Tuesday, October 14, 2008

தமிழக தேர்தல் களங்களை திரும்பிப் பார்க்க வைத்த தொகுதிகள்- பகுதி 5

A politician will do anything to keep his job - even become a patriot.
-William Randolph Hearst


1996 இல் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அதுவரை இருந்த கோடை வெப்பத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தை ஆக்ரோஷமாக ஆக்கிரமித்த தமிழக தேர்தல் களம் அனலை கக்கத் தொடங்கியது. கட்சிகள் துண்டு போட்டு கூட்டணி கணக்குகளை பேசிக்கொண்டிருக்க, மீடியாக்கள் வழக்கம்போல் கருத்து கணிப்புகளின் பக்கம் ஒதுங்கிவிட, மக்கள் மட்டும் எப்போதும் போலவே மெளனமாக இருந்தார்கள். புயலுக்கு முன் உள்ள அமைதி அது. கொஞ்சம் புரிந்தவர்கள் உஷாரானர்கள், பதுங்கிவிட்டார்கள். புரிந்தும் அலட்சியபடுத்தியவர்கள் அடித்த புயலில் கலைந்து காணாமல் போனார்கள்.

இம்முறையும் பர்கூரில் ஜெயலலிதாவே போட்டியிடுவதாக முடிவாகிறது. கடந்த முறையைவிட கூடுதலான பலத்துடன் இருந்தார் ஜெயலலிதா, ஐந்து வருட ஆட்சி அனுபவம், கண்ணசைத்தால் ஒடிவந்து தேர்தல் பணி புரிய மந்திரிகள், பொருளாதார பலம், எல்லாவற்றிர்க்கும் மேலாக இந்தத் தொகுதியை அவர் கவனித்துக் கொண்ட விதம் என சகல திசைகளிலும் தனக்கு சாதகமான அம்சங்கள் இருக்க மிகுந்த நம்பிக்கையுடன் தான் களத்தில் இறங்கினார்.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த திமுக எழுந்து கொண்டது. 1991 போல கூட்டணிக்கு ஒதுக்கிவிட்டு ஒதுங்காமல் தாங்களே நேரடியாக இறங்குவது என முடிவு கட்டினார்கள். உட்கார்ந்து யோசித்தார்கள், இம்முறை இந்த அதிமுக கோட்டையை தகர்த்தே தீருவது என மிகவும் தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டது. சிங்கத்தை அதன் குகையிலேயே எதிர் கொள்ள வியூகம் வகுக்கப்பட்டது. உடனடியாக அதற்கான தளபதியை தேடும் முயற்சியில் இறங்கியது திமுக தலைமை. இறுதியாக 1989 தேர்தலில் வெறும் 1029 ஓட்டு வித்தியாசத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கனவை தவறவிட்டிருந்த திமுக வின் இளைஞர் அணியை சேர்ந்த திரு. சுகவனத்தையே திரும்பவும் கொம்பு சீவி களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டது. தனது முந்தைய அனுகுமுறையில் மாற்றத்தை செய்து புதிய வழியில் தனது வேகமான தாக்குதலை தொடங்கியது திமுக. மெல்ல தடுமாறத் தொடங்கியது அதிமுக.

திரு. சுகவனம், இளைஞர், மண்ணின் மைந்தர், படித்தவர், ஏற்கனவே இங்கு போட்டியிட்டு நன்கு அறிமுகம் ஆகியிருந்தவர், மயிரிழையில் இவர் தவறவிட்டிருந்த வெற்றி வாய்ப்பு இவருக்கு ஒரு அனுதாபத்தை பெற்றுத் தந்திருந்தது. 1989 இல் தோல்வி அடைந்திருந்தாலும் மனம் தளராமல் தலைமை இட்ட பணியை நிறைவேற்ற களம் இறங்கினார். திமுகவின் அனுபவமும் அதிமுக வின் அதிரடியும் உரசிய உரசலில் நிஜமாகவே இந்த தொகுதியில் சூடு பறந்தது.

அதிமுக அரசுக்கு எதிரான அலை, தங்கள் சுயமரியாதையை மீட்டெடுத்து மூப்பனார் தலைமையில் தனிகட்சி கண்டிருந்த த மா கா, ரஜினி வாய்ஸ், சன் டிவி, இவை அனைத்திற்கும் மேலாக ஒவ்வொரு முறை வீழும் போதும் திமிறிக்கொண்டு எழுந்து நிற்கும் திமுகவின் இயல்பான பலம் என எல்லா அம்சங்களும் சேர்ந்து திமுக தலைமைக்கு மாபெரும் வெற்றிக்கான திசையை காட்டிக் கொண்டிருக்க, மற்ற தமிழக தொகுதிகளின் கவனமும் கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கப்பட்டு, குறைக்கப்பட்டு எல்லா கேமராக்களும், கண்களும் பர்கூர் தொகுதியை நோக்கி திருப்பிவிடப்பட்டன.

“சும்மா அதிருதில்ல” சிவாஜி திரைப்படம் மட்டும் சுமார் 12 அல்லது 13 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்திருந்தால் பர்கூரில் 1996 தேர்தல் முடிவு வந்தவுடன் பலபேர் இந்த வசனத்தை உச்சரித்து தள்ளியிருப்பார்கள்.

1996 தேர்தலின் முடிவு ஒருவழியாக வெளிவர ஆரம்பித்தது,
யாரை கோட்டைக்கு அனுப்பி முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார்களோ அதே வேட்பாளரை அந்த கோட்டையில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் கீழே இறக்குகிறார்கள் இந்த தொகுதி மக்கள்.

தாங்கள் உருவாக்கிய இரும்புக் கோட்டை தங்கள் கண்முன்னாலே தகர்தெறியப்படுவதை அதிமுகவினர் மெளனமாக பார்த்துக் கொண்டு நிற்க, கோட்டைக்குள் முதல் முறையாக கம்பீரமாக காலடி எடுத்து வைக்கிறார் திமுகவின் திரு. சுகவனம்.

கல்லூரிகளையும் வளர்ச்சி திட்டங்களையும் விட ஊழலற்ற அரசாங்கமே மக்களின் முதல் தேவை என்பதை இந்த தொகுதி மக்கள் தங்கள் வாக்கு சீட்டுகளின் மூலம் பதிவு செய்திருந்தார்கள்.

1991 இல் இங்கு சுமார் 67,680 ஒட்டுக்களை அள்ளிய செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் 1996 –இல் நடைபெற்ற தேர்தலில் சுமார் 50,782 வாக்குகளை மட்டுமே பெறமுடிகிறது. ஐந்து வருட இடைவெளியில் கிட்டத்தட்ட 24% சதவீத ஓட்டுக்கள் இவர் கஜானாவில் இருந்து இடம் பெயர்ந்துவிட்டது. ஏன் சறுக்கினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

இன்னொருபுறம் திமுக வேட்பாளர் திரு. சுகவனம் அவர்கள் தான் 1989 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 50% வாக்குகளை இந்த (1996) தேர்தலில் பெற்று திமுகவிற்கு மிகப்பெரிய பலத்தை பெற்றுத்தருகிறார். இவர் பெற்ற கூடுதல் 50% ஓட்டுக்கள் முதல்வராக இருந்த ஒருவரை எதிர்த்து நின்று பெற்றது என்பது கவனத்துடன் அலசப் படவேண்டிய ஒன்று.

1996 வரை குறிப்பிட்ட கட்சி சார்ந்த வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்து வந்த இந்த தொகுதி மக்கள், அதன் பிறகு நடந்த தேர்தல்களில் மாறி மாறி ஓட்டளிக்க ஆரம்பித்து இருப்பது தெரிகிறது. எந்தக் கட்சியும் இனி உறுதியாக நம்ப முடியாத நிலையை தோற்றுவித்து இருக்கிறது இந்தத் தொகுதி. கட்சிகளை விட, தலைவர்களை விட தேர்தலின் சூழலும் மக்களின் பிரச்சனைக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இவர்கள் வாக்களிக்க ஆரம்பித்து இருப்பது மிகப் பெரிய மாறுதல். மிக அவசியமான மாறுதலும் கூட.

திமுகவும் சரி, அதிமுகவும் சரி, இனி இந்த தொகுதியில் அவ்வளவு சீக்கிரம் வெற்றிக்கனியை பறிக்க முடியாத நிலைதான், காற்று அவர்கள் பக்கம் மிக பலமாக வீசினால் ஒழிய.

1991 மற்றும் 1996 இந்த இரண்டு தேர்தல்களிலுமே இந்த தொகுதி மிக அதிகமான கவனத்தை ஈர்த்ததால் அந்த இரண்டு தேர்தல்களின் ஓட்டு மற்றும் வேட்பாளர்கள் விவரம். (Thanks to PIB, Chennai)

1991:

மொத்த வேட்பாளர்கள் ; 1,57,980
வாக்களித்தவர்கள் ; 1,09,478

வேட்பாளர் : செல்வி. ஜெ. ஜெயலலிதா (வெற்றி)
கட்சி : அ இ அ தி மு க
பெற்ற ஓட்டுக்கள் : 67,680

வேட்பாளர் : திரு. டி. ராஜேந்தர்
கட்சி : தா ம க
பெற்ற ஓட்டுக்கள் : 30,465

1996:

மொத்த வேட்பாளர்கள் ; 1,80,024
வாக்களித்தவர்கள் ; 1,24,471

வேட்பாளர் : திரு. சுகவனம் (வெற்றி)
கட்சி : தி மு க
பெற்ற ஓட்டுக்கள் : 51,148

வேட்பாளர் : செல்வி. ஜெ. ஜெயலலிதா
கட்சி : அ இ அ தி மு க
பெற்ற ஓட்டுக்கள் : 50,782


மக்கள் விரும்பும் ஆட்சியை யார் கொடுத்தாலும் அவர்களுக்கு மாலை சூட்டுவோம், இல்லையேல் பெட்டியை கட்ட வேண்டி இருக்கும், இதுதான் பர்கூர் தொகுதி மக்கள் அரசியல் கட்சிகளுக்கு இப்போது சொல்லிக்கொண்டிருக்கும் பாடம். பாடத்தை ஒழுங்காக படித்தார்களா என்பதை வரும் தேர்தல் முடிவுகள் முடிவு செய்யும்.

------------------------------------------------------------------------------------------------

அடுத்து

இந்தியா-பாகிஸ்தான் அல்லது இந்தியா-ஆஸ்திரேலியா ஒ.கே. ஆனால் பங்களாதேஷ்-ஜிம்பாப்வே இதுவும் ஒ.கே. தான். கழகங்கள் லாரி ஓட்டிக் கொண்டிருக்க, தோழர்களும், கதராடைகளும் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த தொகுதி இது. ஆனாலும் இந்த தொகுதி தேர்ந்தெடுத்த ஒருவர் தான் இன்று வரை தமிழக அரசியல் மைதானத்தில் மேன் ஆப் த மேட்ச்... அந்த தொகுதி…..

(தொடரும்)

4 comments:

ஜோ/Joe said...

//அந்த தொகுதி…..//
குளித்தலை

Rex said...

நன்றி ஜோ.

இது வேறு ஒரு தொகுதி. கொஞ்சம் காத்திருக்கவும்.

Unknown said...

Ur posts are very good...keep going..i am waiting for the next :)))

Rex said...

Thanks Kamal.