவை குஜிலி பஜாரில் விற்றுவிட்டு சன்-னுக்கும் ராஜு-க்கும் தாவிவிட்டார்கள். ஏர் இந்தியாவும் ஏறக்குறைய இதே திசையை நோக்கி சென்றுக்கொண்டிருப்பது போலத் தெரிகிறது. நடந்துவிட்ட இந்த செயலுக்காக சிவில் ஏவியேஷன் சார்பாக யாரும் ஒரு சிறு மன்னிப்போ அல்லது வருத்தமோ இதுவரை தெரிவித்ததாக தெரியவில்லை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இணையான வசதிகளும், கட்டமைப்பும் இல்லாத நிலையிலும் இன்னமும் சிலர் ஏர்-இந்தியாவின் விமான சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து புதிய பயணிகளையும் கவர்ந்திழுக்கப் போகிறார்களா அல்லது இருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்கள் உதாசீனத்தால் இழக்கப் போகிறார்களா என்பதை இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Saturday, October 16, 2010

பொதுப்பணித்துறை & சாலை போக்குவரத்துத்துறை பிதாமகன்கள்

கட்டியணைத்து, உச்சி முகர்ந்து, அப்படியே தோள் மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்து செல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது சில பொதுப்பணித்துறை/சாலை போக்குவரத்துத்துறை தலைமை பொறியாளர்களையும் அவர்களது குழுவினரையும். ரோடு (சாலை-ன்னும் சொல்லலாம்-னு கமல் ஒரு பேட்டியில சொன்னது ஞாபகத்துல வருது) போடுவதில் தொடங்கி, பாலங்கள் கட்டுவது வரை எல்லாவற்றிலும் தொடர்ந்து தங்கள் முத்திரையை பதித்துவரும் இந்த துறையின் சில அதிபுத்திசாலி பொறியாளர்களை பாராட்டாமல் இருப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறியாமையாக இருக்கும்.

1985-க்கு முந்தைய காலகட்டம் வரை தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டிருந்த சொற்பமான சில (நல்ல) என்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்டுடன் மோதுமளவிற்கு சக்தி கொண்ட ஒரே துறையாக விளங்கியது சாட்சாத் சிவில் டிபார்ட்மெண்ட் மட்டுமே. இந்த இரு துறைகளுக்கும் அப்போதிருந்த மவுசு அப்படி. அசின் – த்ரிஷா ரேஞ்சிற்கு ஒவ்வொரு கேம்பஸுக்குள்ளும் பனிப்போரை நடத்திக்கொண்டிருந்த இந்த இரு துறைகளையும் சமாளிக்க முடியாமல் அல்லது தெரியாமல் பம்மிக்கொண்டிருந்த துறைகளில் ஒன்றுதான் இன்றைக்கு கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் துறைகள். சரி மேட்டருக்கு வருவோம். இன்றைய தேதிக்கு என்ஜினியரிங் மார்வலாக வர்ணிக்கப்படும் பெரும்பாலான கட்டிடங்கள்/பாலங்கள் வரை எல்லாவற்றின் பிண்ணனியிலும் இருப்பது இந்த சிவில் என்ஜினியரிங் மூலைதான். டெல்லி மெட்ரோவில் தொடங்கி, நேற்று குடைந்து முடிக்கபட்ட சுவிஸ் கோத்தார்ட் பேஸ் ரெயில்வே டனல் வரை எல்லாமே இவர்களின் ஆசியால் புண்ணியம் தேடிக்கொண்ட ப்ராஜெக்ட்கள் தான்.

உலகின்/நாட்டின் பிற பகுதிகளில் இந்த துறையினர் அசத்திக்கொண்டிருக்க நம்மூரில் மட்டும் எப்படியெல்லாம் சொதப்பலாம் என ரூம் போட்டு யோசித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகிறது. அரசியல் இடையூறுகள்/குறுக்கீடுகள், பட்ஜெட்டில் துண்டு, பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற நியாயமான விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டாலும் இந்த துறையினர் சில சமயங்களில் குறைந்தபட்ச அக்கெளவ்ண்டப்பிலிட்டிகூட இல்லாமல் செயல்படுவது சில்லியாக இருக்கிறது. குறிப்பாக துறைகளின் தலைமை பொறுப்புகளில் உள்ள பொறியாளர்கள் ஏன் இப்படி அநியாயத்திற்கு போட்டு சொதப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. குறைந்தபட்ச சமூக அக்கறையுடன் செயல்பட்டால் கூட மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என தெரிந்தும் இவர்கள் சில நேரங்களில் ஏன் இப்படி கவிழ்த்துவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

சில பல வருடங்களுக்கு முன்புவரை எடை குறைவான ஹீரோ சைக்கிளை வீட்டிற்குள் ஏற்றி ஸ்டேண்ட் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இபோதெல்ல்லாம் பஜாஜ் பல்சரை நேராக நடு வீடுவரை ஒட்டிக்கொண்டே சென்றுவிடலாம். அந்த அளவிற்கு வேலையை சுலபமாக மாற்றிவிட்டார்கள் நம்மூர் பொதுப்பணித்துறையினர். ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோடு போடுகிறோம் என கிளம்பி வந்து ஒவ்வொரு முறையும் ரோட்டை அரை அடிக்கு உயர்த்தி உயர்த்தி, பெரும்பாலான வீடுகளின் அனைத்து படிகட்டுகளையும் மொகஞ்சதாரோ ஹரப்பா ரேஞ்சிற்கு பூமியின் அடி ஆழத்தில் புதைத்துவிட்டார்கள். ரோடுகள் வேகமாக மேலே வந்துவிட்டன. வீடுகள் அதைவிட வேகமாக கீழே போய்விட்டன. மிகவும் தாழ்வாக கட்டப்பட்டிருந்த பல வீடுகளின் கீழ்தளங்கள் இப்போது பங்கர்களாக மாறிவிட்டது தனிக்கதை. ரோடு போடுவது ஒப்பந்தக்காரர்கள் வேலை போன்ற சப்பைகட்டுகளை மக்கள் காதில் சுற்றிவிட்டு இவர்கள் ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது ஏனென்றால் அந்த பணி எப்படி இருக்கவேண்டும் என நிர்ணயித்து, வேலை முடிந்தவுடன் அதை இறுதியாக ஆராய்ந்து ஒகே சொல்லவேண்டியது இவர்களின் காம்.

புதிதாக ஒரு சாலையை சீரமைக்கும்போது அதை கொஞ்சம் ஆழப்படுத்தி மீண்டும் அதே உயரத்தில் புதிய சாலையை அமைக்கவேண்டும் என்ற அடிப்படை நியதியை முதலாமாண்டு சிவில் என்ஜினிரியங் மாணவனோ/மாணவியோ கூட படம்போட்டு விளக்கிவிடுவார்கள். ஆனால் பொ.ப.துறை ஆட்கள் தான் அடம்பிடிக்கிறார்கள். ஏற்கனவே உள்ள ரோட்டின் மீது கொஞ்சம் கல்லையும் மண்ணையும் போட்டு நிரப்பிவிட்டு அதற்கு மேல் சும்மா ஒரு லேயர் தார் போட்டு அந்த கிஸ்மோ இயந்திரத்தை ஒடவிட்டு ரோட்டை கொஞ்சமாக சமப்படுத்திவிட்டு பில்லை கிளியர் செய்து கொண்டு இடத்தை காலி செய்துவிடுவது பொலிட்டிக்கலி கரெக்ட்..ஆனால் மக்கள் பாவம்பா. இப்படியே ரோடு மேல் ரோடு போட்டுக்கொண்டே போனால் இன்னும் கொஞ்சநாட்களில் பல வீடுகளை அகழ்வாராய்ச்சி செய்து தான் கண்டு பிடிக்கவேண்டும். எதிர்காலத்தில் அண்டர்கிரவுண்ட் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும்போது ஏதாவது வீடோ அல்லது அலுவலகமோ ஆழத்தில் தென்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனிமேல் வீடு கட்ட போகிறவர்கள் முன்னெச்சரிக்கையாக இப்பொழுதே 50 படிகட்டுகள் வைத்து வீட்டை உயரத்தில் கட்டிவிடுவது நலம். இப்படி கட்டும் பட்சத்தில் அட்லீஸ்ட் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தாக்கு பிடிக்க முடியும். இல்லைன்னா கொஞ்சம் கஷ்டம்தான். இதில் இன்னொரு சவுகரியமும் உண்டு, வீடு பார்ப்பதற்கு முகேஷ் அம்பானியின் அல்டா மவுண்ட் ரோடு வீட்டை போலவே மிகவும் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துவிடலாம். இப்படி உயர்த்திக் கட்டுவதற்கு கூடுதலாக வரி வசூலித்தாலும் பரவாயில்லை, மக்கள் கந்துவட்டிக்கு வாங்கியாவது கட்டிவிடுவார்கள். மாநகராட்சிகளும், நகராட்சிகளும் கிடைக்கும் கேப்பில் கொஞ்சம் காசு பார்க்கலாம்.

தஞ்சை பெரிய கோவிலையும், பேளூர்-ஹலபேடு சிற்பங்களையும், மாமல்லபுரம் கல்குகைகளையும், தாஜ் மஹாலையும் பார்க்கும்போதெல்லாம் இதை செயலில் கொண்டுவந்த அந்த மாபெரும் சிவில் என்ஜினியரிங் மூளையை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. மினி ட்ராப்டரும், ட்ராயிங் போர்டும் இல்லாத காலத்திலேயே மிகவும் துல்லியமாக தொலைநோக்குடன் சிந்தித்து ஒவ்வொன்றையும் கட்டி எழுப்பி இருக்கிறார்கள்....அவர்களின் வழித்தோன்றல்களால் இருபத்தைந்து அடி அகலம் உள்ள சாலையை கூட சரிவர போட முடியாமல் போவது வியப்பாக இருக்கிறது. அடுத்த முறை புதிதாக சாலையை புணரமைக்கும்போது கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ பூமிதேவி கொஞ்சம் சந்தோஷப்படுவாள்.