“ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
இந்தப் பாடலின் வரிகள் எந்த மனநிலையில் யாரை மனதில் வைத்து எழுதப்பட்டதோ தெரியாது ஆனால் இந்த தொகுதி மக்கள் இந்த வரிகளை யாருக்கு புரிய வைக்க வேண்டும் என்பதில் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்துவிட்டு தங்கள் சந்தர்பத்திற்காக காத்திருந்தார்கள். சந்தர்ப்பமும் வந்தது, சரியாக பயன்படுத்தி கொஞ்சமும் பிசகாமல் அடித்தார்கள். அடுத்த ஒரு சில நாட்களுக்கு அகில இந்தியாவும் இந்த தொகுதி பெயரை உச்ச குரலில் அலறிவிட்டு அடங்கி போனது.
தடுக்கி விழுந்தால் தொழில் நகரான ஒசூர், கொஞ்சம் மூச்சு பிடித்து தாண்டினால் இந்தியாவின் சிலிகான் வேலி பெங்களூர்,
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கையில் திடுமென தோன்றி மறையும் இந்த தொகுதி, ஒரு எதிர்கட்சி தலைவரை முதல்வர் வரை உயர்த்தி பின்னர் சர்வ பலத்துடன் வலம் வந்து கொண்டிருந்த அவரையே வீழ்த்தி பெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டுவிட்டு அமைதியாக புன்னகைத்து நிற்கிறது…..அந்த தொகுதி….
பர்கூர் – கற்பூரம் அடித்து சொல்லலாம், இன்றைய தேதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஸ்டார் தொகுதி இதுதான். தன் சுயத்தைவிட்டு மெல்ல விலகி நகரமயமாக்கலை நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறது இந்த சிறிய ஊர். பெரும்பாலும் விவசாய மக்கள், படித்தவர்கள், மிகப்பெரிய அரசு அல்லது தனியார் நடவடிக்கைகள் ஏதும் இல்லாத நிலையிலும் ஜவுளி துறையில் சிறப்பான ஒரு இடத்தை பெற்றிருக்கும் தமிழ்நாட்டின் 78வது சட்டமன்ற தொகுதி.
1996 தேர்தலுக்கு முன்பு வரை இந்த தொகுதியில் அதிமுக தவிர வேறு ஒரு கட்சியின் கொடியை யாரவது பார்க்க விரும்பிருந்தால் நிச்சயம் அவர்களுக்கு வெத்தலையும் மையும் தேவைப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு அதிமுக வின் எஃகு கோட்டையாக விளங்கியிருக்கிறது இந்த தொகுதி. எம்ஜியார் என்ற பெயருக்கு பின்னாலிருந்த பலம் அது.
இதுவரை இங்கு நடந்து முடிந்துள்ள தேர்தல்களின் வாக்கு அடிப்படையில் அதிமுக சராசரியாக 50,000 ஓட்டுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்க, திமுக-வோ மிகவும் பின் தங்கி 30,000 ஓட்டுக்களை பெறுவதற்கே மூச்சை முட்டி நிற்கிறது. இரு கட்சிகளுமே பெரும்பாலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுருந்தாலும் திமுக-வினால் அந்த 40% இடைவெளியை இதுவரை குறைக்க முடியாமலே இருக்கிறது. ஒரே ஒரு தேர்தல் மட்டும் விதிவிலக்கு. சந்தேகமே இல்லாமல் இலை இங்கே சூரியனை மறைக்கிறது.
1989 இல் அதிமுக இரண்டாக பிரிந்து போட்டியிட்டபோதும் தங்கள் விசுவாசத்தை இந்த தொகுதி மக்கள் காட்டியது அதிமுகவின் ஒரு பிரிவிற்கே. ஜெயலலிதா அணி அதிமுக சார்பாக போட்டியிட்ட திரு, கே.ஆர். இராஜேந்திரன் அவர்கள் திமுக வேட்பாளர் திரு. சுகவனத்தை சுமார் 1029 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி கோட்டையில் அட்மிஷன் வாங்கிக் கொண்டார். அந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பலமாக இருந்தும் இங்கு அவர்களால் அதிமுக வை நெருங்க முடிந்ததே தவிர வெற்றியை பறிக்க முடியவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று சொல்லிவிட்டார்கள்.
