இன்றைய தேதிக்கு மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசாங்கத்தை ஸ்தம்பிக்க
வைக்க வேண்டும் என்றால் அந்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்க ஒரு பேஸ்புக் பதிவு அல்லது
வாட்ஸ் அப் மெஸேஜ் போதும். ஆனால் செய்தித்தாள்களே ஒழுங்காக மக்களை சென்றைடையாத
1960-70களில் மும்பை போன்ற பெரிய நகரத்தை மில் தொழிலாளர்கள் மற்றும்
வாடகை வாகன ஓட்டுனர்களின் கூட்டணியோடு நினைத்த நேரத்தில் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார்
இவர்.
இந்திய ரயில்வேதான் தேசத்தின் நரம்பு மண்டலம். நாட்டின்
மூலை முடுக்கெல்லாம் அனைத்து பொருட்களும் சென்று சேர வேண்டுமென்றால் இந்த நரம்பு மண்டலம்
தொடர்ந்து சீராக செயல்பட்டே ஆகவேண்டிய கட்டாயம். அப்படிப்பட்ட
ஒரு பெரிய ரயில்வே நெட்வொர்க்கையே தொடர்ந்து பல நாட்களுக்கு முடக்கி போட்டிருக்கிறது
இவர் தலைமையில் நடைபெற்ற ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் அதுவும் எழுபதுகளில்.
தொழிலாளர்களை திரட்டி வெற்றிகரமாக வேலை நிறுத்தத்தை மட்டுமே
செய்துகொண்டிருந்தவரை அறுபதின் இறுதியில் தெற்கு மும்பை தொகுதி மக்கள் முதல்முறையாக
பார்லிமெண்டிற்கும் அனுப்பியிருக்கிறார்கள். இவரால் தோற்கடிக்கப்பட்ட நபர் அன்றைய தேதிக்கு
மும்பை காங்கிரஸின் அசைக்க முடியாத ஆளுமை. ஆனால் அப்போதுதான்
அரசியலின் அரிச்சுவடியை படிக்க ஆரம்பித்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அடித்து தூக்கிவிட்டார்.
பர்கூர் தொகுதியில் திமுகவின் சுகவனம் அம்மாவை தோற்கடித்த நிகழ்ச்சியை
மு.க. யானையின் காதில் புகுந்த எறும்பு
என வர்ணித்திருந்தார். ஆனால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் யானையின் காதில்
புகுந்ததோடு மட்டுமல்லாமல் அந்த யானையை அரசியலில் இருந்தே அஸ்தமனம் செய்துவிட்டார்.
இவரால் தெற்கு மும்பை தொகுதியில் தோற்கடிக்கப்பட்ட பட்டீல் அவர்கள் பின்னாளில்
அரசியலில் எழுந்திருக்கவேயில்லை.
இந்திராகாந்திக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை
ஆனால் அந்த அம்மாவிற்கும் இவருக்கும் இடையேயான பனிப்போர் எமர்ஜென்ஸியின் போது உச்சத்தை
தொட்டிருக்கிறது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலை மறைவாக இருந்த காலகட்டத்தில் எமர்ஜென்ஸியின்
இரும்புக்கரம் இவர் குடும்பத்தினரை இறுக்கி இருக்கிறது. தமிழகத்திலும்
இதேபோல் நடந்து அதன் விளைவாக புதிய தலைவர்கள் வெளிச்சத்திற்கு வந்த கதை இருக்கிறது.
1977 தேர்தலின் போது எதிர்கட்சியினர் எல்லோரையும் விடுதலை செய்த
அரசாங்கம் இவரை மட்டும் உள்ளேயே வைத்திருந்திருக்கிறது. இருந்தாலும்
கைதியாக கம்பிகளுக்கு பின்னால் இருந்துக்கொண்டே பீகாரின் முசாஃபர்பூர் தொகுதியில் நின்று
வென்றும் இருக்கிறார். வாக்கு வித்தியாசாம் அபாரம். இன்றைய தேதிக்கு இப்படி மாநிலம் விட்டு மாநிலம் சென்று தேர்தலில் நின்று ஜெயிப்பதெல்லாம்
அத்தனை சுலபம் அல்ல. தேவைக்கு அதிகமான பணமும் தேசிய அளவில் செல்வாக்கும்
இருந்தால் ஒழிய.
சிக்மளூர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தியை தோற்கடிக்க
இவர் வேட்டியை மடித்துக்கொண்டு வேலை பார்த்திருக்கிறார். மேலே
உள்ள புகைப்படம் அந்த நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திரா
காந்திக்கு அந்த தேர்தல் வாழ்வா சாவா போரட்டம். ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு
எமர்ஜென்ஸி கொடுமையின் கணக்கை சரிசெய்து கொள்ள கிடைத்த அருமையான சந்தர்ப்பம்.
பொறிபறந்த போட்டி. கன்னடம் பேசத் தெரியாத இந்திரா
காந்தியை தேவராஜ் அர்ஸும் குண்டு ராவும் தாங்கிப் பிடித்தனர். போதாத குறைக்கு அன்றைய தேதிக்கு கர்நாடக அரசாங்கம் காங்கிரஸ் வசம் இருந்த்து. எதிர்கட்சிகளின் ஏகோபித்த வேட்பாளர்
ஜே.எச்.பட்டீல் என்றாலும் மறைமுகமான போட்டி
இந்திரா காந்திக்கும் ஜார்ஜ் பெர்னான்டஸுக்குமும் தான். கடுமையான
போட்டியில் இந்திரா காந்தி வென்றாலும் பின்னாளில்
கர்நாடகாவில் ஜனதாதளம் வளர்ந்து ஆட்சியை பிடிப்பதற்கு இந்த இடைத் தேர்தலும் ஜார்ஜ்
பெர்னாண்டஸின் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் திறமையும் வலுவான அடித்தளத்தை
உருவாக்கிவிட்டன.
90-களின் இறுதியில் அரசியலில் பக்குவப்பட்டுவிட்ட நிலையில் பாதுகாப்பு
துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு இவர் செய்த பல விஷயங்கள் அந்த துறைக்கும்,
இவருக்கு பின்னால் அந்த துறையை ஏற்றுக்கொண்ட மந்திரிகளுக்கும் உதாரணமாக
அமைந்துவிட்டன. சவுத் ப்ளாக்கிலும் நார்த் ப்ளாக்கிலும் சமோசா
சாப்பிட்டுவிட்டு சாயா குடித்துக்கொண்டிருந்த தனது துறை அதிகாரிகளை அழைத்து எல்லைக்கு
சென்று வீர்ர்களுடன் தங்கி அவர்களின் குறைகளை உணர்ந்து போக்குமாறு செய்வதெல்லாம் இன்றைக்கு
நடக்குமா எனத் தெரியவில்லை. அதிகாரிகளை மட்டும் அனுப்பாமல் இவரே
பலமுறை சென்று வீர்ர்களுடன் கேஷுவலாக பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனக்குடன்
செய்து கொடுத்திருக்கிறார். இன்றைக்கு பல அரசியல்வாதிகள் இதை
காப்பி அடித்துக்கொண்டிருக்கிறார்கள், அந்த இடங்களுக்கு வெறும்
விஸிட் அடிப்பதில் மட்டும். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொண்ட
கதை அது.
அரசியலில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் இவர் கடைபிடித்த முரட்டு
வழிமுறைகளை இன்றைக்கு செய்தால் தேசவிரோதி என முத்திரை குத்திவிடுவார்கள். அன்றைக்கும்
இந்திரா காந்தி இதே காரணத்தை முன்வைத்துதான் எமர்ஜென்ஸியை அமல்படுத்தினார்,
பின்னால் நடந்தவை வரலாறு. இவரால் கொம்பு சீவப்பட்டு
இன்று கொழுத்துக்கொண்டிருக்கும் சரத் யாதவ், நிதிஷ்குமார் போன்றவர்கள்
தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அரசியலில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க தயாராக
இருப்பது ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு இவர்கள் செய்யும் குரு துரோகம். இன்றைய இந்திய அரசியல்வாதிகளைப் பொருத்தவரை All is fair in love and
war (and of course in Indian politics too).
அரசியலை தாண்டி, மனிதர் தன் சுயநினைவு இருந்தவரை கூடுமானவரை
நிறைய உதவிகளை செய்து வந்திருக்கிறார். அகதிகளுக்கு தங்க இடம்,
கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகள் என பல விஷயங்கள்.
எல்லா துறைகளுக்கும் யாரோ ஒருவர் உதாரணமாக வாழ்ந்து விடுகிறார்கள்.
தேர்தல் கமிஷன் என்றால் திரு.டி.என்.சேஷன், ஜனாதிபதி என்றால் திரு.
அப்துல்கலாம், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தொழிலாளர்களை
ஒருங்கிணைத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்த வரிசையில் முதன்மையாக
திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ். RIP Sir.

No comments:
Post a Comment