Thursday, November 25, 2010

முதல்வன் – நிதிஷ் குமார்



நாலந்தா பல்கலைக்கழகம் மூலமாக இந்தியாவிற்கு முதன் முதலாக பல்கலைக்கழகம் என்ற கான்செப்டை அறிமுகப்படுத்திய மாநிலம், முற்றும் துறந்து நாடோடியாய் திரிந்த புத்தனுக்கு மெய்ஞானத்தை ஊட்டிய மாநிலம், இந்திரா ப்ரியதர்ஷினி அமல்படுத்திய எமர்ஜென்ஸியை எதிர்த்து முதலாவதாக குரலை உயர்த்திய ஜே.பி-க்கு களம் அமைத்துக்கொடுத்து, அவரின் இறுதிநாள் வரை துணை நின்ற மாநிலம், மெளரிய பேரரசின் பொற்கால மன்னர் அசோகரால் ஆளப்பட்ட மாநிலம் – இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திற்கும் இல்லாத ஒரு Unique Profile, இந்த மாநிலத்திற்கு உண்டு…அதுதான் பீகார்.

இயற்கை வளங்களை ஏராளமாக வைத்திருந்தும், லாலு & கோ-வின் பதினைந்து வருட ஏடாகூட அரசியலாலும், கதர் சட்டைகளின் உள்ளடி விளையாட்டுக்களிலும் சிக்கி சின்னா பின்னாமாகிக் கொண்டிருந்தது பீகார். ஒரு புறம் மும்பையில் ராஜ் தாக்கரே போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதிகளிடம் சிக்கி தவித்த அன்றாடங்காய்ச்சி ஏழை பீகார்வாசிகள், மறுபுறம் பீகாரையும் பீகார்வாசிகளையும் தொடர்ந்து கேலியாக கிண்டலடித்து வந்து சில பொறுப்பற்ற வட இந்திய மீடியாக்கள் என எல்லாப் பக்கமும் இடியாய் இறங்கிக்கொண்டிருந்தது பீகாரிகளுக்கு. லாலுவின் மீதும், கதர் குல்லாக்களின் மீதிருந்த நம்பிக்கையும் தேய்ந்து போன நிலையில், யாரவது மீட்பதற்கு வரமாட்டார்களா என பீகாரிகள் ஏங்கிக் கொண்டிருக்கையில், இம்மாதிரியான ஒரு சூழ்நிலைக்காகவே காத்திருந்தவர் போல சரியான நேரத்தில் மாநில அரசியலுக்கு திரும்பிவிட்டார் நிதிஷ் குமார்.

புலிக்கு வாலாய் இருப்பதைவிட பூனைக்கு தலையாய் இருப்பது பெட்டர் என முடிவு செய்து மனிதர் டெல்லியை காலி செய்துவிட்டு பாட்னாவிற்கு ஷிப்ட் ஆனதிலிருந்து எல்லாமே ஏறுமுகம்தான். தமிழகத்தின் வளர்ச்சியை 1967 முன் - 1967 க்கு பின் என பிரிப்பது போல, பீகாரின் வளர்ச்சியை 2005 க்கு முன் – 2005 க்கு பின் என பிரித்து எழுதிவிடலாம். கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, அந்நிய முதலீடு என எல்லா பக்கத்திலும் ஐந்து வருடமாக நாலு கால் பாய்ச்சலில் வேலை பார்த்திருக்கிறார்கள் நிதிஷ் & கோ ஆட்கள். விக்கிபீடியாவை புரட்டினால் இவர் அரசாங்கம் செய்து கொண்டிருக்கும் வேலைகளை பார்க்கும்போது புருவத்தை உயரச் செய்கிறார். Development Rate இந்திய அளவில் இரண்டாவது மாநிலம் என்ற அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறார் மனிதர். இந்தியாவின் கிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த சாம்பியன் மேற்கு வங்காளத்தை விட அதிகமான மக்கள் பீகாரில் வரி செலுத்தி இருக்கிறார்கள். மத்திய அரசு இன்னும் கொஞ்சம் ஒத்துழைத்திருந்தால் குஜராத்தையும், மகாராஷ்டிராவையும், தமிழகத்தையும் ஒவர் டேக் செய்திருப்பார்கள் போலத் தெரிகிறது. இதே வேகத்தில் போய்க் கொண்டிருந்தால் இன்னும் சில வருடங்களில் பீகார் மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏ.ஸி ரூமுக்குள் அமர்ந்துக்கொண்டு Ground Reality தெரியாமல் தொடர்ந்து பீகாரை வாரிக்கொண்டிருக்கும் பிரணாய் ராயும், ராஜ்தீப் சர்தேசாயும் 2005-க்கு பிறகான பீகாருக்கு ஒருமுறை விஜயம் செய்துவிடுவது நலம். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நாட்களில் இவர்களை Spoof செய்து வீடியோவை You Tube இல் ஏற்றிவிடுவார்கள் பீகாரின் ஐ.டி.குருக்கள்.

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே. பகவத் கீதையை சரியாக படித்திருக்கிறார் நிதிஷ். ஐந்து வருட உழைப்பிற்கான ஊதியத்தை எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் பீகார்வாசிகள். குரு அடிக்கடி சொல்வார் “You get big bonus when you exceed your own goals”. நிதிஷ்குமாருக்கு இதைத்தான் அவரின் எஜமானர்கள் செய்திருக்கிறார்கள். 2005 இல் வெறும் 143 தொகுதிகளை மட்டுமே இவரின் கூட்டணிக்கு கொடுத்து இவரை ஆழம் பார்த்த மக்கள் 2010 இல் 206 தொகுதிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். Performance Rating Analysis..அட்சரசுத்தமாக செய்திருக்கிறார்கள். அவுட் ஆப் 243, 206 மனிதரின் கிட்டியில் வந்துவிட்டது. படிப்பறிவில்லாத, பின் தங்கிய ஏழை மக்கள் நிறைந்த மாநிலம் என பீகாரை ஏதோ இந்தியாவின் துயரம் போல வர்ணித்து வந்த வட இந்திய மீடியாக்களுக்கு, இந்த தேர்தல் முடிவின் மூலம் தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறார்கள் பீகார் மக்கள்…தங்கள் நலனிற்காக உழைக்கும் சரியான அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு அதிகம் படித்திருக்க வேண்டியதோ அல்லது மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்று.

2010 சட்டமன்ற தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே நிதிஷ் குமாருக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் குடைச்சல் ஆரம்பமாகியிருந்தது. கூட்டணிக்குள் இருந்துக்கொண்டே பிஜேபி ஒருபக்கம் குடைச்சல் தர, எதிர்புறம் லாலு+பஸ்வான் கூட்டணி, கதர் சட்டைகளின் தனி ஆவர்த்தனம் என ஏகப்பட்ட பிரச்சனைகள். நாடகத்தின் உச்ச கட்டமாக கதர் சட்டைகள் டெல்லியிலிருந்து அனைத்து ப்ரம்மாஸ்திரத்தையும் கொண்டுவந்து பாட்னாவிற்குள் இறக்கி என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். பப்பு வேகவில்லை. மத்தியில் ஆளும் அரசாங்கமாக இருந்துக் கொண்டு எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு எந்த ஒத்துழைப்பையும் கொடுக்காமல், தேர்தலின் போது மட்டும் மாநில வளர்ச்சியை குறை சொல்லும் விநோத அரசியலை காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொள்ளாத வரை பீகார் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் அவர்கள் கரையேறுவது கஷ்டம்தான். காங்கிரஸின் இந்த Layman அரசியல் நிலைப்பாட்டை விரல் சூப்பும் குழந்தைகூட விலாவரியாக கதாகலாட்சேபம் நடத்திவிடும்.

இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும் தான் செய்திருந்த வளர்ச்சிப் பணிகளை மட்டுமே மக்கள் முன் வைத்து தனி மனிதனாகவே என்.டி.ஏ கூட்டணியை மெகா வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிட்டார் நிதிஷ். மாபெரும் வெற்றியை அடைந்த போதும் மிகவும் கேஷுவலாக, ஷேவ் செய்யாத முகத்துடன் மீடியாக்காரர்களின் சில்லி கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தவரை பார்த்துக் கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டின் இந்நாள்/முன்னால்/எதிர்கால அரசியல்வாதிகள் நினைவில் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட பதினோராயிரம் ப்ளஸ் கிலோமீட்டர் தூரம் உள்ள அமெரிக்காவிற்கு வருடத்திற்கு ஒருமுறை தப்பாமல் விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் வெறும் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாட்னாவிற்கு பல ஆண்டுகளாக விஜயம் செய்யாமல் இருந்தது வியப்பாக இருக்கிறது. எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு பிரதமர் செல்லக்கூடாது என ஏதாவது ப்ரோட்டாகால் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நார்த் பிளாக்கில் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இரு தினங்களுக்கு முன் பீகார் தேர்தல் முடிவுகள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக வந்து கொண்டிருந்த வேளையில், தொலைகாட்சி ஒன்றில் பேட்டி அளித்துக்கொண்டிருந்த நிதிஷ்குமார், பீகார் மாநிலத்திற்கு பல ஆண்டுகளாக பிரதமர் வராமல் இருந்ததை ஒருவித வருத்ததுடனே குறிப்பிட்டு பேசினார். பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் தான் பீகாரை முன்னேற்றிக் காட்டுவேன் என அவர் பேட்டியை முடித்தபோது, பீகார்வாசிகள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து நடுநிலையாளர்களும் கண்டிப்பாக உணர்ச்சி வசப்பட்டிருப்பார்கள்.

Best Wishes Mr. Nithish Kumar.

8 comments:

எல் கே said...

இது தொடர்பான என் பதிவையும் பாருங்கள் நண்பரே. நிதிஷ் போன்றவர்கள் அனைத்து மாநிலங்களிலும் இருந்தால் இந்தியாவின் நிலை மாறும்

raja said...

மிகப்பிரமாதமான கட்டுரை அருமையாக எழுதியிருக்கீறிர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்...பெரிய பத்திரிகைகளில் கூட இப்படி எழுத ஆட்கள் இல்லை.

நவீனன் said...

அட்டகாசமான கட்டுரை. கச்சிதமான புள்ளி விவரங்கள், பொட்டில் அறையும் உண்மைகள்.... கலக்குறீங்க தல....

-நவீன்

Rex said...

LK, ராஜா & நவீன் -- நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

// மிகப்பிரமாதமான கட்டுரை அருமையாக எழுதியிருக்கீறிர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்...பெரிய பத்திரிகைகளில் கூட இப்படி எழுத ஆட்கள் இல்லை

//

அப்படியே ரிப்பீட்டு.

Rex said...

நன்றிங்கன்னா...தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

Subramanian Vallinayagam said...

அருமையாக எழுதியிருக்கீறிர்கள்..

Rex said...

Subramanian Vallinayagam - நன்றி