நடுத்தர மக்களை
அதிகமாக பாதிப்பது நம்மூர் ஆட்டோக்காரர்களின் அநியாயமான கட்டணமா அல்லது அரசியல்வாதிகளின்
லஞ்ச ஊழலா என பட்டிமன்றம் வைத்தால் ஆட்டோக்காரர்கள் முந்திவிடுவார்கள் என்பதில் சந்தேகமே
இல்லை. சென்னை உள்பட தமிழகத்தின் எந்த ஊருக்கு சென்றாலும் சொல்லி வைத்தாற்போல இவர்கள்
மக்களை வஞ்சமின்றி ஏமாற்றுவதை இலவசமாக காணலாம். சவாரியே போகாமல் படுத்துக்கொண்டிருப்பார்களே
தவிர கொஞ்சம் குறைத்து கேட்டாலும் வண்டியையே நகர்த்தமாட்டார்கள். நியாயமாக மீட்டர்
போட்டால் எவ்வளவு வருமோ அதையும் தாண்டி கொடுக்க மக்கள் தயாராக மக்கள் இருந்தாலும் இவர்கள்
வாய்க்கு வந்ததை நிர்ணயித்துக்கொண்டு அதை தரவேண்டும் என சிலநேரங்களில் பிடிவாதம் பிடிப்பது
மக்களை கடுப்பில் ஆழ்த்தில் விடுகிறது.
பெங்களூரில் இவர்களின்
சக தோழர்கள் கொஞ்சம் சுமார்…மீட்டரை போட்டுவிடுவார்கள், மீட்டருக்குமேல் கொஞ்சம் கேட்டுவிட்டு
சவாரியை ஏற்றிசெல்வார்கள். இரவு நேரங்களில் ஒன்றரை மடங்கு கட்டணம் கொடுத்தால் பெரும்பாலும்
வந்துவிடுவார்கள். மெஜஸ்டிக், சிட்டி ஸ்டேஷன் போன்ற இடங்களில் உள்ள ப்ரீபெய்ட் ஆட்டோக்கள்
மகா உத்தமம். கொஞ்சம் கால் கடுக்க வரிசையில் நின்றாலும் அதிக தொந்தரவு இல்லாமல் நியாயமான
கட்டணத்திற்கு ஒழுங்காக இலக்கைப் போய்ச் சேரலாம். வரிசையில் நிற்க பொறுமையில்லாமல்
ரோட்டிற்கு வருபவர்கள் திரும்பவும் வரிசைக்கே சென்று நின்றுவிடுவார்கள் ஏனென்றால் ரோட்டில்
வரும் ஆட்டோக்காரர்கள் பாதி பேர் நீங்கள் கேட்கும் இடத்திற்கு வரவே மாட்டார்கள் வருவதாக
இருந்தாலும் மீட்டருக்கு மேல் காசை பார்க்காமல் வண்டியை நகர்த்தவே மாட்டார்கள்.
மும்பை
புறநகர் ஏரியாக்களில் ஆட்டோக்காரர்கள் ரொம்பவே மேல். மீட்டருக்கு ஆகும் தொகையை மட்டும்
எடுத்துக்கொண்டு மீதி சில்லரையை பவ்யமாக கொடுத்துவிடுகிறார்கள். முதல்முறையாக இதை பார்ப்பவர்களுக்கு
கிம் கர்தாஷியானை பார்த்தது போல கொஞ்சம் ஷாக்காக இருக்கலாம் ஆனால் அதுதான் நிஜம். நம்மூரில் இவர்கள்
செய்யும் அடாவடிகளையும் தாண்டி ஒரு சில நல்ல உள்ளம் படைத்த ஆட்டோக்காரர்கள் இருக்கவேதான்
செய்கிறார்கள். எங்கள் வீட்டின் அருகில் இருந்த ஒரு ஆட்டோக்காரர் காலையில் சவாரி செல்லும்போது
வயசானவர்கள் தெருவில் சென்றால் அவர் நிற்குமிடம் வரை இலவசமாக ஏற்றி செல்வதை பார்த்திருக்கிறேன்.
