Tuesday, October 21, 2008

தமிழக தேர்தல் களங்களை திரும்பிப் பார்க்க வைத்த தொகுதிகள்- பகுதி 7

“ஆண்டவனே கைவிட்டாலும் நாங்கள் கைவிட மாட்டோம்”.
தங்கள் தொகுதியின் வளர்ச்சிக்கு உழைக்கும் எந்த ஒரு வேட்பாளருக்கும் ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரலாக இந்த செய்தியை சொல்லி நிற்கிறது இந்த தொகுதி. ஒரு முறை, இரு முறை அல்ல தொடர்ந்து ஆறு முறை ஒரே வேட்பாளரை தேர்ந்தெடுத்து தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய சாதனையை செய்துவிட்டு சத்தமே இல்லாமல் நிற்கிறது இந்த தொகுதி.

தமிழக அரசியலை கலக்கிய, கலக்கிக் கொண்டிருக்கின்ற ஜாம்பவான்கள் கூட தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும் இன்றைய சூழலில் ஒருவர் மட்டும் தொடந்து ஆறு முறை ஒரே தொகுதியில் நின்று வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் வெவ்வேறு சின்னங்கள், வெவ்வேறு கட்சிகள் சார்பாக நின்று கோட்டைக்கு போவதற்கு மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் ஒழிய, நினைத்துக்கூட பார்க்க முடியாது.

பழைய தஞ்சை மாவட்டதில் இடம் பெற்றிருந்து, இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்காள விரிகுடாவை எட்டி பிடித்துவிடும் தூரத்தில் உள்ள தமிழகத்தின் 193 வது சட்டமன்ற தொகுதி. சித்தன்ன வாசல் ஒவியங்களை தன்னுள் தாங்கி நிற்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது மிகப் பெரிய தொகுதி. தமிழக அரசியல் வரலாற்றில் துணை சபாநாயகர், உணவுத்துறை அமைச்சர் பதவியை அலங்கரித்த வேட்பாளரை தேர்ந்தெடுத்த தொகுதி….அந்த தொகுதி….

அறந்தாங்கி : அதிமுகவும் சரி, திமுகவும் சரி, இந்த தொகுதியில் அதிக நேரம் செலவு செய்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. ஆரம்ப கட்டத்தில் திமுகவின் கோட்டையாக இருந்து பின்னர் எம்ஜியாரின் தாக்கத்தால் இலைக்கு தலை வணங்கிய தொகுதி. அதிமுக மிக பலமாக வேறுன்றியப் பின்னும் திமுக தளராமல் தன் தாக்குதலை தொடர்ந்த முக்கிய தொகுதிகளில் இதுவும் ஒன்று. ஏறக்குறைய முப்பது வருட தொடர் போரட்டத்திற்கு பின்னர் 2006இல் திமுக மீண்டும் இந்த தொகுதியை பிடித்துள்ளது.

1977 இல் முதல் முறையாக இங்கு கணக்கை தொடங்கிய அதிமுக 1996 வரை (1991 தேர்தல் தவிர்த்து) இங்கு தனது கொடியை கீழே இறக்கவே இல்லை. காரணம் ஒருவர். ஒரு தனி மனிதர். திமுக, கம்யூனிஸ்டு, சுயேச்சைகள்….ம்ம்ம்ம்…எந்த எதிர்ப்பும் ஒரு சிறு சேதாரத்தையும் ஏற்படுத்திய சுவடே தெரியவில்லை. மிகப்பெரிய ஆச்சரியம் பின்னால் அதிமுகவே அந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டும் இங்கு பெரிய சல சலப்பை ஏற்படுத்த முடியவில்லை. அப்படி ஒரு புரிந்துணர்வு வேட்பாளருக்கும் மக்களுக்கும் இடையில். எந்த அளவிற்கு ஒரு வேட்பாளரை ஒரு தொகுதி கொண்டாட முடியும் என்பதற்கு இந்த தொகுதியைவிட சிறந்த தொகுதி தமிழகத்தில் இருப்பதாக தெரியவில்லை.

அக்பரை தவிர்த்து விட்டு முகலாய சரித்திரம் எழுதுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது இந்த தொகுதியின் செல்லப்பிள்ளை திரு. எஸ். திருநாவுக்கரசு அவர்களை தவிர்த்துவிட்டு அறந்தாங்கியை பற்றி எழுதுவது.

திரு. எஸ். திருநாவுக்கரசு : எம்ஜியாரல் அடையாளம் காணப்பட்டு அரசியலுக்குள் இழுக்கப்பட்டு, அதிமுகவின் இளைஞரணிக்குள் ஐக்கியமானவர். படித்தவர், வக்கீல்.

1977 இல் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்ட “மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்” என்ற வாசகத்தை கிட்டத்தட்ட 22 வருடங்கள் தன்னுடன் வைத்திருந்தவர். நான்கு முதல்வர்களுடன் சட்டப் பேரவையில் பணியாற்றியவர்.

1977 இல் முதல் முறையாக எம்ஜியார் தலைமையிலான அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்று சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்த திருநாவுக்கரசு அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதத்தில் இவர் தமிழக சட்டசபை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட, முதல் முறையாக அறந்தாங்கி தொகுதி தமிழக வரைபடத்தில் அனைவராலும் அலசப்படுகிறது.

தொடர்ந்து 1980 மற்றும் 1984 களில் மீண்டும் எம்ஜியார் தலைமையிலான அதிமுக சார்பில் இவர் இங்கு போட்டியிட்டு வெற்றிப் பெற, முதல் முறையாக இந்த தொகுதிக்கு அமைச்சர் பதவி அளித்து கெளவரப்படுத்துகிறார் எம்ஜியார். 1984இல் திரு. திருநாவுக்கரசு அவர்கள் தமிழக உணவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட, தமிழக அரசியலில் அறந்தாங்கி தொகுதி தன் இடத்தை அழுத்தமாக பதிவு செய்ய ஆரம்பிக்கிறது.

1989-இல் அதிமுக இரண்டாக பிளவு பட்டு தேர்தலை சந்தித்த நிலையில், அந்தக் கட்சியின் பலமான இரட்டை இலை சின்னத்தின் துணையின்றி இவர் பெற்ற வெற்றி, இந்த தொகுதி அதிமுக கோட்டை என்பதை மீறி திருநாவுக்கரசு அவர்களின் கோட்டை என்பதை முதல் முதலாக வெளிப்படுத்துகிறது. அதே போல முதல் முறையாக கட்சியை தாண்டி தனிப்பட்ட செல்வாக்கு உடைய வேட்பாளாராகவும் இவர் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆவதற்கும் இந்த தேர்தல் உதவியது.

மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றி 1991 இல் இவர் பெற்றது. முதல் முறையாக அதிமுக வின் துணை மற்றும் இரட்டை இலை சின்னம் இவை இரண்டும் துணைக்கு இல்லாமலேயே மிகப் பெரிய புயலை எதிர்த்து கரை ஏறி காட்டினார். இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஷயம் அந்த தேர்தலில் இவர் பெற்ற கூடுதல் ஒட்டுக்கள். அதிமுக காங்கிரஸ் கூட்டணி மிக வலுவான நிலையில் இருந்த அந்த தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளரை சுமார் 21,421 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று காட்டினார். சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் இவர்தான் Aranthangi’s undisputed candidate என்று. அந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் தவிர்த்து கரையேறிவர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர்.

எந்த ஒரு வெளி உலக பிரச்சனைகளையும் தங்கள் தொகுதியின் மேம்பாட்டுடன் சேர்த்துக் குழப்பிக் கொள்ளாமல் மிகத் தெளிவாக இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்தது மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் எல்லாத் தொகுதிகளிலும் இன்று ஒரளவுக்கு ஏற்பட்டு இருப்பதற்கு அறந்தாங்கி தொகுதியும் ஒரு காரணம்.

1996 இல் மறுபடியும் ஒன்றுபட்ட அதிமுக சார்பாக போட்டியிட்டு இவர் வெற்றியை பறிக்க, அறந்தாங்கி திருநாவுக்கரசு அவர்களின் அசைக்க முடியாத கோட்டையாக மாறிப்போனது. 1999 இல் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த தொகுதியின் ஒரு செங்கலைக் கூட இவருக்கு எதிராக போட்டியிட்டவர்களால் பெயர்தெடுக்க முடியவில்லை. இனிவரும் காலங்களில் தமிழகத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் இவரின் சாதனையை யாரவது முறியடிக்கலாம். ஆனால் அறந்தாங்கியில் இவரின் சாதனனயை யாராலும் தொட முடியாத நிலை தான் இன்னும் பல ஆண்டுகளுக்கு.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு 2006 இல் நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வை சேர்ந்த திரு. உதயம் சண்முகம் அவர்கள் சுமார் 17,460 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை வீழ்த்தி உதய சூரியனை மீண்டும் இங்கு உதிக்க செய்திருக்கிறார். எப்படிப்பட்ட கோட்டையும் உலுக்கி பார்க்கும் திறன் கொண்டது திமுக என்பதை இந்த தேர்தல் மூலம் அவர்களும் நிரூபித்துக்காட்டினார்கள்.

இந்த தேர்தலில் மிக அதிக அளவில் பதிவான (70%) வாக்குகள் திமுக விற்கு சாதகமான நிலையை தோற்றுவித்து இருப்பதாக தெரிகிறது. வருகிற தேர்தல்களிலும் இது தொடரும் பட்சத்தில் வலுவான கூட்டணியுடன் திமுக களம் இறங்கினால் உதய சூரியன் இங்கு தொடர்ந்து உதிப்பதை எவராலும் தடுக்கவே முடியாது.

1991 தேர்தலில் இங்கு நடைபெற்ற தேர்தல் மற்ற தேர்தல்களில் இருந்து மிகவும் மாறுபட்ட சூழலில் நடைபெற்றதால் அந்த தேர்தலின் விவரங்கள் மட்டும் கீழே. (Thanks to PIB, Chennai)

மொத்த வேட்பாளர்கள் ; 1,91,195
வாக்களித்தவர்கள் ; 1,35,699

வேட்பாளர்: எஸ். திருநாவுக்கரசு (வெற்றி)
கட்சி : தா ம க
பெற்ற ஓட்டுக்கள் : 73,571

வேட்பாளர்: செல்ல குழந்தை
கட்சி ; அ இ அ தி மு க
பெற்ற ஓட்டுக்கள் ; 52,150


இரண்டு தலைமுறை வாக்களார்களை தன் பக்கம் வைத்திருக்க வேண்டுமானல் கட்சி மற்றும் தனிப்பட்ட செல்வாக்கை மீறி நிச்சயம் தொகுதியின் வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். இந்த செய்திதான் அறந்தாங்கி தொகுதி திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கு அளித்த தொடர் வெற்றியின் மூலமாக சொல்லி வந்திருக்கிறது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளும் அறந்தாங்கியை பின்பற்ற தொடங்கினால் எந்த தொகுதியும் இனி பின் தங்கிய தொகுதியாகவே இருக்க முடியாது. இனிவரும் தேர்தல்களில் மக்கள் இதை உணர்ந்து செயல்படுவார்களா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------

அடுத்து….

எம்ஜியார் தொடங்கி ஜெயலலிதா வரை அதிமுகவிற்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்திய/ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற தொகுதி. திமுக அதிமுக என இரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் வீழ்த்த துடிக்கும் தொகுதிகளில் இன்றைய தேதியில் முதலிடத்தில் உள்ள தொகுதி. எந்த நேரமும் இந்த தொகுதியின் மீது ஒட்டு மொத்த இந்தியாவின் பார்வையும் விழலாம் என்ற நிலையில் உள்ள தொகுதி….அந்த தொகுதி….

(தொடரும்)

7 comments:

seik mohamed said...

எம்.ஜி.ஆர்.திராவிட‌ முன்னேற்றக் கழக‌த்தை விட்டு விட்டீர்க‌ளே?
அவர் காட்டிய‌ அன்ப‌ர‌ச‌னை ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ அனுப்பி வைத்தோம்.
இப்போதும் அவ‌ர் பா.ஜ‌.க‌.வில் இருந்து வெளியேறி எந்த‌வொரு வேட்பாளரை கை காட்டினாலும் வெற்றி திருநாவுக்க‌ர‌ச‌ருக்குத்தான்.
க‌ட‌ந்த‌ தேர்த‌லில் அவ‌ர் முஸ்லிம்கள் ஏரியாவிற்கே அவ‌ர் பா.ஜ.க. வேட்ப‌ளருக்கு ஓட்டு கேட்டு வ‌ர‌வில்லை என்ப‌து இங்கு குறிப்பிட‌த் த்க்க‌து.
முஸ்லிம்க‌ளின் ஓட்டு பெருவாரியாக‌ உள்ள தொகுதி எங்க‌ள் தொகுதி.
முஸ்லிம்க‌ள் அவ‌ரை த‌ங்க‌ள் வீட்டுப் பிள்ளையாக‌வே க‌ருதின‌ர்.

Rex said...

நன்றி பார்சா குமாரன்.

தொகுதியை மையமாக வைத்து எழுதுவதால்,அனைத்து வேட்பாளர்களையும் குறிப்பிட்டு எழுதினால் பதிவின் போக்கு மாறிவிடும் என்பதால் சில முக்கியமானவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். மற்றவர்களை நேரம் வரும்போது குறிப்பிட்டு எழுதுகிறேன்.

புதுகை.அப்துல்லா said...

ரெக்ஸ் அண்ணே! சித்தன்னவாசல் ஓவியங்களை உள்ளடக்கிய தொகுதின்னு நீங்க குறிப்பிட்டு இருப்பது பிழை. காரணம் அந்த ஓவியங்கள் உள்ள தொகுதி குளத்தூர். தற்போது அது விராலிமலை தொகுதியாக பெயர் மாற்றம் பெற்று விட்டது.

Rex said...

நன்றி புதுகை. அப்துல்லா.

நான் குறிப்பிட்டுள்ளது "சித்தன்னவாசல் ஒவியங்களை தன்னுள் தாங்கி நிற்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின்" என்று. அந்த மாவட்டத்தில் உள்ள ஓவியங்கள் என்ற நோக்கில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

பிழை என்றால் திருத்திக்கொள்கிறேன்.

குளத்தூர், விராலிமலை தொகுதிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

புதுகை.அப்துல்லா said...

மன்னிக்கவும் பிழை என் மீதுதான்.சேர்த்துப் படித்ததில் தவறாக நான் தான் புரிந்து கொண்டேன். திருத்திக்கொண்டேன்.
(அப்புறம் உங்க பதிவுகளை விடாமல் படித்துவரும் ரசிகன் நான். நேரமின்மையால் பெரும்பாலும் பின்னூட்டம் இடாது போய்விடுகிறேன்)

ஜோ/Joe said...

ரெக்ஸ்,
மிகவும் சுவாரஸ்யமான தொடர் .தொடருங்கள்.

Rex said...

நன்றி புதுகை அப்துல்லா.

நன்றி ஜோ. தொடருகிறேன் உங்கள் வாழ்த்துக்களுடன்.