“ஊருக்கு ஆறழகு” …நிஜம். வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் கரையோரங்களில் வாழ்ந்த/வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்ப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிளில் ட்ரிபுள்ஸ் சென்ற நினைவுகள் இன்னமும் நிழலாக ஆடிக்கொண்டிருக்கிறது. அம்மா மண்டபத்தின் படிகளில் நின்றபடி, பெருக்கெடுத்தோடும் காவிரியை காண்பதற்காகவே பெங்களூரில் இருந்து திருச்சி வரை பல முறை நண்பர்களுடன் சென்று வந்த நீண்ட இரவுப் பயணங்கள் வாழ்க்கையின் சொர்க்கமான தருணங்கள். மைசூர், மண்டியா, தலக்காடு, ஒக்கெனெக்கல், ஸ்ரீரங்கம் என எல்லா இடங்களில் இருந்து பார்த்துவிட்ட பின்னும், நேற்று பிறந்த குழந்தை போல இன்னமும் அதே அழகோடு புத்தம் புதிதாய் மனதில் நிற்கிறது காவிரி.
கேரளாவிலும் கோவாவிலும் பயணம் செய்கையில் எந்தவித சுவடும், முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் திடீரென தோன்றி கண்களை செல்லமாக துளைத்துவிட்டுச் செல்லும் சின்ன சின்ன கிளைநதிகள் பரவசமூட்டிய அனுபவங்கள். வட கர்நாடகா மற்றும் கோவாவை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலையை அணைத்தபடி செல்லும் காளி நதி இந்தியாவின் மிக அழகான நதிகளில் ஒன்று. பெளர்ணமி நிலவின் பிம்பம் காளி நதியின் நீரில் கரைந்தபடி மெல்ல ஆடிக்கொண்டிருந்ததை, நண்பர் ஒருவரின் Tree House இன் பால்கனியில் அமர்ந்தபடி இரவு முழுவதும் ரசித்த கணங்கள் வார்த்தைகளை கொண்டு வர்ணிக்க முடியாதவை.
பொக்காரோ ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸில் ஆந்திர பிரதேசத்தின் வழியாக பயணிக்கும் போதெல்லாம் இடைமறிக்கும் கிருஷ்ணாவும், கோதாவரியும் உண்டாக்கிய கிறக்கம் Hennessy-யிலும் Remy Martin-லும் தேடினாலும் கிடைக்காதவை. பரபரப்பான விஜயவாடா நகரை அமைதியாக தழுவியபடி ஒடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணா நதியை ரயில் பெட்டியின் ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி அமைதியாக ரசிப்பது கோடி சுகம்.
Will the Cooum river be Chennai’s Thames? – இந்த செய்தியை ஏதேச்சையாக பார்த்தவுடன் மேலே சொன்ன அத்தனை நினைவுகளும் முட்டி மோதிக்கொண்டு வெளியே வந்துவிட்டன. நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்த ஒரு நதி இன்று பெயரைக் கேட்டாலே முகத்தை சுளிக்கும் அளவிற்கு சென்றுவிட்டதை நினைக்கும் போது வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. தங்கள் வீட்டின் கிணற்று நீர் அசுத்தமாகமல் இருக்க கடுமையாக மெனக்கெடும் மக்கள் தங்கள் ஊரில் உள்ள நதியின் தூய்மையைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பது கடைந்தெடுத்த சுயநலம். வீட்டில் காட்டும் சுயநலத்தில் பத்தில் ஒரு பங்கை சமூகத்தின் மேல் காட்டினாலே போதும், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அழகான படகு சவாரியை கூவத்தில் கொண்டுவந்து அசத்திவிடலாம். இரு கரைகளிலும் அமர்ந்தபடி மக்கள் இந்த நதியின் பேரழகை ரசிக்கலாம். 100% இது சாத்தியம்.
தென்னிந்தியாவின் மற்ற எந்த ஒரு மாநில தலைநகரிலும் இவ்வளவு நீளத்திற்கு ஒரு நதி, அதுவும் நகரின் பிரதானப் பகுதியில் அமையவில்லை. Indeed it’s a treasure for Chennai. சென்னை மக்களும் சரி, தமிழகத்தை இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளும் சரி இதை புரிந்துக்கொள்ளவே இல்லை. பெங்களூரில் செயற்கையாக ஏரிகளை ஆழப்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். ஹைதராபாத்தில் புத்தரை கொண்டு வந்து ஹுசைன் சாகரின் மத்தியில் நிறுத்தி காசு பார்த்து கொண்டிருக்கிறார்கள். நம்மூரில் இயற்கையாகவே கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஹட்சனும், தேம்ஸும் சுற்றுலா மூலமும் போக்குவரத்து மூலமும் வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கும் போது அதே அளவிற்கான இயற்கை அமைப்பை கொண்டிருக்கும் கூவம் நதியிலும் இதை ஏன் நம்மால் செயல்படுத்த முடியாது என்பதை உணர்வுபூர்வமாக யோசித்து விடுவது நல்லது. செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்புவதை விட இம்மாதிரியான சின்ன சின்ன ப்ராஜெக்ட்களை ஒழுங்காக செயல்படுத்தினாலே போதும் நாடு எங்கேயோ போய்விடும். இல்லாவிட்டால் யூப்ரடிஸ், டைகரிஸ் நதிகளின் கரைகளில் தோன்றிய நாகரிகம் கூவம் நதியின் கரைகளில் முடிந்துபோனது என கி.பி. 3011 இல் மாணவர்களுக்கு மென் திரையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் Humanoid-கள் செப்பிக் கொண்டிருக்கும்.
Thursday, January 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
அருமையான எழுத்து நடை...!!!
அருமையான எழுத்து நடை...!!!
// பிரசுரம் செய்ய அல்ல
தமிழக மீனவர் பிரச்சனை பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும்.
www.savetnfisherman.org என்ற தளத்துக்கு இணைப்பு கொடுக்கவேண்டும்.
செய்ய முடியுமா ?
ரவி..நன்றி...எழுதுகிறேன்.
வள்ளல் பச்சையப்ப முதலியார் காலையில் எழுந்து கூவத்தில் குளித்து அதில் மார்பளவு நீரில் நின்று சூரிய நமஸ்காரம் செய்வாராம். நம்மப முடிகிறதா??
பலரும் அதைச் சுத்தம் செய்வதாய்ச் சொன்னார்கள். இப்போது அதைக் கையில் எடுத்து இருப்பது துணை-முதல்வர் ஸ்டாலின். அதனால் நிச்சயம் சுத்தமாகிவிடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அவர் இப்போதுதான் பணியைத் துவங்கியிருக்கிறார்.விரைவில் தேர்தல். ஆட்சி மாறினால்?? என்ற கவலையும் பிறக்கிறது.
Just curious, why he's not initiated the process when they came to power five years ago...if the work started long back then there is a chance that it might have got completed almost 75% now. Whoever comes next have left with little option but to complete (Provided people question the government on the status update)..
P.S: Looks like some issues with tamil font hence typing in English. Sorry for that.
Post a Comment