Sunday, May 23, 2010

ஜெஸிஃகா வாட்ஸன் – ஜோர்டன் ரொமேரோ – லைலா – மங்களூர்

கிட்டத்தட்ட ஏழு மாதம், பூமியின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய பெருங்கடல்களான பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலை தன்னந்தனியே கடந்து உலகை வலம் வந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ஜெஸிஃகா வாட்ஸன். வயது அதிகமில்லை…வெறும் பதினாறு. இவருக்கு முன்னதாக இதே சாதனையை படைத்தவர்கள் எல்லோரும் இவரைவிட வயதில் மூத்தவர்கள். தனது பதினேழாவது பிறந்தநாளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக இவர் தன் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சிட்னி துறைமுகத்திற்குள் நுழைந்ததை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, செமஸ்டர் தேர்விற்காக பதினாறு வயதில் இரவெல்லாம் கண்விழித்துப் படித்துக்கொண்டிருந்தது நினைவில் வந்து போனது. குறைந்தபட்சம் என்னுடைய ஹீரோ சைக்கிளில் தமிழ்நாட்டையாவது சுற்றி வர முயற்சி செய்திருக்கலாமோ என தோன்றுகிறது. வெறும் தோற்றத்தை வைத்து மனிதர்களின் திறமையை கணிப்பவர்களை தான் வெறுப்பதாக கூறுகிறார் இந்த கடல்கன்னி. நம்மவர்கள் கொஞ்சம் இவரைப்பற்றி தெரிந்துக்கொண்டால் வெறும் படிப்பை தாண்டி வேறு ஒரு உலகம் இருப்பது புரியவரும். வாழ்த்துக்கள் ஜெஸிஃகா.
-------------------------------------------------------------------------------------

ஜெஸிஃகா வாட்ஸன் எல்லாம் ரொம்ப லேட்….சொல்லாமல் சொல்கிறார் அமெரிக்காவின் ஜோர்டன் ரொமேரோ. சென்ற சனிக்கிழமை இவர் எவரெஸ்டின் உச்சியை தொட்டபோது தம்பிக்கு வயது வெறும் பதிமூன்று. எவரெஸ்டின் உச்சியை அடைந்தவர்களில் மிகவும் வயது குறைவானவர் இப்போதைக்கு இவர்தான். கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இவர் மற்ற இளம் வயதினரிடையே இம்மாதிரியான பொழுதுபோக்கு ஆர்வத்தை உண்டுபண்ணுவதற்காகவே இந்த சாதனையை மேற்கொண்டிருப்பதாக சொல்கிறார். ப்ளே ஸ்டேஷனிலும், எக்ஸ் பாக்ஸிலும் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையை எப்படியாவது வெளியே கொண்டுவரவேண்டும் என நினைக்கும் அன்பர்களும்/அன்பனிகளும், படிப்பை தவிர வேறு ஒரு உலகமே இல்லை என தங்கள் குழந்தைகளை புரட்டி எடுக்கும் பெற்றோர்களும் இவரை குருவாக பாவித்துக்கொள்வது நலம். வரலாறு படிக்கும் வயதில் வரலாறு படைப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்…ஹ்ம்ம்ம்ம்ம்ம்.
-------------------------------------------------------------------------------------

ரொம்ப நாட்களாக இருக்கும் சந்தேகம். அதென்ன புயலுக்கு மட்டும் வெறும் பெண்களின் பெயரையே வைக்கிறார்கள். பெண்களை மிகவும் சாந்தசொரூபியாகவும், அமைதியானவர்களாகவும் சித்தரிக்கும் நம்மூரில் கூட பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் புயலுக்கு “லைலா” என பெயரிட்டிருக்கிறார்கள். காத்ரீனா, லைலா என பெண்களின் பெயரை மட்டுமே வைப்பதின் பிண்ணனியில் ஏதாவது சைக்காலாஜிக்கல் விஷயம் இருக்குமோ என புயலைப்பற்றியும் சைக்காலாஜி பற்றியும் மூன்று நாட்களாக லைப்ரரியில் படித்துப் பார்த்ததில் அப்படி எந்த ஒரு தொடர்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. சரி போனால் போகட்டும் எப்போதாவது புயலுக்கு ஆண்டனி, ஆறுமுகம் என ஆண்களின் பெயரை சூட்டியிருக்கிறார்களா என கூர்ந்து படித்துப் பார்த்ததில் எந்த ஒரு புயலும் இதுவரை அந்த புண்ணியத்தை அடைந்ததாக தெரியவில்லை. பெயரே வைக்காமல் கூட இருந்திருக்கிறார்களே தவிர தப்பித்தவறி கூட ஒரு ஆணின் பெயரை இதுவரை சூட்டவில்லை. மெட்ரோலாஜி ஆசாமி யாரவது கண்ணில்படும்போது இந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்வது என முடிவு செய்துள்ளேன். சரி விஷயத்துக்கு வருவோம்...கரைக்கு வருவதற்கு முன்னாலும் கரையை கடந்த பின்னாலும் லைலாவால் கொண்டுவரப்பட்ட அத்தனை மழைநீரையும் வழக்கம்போல சேகரிக்காமல் வீணடித்து விட்டதைப்பற்றி எந்த ஒரு செய்தி நிறுவனமும் ஒரு வரிகூட செய்தி வெளியிடாமல் தங்கள் சமூக அக்கறையை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியிருக்கிறார்கள். மூச்சுக்கு முன்னூறு தடவை “லைலா”, “லைலா” என கூவிக்கொண்டிருந்த பத்திரிகைகளில் ஏதாவது ஒரு பத்திரிகை மழைநீர் சேகரிப்பை தொட்டிருந்தால் கூட போதும்…அடுத்தமுறை அனுஷ்காவோ, தமன்னாவோ புயலாக வரும்போது மக்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டிருப்பார்கள். புரட்சிப்புயலையும், கவர்ச்சிப்புயலையும் மட்டுமே சிலாகித்து எழுதும் பத்திரிகைகள் கொஞ்சம் இம்மாதிரி உருப்படியான விஷயத்தையும் எழுதினால் நாட்டில் எப்போதும் சீராக மழை பெய்யும், அம்மா மண்டபத்தில் காவிரி இரு கரையையும் முத்தமிட்டபடி ஒடிக்கொண்டேயிருக்கும்.
-------------------------------------------------------------------------------------

தேசத்தின் துயரம் :-(


-------------------------------------------------------------------------------------

2 comments:

Ram Sridhar said...

புயலுக்கு பெயர் வைக்கும் பழக்கம் 1953ம் ஆண்டிலிருந்து இருக்கிறது. இதற்காக சிறிய, உச்சரிக்க ஏதுவான பெண்கள் பெயர்களை வைக்க ஆரம்பித்தார்கள். இதன் முக்கிய காரணம் புயல் வருகிறது என்ற செய்தி பல்வேறு இடங்களுக்குப் பரப்பப்படும்போது அதில் எந்தக் குழப்பமும் இல்லாமல் இருக்கவே இந்த பெயர் வைக்கும் யுக்தி கையாளப்படுகிறது. இதற்காக ஒரு ஆறு செட் பெயர்களைத் தேர்ந்தெடுத்து அந்தப் பெயர்கள் ரொடேஷனில் வரும்படி வைக்கிறார்கள். அதாவது, 2010 இல் வைக்கப்படும் பெயர்கள் 2016 ம் ஆண்டிற்கும் வைக்கப்படும். புயல்களுக்கு பெண்கள் பெயரை மட்டுமே வைக்கும் வழக்கம் 1978ம் வருடம் முதல் மாறிவிட்டது. இப்போது ஆண்கள் பெயரையும் வைக்கிறார்கள். என்ன, பெண்கள் பெயர்கள் அளவுக்கு அவைகள் பிரபலம் அடையவில்லை. மேலும் விரிவான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்குங்கள்:
http://www.nhc.noaa.gov/aboutnames.shtml

Rex said...

Ram Sridhar - நன்றி.