ராணி முகர்ஜியை தெரிந்து கொள்வதற்கு ரொம்ப வருடங்களுக்கு முன்பாகவே எனக்கு பிரணாப் முகர்ஜியைப் பற்றி கொஞ்சம் அறிமுகமுண்டு. மிகவும் திறமையான அரசியல்வாதி. காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சி பிரச்சனையை கிளப்பினாலும் அதை சரி செய்ய இவரைத்தான் களத்தில் இறக்குவார்கள். நேரம் காலம் இல்லாமல் துண்டு துக்கடா கட்சிகள் கொடுக்கும் எல்லா தொந்தரவுகளையும் தனி மனிதராக நின்று இவர் சமாளிப்பது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம். வெளியுறவு, பாதுகாப்பு, நிதி என பல முக்கிய இலாக்காக்களை கையாண்ட அனுபவசாலி. நேரு குடும்பத்து வாரிசுகள் இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு பிரதமர் பதவி மீது குறி வைக்காமல் பொறுமை காத்தால் இவர் பிரதமர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு மிக மிக பிரகாசமாக இருக்கிறது. கொல்கத்தா காளியின் அருள் இவருக்கு கிடைக்கும் பட்சத்தில் இந்தியப் பிரதமர்களின் வரிசையில் இவர் சேர்வது சர்வ நிச்சயம்.
அரசியல் அனுபவம், வயது, பிற கட்சிகளை அனுசரித்துப் போவது என பல சாதகமான விஷயங்களை வைத்துக்கொண்டு எந்த நேரமும் பிரதமர் பதவியில் அமர்ந்து விடக்கூடிய திறமையுள்ள இவர் சில நேரங்களில் ஏதாவது ஏடாகூடாமாக பேசி தன்னுடைய மதிப்பை குறைத்துக் கொள்வது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. தவறு செய்யும் அரசியல்வாதிகளை திரும்ப அழைக்கும் உரிமையை நடைமுறைப்படுத்துவது இயலாத காரியம் என இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டது ஆச்சரியத்தை அளித்தது. தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு திரும்ப அழைக்கும் உரிமை இல்லை என இவர் சொல்வது ஏற்ககூடியதாக இல்லை.
அரசியல்வாதிகளுக்கு உள்ள செளகரியம்/அசெளகரியம் இரண்டுமே இவர்கள் ஏதாவது தவறு செய்தால் இவர்களை Demote/Transfer எல்லாம் செய்ய முடியாது என்பதுதான். மக்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் தவறு செய்யும் அல்லது கடமையை ஒழுங்காக செய்யாத அரசியல்வாதிகளை “Impeach” செய்து வெளியே அனுப்புவது தான். ஆனால் அந்த உரிமை மக்களுக்கு இல்லை என இவர் மறைமுகமாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அட்லீஸ்ட் அதற்கு பதிலாக வேறு ஏதாவது ஒரு வழியை சொல்லுவார் எனப் பார்த்தால் மனிதர் அமைதியாக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் மக்கள் ஐந்து வருடங்களுக்கு காத்திருக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் கொஞ்சம் Peculiar கேரக்டர் உள்ள ஆட்கள், தேர்தல் வரும் வரை ஒரு மாதிரியாகவும், தேர்தல் முடிந்தவுடன் வேறு மாதிரியாகவும் மாறி விடுவதால் மக்களுக்கு இவர்களை டீல் செய்வதில் ஏக சிரமம் ஏற்பட்டு விடுகிறது. நம்மூரில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு புகுந்து விளையாடிவிடுகிறார்கள்.
ஒரு சிறு விஷயத்தை தெரிந்தோ தெரியாமலோ சரியாக அனுகாத காரணத்தால் ரிச்சர்ட் நிக்ஸனை Impeach செய்யும் அளவிற்கு சென்று இறுதியில் அவர் பதவியையே விட்டே விலக நேரிட்டுவிட்டது. எதற்கெடுத்தாலும் அடுத்த நாட்டை மேற்கோள் காட்டி பேசும் நம்மூர் ஆட்கள் இம்மாதிரியான விஷயங்களை மட்டும் செளகரியமாக மறந்துவிடுவது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. அதிலும் பிரணாப் போன்ற முதிர்ந்த அரசியல்வாதி இப்படி பேசுவது சகிக்க முடியவில்லை.
வெளிநாடுகளில் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை இந்தியாவிற்குள் திரும்ப கொண்டு வர முடியாது, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உயர்ந்து கொண்டே இருக்கும் பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க முடியாது என வரிசையாக இவர் சொல்வது முடியாது என்ற வார்த்தையை மட்டுமே. இதைச் சொல்வதற்கு இவர் அமைச்சராக இருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கட்சி இவருக்கு பிரதமர் பதவியை அளிக்க முன்வந்தால் அதையும் ஏற்க முடியாது என சொல்லி விடுவாரா எனத் தெரியவில்லை.
Monday, November 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment