It is true that liberty is precious - so precious that it must be rationed
-Lenin
கார்ல் மார்க்ஸ்-ம், விளாதிமீர் இலிச் உல்யானோவும், ஈ.கே. நாயனாரும், ஜோதிபாசுவும், காமராஜரும், இந்திரா காந்தியும், நரசிம்மராவ் காரும் இந்த தொகுதியில் பாடம் நடத்திக் கொண்டிருக்க ரத்தத்தின் ரத்தங்களும் உடன்பிறப்புக்களும் அமைதியாக கைகட்டி அமர்ந்து பாடம் கற்கும் தொகுதி இது.
கழகங்கள் தமிழகத்தின் பிற இடங்களில் தங்கள் புஜ பலத்தை சோதித்துகொண்டு நிற்க, கொஞ்சம் வித்தியாசமாக கதர் சட்டைகளும், செங்கொடி தோழர்களும் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானம் இது. ஏறக்குறைய ஒரு மினி கேரளா அல்லது மேற்கு வங்காளம் என சொல்லி விடலாம். பெங்காலியும் மலையாளமும் மிஸ்ஸிங்….அஷ்டே.
ஆரம்பம் முதலே கழகங்கள் இங்கு வெறும் வேடிக்கையாளர்கள் மட்டுமே. தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கோ அல்லது கம்யூனிஸ்ட்களுக்கோ இந்த தொகுதியை ஒதுக்கிவிட்டு ஓரமாக போய் கபடி விளையாட ஆரம்பித்து விடுவார்கள். தோழர்களும், கதர் சட்டைகளும் ஜெக ஜோதியாக களத்தில் இறங்கி கழகங்களுக்கு இணையான ஒரு ஆட்டத்தை தொடங்கிவிடுவார்கள்.
நெசவு தொழில், தீப்பெட்டி தொழிற்சாலைகள் என மத்திய தர தொழிலாளத் தோழர்கள் வசிக்கும் தொகுதி. இவர்களின் கணிசமான வாக்குகள் தான் இந்த தொகுதியின் தலையெழுத்தை தேர்தலில் தீர்மானிக்கின்றன. தோழர்கள் Vs காங்கிரஸ் என்பதாலோ என்னவோ தேர்தல்களில் அதிக ஆர்ப்பாட்டங்களை இங்கு காணமுடிவதில்லை. அவர்களின் பொருளாதார பலமும் ஒரு காரணமாக இருக்கலாம்….ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு இடையே அழகான நதியாக சத்தமில்லாமல் இருக்கும் அந்த தொகுதி….
குடியாத்தம்: வேலூர் மாவட்டத்தின் ஸ்லீப்பிங் பியூட்டி தொகுதி. தமிழக ஆந்திர எல்லைக்கருகே அமைந்துள்ள தமிழகத்தின் 37வது சட்டமன்ற தொகுதி. வேலூரும் சித்தூரும் ஏறக்குறைய சரிசமமான தூரத்தில் உள்ள சராசரிக்கும் சற்று பெரிய தொகுதி.
முதலாளிகள், பண்ணையார்கள், படித்தவர்கள் கட்சி என வர்ணிக்கப்பட்டு வந்த அன்றைய காங்கிரஸ் கட்சி சேர்ந்த ஒருவர் சோஷலிஸ்ட்டுக்களின் கோட்டையான இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். மக்களும் அவருக்கு வெற்றி மாலையை அணிவித்து அடுத்த பல ஆண்டுகளுக்கு அவரை தமிழக முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்க்கிறார்கள்.
தமிழகத்தின் பொற்கால முதல்வர் என வர்ணிக்கப்படும் திரு. காமராஜரை 1954 இல் இங்கு நடந்த இடைத்தேர்தலில் தேர்வு செய்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சொந்தகாரர்கள் இந்த தொகுதி மக்கள். இன்றைக்கு இருப்பது போல் தொழில்நுட்பம் அன்று இருந்திருந்தால் எல்லா ஊடங்களுக்கும் இந்த தொகுதியின் பெயர் தினச் செய்தி ஆகிப்போயிருக்கும். தாங்கள் தேர்ந்தெடுத்த முதல்வரைப் போலவே இந்த தொகுதியும் மிக அமைதியாக தன் பயணத்தை தொடர்ந்து வந்திருக்கிறது.
1951 இல் தொடங்கி 1991 வரை நடந்த தேர்தல்களில் தோழர்களும், காங்கிரசும் மாறி மாறி வென்றுள்ளனர். இடையில் கிடைத்த இடைவெளியில் திமுகவும் ஒரிருமுறை தன் கொடியை இங்கு பறக்கவிட்டுள்ளது. 2001 இல் கொஞ்சம் மாறுபட்டு கழகங்களே இங்கு நேரடியாக களத்தில் இறங்கிவிட்டன. அந்த தேர்தலில் அதிமுக முதன் முறையாக தன் கணக்கை தொடங்கியது.
ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களை தவிர்த்து வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் அனைவருமே மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற்று வந்துள்ளனர். அநேகமாக தொகுதி முழுவதும் பரவலாக ஒரே மாதிரியாக யோசிக்கிறார்கள் என்பது தெரிகிறது. இங்கு போட்டியிடும் கட்சிகள் தொகுதியின் அனைத்து தரப்பையும் கவர்ந்தால் ஒழிய வெற்றி தேவதையை வீட்டுக்கு அழைக்க முடியாத நிலை தான்.
மிகப் பெரிய அளவில் வாக்காளர்கள் இருந்தும் வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து கொண்டே வந்திருப்பதை காணமுடிகிறது. 1951 இல் தொடங்கி 2001 வரை இந்த தொகுதியில் வாக்களிக்காமல் இருந்தவர்களின் சதவீதம் இது.
1951 - 4.48%
1971 - 28.64%
1991 - 35.13%
2001 - 35.09%
பெரும்பாலனவர்கள் தொகுதி உள்ளே வசித்து வந்தாலும் ஏன் வாக்களிக்க வருவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இப்படி வாக்களிக்க வராமல் இருப்பவர்களில் 50% பேர் வந்து வாக்களித்தால் கூட நிலைமை தலைகீழாக மாறக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது. வாக்களிக்காமல் இருப்பது அல்லது வாக்குப்பதிவை தவிர்ப்பது என்பது கள்ள ஓட்டுக்கு வழி வகுக்குமே ஒழிய தொகுதியை மேம்படுத்த உதவாது என்பது இந்த தொகுதி மக்களுக்கு தெரியாத விஷயம் அல்ல.
தமிழக அரசியலில் செய்திகளில் அடிபடத் தொடங்கி இருக்கும் விஜயகாந்த் அவர்களின் துணைவியாருக்கு இந்த தொகுதிதான் சொந்த ஊர். வரும் தேர்தல்களில் அவரோ அல்லது அந்த கட்சி சார்ந்த ஒருவரோ இங்கு போட்டியிட்டாலும் போட்டியிடலாம்.
காமராஜருக்கு பின்னர் பெரிய நட்சத்திர வேட்பாளர்கள் யாரும் இங்கு போட்டியிடாததால் ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து கட்சிகளுமே புது முகங்களையே களத்தில் இறக்கி வந்துள்ளது தெரிகிறது. வரும் தேர்தல்களில் ஏதாவது ஒரு கட்சி பெரிய அறிமுகமான வேட்பாளர்களை நிறுத்தும் பட்சத்தில் இந்த தொகுதி மீண்டும் ஒரு 1954 ஐ சந்திக்கலாம்.
2001 இல் நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக இங்கு திமுக-வும் அதிமுக-வும் நேரடியாக வாளை சுழற்றி கொஞ்சம் புழுதியை கிளப்பியதால் அந்த தேர்தலின் வேட்பாளர்கள்/ஒட்டுக்கள் விவரம் (Thanks to PIB, Chennai)
மொத்த வேட்பாளர்கள் ; 1,64,937
வாக்களித்தவர்கள் ; 1,07,193
வேட்பாளர்: சூரியகலா (வெற்றி)
கட்சி : அ இ அ தி மு க
பெற்ற ஓட்டுக்கள் : 61,128
வேட்பாளர்: துரைசாமி
கட்சி ; தி மு க
பெற்ற ஓட்டுக்கள் ; 36,804
தோழர்களும் கதர் சட்டைகளும் கொஞ்சம் விழித்துக்கொண்டால் மீண்டும் செங்கொடியையோ அல்லது மூவர்ண கொடியையோ இங்கு நிச்சயமாக ஏற்றி விடலாம். இல்லையென்றால் கழகங்கள் நிரந்தரமாக கடை விரிப்பதை லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.
-------------------------------------------------------------------------------------------------
அடுத்து…
இப்போது தேர்தல் வந்தாலும் இவர் வேட்பாளாரக நின்றால் எதிர்த்து நிற்பவரை கொஞ்சமும் யோசிக்காமல் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் போல் தெரிகிறது. அப்படி ஒரு தீர்க்கதரிசிகள் இந்த தொகுதி மக்கள். எந்த அளவுக்கு ஒரு வேட்பாளரும் தொகுதியும் நெருக்கமாக இருக்க முடியும் என்பதற்கு இதைவிட சிறந்த தொகுதி தமிழ்நாட்டில் இருப்பதாக தோன்றவில்லை. அந்த தொகுதி…..
(தொடரும்)
Thursday, October 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment