Showing posts with label மனிதர்கள். Show all posts
Showing posts with label மனிதர்கள். Show all posts

Tuesday, January 22, 2013

பெருமைப்பட்டார்டா ஆட்டோக்காரர் !!!!!!



நடுத்தர மக்களை அதிகமாக பாதிப்பது நம்மூர் ஆட்டோக்காரர்களின் அநியாயமான கட்டணமா அல்லது அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழலா என பட்டிமன்றம் வைத்தால் ஆட்டோக்காரர்கள் முந்திவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. சென்னை உள்பட தமிழகத்தின் எந்த ஊருக்கு சென்றாலும் சொல்லி வைத்தாற்போல இவர்கள் மக்களை வஞ்சமின்றி ஏமாற்றுவதை இலவசமாக காணலாம். சவாரியே போகாமல் படுத்துக்கொண்டிருப்பார்களே தவிர கொஞ்சம் குறைத்து கேட்டாலும் வண்டியையே நகர்த்தமாட்டார்கள். நியாயமாக மீட்டர் போட்டால் எவ்வளவு வருமோ அதையும் தாண்டி கொடுக்க மக்கள் தயாராக மக்கள் இருந்தாலும் இவர்கள் வாய்க்கு வந்ததை நிர்ணயித்துக்கொண்டு அதை தரவேண்டும் என சிலநேரங்களில் பிடிவாதம் பிடிப்பது மக்களை கடுப்பில் ஆழ்த்தில் விடுகிறது.

பெங்களூரில் இவர்களின் சக தோழர்கள் கொஞ்சம் சுமார்…மீட்டரை போட்டுவிடுவார்கள், மீட்டருக்குமேல் கொஞ்சம் கேட்டுவிட்டு சவாரியை ஏற்றிசெல்வார்கள். இரவு நேரங்களில் ஒன்றரை மடங்கு கட்டணம் கொடுத்தால் பெரும்பாலும் வந்துவிடுவார்கள். மெஜஸ்டிக், சிட்டி ஸ்டேஷன் போன்ற இடங்களில் உள்ள ப்ரீபெய்ட் ஆட்டோக்கள் மகா உத்தமம். கொஞ்சம் கால் கடுக்க வரிசையில் நின்றாலும் அதிக தொந்தரவு இல்லாமல் நியாயமான கட்டணத்திற்கு ஒழுங்காக இலக்கைப் போய்ச் சேரலாம். வரிசையில் நிற்க பொறுமையில்லாமல் ரோட்டிற்கு வருபவர்கள் திரும்பவும் வரிசைக்கே சென்று நின்றுவிடுவார்கள் ஏனென்றால் ரோட்டில் வரும் ஆட்டோக்காரர்கள் பாதி பேர் நீங்கள் கேட்கும் இடத்திற்கு வரவே மாட்டார்கள் வருவதாக இருந்தாலும் மீட்டருக்கு மேல் காசை பார்க்காமல் வண்டியை நகர்த்தவே மாட்டார்கள்.

மும்பை புறநகர் ஏரியாக்களில் ஆட்டோக்காரர்கள் ரொம்பவே மேல். மீட்டருக்கு ஆகும் தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி சில்லரையை பவ்யமாக கொடுத்துவிடுகிறார்கள். முதல்முறையாக இதை பார்ப்பவர்களுக்கு கிம் கர்தாஷியானை பார்த்தது போல கொஞ்சம் ஷாக்காக இருக்கலாம் ஆனால் அதுதான் நிஜம். நம்மூரில் இவர்கள் செய்யும் அடாவடிகளையும் தாண்டி ஒரு சில நல்ல உள்ளம் படைத்த ஆட்டோக்காரர்கள் இருக்கவேதான் செய்கிறார்கள். எங்கள் வீட்டின் அருகில் இருந்த ஒரு ஆட்டோக்காரர் காலையில் சவாரி செல்லும்போது வயசானவர்கள் தெருவில் சென்றால் அவர் நிற்குமிடம் வரை இலவசமாக ஏற்றி செல்வதை பார்த்திருக்கிறேன். இப்படி செய்ததால் அவர் மீது ஒரு தனி மரியாதையே ஏற்பட்டுவிட்டது. 

