Saturday, February 13, 2010

விளையாடுகிறதா விளையாட்டுத்துறை அமைச்சகம்

கோலகலாமாக தொடங்கிவிட்டது வான்கூவர் 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள். அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடன் போட்டி போட ஆப்பிரிக்காவின் குட்டி தேசங்கள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன.

எதிர்பார்த்தது போலவே சீனா, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் மிகப் பெரிய குழுவையே போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைத்துள்ளன. மிகவும் சுவாரசியமாக இவர்களுடன் போட்டி போட கேமேன் ஐலேண்ட் (Cayman Islands) என்னும் குட்டி தீவு ஒரே ஒரு சிங்கத்தை சிங்கிளாக தங்கள் நாட்டின் சார்பாக கோதாவில் இறக்கியுள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்துக்குள் அடக்கிவிடலாம். எழுபதிலிருந்து எண்பது ஆயிரத்துக்குள் இருக்கலாம். அஷ்டே. கானாவும், எத்தியோப்பியாவும், நேபாளமும் தங்கள் பொருளாதார நிலைகளையும் மீறி வீரர்களை தயார் செய்து அனுப்பி உள்ளன. தேசபக்தி பற்றி இவர்களிடம் பாடம் கற்றுக்கொள்வது ஷேமம்.

இன்னும் பத்து வருடத்திற்குள் நாம் தான் உலக வல்லரசு என மக்கள் காதில் பூ சுற்றிக்கொண்டிருக்கும் நம்மூர் அரசியல்வாதிகள் கொஞ்சம் இந்த போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் வரலாற்றையும் அவர்கள் அனுப்பி உள்ள வீரர்களின் எண்ணிக்கையையும் புரட்டிப் பார்த்துவிடுவது நலம். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள ஒரு தேசத்தால் வெறும் மூன்று பேரை மட்டுமே இந்த போட்டிகளுக்க்காக தயார் செய்ய முடிந்திருக்கிறது. அதிலும் இருவர் ராணுவ அணியில் இருந்து வந்திருக்கிறார்கள். ஒருவர் தனியாக களத்தில் உள்ளார்.

சொந்தமாக விண்வெளிக் கலங்களையும், அனுகுண்டையும் தயாரிக்ககூடிய அளவிற்கு முன்னேறி விட்ட ஒரு தேசத்தால் இம்மாதிரியான போட்டிகளுக்கு குறைந்தபட்சம் பத்து பேரைக்கூட தயார்செய்ய முடியாமல் போவது ஆச்சரியமாக இருக்கிறது. மாநிலத்திற்கு ஒரு சிறந்த வீரரை தயார் செய்வதை இலக்காக வைத்து செயல்பட்டிருந்தால் கூட இந்நேரம் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வீரர்களை இந்த போட்டிகளுக்கு அனுப்பி இருக்கமுடியும். வாழ்க விளையாட்டுத்துறை அமைச்சகம். வளர்க விளையாட்டுத்துறை அமைச்சர்.

கத்திரிக்காயை அனுமதிக்கலாமா வேண்டாமா, ஷாருக் படம் திரையிடப்பட்டதா இல்லையா என மாய்ந்து மாய்ந்து ஆராய்ந்துக்கொண்டிருக்கும் இந்திய மீடியா உலகம் விளையாட்டுத்துறை அமைச்சரின் அலுவலத்திற்கு ஒரு நடை போய்வந்தால் இந்த வருடம் நாட்டில் கொஞ்சம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.செய்வார்களா ஜனநாயகத்தின் நான்காவது தூணின் போர்ப்படை தளபதிகள்…

பி.கு. வான்கூவர் ஒலிம்பிக் போட்டியை பற்றிய முழு விவரம் இங்கே.
http://www.vancouver2010.com/

3 comments:

Toto said...

ச‌ரியா சொல்லியிருக்கீங்க‌.. இதை க‌ண்ணை மூடிட்டு எம்.எஸ்.கில்லுக்கு அனுப்பிட‌லாம். க்ரிக்கெட்டையும் சினிமாவையும் க‌ல‌ந்து [ ஐபிஎல் ] விள‌யாட‌ற‌துல‌யே க‌வ‌ன‌மா இருப்பாங்க‌ போலிருக்கு.

-Toto
roughnot.blogspot.com

gulf-tamilan said...

அவங்களுக்கு எல்லாம் வேற வேலையிருக்கு போல.கிரிக்கெட் மட்டும்தான் கவனிப்பார்கள்.

Rex said...

நன்றி டோடோ/கல்ஃப் தமிழன். கிரிக்கெட் கவனிக்கபடவேண்டிய விளையாட்டுதான்....அதுக்காக மத்த எல்லா விளையாட்டுக்களையும் இந்த அளவிற்கு புறக்கணிப்பது நல்லதா படல...