இப்படி செய்ததால் அவர் மீது ஒரு தனி மரியாதையே ஏற்பட்டுவிட்டது.
இதுபோக தினந்தந்தியில்
சிந்துபாத்துக்கு கீழே ஏதாவது ஒரு ஊரில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோகாரரை பற்றிய செய்தி
சில வேளைகளில் கண்ணில்படும். பெரும்பாலான நேரங்களில் இந்த மாதிரியான செய்திகளில் வரும்
ஆட்டோகாரர்கள் யாரவது பயணிகள் தங்கள் ஆட்டோக்களில் தவறிவிட்டுச் சென்ற பொருளை அப்படியே
கொண்டுபோய் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சேர்த்திருப்பார்கள். கொஞ்சமும் யோசிக்காமல்
பாராட்டுவது என்றால் இவர்களைத்தான் பாராட்டவேண்டும். பொதுமக்களில் எத்தனை பேர் இம்மாதிரியான
ஆட்டோக்காரர்களுக்கு நினைவு பரிசை வழங்கியிருப்பார்கள் எனத் தெரியவில்லை போலீஸ் துறையைச்
சேர்ந்தவர்கள் இவர்களுக்கு சன்மானம் கொடுத்து கவுரவிப்பதை அடிக்கடி செய்திகளில் காண
நேரிடும். அநியாய ரேட்டை கேட்கும் ஆட்டோக்காரர்களை திட்டித் தீர்க்கும் பொதுமக்கள்
நல்லது செய்யும் சில ஆட்டோக்காரர்களை கவுரப்படுத்தி பார்க்கவும் கற்றுக்கொள்ளுதல் நலம்.
இதைப்பார்க்கும் மற்ற ஆட்டோக்காரர்கள் மனசு மாற வாய்ப்பு இருக்கின்றது.
ஆட்டோக்காரர்களின்
மீது செம கடுப்பில் இருக்கும் போதேல்லாம் ஏதாவது ஒருவர் ஒரு நல்ல விஷயத்தை செய்ததாக
வரும் செய்தி அந்த வருத்தத்தை போக்கி விடுவதுண்டு. இவர்தாண்டா ஆட்டோக்காரர்ன்னு சொல்லி கொள்கிற மாதிரியான ஒரு செய்தி இன்றைக்கு கண்ணில்
பட்டுவிட்டது. அவரைப்பற்றிய செய்தியை சொல்வதற்கு முன்னால், டாஸ்மாக்கில் குடித்துவிட்டு சவாரிக்கு போகாமல் அல்லது குறைந்த
வாடகைக்கு வரமாட்டேன் என சொல்லிவிட்டு குப்புற கவிழ்ந்து படுத்துக்கொண்டிருக்கும் எல்லா
ஆட்டோக்காரர்களும் இனி தங்கள் ஆட்டோக்களில் மாட்டி வைத்திருக்கும் தங்கள் டுபாக்கூர்
தலைவர்கள் படங்களையும், கில்மா நடிக நடிகையர் படங்களையும் ஓரம் கட்டிவிட்டு திரு. ஜெயக்குமார்
பெருமாள் என்னும் இந்த ஆட்டோக்காரரின் படத்தை மாட்டிக்கொள்வது நல்லது. அப்படி மாட்டினால் காலை முதல் மாலை
வரை சவாரி கிடைக்க எம்பெருமான் முருகன் அருள் புரிவார்….சர்வ நிச்சயமாக, அதுவும் நீங்கள் கேட்கும் நியாயமான வாடகைக்கே.
ஒரு தனிமனிதர்
ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களையும் ஒரே நாளில் தலைநிமிரும்படி செய்தததோடு மட்டுமல்லாமல்
அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும்படியான தலைவராக உயர்ந்து
நிற்கிறார். தனிமனிதராக மிகுந்த கஷ்டத்திற்கு இடையிலும் தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை
அளித்திருக்கிறார் இவர். நன்றி மறப்பது நன்றல்ல என்ற வார்த்தையை தெளிவாக உணர்ந்து கொண்ட
இவரின் குழந்தைகள் இவரை இன்று உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்து பெருமை சேர்த்திருக்கிறார்கள்
தேசிய அளவில் நடந்த சார்டர்ட் அக்கெளன்டன்ட் தேர்வில் இவரது மகள் செல்வி. பிரேமா ஜெயக்குமார்
முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். அதுவும் முதல் முயற்சியிலேயே இந்த சாதனையை புரிந்திருக்கிறார்.
தான் படித்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய சகோதரர் திரு. தன்ராஜ் ஜெயக்குமாரையும் ஊக்கப்படுத்தி
அவரையும் இந்த தேர்வில் முதல் முயற்சியில் வெற்றிபெற வழி நடத்தியிருக்கிறார். டபுள்
டமாக்கா அப்படின்னு சொல்லுவார்களே அதுதான் நடந்திருக்கிறது இவர்கள் குடும்பத்தில்.
இவர்கள் பற்றிய செய்தியை முழுமையாக படித்து முடித்தவுடன் பாராட்டுக்கள் என்னும் ஒற்றை
வார்த்தையுடன் கடந்து போக முடியவில்லை. வெறும் வெற்று பந்தாவுக்காக எல்.கே.ஜிக்கே இலட்சங்களை
கொட்டிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் இத்தனை பெரிய சாதனையை கடின உழைப்பின்
மூலம் நடத்திக்காட்டியிருக்கும் இவர்களைப் போன்றவர்களை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதில்
தவறே இல்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு “அரசு” பள்ளியிலும் இந்த செய்தியை பெரிதாக பிரசுரித்தால்
பத்தில் ஒரு மாணவனோ அல்லது மாணவியோ இவர்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டு படிக்க ஆரம்பிக்கலாம்.
ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இணையாக கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளைப் பற்றி சொல்வதற்கு
எதுவுமே இல்லை. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…வாத்தியாரே
ஒத்துகிட்டு போய் சேர்ந்த்திட்டாரு.
இருபது ஆண்டுகளாக
ஆட்டோ ஒட்டி குடும்பத்தை காப்பாற்றி வெறும் முன்னூறு சதுர அடிக்குள் வாழ்க்கையை நடத்தினாலும்
அசால்ட்டாக தனது மகளையும் மகனையும் இந்த நிலைக்கு ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் திரு.
ஜெயக்குமார் பெருமாள் அவர்கள் வசித்துக்கொண்டிருப்பது ரத்தன் டாடாவும் முகேஷ் அம்பானியும்
வசிக்கும் அதே மும்பையில்தான். முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு, நன்மை வந்து
சேரும் நீயும் நம்பி வந்து ஏறுன்னு பாடிய செல்லுலாய்ட் பாட்ஷாவின் கோட்டையான மும்பையில்
வசித்துக்கொண்டு அந்த வரிகளுக்கும் நியாயம் சேர்த்திருக்கிறார் இந்த நிஜ பாட்ஷா. இனி
அடுத்த முறை எந்த ஆட்டோவில் எங்கு ஏறினாலும் கொஞ்சம் பேசிப் பாருங்கள் அந்த ஓட்டுநரிடம்…யாருக்குத்
தெரியும் அவரும் திரு. ஜெயக்குமார் பெருமாளைப் போல தனது மகனையோ அல்லது மகளையோ இம்மாதிரியான
நிலைக்கு கொண்டுவருவதற்காக தன்னையே தேய்த்துக்கொண்டிருக்கலாம், அவரின் மகனோ அல்லது
மகளோ தேசிய அளவில் நடக்கும் தேர்வில் முதலிடத்தை எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கலாம்.
Hats off to you Sir
=========================================================
முழு செய்தியை
கீழே உள்ள இணைப்பில் காணலாம்:
நன்றி: அரசியல்வாதிகளையும்,
நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் பற்றிய செய்திகளை மட்டுமே போட்டு காசு பார்த்து
கடுப்பேற்றி வந்த என்.டி.டி.வி மக்களுக்கு தேவையான ஒரு நல்ல செய்தியை வழங்கியதற்காக.
உருப்படியான செய்தியை போட்டா படிப்பதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கு…..புரிஞ்சுக்குங்க
பாஸ்.
==========================================================

No comments:
Post a Comment