மார்ச் 12, 1930. ஒரே ஒரு அறிக்கை. இருபத்தைந்து நாட்கள்..350+ கிலோ மீட்டர் தூரம். இடுப்பில் சாதரண வேட்டி, கையில் மூங்கில் தடி சகிதமாக அறுபது வயதை கடந்துவிட்ட ஒரு மனிதன் தெருவில் இறங்கி நடக்க ஒரு தேசமே அவர் பின்னால் நகர்ந்தது. ஏப்ரல் 6, 1930, சூரியன் மெல்ல தலையை நீட்டி எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்த அதிகாலை வேளையில் ஒட்டு மொத்த உலகமும் அந்த மனிதரை நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. தண்டி கடற்கரையில் நின்றுகொண்டு தன் சிறிய கைகளால் ஒரு பிடி உப்பை அள்ளிய காந்தி என்ற எளிய மனிதரை ஆயுத பலத்தின் மூலமாகவோ அல்லது வேறு பாணியில் அச்சுறுத்தியோ பணிய வைக்க முடியாது என்பதை உலகின் அப்போதைய மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஆழமாக உணர ஆரம்பித்தது.
சாதாரண நடைபயணத்தின் மூலமாககூட அரசாங்களை அசைக்க முடியும் என்ற செய்தியை உலகிற்கு முதன் முதலாக உணர்த்தியது அநேகமாக மகாத்மா காந்தியாக தான் இருக்கமுடியும். இவருக்கு பிறகு இதே பாணியை மார்டின் லூதர் கிங் ஒரளவிற்கு முயற்சித்தது வரலாறு. ஒரே ஒற்றுமை இவர்கள் இருவருமே தங்கள் தேசத்து மக்களுக்கு நீதி வேண்டி நடத்திய பயணங்கள் இவை.
பள்ளி நாட்களில் யாத்திரை, நடைபயணம் என்ற வார்த்தைகளை கடக்கும்போதெல்லாம் காந்தியும், தண்டி உப்பு சத்தியாகிரகமும் மட்டுமே நினைவில் வந்து போவது இயல்பாய் இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, சிப்பாய் கலகம் போன்ற நிகழ்வுகளை படிக்கும்போது ஏற்பட்ட அதிர்ச்சியோ ஆயாசமோ தண்டி யாத்திரையை படிக்கும்போது ஏனோ ஏற்பட்டதில்லை. தேர்வில் மதிப்பெண்களை பெறுவதற்காக மட்டுமே புத்தகங்களை படிப்பது என்ற மாணவ பருவ நியதிப்படி படித்து முடித்ததால் வரலாற்றை புரட்டிப்போட்ட தண்டி யாத்திரையை முழுதும் உணரமுடியாமல் போயிருந்தது.
காலம் உருண்டு வேலை, தொழில் என வாழ்க்கை பக்குவப்பட ஆரம்பித்திருந்த நிலையில் அரசியல்வாதிகளின் நடைபயணங்களும் அதற்காக அவர்கள் சொல்லிக்கொண்ட காரணங்களும் வரலாற்றின் மீது மீண்டும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ தன் சொந்த நலனை முன்னிறுத்தாமல், எந்தவித பாதுகாப்பையும், செளகரியத்தையும் கோரிப் பெறாமல் ஒரு தனி மனிதன் தன் தேசத்திற்காக மேற்கொண்ட நடைப்பயணத்தை முன்மாதிரியாக கொண்டு இன்றைய அரசியல்வாதிகள் நடத்திக்கொண்டிருக்கும் யாத்திரை/நடை பயணங்கள் திகைப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.
கர்நாடக அரசியலில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கொரு யாத்திரையை அறிவித்து அம்மாநில மக்களை ஏகத்திற்கும் வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். போதாத குறைக்கு தங்கள் யாத்திரையின் போது ஏதாவது வன்முறை ஏற்பட்டால் அதற்கு எதிர் அணியினரே பொறுப்பு என இரு தரப்புமே மாறி மாறி சொல்லிக்கொண்டிருப்பதால், வன்முறை நடந்தே தீரும் என மக்கள் ஏகப்பட்ட திகிலில் இருக்கிறார்கள். மகாத்மா நடத்திய யாத்திரையில் தாமாக முன்வந்து தைரியமாக கலந்து கொண்ட அதே மக்களின் வழித்தோன்றல்கள் இன்றைய அரசியல்வாதிகள் யாத்திரை என அறிவித்தவுடன் பயந்து வீட்டுக்குள் முடங்கிவிடுவது காலத்தின் கோலம்.
அந்தப் பக்கம் ஆந்திராவில் முன்னாள் முதல்வரின் மகன் யாத்திரை போய்க்கொண்டிருக்கிறார். கர்நாடாகாவிலாவது பரவாயில்லை ஆளும் கட்சியும் எதிர் கட்சியும்தான் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் கட்சியிலே உள்குத்து வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இராம குண்டம் சூட்டோடு சேர்த்து அரசியல்வாதிகளும் சூடேற்றிக்கொண்டிருப்ப்பதால் ஆந்திர மக்கள் மண்டை காய்ந்து போய் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நடைபயணம் செய்திராத அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போதைய அரசியல்வாதிகள் அனைவருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மராத்தான் வாக் சென்றிருக்கிறார்கள். எல்லாமே அரசியல் கணக்குகளை சரி செய்து கொள்வதற்காகவோ அல்லது தங்கள் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திக்கொள்வதற்காகவோ மேற்கொள்ளப்பட்ட பயணங்களாகவே தெரிகிறது. மக்கள் நலனை முன்வைத்து நடந்திருந்தால் மின்சார வெட்டும், தண்ணீர் பஞ்சமும் காணாமல் போயிருக்கும்.
சுதந்திர போராட்ட காலத்தில் சுயநலமற்ற தலைவர்களால் மக்களின் எழுச்சிக்காக ஏற்படுத்தபட்ட நடைபயணங்களை இன்றைய அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்திக்கொள்வதை பார்க்கும்போது பேசாமல் வரலாற்று புத்தகங்களில் இருந்து இம்மாதிரியான முன்மாதிரி நிகழ்வுகளை நீக்கிவிடலாம் போலத் தோன்றுகிறது. அட்லீஸ்ட் அடுத்த தலைமுறையாவது கொஞ்சம் உருப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
//பேசாமல் வரலாற்று புத்தகங்களில் இருந்து இம்மாதிரியான முன்மாதிரி நிகழ்வுகளை நீக்கிவிடலாம் போலத் தோன்றுகிறது. அட்லீஸ்ட் அடுத்த தலைமுறையாவது கொஞ்சம் உருப்படும்.
//
:((
Post a Comment