இதில் ஆச்சரியமான விஷயம் பெரும்பாலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என கருதும் தொகுதிகளை திமுக வும் அதிமுகவும் கூட்டணி நண்பர்களுக்கு ஒதுக்கிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும். ஆனால் இந்த தொகுதி விஷயத்தில் திமுக தலைமை அப்படி ஒரு முடிவை மேற்கொள்ளாதது கொஞ்சம் வியப்பை ஏற்படுத்துகிறது. வென்றுவிடலாம் என நினைத்தார்களா அல்லது கூட்டணிகட்சிகள் இந்த தொகுதியை ஏற்க மறுத்துவிட்டனவா என்பது இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி.
1991 –இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இந்த தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார். அனுதாப அலையுடன் பலமான கூட்டணி என காற்று இவர் பக்கம் வீச இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரு. டி. ராஜேந்தர் மற்றும் பிற வேட்பாளர்களை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று களத்தில் புயலை கிளப்புகிறார். முதல் முறையாக தங்கள் தொகுதியின் வேட்பாளரை தமிழகத்தின் முதல்வராக அமரவைத்து கொண்டாடி தீர்த்தது இந்தத் தொகுதி.
இதே தேர்தலில் தான் போட்டியிட்டு வென்ற இன்னொரு தொகுதியான காங்கேயத்தில் ஜெயலலிதா ராஜினாமா செய்துவிட, பர்கூர் முதல்வரின் ஏகபோக தொகுதி என்ற அந்தஸ்தை அடைந்தது. அனைவரின் கண்களும் பர்கூரின் மேல் ஆழமாக பதிய தொடங்கின.
தனக்கு மகுடம் சூட்டிய தொகுதிக்கு பொறியியல் கல்லூரி, மகளிர் கலைக் கல்லூரி என வாரி அளித்து ஜெயலலிதாவும் தன் நன்றிக் கடனை தீர்க்கத் தொடங்கினார். 1991 முதல் 1996 வரை மூத்த மந்திரிகள் தொடங்கி சாதரண வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் இந்த தொகுதியை ஒரு “இன்குபேட்டர் பேபி” யைப் போல அலுங்காமல் குலுங்காமல் கவனித்துக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளில் அரசு இயந்திரம் செயல்பட்டதோ இல்லையோ, இங்கு கொஞ்சம் சுணக்கமில்லாமல் ஒழுங்காக செயல்பட்டதுபோல் தெரிகிறது. பத்திரிகைகளும் இந்த தொகுதியை ஒரு மினி போயாஸ் தோட்டமாகவே சித்தரித்து வந்தார்கள். வாக்களித்த மக்களுக்கே கூட இது ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு பக்கம் இந்த தொகுதி சகல செளபாக்கியங்களுடன் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு நடக்க மறுபுறத்தில் ஜெயலலிதா அரசு தனக்கு அளிக்கப்பட்ட பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் தவறான திசையில் தனது பயணத்தை தொடங்கியிருந்தது. 1991 இல் தொடங்கி 1996 வரை நடைபெற்ற அரசின் முகம் சுளிக்க வைத்த செயல்பாடுகளினால் தமிழகத்தின் அனைத்து தொகுதி மக்களுமே பரவலாக அதிருப்தியில் மூழ்கி இருக்க, பர்கூரும் அந்த ஜோதியில் கலந்து ஐக்கியமானது.
சந்தேகமே இல்லாமல் அரசில் அன்று இருந்த அனைவருமே இதை உணர்ந்திருந்தார்கள், ஆனால் அவர்கள் சில்லறையை எண்ணி முடித்துவிட்டு சுதாரிப்பதற்குள் தேர்தல் கதவருகே வந்துவிட்டது. மக்களும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரையும் போலவே இந்த தொகுதி மக்களும் காத்திருந்தார்கள் அந்த தேர்தல் (1996) அறிவிப்பிற்காக.
(தொடரும்)
Sunday, October 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment