மூடப்பட்டிருந்த அந்த அறையின் கதவை மெல்ல திறந்து உள்ளே நுழைந்ததும் கட்டிலில் படுத்திருந்த அப்பா லேசாக தலையை திருப்பி என்னைப் பார்த்தார். ஜன்னலுக்கு அருகே அவரின் நெருங்கிய தோழனாகவே மாறிப்போய்விட்ட அந்த பிஃலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் “இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா” என கண்ணதாசனின் வரிகளில் தன்னை தொலைத்தபடி பாடிக்கொண்டிருந்தார் TMS. இரவு நேரங்களில் சிலோன் ஒளிபரப்பில் வரும் பழைய பாடல்களை விரும்பி கேட்டபடியே அம்மாவின் மடியில் தலைவைத்து படுத்திருந்த நடுத்தர வயது அப்பாவின் தோற்றம் மனதில் ஒரு கணம் தோன்றி மறைந்தது.
இரண்டு நிமிடம் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் மெல்ல நடந்து கட்டிலின் விளிம்பிற்கு அருகில் சென்றதும் உட்காரும்படி தனது இடது கையை உயர்த்தினார். அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த கண்ணீர் வெடித்து கிளம்பியது. உழைத்து களைத்து ஓய்ந்துப்போயிருந்த அவரின் வலது கையையும் உதடுகளின் ஒரு பக்கத்தையும் இயற்கை வென்றுவிட்டிருந்தது. அடித்தும், அணைத்தும் வளர்த்த அப்பாவின் வலது கையை அந்த நிலையில் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. கடவுள் கருணையற்றவன் என்ற என் நிலைப்பாடு மேலும் திண்ணமாகியது.
என் நிலையை உணர்ந்தவர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள எடுத்த முயற்சியை அவர் கண்களின் ஓரத்தில் மெலிதாக வழிந்த கண்ணீர் காட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார முயற்சி செய்தவர் லேசாக இடப்பக்கம் திரும்பி கையை கட்டிலின் மேல் ஊன்ற, அவரை லேசாக பிடித்து திருப்பி எழுப்பி உட்காரவைத்தேன். தலையணையை முதுக்கு வைக்க முயற்சிக்க வேண்டாமென தடுத்துவிட்டார்.
இயற்கையின் விதிப்படி தோள்களில் சுருக்கம், மூக்கு கண்ணாடி, என பல விஷயங்களை அப்பா ஏற்றுக்கொண்டுவிட்டார். ஆனால் நேற்று இரவு நடந்த விஷயம் அவர் முகத்தில் லேசான கவலையை இறக்கிவைத்துவிட்டு போயிருப்பதை பார்க்க முடிந்தது.
நல்லாயிருக்கியாடா திரு? குழறியபடி வார்த்தைகள் வந்து விழந்தன.
ம்ம்ம்..இருக்கேன்பா…
அம்மா போன் பண்ணாங்களா?
இல்லப்பா…டாக்டர்.வேதாசலத்துகிட்ட ஒர்க்பண்ற நர்ஸ் கால் பண்ணி தகவல் சொன்னாங்க….ஏம்ப்பா எனக்கு தகவல் சொல்ல வேணாம்னு சொன்னீங்க…
பதில் ஏதும் பேசாமல் மெளனமாக தலையை கவிழ்ந்தபடி இருந்தவரின் வலது கரத்தை என் கரங்களுடன் கோர்த்துகொண்டேன். நாற்பது வருடங்களுக்கு மேலாக தன் குடும்பத்தின் நலனுக்காகவே உழைத்து தேய்திருந்த அந்த கரம் தனது மென்மையை தொலைத்துவிட்டிருந்தது. உலகின் மற்ற எந்த ஜீவராசியை விடவும் இரக்கமற்றவனாக தோன்றினான் இறைவன்.
அந்த பொண்ணு எப்படி இருக்கா திரு? அமைதியை கலைக்க முற்பட்டுக்கொண்டிருந்தார் அப்பா. கிருத்திகாவை இரண்டொரு முறை வீட்டுக்கு அழைத்து வந்ததை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருந்தார்.
நல்லாயிருக்காங்கப்பா…
இந்த சூழலில் கிருத்திகாவைப் பற்றி மேற்கொண்டு எதுவும் பேச மனம் இணங்கவில்லை. ஆனால் அப்பாவின் பேச்சு மறுபடியும் அவளைச் சுற்றியே வந்தது. அதற்கு அர்த்தமும் இருந்தது.
உங்க அம்மாவுக்கு அந்த பொண்ணுமேல ரொம்ப நல்ல அபிப்ராயம் இருக்கு திரு….போனமுறை நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தபோது….
அப்பா…….பேசிக்கொண்டே போனவரை இடைமறித்தான்.
நீங்க முதல்ல நல்லா ரெஸ்ட் எடுங்கப்பா..எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்.
இல்ல திரு…என்னோட வாழ்க்கையில இனிமே நான் வாழப்போற நாட்கள் எல்லாம் complimentary days தான்…உன்னோட எல்லா தேவையையும் நான் நிறைவேற்றியிருக்கேனான்னு தெரியல….நீ பழைய திருவா, சந்தோஷமா இருக்குறத பார்த்துட்டு போயிடனும்டா...நீ வாழ வேண்டிய வாழ்க்கை நிறைய இருக்கு திரு….உன்னோட வலி தெரியாதவன் இல்லப்பா நான். நீ அந்த வேதனையிலிருந்து வெளியே வந்து புதுசா ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாதான் நானும் உன் அம்மாவும் சந்தோஷமா இருக்க முடியும்…யோசிச்சி நல்ல முடிவா சொல்லு திரு.
சரிப்பா…நீங்க சொல்றது புரியுது..நான் கண்டிப்பா யோசிக்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. நாம காலையில பேசுவோம். சொல்லிக்கொண்டே எழுந்தவனின் மனதில் கிருத்திகா வந்து நிறைந்து நின்றாள், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடரும் நிழல் போல.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
சரண்,
வீட்டுக்கு எதோ மெசேஜ் சொல்றிங்க போல.... I can some how co relate this episode to u r personal life... I wish all the best for u r Good life :)
என்றும் நட்புடன்
நவீன்
Post a Comment