ஒருபக்கம் ஆனந்தம், இன்னொருபக்கம் அதிர்ச்சி, 1977 தேர்தல் முடிந்த நிலையில் எம்ஜியாரின் மனநிலை இதுவாகத்தான் இருந்திருக்கும். அந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்த எம்ஜியார் அவர்களால் கோட்டை இருந்த சென்னையை மட்டும் நெருங்க கூட முடியவில்லை. சென்னையின் 14 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 13 இல் வென்று எம்ஜியாருக்கு முதல் வேகத்தடையை ஏற்படுத்துகிறது.
ஆட்சியை இழந்து நின்ற திமுகவின் பின்னால் ஒட்டு மொத்த சென்னையும் எழுந்து நிற்க, சொல்லப்பட்ட செய்தியை திமுக உள்வாங்கிகொண்டது. அதிமுகவும் சுதாரித்துக்கொண்டது. தமிழக அரசியலில் ஒரு புது ஆட்டத்திற்கான விதை தூவப்படுகிறது.
அரசு ஊழியர்கள், மத்தியதர வர்க்கம் என பெரிய மற்றும் நடுத்தர நகரங்களை திமுக குறி வைக்க, புழுதியை கிளப்பினாலும் அப்பழுக்கில்லாமல் வெள்ளந்தியாக விளங்கி வந்த கிராமத்து கரைகளின் பக்கம் தன் கண்களை பதிக்க தொடங்குகிறார் எம்ஜியார்.
தங்கள் எஃகு கோட்டை எது என்பதை விரைவாகவே உணர்ந்து கொண்ட திமுகவும் அதன் தலைமையும், தங்கள் ஸ்டார் வேட்பாளர்களை முக்கிய நகரங்களுக்குள்ளே களம் இறக்க தொடங்குகிறது. குறிப்பாக அதன் முதல் கட்ட முக்கிய தலைவர்கள் கோட்டை இருக்கும் சென்னையின் ஏதாவது ஒரு தொகுதியிலேயே களம் இறங்கி அதிரடி ஆட்டம் ஆட ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் அதிரடி ஆட்டத்திற்கு பக்க பலமாக இன்று வரை தொடர்ந்து நிற்கும் தொகுதிகளில் இந்த தொகுதியும் ஒன்று.
அமைச்சர் பதவி, சபாநாயகர் சிம்மாசனம், மேயரின் செங்கோல் என அனைத்து பொறுப்புகளுக்கும் தங்கள் பட்டறையில் இருந்து வேட்பாளர்களை பட்டை தீட்டி அனுப்பிய பின்னும், கொஞ்சமும் தங்களின் ஆர்வத்தை அடக்கி கொள்ளாமல் தமிழக முதல்வரின் நாற்காலிக்கு குறி வைத்து ஒரு வேட்பாளரை தயார் செய்து அம்பில் பூட்டிவிட்டு சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் தொகுதி இது.
சிக்னல் கிடைக்க வேண்டியது மட்டும்தான் இப்போதைக்கு பாக்கி. அடுத்த நிமிடம் தங்கள் வேட்பாளரை தமிழக முதல்வர் அரியணையில் ஏற்றி சரவெடி கொளுத்த எந்த நேரமும் தயார் நிலையில் உள்ள தமிழகத்தின் 10வது சட்டமன்ற தொகுதி….அந்த தொகுதி….
ஆயிரம் விளக்கு: மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் இந்நாள் முதல்வரை அரியணையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்க, அதன் பக்கத்தில் உள்ள இந்த தொகுதியோ வருங்கால தமிழக முதல்வரை தயார்படுத்துவதில் மும்முரமாய் இருக்கிறது. தமிழகத்தின் எதிர்கால முதல்வராக வர்ணிக்கப்படும் திரு. மு.க. ஸ்டாலின் தான் இன்றைய தேதியில் இந்த தொகுதியின் தளபதி, நாயகன் எல்லாமே.
பல்வேறு முக்கிய வெளிநாட்டு தூதரகங்கள், புகழ்பெற்ற கல்லூரிகள், சினிமா நட்சத்திரங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என எங்கு திரும்பினாலும் கவனத்தை ஈர்க்கும் அம்சங்கள் ஏற்கனவே இந்த தொகுதியை சூழ்ந்திருக்க, இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல தமிழக அரசியலை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கும் இரு பெரும் தலைகளான முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா மற்றும் இந்நாள் முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களின் இல்லங்களும் இந்த தொகுதிக்குள் வர, ஒரு நிஜ ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை கொடுத்து மீடியாக்கள் இந்த தொகுதியை ஒரு வழி செய்து கொண்டிருக்கின்றன.
தமிழக அரசியலில் திமுக பெரும் பிரளயத்தை ஏற்படுத்த தொடங்கி இருந்த 1960 களின் தொடக்கம் மற்றும் இறுதியில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் இங்கு திமுக தொடர்ந்து வெல்ல ஆரம்பிக்கிறது. அதுவரை இந்த தொகுதியில் வாளை சுழற்றி வந்த காங்கிரசும் சுயேச்சைகளும் மெல்ல தங்கள் அடையாளத்தை இழந்து கொண்டிருக்க, மிகவும் நிதானமாக ஆனால் பலமான கோட்டையாக இந்த தொகுதியை கட்டி எழுப்ப ஆரம்பிக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.
மிகவும் உற்று நோக்க வேண்டிய விஷயம், தமிழகத்தின் முக்கிய தொகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என திமுக முடிவு செய்துவிட்டால் அதற்கு பொருத்தமான ஆட்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள் என்பதை தமிழகத்தின் மற்ற கட்சிகள் இவர்களிடன் இருந்து தாராளமாக கற்றுக்கொள்ளலாம். இன்று வரை இந்த விஷயத்தில் மற்ற கட்சிகளைவிட திமுகவே முந்தி நிற்கிறது.
ஆரம்பமே அதிரடியாக இருக்கவேண்டும், இதுதான் 1960 களில் இந்த தொகுதிக்கான திமுகவின் செய்தி. சொல்லவே வேண்டாம் இதை செய்வதற்கு அன்றைய தேதியில் திமுகவில் வேட்பாளர்கள் வரிசையில் வந்து நின்று இருப்பார்கள். சரியான ஆளை கனகச்சிதமாக தேர்ந்தெடுக்கிறார் அன்று திமுகவிற்கு தலைமை தாங்கிய அறிஞர் அண்ணா அவர்கள். 1962 தேர்தலில் அண்ணா அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு இங்கு களத்தில் இறங்கிய திரு. கே. ஏ. மதியழகன் அவர்கள், காங்கிரஸுக்கு பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி முதல் முறையாக இங்கு உதய சூரியனை உதிக்க செய்கிறார்.
திரு. கே. ஏ. மதியழகன்: திமுகவின் ஐம்பெரும் தலைவர்களின் வரிசையில் ஒருவராக கருதப்படுபவர், பெரியார்-அண்ணா கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, அண்ணாவின் பின்னால் நின்ற அவரின் நம்பிக்கைகுரிய அன்றைய தளபதிகளில் ஒருவர்.
திரு. அண்ணாதுரை, திரு. மு. கருணாநிதி அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகவும், சட்டசபை சபாநாயகராகவும் விளங்கியவர். 1962 இல் இருந்து 1971 வரை நடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் திமுகவின் சார்பில் இங்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த கால கட்டத்தில் நடந்த தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இவரை எதிர்த்து முட்டி மோதிப்பார்த்துள்ளது காங்கிரஸ். ஆனாலும் எந்த எதிர்ப்பும் திமுகவையோ அல்லது இவரையோ கொஞ்சமும் அசைத்ததாக தெரியவில்லை.
1961 இல் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கு வெற்றியை தவறவிட்ட காங்கிரஸ் 1971 தேர்தலில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.அவ்வளவும் வேகம், விடாப்பிடியான வேகம். உடன்பிறப்புக்களின் இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அன்று வீழ்ந்த காங்கிரஸ் இன்று வரை இந்த தொகுதியின் பக்கம் வராமலே தவிர்த்து வருவதாக தெரிகிறது.
மிகவும் சுவாரசியமான விஷயம் 1962 முதல் 1971 வரை ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் அதன் ஒட்டு வங்கியை தக்க வைத்தே வந்துள்ளது. சுமார் 25,000 ஒட்டுக்கள் அதன் பாக்கெட்டுக்குள் அலுங்காமல் குலுங்காமல் இருந்து வந்திருக்கிறது. ஆனால் அரசியலின் பால பாடத்தை சுதந்திரம் வாங்கி கொடுக்க போரடிய கட்சி கவனிக்க தவறிவிட்டது. தங்கள் கையில் இருக்கும் வாக்காளர்களை மட்டுமே சிந்தித்து வந்த காங்கிரஸ் புதிய வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் முடங்கிப்போக, பாடத்தை சரியாக புரிந்து கொண்ட திமுக புது வாக்காளர்களை தங்கள் வளையத்துக்குள் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். பலன் கைமேல் கிடைத்தது.
1962 இல் 27,000 வாக்கு வாங்கிய திமுக 1971 இல் கிட்டத்தட்ட 39,000 வாக்குகளை பெறுகிறது. பத்து வருட இடைவெளியில் சுமார் 12,000 புதிய வாக்காளர்ளை உதய சூரியனின் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டார்கள். ஐஐஎம்-ல் படிக்காமலே மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பதை திமுக படம் போட்டு விளக்கிக் கொண்டிருக்க, வழக்கம் போல காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இருந்து மந்திரக்கோலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
1971 தேர்தலுக்குபிறகு திமுகவில் எம்ஜியாரை முன்வைத்து நடத்தப்பட்ட விளையாட்டில் திரு. கே. ஏ. மதியழகன் அவர்கள் எம்ஜியாரின் பக்கம் ஒதுங்கிவிட, கொஞ்சமும் தளராத திமுக இந்த தொகுதிக்கான தனது அடுத்த தளபதியை தயார் படுத்தும் பணியை முடுக்கிவிட்டது.
1977 க்கு முன்புவரை காங்கிரஸை மட்டுமே களத்தில் சந்தித்து ஒரளவுக்கு ஒரு நல்ல பார்ம் இல் இருந்த திமுகவுக்கு இந்த தேர்தலில் ஒரு புதுசிக்கல் எம்ஜியார் வடிவத்தில். நேற்று வரை உடன்பிறப்பாய் இருந்தவர்கள் இன்று ரத்தத்தின் ரத்தமாக மாறி முறுக்கிக் கொண்டு எதிரில் நிற்க, அதுவரை இது மாதிரியான ஒரு சூழலை சந்தித்திராத திமுக கொஞ்சம் ஆடிப்போனது. ஆனாலும் சென்னையை தக்க வைத்துக்கொள்வதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என முடிவு எடுத்து மிக கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய இறங்கினார்கள் திமுகவினர்.
யாரை இறக்கினால் இந்த தொகுதியில் பொறி பறக்கும் என்பதை துல்லியமாக கணித்துவிட்டார்கள். இம்முறை இந்த கணிப்பை செய்தது கலைஞர் கருணாநிதி அவர்கள். கணக்கு தப்பவில்லை. அதுவரை சென்னைக்கு வெளியே போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருந்த அந்த வேட்பாளரை மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் 1977 தேர்தலில் திமுக சார்பாக இங்கு களம் இறக்குவது என முடிவு கட்டினார்கள். அவரும் இதற்காகவே காத்திருந்தவர் போல தன் ஆட்டத்தை தப்பாமல் ஆடினார். எதிர்பார்த்தது போலவே எதிரணியை கலங்கடித்து திமுக கொடியை இறங்காமல் பார்த்துக் கொண்டார். அந்த வேட்பாளர்…
திரு. சாதிக் பாட்ஷா: திமுக அமைச்சரவையில் திரு. அண்ணாதுரை மற்றும் திரு. மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் பணியாற்றியவர். திமுகவின் முக்கிய பொறுப்பான அந்த கட்சியின் பொருளாளராக விளங்கியவர். கலைஞரின் நம்பிக்கைகுரியவர்.
1977 க்கு முன்புவரை உடுமலைப்பேட்டையில் போட்டியிட்டு வந்த இவர், அந்த தேர்தலில் திமுகவுக்கு தோள் கொடுக்க வேண்டிய நிலையில் முதல் முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெல்கிறார். அந்த தேர்தலில் இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேட்சை வேட்பாளரை சுமார் 4800 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெல்ல ஆயிரம் விளக்கில் பிரகாசமாக மீண்டும் ஒருமுறை உதய சூரியன் உயிர்தெழுகிறது.
எல்லா எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி இந்த தொகுதியை கலக்கி வந்த திமுகவிற்கு அவர்கள் பாணியிலேயே வேகத்தடையை ஏற்படுத்த சரியான சந்தர்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தது எம்ஜியார் தலைமையிலான அதிமுக. 1980 தேர்தல் அறிவிப்பு வருகிறது. விழித்துக்கொண்ட எம்ஜியார் தன் படை பரிவாரங்களை இந்த தொகுதியில் உசுப்பிவிட, பதிலடி கொடுக்க திமுகவும் எழுந்து உட்கார்கிறது….மிக உக்கிரமான போட்டி…வென்றே தீருவது என அதிமுக முன்னேற, இறுதிவரை போராடுவது என திமுக மல்லுக்கு நிற்க….பொறி பறந்த தேர்தல் அது….
(தொடரும்)….
Sunday, November 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
me the first
:-)
Post a Comment