1991 இல் ஒருவிதமான இறுக்கத்துடன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் எல்லா தொகுதிகளும் கட்சி சார்ந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க, திருஷ்டி பொட்டாக ஒரே ஒரு தொகுதி மட்டும் சுயேச்சையாக போட்டியிட்ட ஒரு வேட்பாளரை சட்டசபைக்கு அனுப்பி அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது. மதுரையில் இருந்து சுமார் 74 கி.மீ தொலைவில், விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய நகராட்சியாக விளங்கும் அந்தத் தொகுதி – திருவில்லிப்புத்தூர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில் எந்த சலனமும் இல்லாமல் தங்கள் வேட்பாளர் இவர்தான் என தெளிவாக தீர்ப்பு எழுதிய தொகுதி/ தொகுதி மக்கள் இவர்கள்.
தமிழ்நாட்டின் 208வது சட்ட மன்ற தொகுதி. 1977 வரை காங்கிரசும் திமுகவும் கோலோச்சிய இந்த தொகுதி, பின்னர் எம்ஜியார் கட்சி தொடங்கியவுடன் அதிமுக கோட்டையாக மாறியது, இன்றுவரை அது தொடர்வதாகவே தெரிகிறது.
இந்த தொகுதியின் பெயரை உச்சரித்தவுடன் உடனடியாக நினைவுக்கு வருபவை இரண்டு விஷயங்கள். ஒன்று ஆண்டாள் கோயிலும் அதன் கோபுரமும். இரண்டு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாமரைக்கனி அவர்கள்.
ஆண்டாள் கோவில் கோபுரம் தமிழக அரசின் அதிகார்வபூர்வ முத்திரையில் அமையப் பெற்றது இந்த தொகுதிக்கு சிறப்பு சேர்க்கும் அம்சமாகும். அதே போல இந்தக் கோவிலின் தேரோட்டமும் இந்த வட்டாரத்தில் மிகவும் பிரசித்தமான ஒன்றாக திகழ்கிறது.
அடுத்த சிறப்பு தாமரைக்கனி. ஐந்து முறை இவரை சட்டமன்றதுக்கு அனுப்பிய தொகுதி இது. அதிலும் மூன்று முறை தொடர்ச்சியாக. எம்ஜியாரின் பரம ரசிகராக இருந்து பின்னர் அவர் கட்சியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்.
மந்திரியாக இருந்த பலரை கூட கட்சிகளும் மக்களும் ஒரு கட்டத்தில் மறந்திருக்கிறார்கள், கட்சி தாண்டி, தொகுதி தாண்டி ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினரான இவருக்கு மக்களிடம் இருந்த அறிமுகம் அபரிதமானது. இதற்கு முக்கிய காரணம் இவரை சுற்றி சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த சர்ச்சைகள் மட்டுமே.
கடைசி வரையில் இவர் கையில் அணிந்திருந்த எம்ஜியார் உருவம் பொறித்த மோதிரமும், அந்த மோதிர கையால் இவர் சட்டமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பலரை “குட்டிய” நிகழ்ச்சிகளும் ரொம்ப பிரபலம். பள்ளியில் இவருடன் படித்தவர்களையும் சட்டமன்றத்தில் இவரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த உறுப்பினர்களையும் நினைத்தால் கொஞ்சம் பாவமாக தான் இருக்கிறது.
அனுதாப அலை, அங்கீகரிக்கப்பட்ட சின்னமோ அல்லது கட்சியோ துணை இல்லாத நிலை, இவ்வளவுக்கும் இடையேயும்
1991 இல் இந்தத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட இவருக்கு மக்கள் வெற்றியை வார்த்துக் கொடுக்க அடுத்த ஐந்து ஆண்டுகள் இவர் பெயருடன் சேர்ந்து இந்த தொகுதியின் பெயரும் தமிழ்நாட்டின் பத்திரிகைகளுக்கு டார்லிங் ஆகிப் போனது.
1991 முதல் 1996 வரை ஒவ்வொரு முறை சட்டசபை கூட்டத்தின் போதும் மக்கள் பிரச்சினைகள் அலசப்படுகிறதோ இல்லையோ இவரை வெளியேற்றும் நிகழ்ச்சி தொடந்து நடைப்பெற்றது. அன்றைய தேதியில் தமிழக சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக பிரதானமாக ஒலித்த ஒரே குரல் இவருடையது மட்டுமே.
சட்ட மன்றத்தில் அசுர பலத்துடன் அப்போதிருந்த ஆளும் கட்சியை தனி ஒரு சுயேச்சை உறுப்பினராக நின்று ஐந்து வருடம் எதிர்கொண்டு தினந்தோறும் பத்திரிகைகளுக்கு தீனிபோட்டவர். ஒவ்வொரு முறையும் இவரைப்பற்றி எழுதிய பத்திரிகைகள் திருவில்லிப்புத்தூர் தொகுதி பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டே வந்திருக்கின்றன.
பிறகு ஏற்பட்ட அரசியல் சித்து விளையாட்டின் விளைவாக தந்தையா மகனா என விடைகாண வேண்டிய நிர்பந்தத்துக்கு இந்த தொகுதி மக்கள் தள்ளப்பட, அப்போதும் மிகத் தெளிவாக தீர்ப்பை வழங்கினார்கள். அதற்கு பலன் கை மேல் கிடைத்தது, இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்ற திரு. இன்பத்தமிழன் தமிழக மந்திரியாக பதவி உயர்வு பெற்றார். குறி தப்பாமல் சரியான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் இந்த தொகுதி மக்களுக்கு நிகர் இவர்களேதான்.
இன்றைய தேதியில் கிட்டத்தட்ட சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்களை கொண்ட தொகுதி. பிரதான கட்சிகளான திமுக வும் அதிமுக வும் இங்கு போட்டியிட்டு வென்றிருந்தாலும் சமீப காலங்களில் திமுக இந்த தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வருகிறது. இதற்கு மாறாக அதிமுக தான் நேரடியாக போட்டியிடுவதையே விரும்புகிறது.
சில தொகுதிகளை போல் இல்லாமல் இந்த தொகுதியில் வென்றவர்களின் வாக்கு வித்தியாசம் ஒவ்வொரு தேர்தலிலும் சராசரிக்கும் மேலாகவே இருந்து வருகிறது. தங்கள் தொகுதியில் இருந்து யார் கோட்டைக்கு போக வேண்டும் என்பதில் இந்த தொகுதி மக்கள் ஆரம்பத்தில் இருந்தே மிகத் தெளிவாக இருந்ததையே இது உணர்த்துகிறது. மிகவும் பாரட்டுக்குறிய விஷயம் இது.
எல்லா தேர்தல்களிலும் இந்த தொகுதி தெளிவான முடிவை எடுத்திருந்தாலும் 1991 தேர்தல் விவரங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த தேர்தலின் விவரம் மட்டும் இதோ.
மொத்த வேட்பாளர்கள் ; 1,72,833
வாக்களித்தவர்கள் ; 1,17,668
வேட்பாளர்: தாமரைகனி (வெற்றி)
கட்சி : சுயேட்சை
பெற்ற ஓட்டுக்கள் : 38,908
வேட்பாளர்: வினாயக மூர்த்தி
கட்சி ; அ இ அ தி மு க
பெற்ற ஓட்டுக்கள் ; 37,379
வரும் தேர்தல்களிலும் இந்த தொகுதி மக்கள் மிகத் தெளிவாகவே தீர்ப்பு கூறுவார்கள் என அரசியல் கட்சிகள் நம்பலாம்.
-------------------------------------------------------------------------------------------------
அடுத்து…
அன்றைய பொழுது மிக சாதரணமாக வழக்கம் போலத் தான் விடிந்தது இந்த தொகுதியில். பிற்பகலில் வேட்பாளர் அறிவிப்பு வரும்வரை இந்த ஊர் மக்களே கூட தங்கள் ஊர் பெயரை அவ்வளவாக உச்சரித்து இருக்கமாட்டார்கள், தேர்தல் வந்தது, சென்றது. ஆனால் இந்த தொகுதி ஏற்படுத்திய அதிர்வலைகள் மட்டும் இன்னமும் எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கிறது. அகில இந்திய மீடியா உலகமும் பெட்டி படுக்கையோடு வந்து கொஞ்ச காலம் ஆக்கிரமித்த அந்த தொகுதி….
(தொடரும்)
Wednesday, October 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
பதிவு அருமை.
தங்கள் போடி (போடிசெட்டி பாளையம்) பற்றி எழுத போகிறீர்கள் என யூகிக்கிறேன்.
ஜெயலிதா ஜெயராமனும், நிர்மலா சுந்தரமும் போட்டியிட்ட தொகுதி.
மதுரைக்கு தெற்கே உதயசூரியன் ஜெயிக்காத 2 தொகுதிகள், 1. போடி (சேவல்) 2, சேரன்மகாதேவி (டி வி சின்னம்).
தாமரைகனி, கருப்பசமிபாண்டியன், kkssrr பற்றி தனித்து விவாதிக்கலாம். ரசிகர் மன்ற தலைவர்களை சட்ட மன்ற வேட்பாளர்கள் ஆகிய எம்ஜியாரின் செயல்களில் எனக்கு எள் முனை அளவும் உடன்பாடு கிடையாது.
அதனால்தான் இன்று சரத்குமார், வியாஜய்கந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் MLA , ச்கார்பயோ (scorpio)கனவுகளில் மிதக்கிறார்கள்.
குப்பன்_yahoo
நன்றி குப்பன்_யாஹூ
இது வேற ஒரு தொகுதி. நீங்கள் சொன்ன தொகுதி பின்னர் பார்க்கலாம்.
பயனுள்ள பகுதி. நல்ல தகவல் சேகரிப்பு. வாழ்த்துக்கள். அன்புடன் ஞாநி.
நன்றி திரு.ஞாநி
It's interesting to know about the known constituencies in a different perspective. Keep up the good work. Instead of writing on politicians, you work on their playgrounds. Congrats.
Thanks Viswanathan.
Post a Comment