Sunday, June 20, 2010

வுவுஸலாஃ – Vuvuzela

சில வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு சானலில் மீசை முருகேஷ் அவர்கள் நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் ஸ்பூன், தட்டு, அமுல் பேபி பவுடர் டின் ஆகிய பொருட்களை வைத்து வித விதமான ஓசையை ஏற்படுத்தி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தார். படிக்கும் நாட்களில் என்.சி.சி. கேம்பின் போது அலுமினியத்தால் செய்யப்பட்ட அன்ன(க்)கூடையை தலைகீழாக கவிழ்த்துப்போட்டு அடி பின்னி எடுப்பார்கள் சக மாணவர்கள்….இந்த ஓசையின் காம்பினேஷனில் கானா பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் அடுத்த பத்து தலைமுறைக்கு எந்த புண்ணியமும் செய்ய வேண்டியதில்லை :-) ஆடாத கால்களையும் ஆட வைக்கும் ஒரு துள்ளல் இசையை மிகவும் சாதாரணமாக வெளிப்படுத்திவிடுவார்கள்.

நேர்த்தியான இசைக்கருவிகளின் ஓசையை விட இம்மாதிரியான சாதாரணமான பொருட்களை கொண்டு வெளிப்படுத்தப்படும் ஒசை பல நேரங்களில் ஆளை உருக்கி எடுத்துவிடும். இரண்டு அடிக்கு இரண்டு அடி அலுமினியம் அல்லது ப்ளாஸ்டிக் துண்டை அப்படியே புனல் போல மடித்து நம்மூர் ஆட்டோக்காரர்கள் பயன்படுத்தும் பல்ப் ஹார்ன் போன்றதொரு சமாச்சாரத்தை உருவாக்கிவிட்டார்கள்…..பெயர் மட்டும் கொஞ்சம் ஆப்பிரிக்கத்தனமாக இருக்கிறது…வுவுஸலாஃ (Vu-Vu-Zela)

ஆயிரம் கொசுக்கள் காதருகே வந்து ஒரே நேரத்தில் ரீங்காரமிடுகிற மாதிரி இருக்கிறது வுவுஸலாஃவிலிருந்து வெளிவரும் ஒலியின் ஓசை. இதமாகவும் இல்லாமல் எரிச்சலையும் ஏற்படுத்தாமல் வித்தியாசமாக ஒலிக்கிறது இந்த மினி ஹார்ன். 2010 உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் இன்றைய தேதிக்கு கதாநாயகன் இந்த இசை கருவிதான். நம்மூர் நாதஸ்வரத்தில் இருக்கும் துவாரங்களை எடுத்துவிட்டு, அதை இரண்டு அடியாக உருக்கி சுருக்கி எடுத்தது மாதிரியான தோற்றம்….இதை வாசிப்பதற்கு வித்வானாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

விடலைப்பையன்கள் முதல் விவரம் தெரிந்தவர்கள் வரை ஊதுகிறார்கள்….ஊதிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியின் போதும் தொடர்ந்து தொண்ணூறு நிமிடங்கள் இந்த கருவியிலிருந்து வெளிப்படும் ஓசை பிண்ணணியில் கசிந்தபடி இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி பங்கு கொண்ட போட்டிகளின்போது கொஞ்சம் டெஸிபலை கூட்டி எதிரணி மற்றும் தொலைக்காட்சி வர்ணணையாளர்களை ஏகத்தும் சூடேற்றிக்கொண்டிருந்தார்கள் லோக்கல் கால்பந்தாட்ட ரசிகர்கள். குழுவாக செயல்பட்டு மாறி மாறி ஊதிக்கொண்டே இருப்பார்கள் போல தெரிகிறது.

ஒவர் நைட்டில் உலகப்புகழ் பெற்றுவிட்ட வுவுஸலாஃவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பல மொபைல் போன்களில் வுவுஸலாஃவின் வித்தியாசமான ஒலி தான் இப்போதைக்கு ரிங்டோன்….போட்டி ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை இந்த கருவியை விளையாட்டு மைதானத்திற்குள் பயன்படுத்த தடை விதிக்ககோரி வைக்கப்பட்ட அனைத்து வேண்டுகோளையும் பிஃபா நிராகரித்துவிட்டது. கால்பந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளை டென்னிஸ் அல்லது கோல்ப் போட்டியை ரசிப்பது போல அமைதியாக ரசிக்க ஆரம்பித்தால் மிகவும் அபத்தமாக இருக்கும். போட்டியின் சுவாரசியமே தகர்ந்து போகும்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இம்மாதிரியான போட்டிகளின் போது அங்குள்ள கலாச்சாரத்தை அம்மக்கள் பிரதிபலிக்க தவறுவதில்லை..அவர்கள் கைதட்டியும், கோரஸாக சத்தமிட்டும் தங்கள் ஆர்ப்பரிப்பை வெளிப்படுத்துவது போல ஆப்பிரிக்க மக்கள் தங்கள் தேசத்தில் ஒரு இசைக்கருவியின் மூலம் அவர்களின் கொண்டாடத்தை வெளிப்படுத்துகிறார்காள். இதை புரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு ஒன்றே ஒன்றைதான் சொல்ல முடியும்.

Be a Roman when you are in Rome

No comments: