தனக்கென்று ஒரு தளம் இல்லாமலே இன்றைய தேதிக்கு மிக அதிகமான பாலோயர்களை வைத்திருப்பவர் அனேகமாக திருவள்ளுவராகத் தான் இருப்பார். உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் கூகுள் இவரை அள்ளிக்கொண்டு போய் மவுண்டன் வியூவில் வைத்து வழிபட்டிருப்பார்கள். அறம், பொருள், இன்பம், காதல், காமம் , சூது, வாது என எல்லா திசையிலும் புகுந்து விளையாடிய / விளையாடிக் கொண்டிருக்கின்ற எழுத்தின் ஏகபோக முதலாளி. எல்லா வயதினருக்கும் "ஏ"ற்ற படம் என சொல்வது போல், எல்லா வயதினரும் படிக்க தகுதி உடைய படைப்பு இவருடையது, பாலோ செய்வது மட்டும்தான் கொஞ்சம் சிக்கலான விஷயம்.
தலை சிறந்த (!) எழுத்தாளன் என தங்களை கூறிக்கொள்பவர்கள் கூட இதுவரை 1331 வது குறளை ஏதோவொரு பாலில் படைப்பதற்கு முயலாதது ஏன் என தெரியவில்லை. எல்லா சரக்கையும் திருவள்ளுவரே 1330-க்குள் அடக்கிவிட்டாரா அல்லது 1331 வது குறளுக்கு இவர்களிடம் சரக்கு இல்லையா என்பது தெரியவில்லை. மூன்றரை நிமிட பாடலுக்கு நம்மை குத்து போட வைக்கும் அளவிற்கு தமிழை திறமையாக கையாளும் நம்மவர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் "குறள் படைத்த குத்துவிளக்கு" என்ற டைட்டில் கார்டு நிச்சயம். இணையத்தில் இருப்பவர்கள் கூட முயற்சிக்கலாம்...இணைய குறலோன் என்ற பட்டம் உங்களுக்கு உறுதி செய்யப்பட வாய்ப்புக்கள் அதிகம். ஒரே சிக்கல் சில்லரை தேற்ற முடியாது.
எத்தனை பேர் படிப்பார்கள், எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்படும், எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்கும் என எந்த ஒரு சிந்தனையும் திருவள்ளுவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. நினைத்ததை செதுக்கிவிட்டு போய் இருக்கிறார் மனிதர் அஷ்டே. நம்மவர்கள் புதிது புதிதாக அதற்கு உரை போட்டு நாக்கில் நுரை தள்ள வைக்கிறார்கள்.
சிக்கலான புரோகிராம் ரேஞ்சில் எழுதி சின்னாபின்னம் ஆகாமல், ஜஸ்ட் ஒன்றரை வரியில் மேட்டரை அடக்கி வைத்துவிட்டு சென்றிருப்பது எப்போது நினைத்தாலும் ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. Keep It Short & Simple” (KISS), ஏசி ஹாலில் நமக்கு சொல்லி கொடுக்கும் பாடத்தை, ரொம்ப சாதரணமாக செயல்முறை படுத்தி விட்டு போய் அமைதியாக கன்னியாக்குமரி கடலில் நின்றுவிட்டார். அமைதியாக நிற்பவரை இன்னமும் படகில் ஏறி சென்று தொந்தரவு செய்கிறோம்.
இவ்வளவு பெரிய படைப்பை படைத்துவிட்டு மனிதர் எந்தவொரு ரைட்ஸும் வாங்காமல் போயிருக்கிறார். இந்த பதிவையே காப்புரிமை செய்யலாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். J. இணையத்தில் இப்போது இதுதான் பேஷன்.
சுயமாகவும் சிக்கனமாகவும் தான் சொல்ல வந்ததை எளிமையாக எழுதும் பட்சத்தில் எழுத்துக்கள் காலத்தை கடந்து நிற்கின்றன..எழுதுங்கள் உங்கள் எழுத்துக்களும் படிக்கப்படும். காலம் கடந்த பின்னும்.
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
தலை சிறந்த (!) எழுத்தாளன் என தங்களை கூறிக்கொள்பவர்கள் கூட இதுவரை 1331 வது குறளை ஏதோவொரு பாலில் படைப்பதற்கு முயலாதது ஏன் என தெரியவில்லை/
1331 வது குறள் படைத்து திருக்குறளைக் கவலைக்கிடமாக ஆக்கிவிடாமல் இருப்பதே மேல்.......
அவ்வாறு படைப்பதற்கு நமக்கு உரிமையும் இல்லை.
1330 குறளிலும் ஒரு முறை கூட "தமிழ்" என்ற வார்த்தையை திருவள்ளுவர் குறிப்பிடவில்லை..நல்ல பதிவு..நன்றி
நன்றி ஆடிப்பாவை & தண்டோரா
Post a Comment