Wednesday, May 9, 2012

நித்தி-யிஸம்-பவர்


முடி துறந்து சாமியார் ஆனவர்களை பற்றி படித்து படித்து போரடித்திருந்த வேளையில் மாடர்ன் டே சாமியார்கள் துறவை மறந்து லெளதீக வாழ்க்கைக்கு திரும்பி வருவதற்காக ஏகத்துக்கும் மெனக்கெடுவதை பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. மதுரை ஆதீனமாக “நித்தியை” நியமித்த ஒலி-ஒளியைப் பார்த்த போது சிறுவயதில் இராமாயணத் தொலைக்காட்சித் தொடரில் பார்த்த ராமர் பட்டாபிஷேக வைபவம் நினைவில் நுழைந்து சடாரென விலகியது. இப்பொழுது ஆதீனமாக இருப்பவரும் நித்தியும் ஒருவருக்கொருவர் கிரீடத்தை தங்கள் தலைகளில் மாற்றி மாற்றி வைத்து புளங்காகிதம் அடைவதை எல்லா தொலைக்காட்சியும் ஐபிஎல் கிரிக்கெட் மேட்சுக்கு இணையாக கவர் செய்தது காணக் கிடைக்காதது. கூடிய விரைவில் மக்கள் காதில் இவர்கள் வைக்கபோகும் பூவையும் அப்படியே படம் பிடிக்க நம்மூர் மீடியாக்காரர்கள் இதே போல தயாராக இருப்பார்கள் என நம்புகிறேன்.

மக்கள் மத்தியில் சாமியார்கள் சர்வலோக வலி நிவாரணி மாதிரி மாறிவிட்டார்கள், இல்லாவிட்டால் சர்வ சாதரணமாக ஒரு கோடி ரூபாயை ஆதீனத்திற்கு அள்ளித் தெளித்துவிட்டு இன்னும் பல கோடியை பிறகு தருவேன் என நித்தி பேசுவதை எல்லாம் மக்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலைக்கு நாடு சென்றிருக்காது. ஐந்துக்கும் பத்துக்கும் இப்படி கீ-போர்டை தட்டிக்கொண்டிருப்பதற்கு பதிலாக சுவாமி ஜில்பானாந்தா மாதிரி ஏதாவது செய்து பார்க்கலாமா என்பதைப் போன்ற விபரீத கேள்விகளையெல்லாம் சில நண்பர்கள் விளையாட்டாக கேட்பதைப் பார்த்தால் விரக்தியின் உச்சியின் இருப்பவன் எவனாவது நிஜமாலுமே காவியை கையில் எடுத்து களங்கப்படுத்திவிடுவானோ என அடிவயிற்றில் கிலி பிடிக்கிறது.

கடவுள் பெயரை சொல்லி எவன் எவ்வளவு கறுப்பு பணத்தை சேர்த்தாலும் வருமானத்துறை அதிகாரிகள் கண்ணை கட்டிக்கொள்வார்கள் போலத் தெரிகிறது. முற்றும் துறந்தவனுக்கு எதற்கு தங்கத்தில் கிரீடமும் கேளிக்கை விடுதியை மிஞ்சும் செட்டப்பில் மடங்களும் என்பது மண்டையை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. மூன்று வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவல பாதையில் மூன்றாம் ஜாமத்தில் கஞ்சாவை உறிஞ்சியபடி அமாவாசை கரும் இருளில் நண்பர்களுடன் பேசியபடியே வந்த பேர் தெரியாத சித்தர் பாடிய பட்டினத்தார் பாடல் இன்றைய சாமியார்களுக்கு சாலப் பொருத்தம்.

“பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின் திருவடிக்கண்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் கச்சியேகம்பனே”
=============================================================================================
ஆட்களை கடத்துவது நிச்சயமாக மாவோயிஸமும் இல்லை ஹீரோயிஸமும்  இல்லை என்பதை யாரவது ஒரு பக்கா கம்யூனிஸ்ட் தோழர், மாவோயிஸ்ட்டுகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் கூட்டத்திடம் சொல்லிவிடுவது நல்லது. எம்.எல்.ஏ, கலெக்டர் என இவர்கள் தொடர்ந்து மனிதர்களை கடத்துவதால் மார்க்ஸியம் மீதான தவறான இமேஜை தொடந்து உருவாக்கி கொண்டேயிருக்கிறார்கள். புரட்சி செய்பவனாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் சேகுவாரே-வின் டி-சர்ட்டை அணிந்து கொள்வதால் மட்டுமே பெரிய ஹீரோவாக மாறிவிடமுடியாது என்பதை யாராவது இவர்களுக்கு ஒதி விடுவது நலம்.

