தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், ஆப்பிரிக்காவை இன்னமும் இருண்ட கண்டம் என புத்தகங்களில் அச்சிட்டுக்கொண்டிருப்பதை அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மறுபரீசிலனை செய்துவிடுவது நலம். வெளிச்சமாக இருக்கும் கண்டங்கள் எல்லாம் காதில் புகைவிடும் அளவிற்கு உலககோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடத்தி காட்டி உலக மக்களை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க செய்துவிட்டார்கள் தென்னாப்பிரிக்க மக்கள்.
ரியோ-டி-ஜெனிரோ, போர்ச்சுக்கீஸ், சம்பா நடனம் என தங்களைப்பற்றி சில விஷயங்களை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் உலகின் பிற தேசத்து மக்களுக்கு தங்கள் நாட்டின் இண்டு இடுக்குகளில் புதைந்திருக்கும் மற்ற சமாச்சாரங்களை பட்டியல் போட்டு காட்ட தயாராகிக் கொண்டிருக்கிறது ப்ரேசில், 2016 ஒலிம்பிக் போட்டிகளின் மூலமாக.
தென்னாப்பிரிக்காவும், ப்ரேசிலும் அசுர வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும்போது டில்லிவாலாக்கள் தூங்கிக்கொண்டிருக்க முடியுமா..2010 காமன்வெல்த் போட்டிகளை தள்ளி கொண்டுவந்துவிட்டார்கள். ஆசிய விளையாட்டுப்போட்டிகள், சார்க் விளையாட்டு போட்டிகள் என லோக்கல் மேட்ச் ஆடியது போதும் என முடிவெடுத்து, களத்தில் இறங்கி காமன்வெல்த் போட்டியை கொண்டு வந்தது வரை எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, காந்தி சிரித்துக்கொண்டிருக்கும் காகிதம் வெளியில் வராதவரை.
போட்டிக்கான கட்டுமான வேலைகள் தொடங்கிய காலகட்டத்திலேயே சிலர் இது தேவையற்ற செலவு என குரல் எழுப்பத் தொடங்கினார்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்த பணத்தை செலவிடலாம் என்ற அந்த குரலில் ஒரளவிற்கு நியாயமும் இருந்தது. டெல்லி க்ரேட்டர் கைலாஷ் ஏரியாவின் அடிப்படை வசதிகளில் பத்தில் ஒரு பங்கு கூட பெற்றிராத கிராமங்கள் டெல்லியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவிற்குள் இன்னமும் இருக்கின்றன. பேசாமல் இந்த பணத்தை வைத்து ஒரு ஆயிரம் கிராமங்களுக்கு ஹை-ஸ்பீட் பைபர் ஆப்டிகல் கேபிள் போட்டிருக்கலாம், இப்ப இல்லைன்னாலும் பின்னாடி உபயோக இருந்திருக்கும்.
இரண்டு வருடமாகவே காமன்வெல்த் என்ற பேரை சொல்லி புதுதில்லியை ஒருவழி செய்து கொண்டிருந்தார்கள். குத்துவிளக்கேற்றி, கொடி அசைத்து, பிரதமரோ அல்லது யாரோ ஒரு வெளிநாட்டு தலைவரின் உரையுடனோ போட்டி தொடங்க இருக்கும் நிலையில் பூனை வெளியே வந்துவிட்டது. சுடுகாட்டு கொட்டகையிலே காசு பார்த்துவிட்ட பிறகு ஏழு அல்லது எட்டு இலக்கங்களில் சில்லரை புரண்டு கொண்டிருக்கும் இந்த மெகா விளையாட்டு போட்டி ஏற்பாட்டுச் செலவுகளில் கை வைக்காமல் விட்டால் அரசியலுக்கு அழகல்ல. புகுந்து விளையாடி இருப்பது போல தெரிகிறது.
சாதாரண மளிகை கடையிலேயே முதலாளி வரவு செலவு பற்றி ஒரளவிற்கு கணக்கு வைத்திருப்பார் , கடையில் இருப்பவர்கள் யாரவது கைவரிசை காட்டினால் இந்த குத்து மதிப்பான வரவு செலவு கணக்கை வைத்தே ஏறக்குறைய ஆளை கார்னர் பண்ணி அமுக்கிவிடுவார்கள். அட்லீஸ்ட் பணம் எப்படி/எங்கே தவறியது என கணித்துவிடுவார்கள்.
காமன்வெல்த் கேம்ஸ் மாதிரியான போட்டி ஏற்பாட்டுச் செலவுகளுக்கு நிச்சயம் பெரிய அளவிலான எக்ஸ்பென்ஸ் ட்ராக்கிங் சிஸ்டம் நடைமுறையில் இருக்கும். மிகப்பெரிய அளவில் ஆடிட் குழுக்கள் களத்தில் கண்காணித்து கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எங்கே யார் விளையாடி இருக்கிறார்கள் என்பதை ஒரளவிற்கு யூகித்துவிடலாம். யூகித்தும் இருப்பார்கள் இந்நேரம். நூறு, ஆயிரம் என்றால் ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்க பார்க்கலாம், கோடிகளில் நம்பர் வரும்போது எப்படி சமாளிக்கிறார்கள் என்பது அரசியல்வாதியாக மாறினால் ஒழிய தெரிந்து கொள்ள முடியாது போலத் தெரிகிறது. இந்த மாதிரியான மேட்டரை தெரிந்து கொள்வதற்காகவேனும் கொஞ்ச நாளைக்கு இருக்கும் ஜோலியை விட்டுவிட்டு பார்ட் டைம் அரசியல்வாதியாக வலம் வரவேண்டும் போலத் தோன்றுகிறது.
போட்டிகள் இன்னமும் தொடங்கியிராத நிலையில், ஏற்பாட்டுச் செலவுகளின் தில்லுமுல்லுக்கள் வெளிவந்துக்கொண்டிருக்கும் வேகத்தைப்பார்த்தால், இந்த போட்டிக்காக மெனக்கெட்டு தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் கழட்டிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பக்கத்தில் உள்ள ஒரு தேசம் ஒலிம்பிக் போட்டியை நடத்தி தங்கள் நாட்டை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கும்போது நம்மூர் ஆட்கள் காமன்வெல்த் போட்டியிலேயே இந்தியாவை காலி செய்து கொண்டிருக்கிறார்கள். போட்டிகளில் வெல்கிறோமோ இல்லையோ இந்த மேட்டரில் நம்மூர் அரசியல்வாதிகளை யாராலும் வெல்லவே முடியாது என மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டிவிட்டார்கள். ஜெய் ஹோ.
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
தலிப்பு தப்பு தலிவா. இத்துல வெல்த் ஆனது காமன்மேன் இல்லை :))
Post a Comment