Monday, October 6, 2008

தமிழக தேர்தல் களங்களை திரும்பிப் பார்க்க வைத்த தொகுதிகள் - பகுதி 2

1967 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவின் இறுதியில் திமுக வில் அறிஞர் அண்ணாவுக்கு அடுத்து அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் அநேகமாக இவருடைய பெயராக தான் இருந்திருக்கும்.

மக்களின் முதல்வர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர், தமிழகத்தின் முதல்வராக 1954 முதல் 1963 வரை பதவி வகித்தவர், விவசாயத்தை மட்டும் பிரதானமாக நம்பி இருந்த தமிழகத்தை தொழில் வளர்ச்சிமிக்க மாநிலமாக மாற்றுவதற்காக தொலைநோக்கு திட்டங்களை தீட்டியவர், மக்கள் மீது தான் வைத்திருந்த அபரிதமான நம்பிக்கையில் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என கூறிய பெருந்தலைவர் காமராஜர் வெறும் 1285 வாக்கு வித்தியாசத்தில் அடையாளம் தெரியாத ஒரு மாணவர் தலைவரால் தோற்கடிப்படுகிறார், தன் சொந்த தொகுதியிலேயே, தன் சொந்த மக்களாலேயே.

அவரை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் தலைவர், திமுக வின் விருதுநகர் தொகுதி வேட்பாளர் திரு. பெ. சீனிவாசன்.

விருதுநகர் - தமிழ்நாட்டின் தென் கோடியில் பழைய இராமநாதபுர மாவட்டத்தில் இடம்பெற்றிருந்து, பின்னர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் சிறிய தொகுதி.

வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் அண்ணாச்சி என அழைக்கும் பாசமிகு மக்கள் நிறைந்த தொகுதி. மதுரையில் இருந்து சுமார் 45கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து சுமார் 505 கி.மீ தூரத்திலும் உள்ள தமிழகத்தின் 206வது சட்டமன்ற தொகுதி.

கட்சிகளை பல சமயங்களில் கைவிடும் மக்கள் கூட தங்கள் மானசீக தலைவர்களை தேர்தல்களில் வெற்றிவாகை சூடச்செய்து வந்திருக்கிறார்கள். கட்சி, சின்னம் இவற்றை தாண்டி சில தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு இவர்களை எப்போதுமே வெற்றிப் படிகட்டுகளில் ஏற்றியே வந்திருக்கிறது.

அப்படி ஒரு அபரிதமான செல்வாக்கு உடைய தலைவராகத்தான் காமராஜர் அன்றைய தேதியில் இருந்திருக்கிறார். மேலும் தான் சார்ந்த சமூகத்தின் பலம் பொருந்திய தொகுதி என்பதால் வெற்றி அவருக்கு எளிதாக கிட்டிவிடக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது.

இதையும் தாண்டி மக்கள் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்தது. ஒரு கட்சி தவறு செய்தால் அந்த கட்சியின் தலைவர் எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், மண்ணின் மைந்தராக இருந்தாலும் தீர்ப்பு அவருக்கு எதிராக தான் எழுதப்படும் என்று எடுத்துக்காட்டியது இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு.

காமராஜர் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைவிட ஆட்சியின் மீதும் ஆண்ட கட்சியின் மீதும் இருந்த வெறுப்பின் வெளிப்பாடாகவே இந்த தொகுதியின் தேர்தல் முடிவு அமைந்தது.

காமராஜருக்கு பின் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் அரசு செய்த குளறுபடிகள், இந்தி எதிர்ப்பு போரட்டம், உட்கட்சி பூசல், திமுகவின் பிரதான ஆயுதமான எழுத்தையும் பேச்சையும் எதிர் கொள்ள இரண்டாம் கட்ட இளம் தலைவர்கள் இல்லாமல் போனது, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசின் போக்கு என எல்லாம் சேர்ந்து அரசுக்கு எதிராக இருக்க,

இன்னொருபுறம் அடக்க முடியாத பெரும் வெள்ளமாய் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திமுக விஸ்வரூபம் எடுத்து எல்லா எதிர்ப்புகளையும் சின்னாபின்னமாக்கி வெற்றியை நோக்கி முன்னேறியது. அந்த வெற்றி விருதுநகரையும் வாரி சுருட்டியது.

இந்த தொகுதியின் தேர்தல் முடிவு, பின் வந்த தேர்தல்களில் எல்லோரையும் சிந்திக்க வைத்தது, சொந்த தொகுதி என எந்த தலைவரும் சொந்தம் கொண்டாட முடியாத நிலையை தோற்றுவித்தது.

இந்த தேர்தலின் முடிவில், தான் தோற்றாலும் ஜனநாயகம் வென்றதாக மிகப் பெருந்தன்மையாக குறிப்பிட்டார் காமராஜர்.

====================================================================

இந்த தொகுதியின் அப்போதைய வாக்காளர்கள்/ முக்கிய வேட்பாளர்கள்/ ஓட்டுக்கள் விவரம் (Thanks to : Press Information Bureau, Chennai).

மொத்த வாக்காளர்கள் : 82,606
வாக்களித்தவர்கள் : 69,593

வேட்பாளர் : குமாரசாமி காமராஜ்
கட்சி : இந்திய தேசிய காங்கிரஸ்
பெற்ற வாக்குகள் : 32,136

வேட்பாளர் ; பெ. சீனிவாசன்
கட்சி: திராவிட முன்னேற்றக் கழகம்
பெற்ற வாக்குகள் : 33,421

-------------------------------------------------------------------------------------------------

அடுத்து…

இது ஒரு வித்தியாசமான தொகுதி, இன்னிக்கு தேதி வரைக்கும் எல்லோரும் வியப்புடன் பார்க்கும் தொகுதி, புயலே அடிச்சாலும் அசராம தெளிவா தீர்ப்பு எழுதறதுல இந்த தொகுதி மக்கள் கில்லாடிங்க. அந்த தொகுதி……

(தொடரும்)










நன்றி: Press Information Bureau, Chennai

1 comment:

seik mohamed said...
This comment has been removed by the author.