மாவோ-வும், இன்ன பிற கம்யூனிஸ்ட் பெருந்தலைகளும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவர்கள் போராட்டம் உழைக்கும் வர்க்கத்தை முன்னிறுத்தி மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய அதிரி புதிரிகள் வெறும் கப்பம் வசூலிப்பதற்காக அந்த கொள்கைகளை பயன்படுத்திக் கொள்வது சகிக்கவில்லை. இதற்கு பேசாமல் முதலாளித்துவத்தை தழுவிவிடலாம் அட்லீஸ்ட் பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். நாடோடி மன்னனில் எம்ஜியார் செய்த சாகஸகங்களையெல்லாம் கி.பி.2012 இல் செய்வேன் என இவர்கள் அடம்பிடிப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது அதுவும் நிஜத்தில். அப்படியே எதையாவது செய்தே தீருவேன் என அடம்பிடிப்பவர்கள் மக்களை நிஜமாகவே கொள்ளையடிப்பவர்களை கவனித்துக்கொண்டால் இந்தியாவின் 99.9% மக்கள் ஏன் என்று கூட கேட்கமாட்டார்கள். அதை விட்டுவிட்டு அமைதியாக தங்கள் பணியை செய்பவர்களையெல்லாம் சீண்டிக்கொண்டிருப்பதும் ஒன்றும் அறியாத கடைநிலை ஊழியர்களை சுட்டுக்கொல்வதும் மன்னிக்கவேமுடியாத குற்றம்.  

========================================================================================
காற்றாலை மூலமாக கிடைத்த/கிடைக்கும் அளவிற்கு அதிகமான மின்சாரத்தை சேமித்து வைக்க போதிய வசதிகள் இல்லை என்ற மின்சார வாரிய அறிக்கையினை சமீபத்தில் படித்தவுடன் தமிழ்நாட்டில் வெய்யிலில் அலையாமலே புத்தி பேதலித்தவனை போன்ற நிலையை உணர்ந்தேன். எப்பேர்ப்பட்ட அபாரமான புத்திசாலிகள்…நினைத்தாலே புல்லரிக்கிறது. மின்சாரத்துறை அமைச்சர் எதுக்கும் அம்மா கண்களில் படாமல் இருந்துகொள்வது நலம் இல்லையென்றால் ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில்  அம்மா ராஜ்பவனுக்கு கடிதம் அனுப்பிவிடுவார்கள். அப்புறம் ஹை-வோல்டேஜை தொடாமலே ஷாக் அடித்தது போன்ற ஒரு அனுபவம் கிட்டிவிடும்.

ஒரு பக்கம் பற்றாக்குறை இன்னொரு பக்கம், அள்ளி அள்ளி கொடுத்தாலும் அதை ஒழுங்காக உபயோக படுத்திக் கொள்ளத் தெரியாத கூட்டம். தமிழ்நாட்டு மக்களை சனி பகவான் ஒரு கை பார்க்காமல் போகமாட்டர் போலத் தெரிகிறது. ஒட்டுமொத்த ஜனங்களும் திருநள்ளாறு போய் வணங்கி நின்றாலும் கருணையே காட்டமாட்டார் என நம்புவோமாக. மழை பெய்தால் அதை வீணாக கடலில் கலக்கவிட்டு விட்டு மறுநாளே தண்ணீர் பஞ்சம் என தலையில் கைவைத்துக் கொள்வது, உபரியாக மின்சாரத்தை உற்பத்தி செய்தால் Capacitor Capacity தீர்ந்து போச்சு என பொறுப்பில்லாமல் பேசுவது…என்னப்பா நடக்குது…கத்திரி வெயில் காய்ச்சி எடுக்குது அது போதாதா இன்னும் நீங்க வேற இப்படி தனியா போட்டு வறுத்தெடுக்கனுமா…...ஓட்டு போட்ட மக்களுக்கு இப்படியெல்லாம் வேட்டு வைக்கனுமா..கொஞ்சம் யோசிச்சு செய்யுங்கப்பு.

Pre-Planning, Proactive Measure போன்ற வார்த்தைகள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லை என்பதை நம்மூர் மின்சாரத்துறை ஊழியர்களிடமும் அவர்களின் அமைச்சரிடமும் எடுத்து புரியும்படியாக சொல்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் 24X7 மின்சாரவசதி கொண்ட ஏதாவது ஒரு மேற்கத்திய தேசத்தில் பிறப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகம். மனிதனாக பிறக்காவிட்டாலும் அவர்கள் வீட்டு பூனைக்குட்டியாகவோ அல்லது நாய்க்குட்டியாகவோ பிறப்பது சர்வ நிச்சயம்.

காற்றாலைகளில் இருந்து வரும் சிறிய அளவிலான மின்சாரத்தையே சேமித்து வைக்க வழிக்க தெரியாமல் திணறுபவர்கள் கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் வழங்கவேண்டும் என கேட்பது புரியாத லாஜிக்காக இருக்கிறது. அப்படியே முழுதாக வழங்கினாலும் இதே டயலாக்கை மீண்டும் சொல்லிவிடுவார்களோ என நினைத்தால் இப்போதே இருட்டிக்கொண்டு வருகிறது.


1 comment:

புதுகை.அப்துல்லா said...

அண்ணே, நலமா? என்னைப்போலவே நீங்களும் எழுதுவதை முற்றிலும் நிறுத்திட்டீங்களா?