இதுபோக தினந்தந்தியில் சிந்துபாத்துக்கு கீழே ஏதாவது ஒரு ஊரில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோகாரரை பற்றிய செய்தி சில வேளைகளில் கண்ணில்படும். பெரும்பாலான நேரங்களில் இந்த மாதிரியான செய்திகளில் வரும் ஆட்டோகாரர்கள் யாரவது பயணிகள் தங்கள் ஆட்டோக்களில் தவறிவிட்டுச் சென்ற பொருளை அப்படியே கொண்டுபோய் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சேர்த்திருப்பார்கள். கொஞ்சமும் யோசிக்காமல் பாராட்டுவது என்றால் இவர்களைத்தான் பாராட்டவேண்டும். பொதுமக்களில் எத்தனை பேர் இம்மாதிரியான ஆட்டோக்காரர்களுக்கு நினைவு பரிசை வழங்கியிருப்பார்கள் எனத் தெரியவில்லை போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு சன்மானம் கொடுத்து கவுரவிப்பதை அடிக்கடி செய்திகளில் காண நேரிடும். அநியாய ரேட்டை கேட்கும் ஆட்டோக்காரர்களை திட்டித் தீர்க்கும் பொதுமக்கள் நல்லது செய்யும் சில ஆட்டோக்காரர்களை கவுரப்படுத்தி பார்க்கவும் கற்றுக்கொள்ளுதல் நலம். இதைப்பார்க்கும் மற்ற ஆட்டோக்காரர்கள் மனசு மாற வாய்ப்பு இருக்கின்றது.

ஆட்டோக்காரர்களின் மீது செம கடுப்பில் இருக்கும் போதேல்லாம் ஏதாவது ஒருவர் ஒரு நல்ல விஷயத்தை செய்ததாக வரும் செய்தி அந்த வருத்தத்தை போக்கி விடுவதுண்டு. இவர்தாண்டா ஆட்டோக்காரர்ன்னு சொல்லி கொள்கிற மாதிரியான ஒரு செய்தி இன்றைக்கு கண்ணில் பட்டுவிட்டது. அவரைப்பற்றிய செய்தியை சொல்வதற்கு முன்னால், டாஸ்மாக்கில் குடித்துவிட்டு சவாரிக்கு போகாமல் அல்லது குறைந்த வாடகைக்கு வரமாட்டேன் என சொல்லிவிட்டு குப்புற கவிழ்ந்து படுத்துக்கொண்டிருக்கும் எல்லா ஆட்டோக்காரர்களும் இனி தங்கள் ஆட்டோக்களில் மாட்டி வைத்திருக்கும் தங்கள் டுபாக்கூர் தலைவர்கள் படங்களையும், கில்மா நடிக நடிகையர் படங்களையும் ஓரம் கட்டிவிட்டு திரு. ஜெயக்குமார் பெருமாள் என்னும் இந்த ஆட்டோக்காரரின் படத்தை மாட்டிக்கொள்வது நல்லது. அப்படி மாட்டினால் காலை முதல் மாலை வரை சவாரி கிடைக்க எம்பெருமான் முருகன் அருள் புரிவார்….சர்வ நிச்சயமாக, அதுவும் நீங்கள் கேட்கும் நியாயமான வாடகைக்கே.

ஒரு தனிமனிதர் ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களையும் ஒரே நாளில் தலைநிமிரும்படி செய்தததோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும்படியான தலைவராக உயர்ந்து நிற்கிறார். தனிமனிதராக மிகுந்த கஷ்டத்திற்கு இடையிலும் தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளித்திருக்கிறார் இவர். நன்றி மறப்பது நன்றல்ல என்ற வார்த்தையை தெளிவாக உணர்ந்து கொண்ட இவரின் குழந்தைகள் இவரை இன்று உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்து பெருமை சேர்த்திருக்கிறார்கள் தேசிய அளவில் நடந்த சார்டர்ட் அக்கெளன்டன்ட் தேர்வில் இவரது மகள் செல்வி. பிரேமா ஜெயக்குமார் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். அதுவும் முதல் முயற்சியிலேயே இந்த சாதனையை புரிந்திருக்கிறார். தான் படித்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய சகோதரர் திரு. தன்ராஜ் ஜெயக்குமாரையும் ஊக்கப்படுத்தி அவரையும் இந்த தேர்வில் முதல் முயற்சியில் வெற்றிபெற வழி நடத்தியிருக்கிறார். டபுள் டமாக்கா அப்படின்னு சொல்லுவார்களே அதுதான் நடந்திருக்கிறது இவர்கள் குடும்பத்தில். 

இவர்கள் பற்றிய செய்தியை முழுமையாக படித்து முடித்தவுடன் பாராட்டுக்கள் என்னும் ஒற்றை வார்த்தையுடன் கடந்து போக முடியவில்லை. வெறும் வெற்று பந்தாவுக்காக எல்.கே.ஜிக்கே இலட்சங்களை கொட்டிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் இத்தனை பெரிய சாதனையை கடின உழைப்பின் மூலம் நடத்திக்காட்டியிருக்கும் இவர்களைப் போன்றவர்களை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதில் தவறே இல்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு “அரசு” பள்ளியிலும் இந்த செய்தியை பெரிதாக பிரசுரித்தால் பத்தில் ஒரு மாணவனோ அல்லது மாணவியோ இவர்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டு படிக்க ஆரம்பிக்கலாம். ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இணையாக கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளைப் பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லை. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…வாத்தியாரே ஒத்துகிட்டு போய் சேர்ந்த்திட்டாரு.

இருபது ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி குடும்பத்தை காப்பாற்றி வெறும் முன்னூறு சதுர அடிக்குள் வாழ்க்கையை நடத்தினாலும் அசால்ட்டாக தனது மகளையும் மகனையும் இந்த நிலைக்கு ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் திரு. ஜெயக்குமார் பெருமாள் அவர்கள் வசித்துக்கொண்டிருப்பது ரத்தன் டாடாவும் முகேஷ் அம்பானியும் வசிக்கும் அதே மும்பையில்தான். முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு, நன்மை வந்து சேரும் நீயும் நம்பி வந்து ஏறுன்னு பாடிய செல்லுலாய்ட் பாட்ஷாவின் கோட்டையான மும்பையில் வசித்துக்கொண்டு அந்த வரிகளுக்கும் நியாயம் சேர்த்திருக்கிறார் இந்த நிஜ பாட்ஷா. இனி அடுத்த முறை எந்த ஆட்டோவில் எங்கு ஏறினாலும் கொஞ்சம் பேசிப் பாருங்கள் அந்த ஓட்டுநரிடம்…யாருக்குத் தெரியும் அவரும் திரு. ஜெயக்குமார் பெருமாளைப் போல தனது மகனையோ அல்லது மகளையோ இம்மாதிரியான நிலைக்கு கொண்டுவருவதற்காக தன்னையே தேய்த்துக்கொண்டிருக்கலாம், அவரின் மகனோ அல்லது மகளோ தேசிய அளவில் நடக்கும் தேர்வில் முதலிடத்தை எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கலாம்.


Hats off to you Sir



 =========================================================

முழு செய்தியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்:





  
நன்றி: அரசியல்வாதிகளையும், நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் பற்றிய செய்திகளை மட்டுமே போட்டு காசு பார்த்து கடுப்பேற்றி வந்த என்.டி.டி.வி மக்களுக்கு தேவையான ஒரு நல்ல செய்தியை வழங்கியதற்காக. உருப்படியான செய்தியை போட்டா படிப்பதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கு…..புரிஞ்சுக்குங்க பாஸ். 

==========================================================

Sunday, April 15, 2012

கொம்பு முளைத்த மனிதர்கள்

இந்திய வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது நாங்களும் ரவுடிதான் என குரல்விட்டு தங்கள் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதில் ஒருவித அர்ப்ப சுகம் காண்கிறார்கள் போலத் தெரிகிறது. சமீபத்தில் ஷாருக்கானை அமெரிக்காவில் தடுத்து வைத்த விவகாரத்தில் இவர்கள் அடித்த ஜிங்சங்க்கா சத்தத்தில் காது ஜவ்வு கிழிந்து தொங்கிவிடும் போல இருக்கிறது. அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்களை முடிந்தால் கேட்டுப்பாருங்கள், இந்த மாதிரியான ஏர்போர்ட் விசாரணைகள் வழக்கமான ஒன்றுதான் என்பது தெளிவாக தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக அது அவர்கள் நாட்டின் நடைமுறை. மும்பை ஏர்போர்ட்டில் இவருக்கு சலாம் அடித்து வழிவிடுவது போலவே உலகத்தின் எல்லா இடத்திலும் இதே போல நடத்தவேண்டும் என எதிர்ப்பார்ப்பது கேவலமான மனோநிலை. இதற்காக வரிந்து கட்டிக்கொண்டு கத்திக்கொண்டிருக்கும் தூதரக அடிபொடிகளையும் வெளியுறவுத்துறையையும் நினைத்தால் நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது உனக்கு தேவையா அப்படின்னு கேட்கத் தோன்றுகிறது.

நாட்டின் எல்லா குடிமகன்களுக்காகவும் குரல் கொடுப்பதாக இருந்தால் இதேபோன்ற சூழ்நிலையை தினந்தோறும் உலகின் பல்வேறு நாடுகளில் சந்திக்கும் சாமான்ய மனிதனுக்காகவும் வரிந்து கட்டிக்கொண்டு பேசவேண்டும். அதைவிட்டு விட்டு சும்மா அரிதாரம் பூசிவிட்டார் என்பதற்காக ஒரு சாதாரண நடிகருக்காக பெரிய பந்தா காட்டுவது சகிக்கவில்லை. அமெரிக்காவில் ஏதோ இவரை மட்டும்தான் இப்படி செய்கிறார்கள் என்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வது அதை பயன்படுத்தி கொஞ்சம் விளம்பரம் தேடிக்கொள்ள முயல்வது போன்ற செயல்களை விட்டு விட்டு வேறு ஏதாவது உருப்படியாக செய்யலாம். இந்த டிராமா எல்லாம் தியேட்டரில் விசிலடிக்கும் குஞ்சுககளுக்கு ஒ.கே. ஆனால் படித்த விஷயம் தெரிந்த ஆட்கள் சீண்டவே மாட்டார்கள். ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்துல்கலாம், கமல்ஹாசன் போன்றவர்களுக்கும் இதே போன்ற சோதனைகளும் விசாரணைகளும் நடந்துள்ளன. அப்போதெல்லாம் இதே போல தேசபக்தி இவர்களுக்கு பீச்சி அடிக்கவில்லை….அதற்கான காரணமும் இன்றுவரை பிடிபடவில்லை. அப்துல்கலாமை விட நாட்டிற்காக அதிகமாக தன்னை அர்பணித்துக்கொண்டவர் ஷாருக்கான் என்பது இப்போதுதான் என்னைப் போன்றவர்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஒட்டு மொத்த நிலைமை இப்படி இருக்கும்போது ஒரு சாதாரண நடிகர் என்ன வித்தியாசமாக எதிர்பார்க்கிறார் எனத் தெரியவில்லை. இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கும் இடத்தில் இருந்துவிடலாம் அதைவிட்டு விட்டு இவ்வளவு தூரம் வருவானேன், வந்த பின் அவர்கள் நடைமுறையை குறைசொல்வது நியாயமாக படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் அது அதிபராகவே இருந்தாலும் சரி…இதெல்லாம் தெரிந்தும் தெரியாதுது போல பாவ்லா காட்டுவது சரியாக படவில்லை.

உள்ளூர் ஏர்போர்ட்களில் அதிகாலை வேளைகளில் குழந்தையும் குட்டியுமாக வந்திறங்கும் ஒரு சாமன்ய மனிதனை கடுமையாக நடத்தி வெறுப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் நம்மூர் கஸ்டம்ஸ் ஆட்களைவிட அமெரிக்காவில் பிற தேசத்தவர்களை நடத்துவிதம் எவ்வளவோ மேல். குழந்தையுடன் நிற்கும் பெண்களையும், வயதானவர்களையும் முன்னுரிமை அளித்து வழிவிடுவதில் தொடங்கி, எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களை மரியாதையுடன் விளிப்பது வரை ஒரு சக மனிதனை எந்தவிதத்திலும் மரியாதை குறைவாக நடத்துவது என்பது அரிதான ஒன்று. இதே நடத்தையை மீனம்பாக்கத்திலும், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும், மும்பை விமான நிலையத்திலும் எத்தனை அதிகாரிகள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அவர்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுவது நல்லது. துபாயிலும் கத்தாரிலும் இருந்து ஊருக்கு திரும்பும் கூலித் தொழிலாளர்களை தெரு நாயை விட கேவலமாக நடத்தும் ஆயிரம் பேரை நம்மூர் ஏர்போர்ட்களில் காட்ட முடியும். உள்ளூரில் ஆயிரம் ஓட்டையை வைத்துக்கொண்டு வெறுமனே பிரபலமானவர் என்ற ஒரு காரணத்திற்காக ஷாருக்கானுக்காக வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுப்பது ஏறக்குறைய -------------- சமம்.

தனது தனிப்பட்ட பயணமாக யேல் பல்கலைகழகத்தில் குத்து ஆட்டம் போட வந்தவரை எல்லோரையும் போல சோதனைக்கு உட்படுத்துவதை ஏதோ மகாத்மா காந்தியை ரயிலில் இருந்து தள்ளி விட்டதற்கு சமமாக பாவித்து குரலை உயர்த்துவது முட்டாள்தனமானது. அவர்கள் நாட்டிற்கு வரும்போது அவர்களின் நடைமுறைக்கு இணங்குவதில் உடன்பாடில்லை என்றால் வராமல் இருந்துவிட வேண்டும். மீறி வருவதாக இருந்தால் அந்த நாட்டு சட்டத்திற்கு உட்படுவதற்கு எந்த தயக்கத்தையும் காட்டக்கூடாது. அதைவிட்டு விட்டு ஒவ்வொரு முறை வரும்போதும் நிறுத்தி வைத்து சோதனை செய்கிறார்கள் என குறை கூறி அதில் சுய விளம்பரம் தேடிக்கொள்வது கேவலமான செயல். இதில் ஆச்சரியமான விஷயம் அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு Desi அமைப்பும் இதை பெரிய விஷயமாகவே கருதவில்லை. காரணம் அதிபராகவே இருந்தாலும் சில சட்ட நடைமுறைகள் எல்லோருக்கும் சமம் எல்லோரும் அதை மதித்தே ஆக வேண்டும். இது எல்லாம் தெரிந்தும் சும்மானாச்சும் தெரியாதது போல இந்திய தூதரக அடிபொடிகள் அலட்டிக்கொள்வது பார்க்க சகிக்கவில்லை.

இவர் புகழ்பெற்ற நடிகர் என்பதற்காக இவருக்கு சட்ட நடைமுறைகள் பொருந்தாது என சொல்ல வருகிறார்களா என தெரியவில்லை. இதே நடைமுறையைதான் இந்தியாவில் எல்லா ஏர்போர்ட்டிலும் இவருக்கு தருவார்களா எனத் தெரியவில்லை. வேலை விஷயமாக வெளிநாடு செல்பவர்களும், திரும்பி வருபவர்களும் தினசரி கடந்து செல்லும் ஒரு இயல்பான தேவையான நிகழ்வை ஏதோ மாபெரும் தவறு என்பது போல சித்தரிக்க முயல்வது அபத்தமாக இருக்கிறது. ஷாருக்கானைப் போலவே எல்லா சாப்ட்வேர் என்ஜினியர்களும் ஒழுங்காக தங்கள் வரியை அரசுக்கு செலுத்துகிறார்கள், இன்னும் சொல்லப்போனால் அவர்களிடம் நடிகர்களிடம் இருப்பது போல கறுப்பு பணம் போன்ற வஸ்துக்கள் எல்லாம் குறைவு அல்லது இல்லவே இல்லை. ஷாருக்கானுக்கு கொடுக்கும் அதே சலுகையை/ மரியாதையை முதலில் இந்திய விமான நிலையங்களில் ஒழுங்காக வரி செலுத்தும் எல்லோருக்கும் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. நடிப்பு அவரது தொழில் மற்றபடி இந்தியாவின் சராசரி அரசு ஊழியருக்கும் அவருக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. சும்மா மும்பையில் உட்கார்ந்து கொண்டு உலகமே தங்கள் காலடியில் போன்ற கனவில் மிதப்பதால் வரும் வினை இதெல்லாம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கூத்தெல்லாம் முடிந்தபின் யேல் பல்கலைக்கழகத்தில் அவர் விட்ட உதாரை கேட்டபோது அடுத்த முறை வரும்போது இவரை கூடுதலாக மேலும் பல மணிநேரம் நிற்க வைத்தாலும் தப்பே இல்லை எனத் தோன்றுகிறது. தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு சரியான உதாரணம். எஸ்.எம்.கிருஷ்ணாக்களும் நிருபமா ராவ்களும் தங்கள் போலி தேச பக்தியை ஒரு நடிகருக்காக வரிந்து கட்டிக்கொண்டு காட்டுவதை நிறுத்தாதவரை இம்மாதிரியான நிகழ்வுகளை இந்திய மீடியாக்களும் சாதாரணமாக கடந்து போகப் போவதில்லை.

கொசுறு: முடிந்தால் மும்பைக்குள் நுழைந்து பார் என ஒரு மாநில முதல்வரை நோக்கி சவால் விடும் ராஜ் தாக்கரே போன்ற கொசுக்களை கண்டிப்பதற்கு எந்த மத்திய அமைச்சருக்காவது துணிவு இருக்கிறதா என இதுவரை தெரியவில்லை. எஸ்.எம்.கிருஷ்ணா, ப.சி. போன்றவர்கள் எல்லாம் எங்கிருக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை. ஷாருக்கானுக்காக வரிந்து கட்டிக்கொண்டு மூச்சுவிடாமல் கதறிக்கொண்டிருக்கும் மீடியா ஆட்களை நோக்கி இப்படி கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது…Do you guys have balls to stand up and speak the truth?

Tuesday, January 3, 2012

தென்கச்சி கோ. சுவாமிநாதன்

இன்று ஒரு தகவல்…எல்லோராலும் ரசிக்கபட்ட நிகழ்ச்சி. இப்போது மறு ஒலிபரப்பு செய்தாலும் நின்று கேட்டுவிட்டு செல்லலாம். ஆல் இந்திய ரேடியோவில் ஒலிப்பரப்பபட்ட பல நிகழ்ச்சிகள் மிகவும் கடியானதாக இருந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் இன்னமும் நினைவுகளில் பசுமையாக இருக்கின்றன. தென்கச்சி அவர்களின் ஐந்து நிமிட பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காக சரோஜ் நாராயண்சாமி செய்தியை வாசித்து முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்ததெல்லாம் வாழ்க்கையின் பொற்கால தருணங்கள். சரோஜ் நாராயண்சாமி ஆணா அல்லது பெண்ணா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்தது வேறு கதை.

ஐந்து நிமிடத்திற்கும் குறைவாகவே ஒலிபரப்பான இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை இன்றைய தேதி வரை மற்ற எந்த ஒலிபரப்பாலும் அடித்துக்கொள்ள முடியவில்லை. ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே செல்லும் தொலைக்காட்சி தொடரை இயக்கும் இயக்குநர்கள் ஏன் இந்த மாதிரி Short & Sweet ஆன நிகழ்ச்சியை யோசிக்காமலே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே இவர் சொல்லும் சில குட்டி கதைகளும், உதாரணங்களும் தான். நிகழ்ச்சியை ஆரம்பிக்கும்போதே மிகவும் யதார்த்தமாக எந்த வித பில்டப்பும் இல்லாமல் டாப் கியரில் மேட்டருக்குள் சென்றுவிடும் இவரின் இயல்பான பேச்சு நடை கேட்பதற்கு இனிமையானது. “இத இப்ப இங்க எதுக்கு சொல்றேன்னா” என இவர் பேசும் அந்த கோவை வட்டார பேச்சு காலையில் சிடு சிடுவென இருக்கும் மனிதர்களின் முகங்களில்கூட புன்னகையை வரவழைத்துவிடும்.

தமிழ்நாட்டில் சில குரல்கள் ஏறக்குறைய எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமானதாயிருக்கும். TMS, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், எம்.என்.நம்பியார், எம்.எஸ்.எஸ், சாலமன் பாப்பையா என நீண்டுகொண்டே போகும் இந்த பட்டியலில் சந்தேகேமே இல்லாமல் திரு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் பெயரையும் சேர்த்துவிடலாம். விநாடி வினா, வயலும் வாழ்வும், இன்று ஒரு தகவல், L.R.Swamy விளம்பரம் என ஒரு காலத்தில் லயித்திருந்த ஆல் இந்திய ரேடியோ நிகழ்ச்சிகள் இன்று கேட்க விரும்பினாலும் கிடைக்காத பொக்கிஷங்களாக மாறி இன்னும் ஒரு வருடம் பின்னோக்கி போய்விட்டன. ஆனால் அந்த குரல்கள் மட்டும் மனதிற்குள் ஓயாமல் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றன.