Sunday, April 15, 2012

கொம்பு முளைத்த மனிதர்கள்

இந்திய வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது நாங்களும் ரவுடிதான் என குரல்விட்டு தங்கள் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதில் ஒருவித அர்ப்ப சுகம் காண்கிறார்கள் போலத் தெரிகிறது. சமீபத்தில் ஷாருக்கானை அமெரிக்காவில் தடுத்து வைத்த விவகாரத்தில் இவர்கள் அடித்த ஜிங்சங்க்கா சத்தத்தில் காது ஜவ்வு கிழிந்து தொங்கிவிடும் போல இருக்கிறது. அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்களை முடிந்தால் கேட்டுப்பாருங்கள், இந்த மாதிரியான ஏர்போர்ட் விசாரணைகள் வழக்கமான ஒன்றுதான் என்பது தெளிவாக தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக அது அவர்கள் நாட்டின் நடைமுறை. மும்பை ஏர்போர்ட்டில் இவருக்கு சலாம் அடித்து வழிவிடுவது போலவே உலகத்தின் எல்லா இடத்திலும் இதே போல நடத்தவேண்டும் என எதிர்ப்பார்ப்பது கேவலமான மனோநிலை. இதற்காக வரிந்து கட்டிக்கொண்டு கத்திக்கொண்டிருக்கும் தூதரக அடிபொடிகளையும் வெளியுறவுத்துறையையும் நினைத்தால் நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது உனக்கு தேவையா அப்படின்னு கேட்கத் தோன்றுகிறது.

நாட்டின் எல்லா குடிமகன்களுக்காகவும் குரல் கொடுப்பதாக இருந்தால் இதேபோன்ற சூழ்நிலையை தினந்தோறும் உலகின் பல்வேறு நாடுகளில் சந்திக்கும் சாமான்ய மனிதனுக்காகவும் வரிந்து கட்டிக்கொண்டு பேசவேண்டும். அதைவிட்டு விட்டு சும்மா அரிதாரம் பூசிவிட்டார் என்பதற்காக ஒரு சாதாரண நடிகருக்காக பெரிய பந்தா காட்டுவது சகிக்கவில்லை. அமெரிக்காவில் ஏதோ இவரை மட்டும்தான் இப்படி செய்கிறார்கள் என்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வது அதை பயன்படுத்தி கொஞ்சம் விளம்பரம் தேடிக்கொள்ள முயல்வது போன்ற செயல்களை விட்டு விட்டு வேறு ஏதாவது உருப்படியாக செய்யலாம். இந்த டிராமா எல்லாம் தியேட்டரில் விசிலடிக்கும் குஞ்சுககளுக்கு ஒ.கே. ஆனால் படித்த விஷயம் தெரிந்த ஆட்கள் சீண்டவே மாட்டார்கள். ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்துல்கலாம், கமல்ஹாசன் போன்றவர்களுக்கும் இதே போன்ற சோதனைகளும் விசாரணைகளும் நடந்துள்ளன. அப்போதெல்லாம் இதே போல தேசபக்தி இவர்களுக்கு பீச்சி அடிக்கவில்லை….அதற்கான காரணமும் இன்றுவரை பிடிபடவில்லை. அப்துல்கலாமை விட நாட்டிற்காக அதிகமாக தன்னை அர்பணித்துக்கொண்டவர் ஷாருக்கான் என்பது இப்போதுதான் என்னைப் போன்றவர்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஒட்டு மொத்த நிலைமை இப்படி இருக்கும்போது ஒரு சாதாரண நடிகர் என்ன வித்தியாசமாக எதிர்பார்க்கிறார் எனத் தெரியவில்லை. இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கும் இடத்தில் இருந்துவிடலாம் அதைவிட்டு விட்டு இவ்வளவு தூரம் வருவானேன், வந்த பின் அவர்கள் நடைமுறையை குறைசொல்வது நியாயமாக படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் அது அதிபராகவே இருந்தாலும் சரி…இதெல்லாம் தெரிந்தும் தெரியாதுது போல பாவ்லா காட்டுவது சரியாக படவில்லை.

உள்ளூர் ஏர்போர்ட்களில் அதிகாலை வேளைகளில் குழந்தையும் குட்டியுமாக வந்திறங்கும் ஒரு சாமன்ய மனிதனை கடுமையாக நடத்தி வெறுப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் நம்மூர் கஸ்டம்ஸ் ஆட்களைவிட அமெரிக்காவில் பிற தேசத்தவர்களை நடத்துவிதம் எவ்வளவோ மேல். குழந்தையுடன் நிற்கும் பெண்களையும், வயதானவர்களையும் முன்னுரிமை அளித்து வழிவிடுவதில் தொடங்கி, எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களை மரியாதையுடன் விளிப்பது வரை ஒரு சக மனிதனை எந்தவிதத்திலும் மரியாதை குறைவாக நடத்துவது என்பது அரிதான ஒன்று. இதே நடத்தையை மீனம்பாக்கத்திலும், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும், மும்பை விமான நிலையத்திலும் எத்தனை அதிகாரிகள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அவர்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுவது நல்லது. துபாயிலும் கத்தாரிலும் இருந்து ஊருக்கு திரும்பும் கூலித் தொழிலாளர்களை தெரு நாயை விட கேவலமாக நடத்தும் ஆயிரம் பேரை நம்மூர் ஏர்போர்ட்களில் காட்ட முடியும். உள்ளூரில் ஆயிரம் ஓட்டையை வைத்துக்கொண்டு வெறுமனே பிரபலமானவர் என்ற ஒரு காரணத்திற்காக ஷாருக்கானுக்காக வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுப்பது ஏறக்குறைய -------------- சமம்.

தனது தனிப்பட்ட பயணமாக யேல் பல்கலைகழகத்தில் குத்து ஆட்டம் போட வந்தவரை எல்லோரையும் போல சோதனைக்கு உட்படுத்துவதை ஏதோ மகாத்மா காந்தியை ரயிலில் இருந்து தள்ளி விட்டதற்கு சமமாக பாவித்து குரலை உயர்த்துவது முட்டாள்தனமானது. அவர்கள் நாட்டிற்கு வரும்போது அவர்களின் நடைமுறைக்கு இணங்குவதில் உடன்பாடில்லை என்றால் வராமல் இருந்துவிட வேண்டும். மீறி வருவதாக இருந்தால் அந்த நாட்டு சட்டத்திற்கு உட்படுவதற்கு எந்த தயக்கத்தையும் காட்டக்கூடாது. அதைவிட்டு விட்டு ஒவ்வொரு முறை வரும்போதும் நிறுத்தி வைத்து சோதனை செய்கிறார்கள் என குறை கூறி அதில் சுய விளம்பரம் தேடிக்கொள்வது கேவலமான செயல். இதில் ஆச்சரியமான விஷயம் அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு Desi அமைப்பும் இதை பெரிய விஷயமாகவே கருதவில்லை. காரணம் அதிபராகவே இருந்தாலும் சில சட்ட நடைமுறைகள் எல்லோருக்கும் சமம் எல்லோரும் அதை மதித்தே ஆக வேண்டும். இது எல்லாம் தெரிந்தும் சும்மானாச்சும் தெரியாதது போல இந்திய தூதரக அடிபொடிகள் அலட்டிக்கொள்வது பார்க்க சகிக்கவில்லை.

இவர் புகழ்பெற்ற நடிகர் என்பதற்காக இவருக்கு சட்ட நடைமுறைகள் பொருந்தாது என சொல்ல வருகிறார்களா என தெரியவில்லை. இதே நடைமுறையைதான் இந்தியாவில் எல்லா ஏர்போர்ட்டிலும் இவருக்கு தருவார்களா எனத் தெரியவில்லை. வேலை விஷயமாக வெளிநாடு செல்பவர்களும், திரும்பி வருபவர்களும் தினசரி கடந்து செல்லும் ஒரு இயல்பான தேவையான நிகழ்வை ஏதோ மாபெரும் தவறு என்பது போல சித்தரிக்க முயல்வது அபத்தமாக இருக்கிறது. ஷாருக்கானைப் போலவே எல்லா சாப்ட்வேர் என்ஜினியர்களும் ஒழுங்காக தங்கள் வரியை அரசுக்கு செலுத்துகிறார்கள், இன்னும் சொல்லப்போனால் அவர்களிடம் நடிகர்களிடம் இருப்பது போல கறுப்பு பணம் போன்ற வஸ்துக்கள் எல்லாம் குறைவு அல்லது இல்லவே இல்லை. ஷாருக்கானுக்கு கொடுக்கும் அதே சலுகையை/ மரியாதையை முதலில் இந்திய விமான நிலையங்களில் ஒழுங்காக வரி செலுத்தும் எல்லோருக்கும் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. நடிப்பு அவரது தொழில் மற்றபடி இந்தியாவின் சராசரி அரசு ஊழியருக்கும் அவருக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. சும்மா மும்பையில் உட்கார்ந்து கொண்டு உலகமே தங்கள் காலடியில் போன்ற கனவில் மிதப்பதால் வரும் வினை இதெல்லாம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கூத்தெல்லாம் முடிந்தபின் யேல் பல்கலைக்கழகத்தில் அவர் விட்ட உதாரை கேட்டபோது அடுத்த முறை வரும்போது இவரை கூடுதலாக மேலும் பல மணிநேரம் நிற்க வைத்தாலும் தப்பே இல்லை எனத் தோன்றுகிறது. தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு சரியான உதாரணம். எஸ்.எம்.கிருஷ்ணாக்களும் நிருபமா ராவ்களும் தங்கள் போலி தேச பக்தியை ஒரு நடிகருக்காக வரிந்து கட்டிக்கொண்டு காட்டுவதை நிறுத்தாதவரை இம்மாதிரியான நிகழ்வுகளை இந்திய மீடியாக்களும் சாதாரணமாக கடந்து போகப் போவதில்லை.

கொசுறு: முடிந்தால் மும்பைக்குள் நுழைந்து பார் என ஒரு மாநில முதல்வரை நோக்கி சவால் விடும் ராஜ் தாக்கரே போன்ற கொசுக்களை கண்டிப்பதற்கு எந்த மத்திய அமைச்சருக்காவது துணிவு இருக்கிறதா என இதுவரை தெரியவில்லை. எஸ்.எம்.கிருஷ்ணா, ப.சி. போன்றவர்கள் எல்லாம் எங்கிருக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை. ஷாருக்கானுக்காக வரிந்து கட்டிக்கொண்டு மூச்சுவிடாமல் கதறிக்கொண்டிருக்கும் மீடியா ஆட்களை நோக்கி இப்படி கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது…Do you guys have balls to stand up and speak the truth?

No comments: