Thursday, June 17, 2010

பரிட்டோ பெளல் Vs ப்ரெஞ்ச் கிஸ்

சனி உச்சத்தில் இருக்கிறார் ப்ரெஞ்ச் கால்பந்தாட்ட குழுவிற்கு…சாண் ஏறினால் இரண்டு முழம் சறுக்குவது என சத்திய பிரமாணமே எடுத்திருப்பார்கள் போல தெரிகிறது. 1998 இல் சாம்பியன், சரியாக நாலு வருடம் கழித்து 2002 இல் செனேகல் என்ற கத்துகுட்டி அணி சாம்பியன்களை கிழிப்பது எப்படி என வகுப்பெடுத்துக் காட்டினார்கள். ஒருவழியாக அதிலிருந்து மீண்டு மறுபடியும் 2006 இல் இறுதி போட்டி வரை முன்னேறினார்கள் பாரீஸ்வாலாக்கள், 2010 இல் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது. இம்முறை செனேகல் இடத்தை மெக்ஸிகோ எடுத்துக்கொண்டது…கிழி கிழியென கிழித்துவிட்டார்கள் பிரான்ஸ் அணியை. பேசாமல் ப்ரெஞ்ச்காரர்கள் இனிமேல் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு கொஞ்சம் சேதாரத்தை குறைக்கப்பார்க்கலாம்..

படு பில்டப் கொடுத்து வெளிவரும் பாடாவதி படத்தை முதல்நாள் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகும் நம்மூர் ஆட்களைப் போலவே, ஏகத்திற்கும் எதிர்பார்ப்பில் இருந்த சில பல கால்பந்தாட்ட உடன்பிறப்புக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது டீம் பிரான்ஸ். பாண்டிச்சேரி மக்கள் மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

அர்ஜென்டினா, ப்ரேசில், ஜெர்மனி, இத்தாலி அணிகளுக்கு இணையான எதிர்பார்ப்பு இந்த அணியின் மீதும் இருந்தது….நேர்த்தியாக சொதப்பிவிட்டார்கள். எதிர்புறத்தில் விளையாடிய மெக்ஸிகோ அணியை யாராவது மலையாள மாந்தீரீக புண்ணியவான் ஆசீர்வதித்து இருப்பார் போல தெரிகிறது, அப்படி ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டார்கள்…ஊருக்கு திரும்பும்போது டகீலா கரை புரளும். ஆட்டத்தின் முதல் பாதி வரை தாக்குதலை தொடங்காமல் வீணடித்துவிட்ட பிரான்ஸ் இரண்டாவது பாதியின் பின்பகுதியில் விழித்துக்கொண்டது....பட் ரொம்ப லேட்.

மெக்ஸிகோவின் முதல் கோல் விழும் போது ப்ரெஞ்ச் அணியின் கோலியை தவிர வேறு எந்த வீரரையும் கேமிராவின் வளையத்துக்குள் காணவே முடியவில்லை……அந்த அளவிற்கு ஒரு சுறுசுறுப்புடன் ஆடிக்கொண்டிருந்தது ஒட்டு மொத்த ப்ரெஞ்ச் அணியும்….போதாத குறைக்கு வேலியில போண ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்டார்கள்....தேவையற்ற பெனால்டிக் வாய்ப்பை வாரி வழங்கிவிட்டு ஊருக்கு ரிட்டர்ன் டிக்கெட் கன்ஃபர்ம் செய்துவிட்டார்கள்….

கர்லா புரூனியும், நிக்கோலஸ் சர்க்கோஸியும் மறந்தாலும் பிரான்ஸ் கால்பந்தாட்ட ரசிகர்கள் இந்த தோல்வியை மறக்கவே மாட்டார்கள். Better Luck Next time…Adios Amigos Team France 

No comments: