பெங்களுர் அல்லது சென்னையில் அமர்ந்துகொண்டு தங்கள் நிறுவனத்தின் காலாண்டு வரவு-செலவு கணக்கை வெளியிடுவார்கள், வெளியிடப்படும் அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்தால் அடுத்த நிமிடம் மும்பை பங்கு சந்தையில் அந்நிறுவன பங்குகளின் மதிப்பு சூடுபட்ட தெர்மாமீட்டரின் முள்ளைப்போல ஜிவ்வென்று எகிறிவிடும்.
ஏறக்குறைய இதே மாதிரி ஒரு நிலையை 1977 தமிழக தேர்தலில் ஒருவர் ஏற்படுத்துகிறார். இவர் சென்னையில் அறிவிப்பை வெளியிட தமிழகத்தின் தென்கோடியில் அதுவரை அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த இந்த தொகுதியில் சூடு பரவ ஆரம்பிக்கிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளில் 233 தொகுதிகள் இந்த தொகுதியை நோக்கி திரும்பிவிட, தன்னைத் தானே ஒருமுறை கிள்ளிப்பார்த்து தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது இந்த தொகுதி.
கழகங்களின் கண்ணில் படாமலே அதுவரை கண்ணாமூச்சி காட்டி வந்த இந்த தொகுதி, இம்முறை சிக்கிவிட்டது. முதல்முறையாக கழகங்களின் அணிவகுப்பு இந்த தொகுதியின் பரபரப்பை கூட்டி இருக்க, அதிமுக அந்த பரபரப்பை இன்னும் ஒரு படி மேலாக கொண்டு சென்றது, தங்களின் அதிரடி வேட்பாளர் அறிவிப்பின் மூலம்.
விருதுநகர் மாவட்டத்தின் எல்லைக்குள், ராமநாதபுர மாவட்டத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள, பெரும்பாலும் நடுத்தர மற்றும் கிராமப்புற வேட்பாளர்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தின் சராசரி தொகுதிகளில் ஒன்று. தமிழக அரசியல் உலகின் மிகப்பெரிய பதவிகளுக்கு தங்கள் தொகுதியில் இருந்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டு, “அதற்கென்ன இப்போது” என கேட்காத குறையாக, மிகவும் அமைதியாக தன் தினசரி நடவடிக்கைகளில் மூழ்கிவிடும் தமிழகத்தின் 204வது சட்டமன்ற தொகுதி…அந்த தொகுதி…
அருப்புக்கோட்டை: தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் விளங்கிய முதல்வர்களை பட்டியலிட்டால், கற்பூரம், கல்கண்டு, காயகல்பம் என எந்த வஸ்தாது மேல் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம், அந்த பட்டியலில் எம்ஜியார் பெயர் இருக்கும் என்று. 1977 தேர்தல் அறிவிப்பு வரும்வரை எம்ஜியாரை பிலிம் ரோலுக்குள்/வெள்ளித்திரையில் மட்டுமே பார்த்து வந்த இந்த தொகுதி மக்கள், முதன் முறையாக அந்த தேர்தலில் தங்கள் கனவு நாயகனை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.
அந்த தேர்தலில் முதல் முறையாக அதிமுக இந்த தொகுதியின் மீது தன் பார்வையை திருப்ப, அதன்பின் வந்த தொடர்ச்சியான தேர்தல்களில் வழக்கம்போல ரத்தத்தின் ரத்தங்களும் உடன்பிறப்புகளும் தங்கள் சாகசங்களை தொகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து இந்த தொகுதியை திக்குமுக்காட செய்துவிட்டனர். இன்றுவரை அதை தொடர்ந்தும் வருகிறார்கள்.
1977 இல் அதிமுக வின் அக்னி பரீட்சைக்கு அங்கீகாரம் வேண்டி தமிழகம் முழுவதும் பரவலாக தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என சொல்லாமல் சொல்லி வாத்தியார் இந்த தொகுதிக்குள் ஐக்கியமாகிவிட்டார். அருப்புக்கோட்டையில் நின்று கொண்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு குறிவைத்தார் இந்த நாடோடி மன்னன். தேர்தலின் முடிவில் இரு கோட்டைகளிலும் இவர் கொடி பறக்க, மக்கள் மத்தியில் மன்னாதி மன்னன் ஆகிப்போகிறார்.
அந்த தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனதா (!) கட்சி வேட்பாளரை சுமார் முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரட்டை இலையை மிக சுலபமாக முதல் வரிசைக்கு கொண்டுவந்துவிட்டார். எம்ஜியாரை எதிர்த்து திமுகவே இங்கு களத்தில் இறங்கி இருக்கும் பட்சத்தில் இந்த வாக்கு வித்தியாசம் வேறுபட்டிருக்கலாம் அல்லது ஆச்சரியமான முடிவையேகூட ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் விலகி நின்று வேடிக்கை பார்த்தார்கள் என்பது அறிவாலயத்தின் சுவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள்.
மூவர்ண கொடியுடன் சேர்த்து இன்ன பிற தெரியாத கட்சிகளின் கலவையான கொடிகளை மட்டுமே கண்டு வந்த இந்த தொகுதி, 1977 முதல் இரு வர்ண கொடிகளால் நிரம்ப ஆரம்பிக்கிறது, இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சி வழக்கம்போல் தன் கடமையை சிறப்பாக ஆற்றி மெல்ல தன் அடையாளத்தை இழந்து, கழகங்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பிக்கிறது.
அந்த ஒரு தேர்தலை (1977) தவிர்த்து வேறு எந்த தேர்தலிலும்/ எந்த கட்சியும் (அதிமுக உள்பட)/ எந்த வேட்பாளரும் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தை இந்த தொகுதியில் இதுவரை காண்பிக்கவில்லை. விஷயம் தெளிவாக தெரிகிறது, கட்சி/சின்னம்/வேட்பாளர் தாண்டி சினிமா விளையாடி இருக்கிறது எம்ஜியாரின் விஷயத்தில். 1991 இல் பெரும் சாதகமான நிலையில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக இங்கு வென்றிருந்தாலும் எம்ஜியார் ஏற்படுத்திய அதிர்வில் பாதியைகூட அப்போதைய வேட்பாளாரால் ஏற்படுத்த முடியவில்லை என்பது நிதர்சனம்.
எம்ஜியாருக்கு கொடுத்த அங்கீகாரத்தை அவருக்குப்பின் இங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு குறைத்துக்கொண்டே வந்து, இறுதியில் 1989 இல் முதன் முறையாக தொகுதியை உதயசூரியனின் குடைக்குள் கொண்டு சென்றுவிட்டனர் இந்த தொகுதி மக்கள். மிக அதிரடியாக ஆட ஆரம்பித்த அதிமுக, உலக நியதிக்கு தப்பாமல் காலத்தின் ஒட்டத்தில் தன் பிடியை தளர்த்த, மறுமுனையில் எதிர்திசையில் உறுதியாக போராடிக்கொண்டே வந்த திமுக தன் இலக்கை 1989 இல் அடைந்தே விட்டது.
இருமுறை தோல்வியை சந்தித்த உடன்பிறப்புக்கள் மனம் தளராமல் போராடியதன் பலன், 1989இல் கோட்டையை தங்களாலும் தகர்க்க முடியும் என நிரூபித்துவிட்டார்கள். அக்கட்சியின் வேட்பாளார் திரு. வீ.தங்கபாண்டியன் தொடர் தோல்விகளால் சீண்டப்பட்டு இறுதியில் 1989ல் சுமார் பதினைந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, கோட்டையில் தன் இருக்கையை உறுதிசெய்து கொண்டார்.
பின்னர் 1991 இல் தொகுதி மறுபடியும் அதிமுகவின் பிடிக்குள் போய்விட, 1996 தேர்தலில் மீண்டும் ஒருமுறைய் கடுமையாக போராடி தொகுதியை மீட்டெடுத்தனர் உடன்பிறப்புக்கள். அந்த தேர்தலிலும் திமுக திரு. வீ. தங்கபாண்டியனையே களத்தில் இறக்கியது குறிப்பிடத்தக்கது. இருமுறை தொகுதியை திமுகவின் பிடிக்குள் கொண்டுவந்த இவர் பின்னர் திமுக அமைச்சரவையிலும் இடம்பெற்று தன் முத்திரையை பதித்தார்.
1980 இல் சுமார் முப்பதாயிரம், 1984 இல் சுமார் முப்பத்தாராயிரம், 1989இல் சுமார் நாற்பந்தையாயிரம் என திமுக மேல்நோக்கி தன் வாக்கு எண்ணிக்கையில் முன்னேறிக்கொண்டு இருக்க, அதே தேர்தல்களில் தங்கள் வாக்கு வங்கியில் விழுந்துள்ள ஒட்டையை அதிமுக கொஞ்சம் அலட்சியப்படுத்தி வந்த மாதிரி தெரிகிறது. தங்கள் வெற்றியில் கவனம் செலுத்திய அதிமுக முகாம், எதிரணியின் வேகத்தை கவனிக்க தவறிவிட்டது. அதிமுகவின் பலவீனம் திமுகவிற்கு பலம், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உதயசூரியனை இலைக்கு மிக அருகில் கொண்டு வந்து விட்டார்கள் உடன்பிறப்புக்கள். அதிமுக வினர் சுதாரித்துக்கொண்டு விழித்து எழுந்து பார்த்தபோது சூரியன் அவர்களின் தலைக்கு மேல் தன் அனலை கக்க ஆரம்பித்துவிட்டிருந்தது.
1977 இல் ஆரம்பித்து 1984 தேர்தல் முடியும்போது, ஏறக்குறைய இரு கழகங்களும் சம பலத்தை இந்த தொகுதியில் பெற்றுவிட்டன. இதன் பின் வந்த தேர்தல்களின் இரு கழகங்களும் மாறி மாறி வென்று வந்தாலும், ஒட்டு மொத்த தமிழகத்தின் பக்கம் எந்த அணி சாய்கிறதோ அதே பக்கம் இந்த தொகுதியும் சாய்ந்து வந்து இருக்கிறது.
1989 இல் தொடங்கி 2006 வரை திமுகவும் சரி, அதிமுகவும் சரி இந்த தொகுதியில் தொடர்ச்சியாக வெல்லவே இல்லை, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மாறி மாறி இரு கழகங்களையும் ஆதரித்தும் எதிர்த்தும் வந்திருப்ப்பது தெரிகிறது. 1991 தவிர்த்த மற்ற தேர்தல்களில் திரு,வீ. தங்கபாண்டியன் செல்வாக்கு திமுகவிற்கு மிகப்பெரிய பலமாக இருந்து வந்திருக்கிறது.
2001 இல் திமுக சார்பாக இங்கு போட்டியிட்ட திரு. தங்கபாண்டியனின் புதல்வர் தங்கம் தென்னரசு தொகுதியை நழவவிட, காத்திருந்த அதிமுக தன் கொடியை ஜெகஜோதியாக ஏற்றிவிட்டது. 2006 தேர்தலில் திமுகவின் சார்பாக மறுபடியும் திரு. தங்கம் தென்னரசுவே வேட்பாளாராக இறங்க, இம்முறை தன் தந்தையார் பாணியில் இழந்த தொகுதியை மறுபடியும் திமுகவின் பாக்கெட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். தந்தையை பின்பற்றி இவருக்கும் தமிழக அமைச்சரவையில் இடம் கிடைக்க, இன்றைய தேதியில் சிறப்பாக செயல்படும் அமைச்சராக பரவலாக அனைவராலும் அறியப்பட்டு வருகிறார்.
இந்த தொகுதியின் அரசு பள்ளிகளில் இவர் செயல்படுத்திய பல்வேறு அபாரமான திட்டங்களின் பலனாக சென்ற ஆண்டு இந்த தொகுதியின் அரசு பள்ளிகளில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக அளவில் வென்றதோடு மட்டுமல்லாமல் மிகவும் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களையும் பெற்றனர் என்பது நடுநிலையோடு நின்று பாராட்டக்கூடிய அம்சங்கள். இவரின் இந்த திட்டங்கள் தமிழகத்தின் மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழக கல்வித்துறை ஒரு மிகப்பெரிய இடத்தை இந்திய அளவில் பிடிப்பதற்கான எல்லா சாத்தியங்களும் உள்ளது, அம்மாதிரியான நிகழ்வு அருப்புக்கோட்டை தொகுதி மக்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்பதில் மாற்று கருத்திருக்கமுடியாது.
தமிழகத்திற்கு முதல்வர், சிறப்பான பள்ளி கல்வித்துறை அமைச்சர் என கொடுத்துள்ள இந்த தொகுதி மக்கள் சமீப காலமாக ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் தொகுதிக்கு அப்பால் சென்று நிலைமையை உற்று நோக்கி முடிவெடுப்பது தெரிகிறது. ஒட்டு மொத்த தமிழக மக்களின் முடிவையே இவர்களும் ஏற்று கொள்வது போல செல்கிறது இவர்களின் சமீபத்திய தேர்தல் முடிவுகள். அரசியல் கட்சிகளுக்கு இது ஆதாயத்தை ஏற்படுத்தினாலும் அவர்களின் முடிவு தொகுதியின் வளர்ச்சியில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என யோசித்து முடிவெடுக்கும் பட்சத்தில் இந்த தொகுதி மிகப்பெரிய வளர்ச்சியை அடையலாம்.
பெயரளவில் அருப்புக்கோட்டை என இருந்தாலும் நிஜமான அருப்புக்கோட்டை நகராட்சி சாத்தூர் தொகுதியின் எல்லைக்குள் அமைந்திருப்பது குழப்பத்தின் உச்சகட்டம். தொகுதி சீரமைப்பு குழுவில் லாஜிக்கலாக யோசிப்பவர்கள் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம் இது.
திருவண்ணாமலை ரமண மகரிஷி சுவாமிகள் அவதரித்த திருச்சுழி கிராமம் இந்த அருப்புக்கோட்டை தொகுதிக்குள் வருவது இந்த தொகுதியின் இன்னொரு அம்சம்.
தொலைதொடர்பு சாதனங்களின் பெருக்கம்/ தொலைக்காட்சிகளின் ஊடுருவல் /மக்களின் கல்வியறிவு என பல விஷயங்களின் தாக்கம் பெரும் மாற்றத்தை இந்த தொகுதியில் உண்டு பண்ணியிருப்பதாகவே தெரிகிறது. வேகமாக குறையும் வாக்கு வித்தியாசம் கட்சிகளுக்கு கொஞ்சம் கசப்பான செய்தி, ஆனால் தாங்கள் யார் பக்கமும் இல்லை என மக்கள் இதன் மூலம் மறைமுக உணர்த்தும் செய்தி கொஞ்சம் ஆறுதலான விஷயம். தொகுதியை தொடர்ந்து தக்க வைக்கவேண்டும் என்றால் இனிவரும் காலங்களில் இரு கழகங்களுமே கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
1977 தேர்தலில் இந்த தொகுதியில் முதன் முறையாக அதிமுக களத்தில் இறங்கியதால் அந்த தேர்தலின் விவரங்கள் மட்டும் கீழே. (Thanks to PIB, Chennai)
மொத்த வேட்பாளர்கள் ; 1,12,763
வாக்களித்தவர்கள் ; 77,701
வேட்பாளர்: எம்.ஜி.இராமச்சந்திரன் (வெற்றி)
கட்சி : அ இ அ தி மு க
பெற்ற ஓட்டுக்கள் : 43,065
வேட்பாளர்: எம். முத்துவேல் சேர்வை
கட்சி ; ஜனதா
பெற்ற ஓட்டுக்கள் ; 13,687
இந்த தொகுதியின் தற்போதைய திமுக வேட்பாளர் திரு. தங்கம் தென்னரசுவின் செயல்பாடுகள் இதே நிலையில் தொடர்ந்து, அடுத்த தேர்தல் ஒரு சுமூகமான சூழ்நிலையில் நடைபெறும்பட்சத்தில், இவரே இங்கு மீண்டும் களம் இறக்கப்பட்டால் எதிரணி வேட்பாளர் நிலைமை நிச்சயம் ஆட்டம் காணலாம். இப்போதைக்கு காற்று திமுகவின் பக்கம் வீசினாலும் மக்களின் கடந்த கால மனநிலையை இரு கழகங்களும் உணர்ந்தே செயல் பட வேண்டி இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------
அடுத்து..
மிகப்பெரிய புயல் அடிக்கிறது, நிலைமையை அழகாக சமாளித்து கரையேறுகிறார் இவர், இவரின் இந்த திறமைதான் பின்னாளில் இவருக்கான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் அளித்தது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வலைகளை தாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் வேட்பாளர் ஏற்படுத்தப்போகிறார் என்பது இந்த தொகுதி மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு மிக மிக குறைவு…அந்த தொகுதி……
(தொடரும்)
Thursday, January 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
கடைசியா நீங்க வச்ச சஸ்பென்ஸ் என்னான்னு யோசிக்கிறேன். கண்டுபிடிக்க முடியல :)
நன்றி அப்துல்லா.
இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பாருங்கள்....கண்டுபிடிச்சிடலாம்.
Post a Comment