Wednesday, November 16, 2011

Good – Bad – Ugly

சீட்டு கொடுத்து அமைச்சர் பதவியும் கொடுத்த தலைமைக்கு தன்னோட விசுவாசத்தை காண்பிக்க எவ்வளவோ வழிகள் இருக்க, ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக தலைமைச் செயலகத்தில் “Barefoot” ஆக திரிவது என முடிவு செய்து அதை ஏகத்துக்கும் பப்ளிசிட்டி வேறு செய்துவிட்டார். அம்மா இருக்கும் இடம் (தனக்கு) கோயில் அதனால் காலணி அணிவதை தவிர்ப்பதாக அறிவித்து மற்ற சீனியர் அமைச்சர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் இவர். நியாயமாக பார்த்தால் இவருக்கு ஓட்டளித்து சட்டசபைக்கு அனுப்பி வைத்த மக்களைத்தான் இவர் தெய்வமாக கருதி இருக்கவேண்டும். அந்த லாஜிக்ப்படி பார்த்தால் அண்ணன் காலணியை தவிர்த்திருக்க வேண்டிய இடம் இவரின் சொந்த தொகுதியில் தான். பதவி கொடுத்த போதையில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். பெங்களூரும், ஐதராபாத்தும், குர்கானும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை போட்டிபோட்டு தங்கள் பக்கம் இழுத்து வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொண்டிருக்க, நம்ம அமைச்சர் ஏதாவது வித்தியாசமாக செய்து அந்த நிறுவனங்களை சென்னைக்கு தள்ளிக்கொண்டு வருவார் எனப் பார்த்தால் இவர் செருப்பு போடமாட்டேன், பருப்பு சாப்பிட மாட்டேன்னு வேளைக்கு ஆகாத சமாச்சாரங்களையெல்லாம் கையில் எடுத்து ஒட்டு மொத்தமாக சொதப்பி எடுத்துவிட்டார். பொறுத்துப் பார்த்த அம்மா பொங்கி எழுந்துவிட்டார், விளைவு அண்ணனுக்கு அமைச்சர் பதவி காலி. அடுத்த முறை தொகுதிக்குள் சென்று ஓட்டு கேட்கும் போது யாரவது ஒரு குறும்புக்கார ஆசாமி இந்த மேட்டரை கொஞ்சம் சீரியஸாக கையில் எடுத்தால் அண்ணனுக்கு எம்.எல்.ஏ சீட்டும் காலியாகிவிடும் அபாயம் இருக்கிறது. மம்மி கிட்டேயே உங்க வேலைய காட்டுறீங்களா…:-)
----------------------------------------------------------------------------------

Public Exam Fever ரொம்ப கொடுமையானது. பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தவுடனே பசங்களுக்கு பிரஷர் எகிறிடும். வாழ்க்கையின் முதல் பப்ளிக் எக்ஸாம் என்பதால் ஒருவிதமான excitement கலந்த fever வருஷம் முழுக்க ஓடிக்கிட்டே இருக்கும். காலையில ஒரு டியூஷன், மாலையில ஒரு டியூஷன்னு போட்டு பசங்கள கசக்கி பிழிஞ்சுருவாங்க. ஏதாவது கேட்டா, உன்னோட லைப் நல்லா இருக்கனும்னு தான் இதெல்லாம் பண்ணுறோம்னு ஒரு சமாதானத்த வேற ரெடியா வச்சிருப்பாங்க. பொதுவா எல்லா பசங்களும் இந்த டயலாக் கேட்டவுடனே கொஞ்சம் அடக்கி வாசிச்சிட்டு கடைசி நேரத்துல அடிச்சி புடிச்சி படிச்சு ஒரு நல்ல ஸ்கோர ஒப்பேத்திடுவாங்க. ஆனா நம்ம பாண்டிச்சேரிக்காரர் கொஞ்சம் அசந்து தூங்கிட்டாரு போல இருக்கு. எப்பவோ எழுதி முடித்திருக்க வேண்டிய பத்தாம் வகுப்பு தேர்வை அமைச்சராக பொறுபேற்ற பின்புதான் முடிப்பேன்னு மணக்குல விநாயகர் கோயிலில் சபதம் ஏதாவது போட்டிருந்தாரான்னு தெரியல. சரி போனது போச்சு, ஏதோ ஆர்வ கோளாறுல இப்பவாச்சும் இவருக்கு படிக்கனும்னு தோனுச்சேன்னு சந்தோஷப்பட்டா மனுஷன் இப்படி தில்லாலங்கடி வேலைய செய்ஞ்சுட்டு கண்ணாமூச்சி காட்டிகிட்டு இருக்காரு. கல்வித்துறை அமைச்சர் பத்தாவது படிச்சிருக்கனும்னு எந்த சட்டமும் இந்த நாட்டுல இல்ல….எந்த தகுதியும் இல்லை என்பதுதான் அரசியலுக்கு தேவையான முக்கியத் தகுதியே. அப்புறம் எதுக்கு இவருக்கு இந்த விபரீத ஆசையெல்லாம். இவர சொல்லி தப்பு இல்ல இவர் கூட இருக்குற ஏதோ ஒரு அடிபொடி தான் அண்ணனை இப்படி உசுப்பேத்தி விட்டிருக்கனும். இப்ப பாருங்க ரணகளமாகிடுச்சு. நல்ல பிள்ளையாய் இவர் போய் பரீட்சையை எழுதுவாருன்னு பார்த்தா இவரோட Substitute-ஐ அனுப்பி வச்சிருக்கார் மனுசன். கிரிக்கெட் மேட்சுன்னு நெனச்சிட்டாரு போல. பாண்டிச்சேரி முதல்வர் கல்வித்துறையை சரியான ஆளுகிட்ட தான் ஒப்படைச்சிருக்காரு. நல்லவேளை இவரை சுகாதாரத் துறைக்கு அமைச்சராக நியமிக்கவில்லை…நியமித்திருந்தால் இந்நேரம் முன்னாபாய் M.B.B.S மாதிரி ஏதாவது கலாட்டா பண்ணியிருப்பார். எப்படியோ பாண்டிச்சேரி அரசியல்ல அண்ணனுக்கு தனி இடம் கிடைச்சு போச்சு.

வரலாறு முக்கியம் அமைச்சரே !
----------------------------------------------------------------------------------

மம்தா தீதி ரொம்ப உணர்ச்சிவசப்படுவாங்க….தேசிய அரசியல் தெரிஞ்சவங்களுக்கு தீதிய பத்தி நல்லாத் தெரியும். அதிரடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் இப்படி கலந்து கட்டி அடிச்சு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எல்லா தரப்பையும் சில நேரங்களில் அலற வைத்துவிடுவார். வார்டு கவுன்சிலர்களே பள பளன்னு பவனி வரும்போது தீதியின் எளிமை அரசியலைத் தாண்டி அவர் மேல் ஒரு தனி மரியாதையை ஏற்படுத்த தவறியேதில்லை. அசுர பலத்துடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி எவ்வளவோ முயற்சித்தும் அசைக்க முடியாத காம்ரேடுகளின் கோட்டையை அசால்ட்டாக தூக்கி ஓரமாக வைத்துவிட்ட பெருமை முழுக்க முழுக்க தீதிக்கே சொந்தம். இப்படி பல பெருமைகளை தனது அரசியல் பக்கங்களில் நிரப்பிக் கொண்டவர் சமீப காலங்களில் அடிக்கும் அரசியல் ஸ்டண்டைப் பார்த்தால் அடுத்தமுறை மீண்டும் காம்ரேடுகளை இவரே பதவியில் கொண்டுவந்து அமர்த்திவிடுவார் போலத் தெரிகிறது. பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவேன் என பரபரப்பாக அறிக்கை எல்லாம் விட்டவர், மறு நாளே U-Turn அடிப்பார் என எதிர்பார்க்கவே இல்லை. இதை வேறு அரசியல் தலைவர்கள் யாராவது செய்திருந்தால் ஆச்சரியப்படாமல் இருந்திருக்கலாம் ஆனால் தீதி செய்ததுதான் கொஞ்சம் புருவத்தை உயரச் செய்துவிட்டது. ஒட்டு மொத்த மக்களையும் கொதிக்கச் செய்துள்ள இந்த விலை உயர்வை திடமாக எதிர்த்து கொஞ்சம் ஆறுதல் தருவார் எனப் பார்த்தால் இவர் வடிவேல் பாணியில் அடுத்த முறை பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு மக்களை அந்தரத்தில் விட்டுவிட்டார். இன்னும் ஆறு மாதத்திற்குள் அரசாங்கம் பெட்ரோல் விலையை கண்டிப்பாக உயர்த்தும். உத்திரப்பிரதேச தேர்தலுக்காக வேண்டுமென்றே விலையை செயற்கையாக ஏற்றிவிட்டு இப்போது குறைப்பது போல பாவ்லா காட்டியிருக்கிறார்கள். ஆக்ஷன் ராணி அடுத்த முறை என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். போதாத குறைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தன் கட்சிக்காரரை விடுவித்ததாக சமீபத்தில் வந்த செய்தியை பார்த்தபோது கூடிய விரைவில் தீதி மற்ற சராசரி அரசியல்வாதிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுவார் போலத் தெரிகிறது. என்னமோ செய்யுங்க தீதி.

No comments: