பெங்களுர் அல்லது சென்னையில் அமர்ந்துகொண்டு தங்கள் நிறுவனத்தின் காலாண்டு வரவு-செலவு கணக்கை வெளியிடுவார்கள், வெளியிடப்படும் அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்தால் அடுத்த நிமிடம் மும்பை பங்கு சந்தையில் அந்நிறுவன பங்குகளின் மதிப்பு சூடுபட்ட தெர்மாமீட்டரின் முள்ளைப்போல ஜிவ்வென்று எகிறிவிடும்.
ஏறக்குறைய இதே மாதிரி ஒரு நிலையை 1977 தமிழக தேர்தலில் ஒருவர் ஏற்படுத்துகிறார். இவர் சென்னையில் அறிவிப்பை வெளியிட தமிழகத்தின் தென்கோடியில் அதுவரை அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த இந்த தொகுதியில் சூடு பரவ ஆரம்பிக்கிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளில் 233 தொகுதிகள் இந்த தொகுதியை நோக்கி திரும்பிவிட, தன்னைத் தானே ஒருமுறை கிள்ளிப்பார்த்து தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது இந்த தொகுதி.
கழகங்களின் கண்ணில் படாமலே அதுவரை கண்ணாமூச்சி காட்டி வந்த இந்த தொகுதி, இம்முறை சிக்கிவிட்டது. முதல்முறையாக கழகங்களின் அணிவகுப்பு இந்த தொகுதியின் பரபரப்பை கூட்டி இருக்க, அதிமுக அந்த பரபரப்பை இன்னும் ஒரு படி மேலாக கொண்டு சென்றது, தங்களின் அதிரடி வேட்பாளர் அறிவிப்பின் மூலம்.
விருதுநகர் மாவட்டத்தின் எல்லைக்குள், ராமநாதபுர மாவட்டத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள, பெரும்பாலும் நடுத்தர மற்றும் கிராமப்புற வேட்பாளர்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தின் சராசரி தொகுதிகளில் ஒன்று. தமிழக அரசியல் உலகின் மிகப்பெரிய பதவிகளுக்கு தங்கள் தொகுதியில் இருந்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டு, “அதற்கென்ன இப்போது” என கேட்காத குறையாக, மிகவும் அமைதியாக தன் தினசரி நடவடிக்கைகளில் மூழ்கிவிடும் தமிழகத்தின் 204வது சட்டமன்ற தொகுதி…அந்த தொகுதி…
அருப்புக்கோட்டை: தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் விளங்கிய முதல்வர்களை பட்டியலிட்டால், கற்பூரம், கல்கண்டு, காயகல்பம் என எந்த வஸ்தாது மேல் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம், அந்த பட்டியலில் எம்ஜியார் பெயர் இருக்கும் என்று. 1977 தேர்தல் அறிவிப்பு வரும்வரை எம்ஜியாரை பிலிம் ரோலுக்குள்/வெள்ளித்திரையில் மட்டுமே பார்த்து வந்த இந்த தொகுதி மக்கள், முதன் முறையாக அந்த தேர்தலில் தங்கள் கனவு நாயகனை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.
அந்த தேர்தலில் முதல் முறையாக அதிமுக இந்த தொகுதியின் மீது தன் பார்வையை திருப்ப, அதன்பின் வந்த தொடர்ச்சியான தேர்தல்களில் வழக்கம்போல ரத்தத்தின் ரத்தங்களும் உடன்பிறப்புகளும் தங்கள் சாகசங்களை தொகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து இந்த தொகுதியை திக்குமுக்காட செய்துவிட்டனர். இன்றுவரை அதை தொடர்ந்தும் வருகிறார்கள்.
1977 இல் அதிமுக வின் அக்னி பரீட்சைக்கு அங்கீகாரம் வேண்டி தமிழகம் முழுவதும் பரவலாக தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என சொல்லாமல் சொல்லி வாத்தியார் இந்த தொகுதிக்குள் ஐக்கியமாகிவிட்டார். அருப்புக்கோட்டையில் நின்று கொண்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு குறிவைத்தார் இந்த நாடோடி மன்னன். தேர்தலின் முடிவில் இரு கோட்டைகளிலும் இவர் கொடி பறக்க, மக்கள் மத்தியில் மன்னாதி மன்னன் ஆகிப்போகிறார்.
அந்த தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனதா (!) கட்சி வேட்பாளரை சுமார் முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரட்டை இலையை மிக சுலபமாக முதல் வரிசைக்கு கொண்டுவந்துவிட்டார். எம்ஜியாரை எதிர்த்து திமுகவே இங்கு களத்தில் இறங்கி இருக்கும் பட்சத்தில் இந்த வாக்கு வித்தியாசம் வேறுபட்டிருக்கலாம் அல்லது ஆச்சரியமான முடிவையேகூட ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் விலகி நின்று வேடிக்கை பார்த்தார்கள் என்பது அறிவாலயத்தின் சுவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள்.
மூவர்ண கொடியுடன் சேர்த்து இன்ன பிற தெரியாத கட்சிகளின் கலவையான கொடிகளை மட்டுமே கண்டு வந்த இந்த தொகுதி, 1977 முதல் இரு வர்ண கொடிகளால் நிரம்ப ஆரம்பிக்கிறது, இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சி வழக்கம்போல் தன் கடமையை சிறப்பாக ஆற்றி மெல்ல தன் அடையாளத்தை இழந்து, கழகங்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பிக்கிறது.
அந்த ஒரு தேர்தலை (1977) தவிர்த்து வேறு எந்த தேர்தலிலும்/ எந்த கட்சியும் (அதிமுக உள்பட)/ எந்த வேட்பாளரும் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தை இந்த தொகுதியில் இதுவரை காண்பிக்கவில்லை. விஷயம் தெளிவாக தெரிகிறது, கட்சி/சின்னம்/வேட்பாளர் தாண்டி சினிமா விளையாடி இருக்கிறது எம்ஜியாரின் விஷயத்தில். 1991 இல் பெரும் சாதகமான நிலையில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக இங்கு வென்றிருந்தாலும் எம்ஜியார் ஏற்படுத்திய அதிர்வில் பாதியைகூட அப்போதைய வேட்பாளாரால் ஏற்படுத்த முடியவில்லை என்பது நிதர்சனம்.
எம்ஜியாருக்கு கொடுத்த அங்கீகாரத்தை அவருக்குப்பின் இங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு குறைத்துக்கொண்டே வந்து, இறுதியில் 1989 இல் முதன் முறையாக தொகுதியை உதயசூரியனின் குடைக்குள் கொண்டு சென்றுவிட்டனர் இந்த தொகுதி மக்கள். மிக அதிரடியாக ஆட ஆரம்பித்த அதிமுக, உலக நியதிக்கு தப்பாமல் காலத்தின் ஒட்டத்தில் தன் பிடியை தளர்த்த, மறுமுனையில் எதிர்திசையில் உறுதியாக போராடிக்கொண்டே வந்த திமுக தன் இலக்கை 1989 இல் அடைந்தே விட்டது.
இருமுறை தோல்வியை சந்தித்த உடன்பிறப்புக்கள் மனம் தளராமல் போராடியதன் பலன், 1989இல் கோட்டையை தங்களாலும் தகர்க்க முடியும் என நிரூபித்துவிட்டார்கள். அக்கட்சியின் வேட்பாளார் திரு. வீ.தங்கபாண்டியன் தொடர் தோல்விகளால் சீண்டப்பட்டு இறுதியில் 1989ல் சுமார் பதினைந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, கோட்டையில் தன் இருக்கையை உறுதிசெய்து கொண்டார்.
பின்னர் 1991 இல் தொகுதி மறுபடியும் அதிமுகவின் பிடிக்குள் போய்விட, 1996 தேர்தலில் மீண்டும் ஒருமுறைய் கடுமையாக போராடி தொகுதியை மீட்டெடுத்தனர் உடன்பிறப்புக்கள். அந்த தேர்தலிலும் திமுக திரு. வீ. தங்கபாண்டியனையே களத்தில் இறக்கியது குறிப்பிடத்தக்கது. இருமுறை தொகுதியை திமுகவின் பிடிக்குள் கொண்டுவந்த இவர் பின்னர் திமுக அமைச்சரவையிலும் இடம்பெற்று தன் முத்திரையை பதித்தார்.
1980 இல் சுமார் முப்பதாயிரம், 1984 இல் சுமார் முப்பத்தாராயிரம், 1989இல் சுமார் நாற்பந்தையாயிரம் என திமுக மேல்நோக்கி தன் வாக்கு எண்ணிக்கையில் முன்னேறிக்கொண்டு இருக்க, அதே தேர்தல்களில் தங்கள் வாக்கு வங்கியில் விழுந்துள்ள ஒட்டையை அதிமுக கொஞ்சம் அலட்சியப்படுத்தி வந்த மாதிரி தெரிகிறது. தங்கள் வெற்றியில் கவனம் செலுத்திய அதிமுக முகாம், எதிரணியின் வேகத்தை கவனிக்க தவறிவிட்டது. அதிமுகவின் பலவீனம் திமுகவிற்கு பலம், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உதயசூரியனை இலைக்கு மிக அருகில் கொண்டு வந்து விட்டார்கள் உடன்பிறப்புக்கள். அதிமுக வினர் சுதாரித்துக்கொண்டு விழித்து எழுந்து பார்த்தபோது சூரியன் அவர்களின் தலைக்கு மேல் தன் அனலை கக்க ஆரம்பித்துவிட்டிருந்தது.
1977 இல் ஆரம்பித்து 1984 தேர்தல் முடியும்போது, ஏறக்குறைய இரு கழகங்களும் சம பலத்தை இந்த தொகுதியில் பெற்றுவிட்டன. இதன் பின் வந்த தேர்தல்களின் இரு கழகங்களும் மாறி மாறி வென்று வந்தாலும், ஒட்டு மொத்த தமிழகத்தின் பக்கம் எந்த அணி சாய்கிறதோ அதே பக்கம் இந்த தொகுதியும் சாய்ந்து வந்து இருக்கிறது.
1989 இல் தொடங்கி 2006 வரை திமுகவும் சரி, அதிமுகவும் சரி இந்த தொகுதியில் தொடர்ச்சியாக வெல்லவே இல்லை, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மாறி மாறி இரு கழகங்களையும் ஆதரித்தும் எதிர்த்தும் வந்திருப்ப்பது தெரிகிறது. 1991 தவிர்த்த மற்ற தேர்தல்களில் திரு,வீ. தங்கபாண்டியன் செல்வாக்கு திமுகவிற்கு மிகப்பெரிய பலமாக இருந்து வந்திருக்கிறது.
2001 இல் திமுக சார்பாக இங்கு போட்டியிட்ட திரு. தங்கபாண்டியனின் புதல்வர் தங்கம் தென்னரசு தொகுதியை நழவவிட, காத்திருந்த அதிமுக தன் கொடியை ஜெகஜோதியாக ஏற்றிவிட்டது. 2006 தேர்தலில் திமுகவின் சார்பாக மறுபடியும் திரு. தங்கம் தென்னரசுவே வேட்பாளாராக இறங்க, இம்முறை தன் தந்தையார் பாணியில் இழந்த தொகுதியை மறுபடியும் திமுகவின் பாக்கெட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். தந்தையை பின்பற்றி இவருக்கும் தமிழக அமைச்சரவையில் இடம் கிடைக்க, இன்றைய தேதியில் சிறப்பாக செயல்படும் அமைச்சராக பரவலாக அனைவராலும் அறியப்பட்டு வருகிறார்.
இந்த தொகுதியின் அரசு பள்ளிகளில் இவர் செயல்படுத்திய பல்வேறு அபாரமான திட்டங்களின் பலனாக சென்ற ஆண்டு இந்த தொகுதியின் அரசு பள்ளிகளில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக அளவில் வென்றதோடு மட்டுமல்லாமல் மிகவும் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களையும் பெற்றனர் என்பது நடுநிலையோடு நின்று பாராட்டக்கூடிய அம்சங்கள். இவரின் இந்த திட்டங்கள் தமிழகத்தின் மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழக கல்வித்துறை ஒரு மிகப்பெரிய இடத்தை இந்திய அளவில் பிடிப்பதற்கான எல்லா சாத்தியங்களும் உள்ளது, அம்மாதிரியான நிகழ்வு அருப்புக்கோட்டை தொகுதி மக்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்பதில் மாற்று கருத்திருக்கமுடியாது.
தமிழகத்திற்கு முதல்வர், சிறப்பான பள்ளி கல்வித்துறை அமைச்சர் என கொடுத்துள்ள இந்த தொகுதி மக்கள் சமீப காலமாக ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் தொகுதிக்கு அப்பால் சென்று நிலைமையை உற்று நோக்கி முடிவெடுப்பது தெரிகிறது. ஒட்டு மொத்த தமிழக மக்களின் முடிவையே இவர்களும் ஏற்று கொள்வது போல செல்கிறது இவர்களின் சமீபத்திய தேர்தல் முடிவுகள். அரசியல் கட்சிகளுக்கு இது ஆதாயத்தை ஏற்படுத்தினாலும் அவர்களின் முடிவு தொகுதியின் வளர்ச்சியில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என யோசித்து முடிவெடுக்கும் பட்சத்தில் இந்த தொகுதி மிகப்பெரிய வளர்ச்சியை அடையலாம்.
பெயரளவில் அருப்புக்கோட்டை என இருந்தாலும் நிஜமான அருப்புக்கோட்டை நகராட்சி சாத்தூர் தொகுதியின் எல்லைக்குள் அமைந்திருப்பது குழப்பத்தின் உச்சகட்டம். தொகுதி சீரமைப்பு குழுவில் லாஜிக்கலாக யோசிப்பவர்கள் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம் இது.
திருவண்ணாமலை ரமண மகரிஷி சுவாமிகள் அவதரித்த திருச்சுழி கிராமம் இந்த அருப்புக்கோட்டை தொகுதிக்குள் வருவது இந்த தொகுதியின் இன்னொரு அம்சம்.
தொலைதொடர்பு சாதனங்களின் பெருக்கம்/ தொலைக்காட்சிகளின் ஊடுருவல் /மக்களின் கல்வியறிவு என பல விஷயங்களின் தாக்கம் பெரும் மாற்றத்தை இந்த தொகுதியில் உண்டு பண்ணியிருப்பதாகவே தெரிகிறது. வேகமாக குறையும் வாக்கு வித்தியாசம் கட்சிகளுக்கு கொஞ்சம் கசப்பான செய்தி, ஆனால் தாங்கள் யார் பக்கமும் இல்லை என மக்கள் இதன் மூலம் மறைமுக உணர்த்தும் செய்தி கொஞ்சம் ஆறுதலான விஷயம். தொகுதியை தொடர்ந்து தக்க வைக்கவேண்டும் என்றால் இனிவரும் காலங்களில் இரு கழகங்களுமே கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
1977 தேர்தலில் இந்த தொகுதியில் முதன் முறையாக அதிமுக களத்தில் இறங்கியதால் அந்த தேர்தலின் விவரங்கள் மட்டும் கீழே. (Thanks to PIB, Chennai)
மொத்த வேட்பாளர்கள் ; 1,12,763
வாக்களித்தவர்கள் ; 77,701
வேட்பாளர்: எம்.ஜி.இராமச்சந்திரன் (வெற்றி)
கட்சி : அ இ அ தி மு க
பெற்ற ஓட்டுக்கள் : 43,065
வேட்பாளர்: எம். முத்துவேல் சேர்வை
கட்சி ; ஜனதா
பெற்ற ஓட்டுக்கள் ; 13,687
இந்த தொகுதியின் தற்போதைய திமுக வேட்பாளர் திரு. தங்கம் தென்னரசுவின் செயல்பாடுகள் இதே நிலையில் தொடர்ந்து, அடுத்த தேர்தல் ஒரு சுமூகமான சூழ்நிலையில் நடைபெறும்பட்சத்தில், இவரே இங்கு மீண்டும் களம் இறக்கப்பட்டால் எதிரணி வேட்பாளர் நிலைமை நிச்சயம் ஆட்டம் காணலாம். இப்போதைக்கு காற்று திமுகவின் பக்கம் வீசினாலும் மக்களின் கடந்த கால மனநிலையை இரு கழகங்களும் உணர்ந்தே செயல் பட வேண்டி இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------
அடுத்து..
மிகப்பெரிய புயல் அடிக்கிறது, நிலைமையை அழகாக சமாளித்து கரையேறுகிறார் இவர், இவரின் இந்த திறமைதான் பின்னாளில் இவருக்கான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் அளித்தது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வலைகளை தாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் வேட்பாளர் ஏற்படுத்தப்போகிறார் என்பது இந்த தொகுதி மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு மிக மிக குறைவு…அந்த தொகுதி……
(தொடரும்)
Thursday, January 1, 2009
Sunday, November 30, 2008
தமிழக தேர்தல் களங்களை திரும்பிப் பார்க்க வைத்த தொகுதிகள் - பகுதி 9
1977 இல் மிகவும் கவனமாக சென்னையை தவிர்த்த எம்ஜியார், பின்னர் 1980 இல் சென்னைக் கோட்டைக்கான தனது முதல் தாக்குதலுக்கு அதிமுக வை மிகப் பெரிய அளவில் தயார்படுத்தினார். 1977 தேர்தல் முடிவு தந்த தைரியமும், முழு ஆயுளையும் முடிக்கும் முன்பே தனது ஆட்சிக்கு டெல்லிவாலாக்கள் முடிவுரை எழுதிவிட்ட கோபமும் அவரை கொஞ்சம் உசுப்பேற்றி பார்க்க, இம்முறை கொஞ்சம் வேகமாகவும் அதே சமயம் ஒருவித ஆக்ரோஷத்துடன் களத்தில் இறங்கினார்.
திட்டத்தின் முதல் படியாக திமுகவின் கோட்டை என கருதப்படும் அனைத்து தொகுதிகளும் தனியாக பிரிக்கப்பட்டு கட்டம் கட்டப்பட்டன. அந்த தொகுதிகளில் திமுகவின் பலம் மற்றும் பலவீனங்கள் மிக கவனமாக அலசப்பட்டு அதை எதிர்கொள்ளத் தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. உற்று நோக்கிகொண்டிருந்த திமுகவும் பதிலடி கொடுக்க தயாரானது. அதிமுகவின் மிகப்பெரிய தாக்குதலுக்கு ஈடு கொடுக்க கூடிய வேட்பாளர்களை மிக கவனமாக பார்த்து அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்கள். எம்ஜியார் மற்றும் அதிமுகவினரால் திட்டம் தீட்டப்பட்டு தகர்க்க நினைத்திருந்த திமுக கோட்டைகளின் பட்டியலில் ஆயிரம் விளக்கு மிக முக்கியமான இடத்தில் இருந்தது.
ஒருவழியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கத்தொடங்கின. திமுக சார்பில் ஏற்கனவே இங்கு அனலை கிளப்பிய திரு. சாதிக் பாட்ஷாவையே மீண்டும் களத்தில் இறக்க, விழித்துக்கொண்ட அதிமுக அதன் அஸ்திரத்தை முதல் முறையாக வெளியில் எடுத்தது. அக்கட்சியின் சார்பாக முதன் முறையாக திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி வேட்பாளராக களத்தில் இறக்கப்படுகிறார்.
திமுகவை பொறுத்தவரை இது அவர்களின் சொந்த களம், தொகுதியின் ஒவ்வொரு அசைவையும் மிக அருகில் இருந்து பார்த்தவர்கள். அதிமுகவிற்கும் ஏறக்குறைய அதே நிலைதான். காரணம் அன்றைய ரத்தத்தின் ரத்தங்களில் பெரும்பாலனவர்கள் முந்தின நாள் வரை உடன்பிறப்புகளாய் இருந்தவர்களே. இருந்தாலும் இருபிரிவாய் விலகி நின்று முதல் முறையாக ஒருவரை ஒருவர் எதிர் எதிரே சந்திப்பதால் போட்டியில் அனல் பறந்தது. இருபிரிவிற்குமே தங்கள் எதிர் அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் அத்துபடி, யாருமே அடுத்தவரை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாதபடி மிகவும் விறுவிறுப்பான நிலை.
இன்றைய 20-20 போட்டிக்கு இணையான விறுவிறுப்புடன் நடந்த அந்த தேர்தலின் முடிவில் வெறும் 307 ஒட்டு வித்தியாசத்தில் அதிமுக முதல்முறையாக இந்த தொகுதியை கைப்பற்ற, தங்கள் கோட்டை கைகளை விட்டு நழுவுவதை மவுனமாக பார்த்து நின்றது திமுக. 1977 யை காட்டிலும் கூடுதலாக 50% மேலாக ஒட்டுக்கள் பெற்றும் தங்களால் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தில் உடன்பிறப்புகள் சோகத்தில் மூழ்கிவிட, முதல் முறையாக இந்த தொகுதியில் களம் கண்டு ஏறக்குறைய திமுகவிற்கு சமமான வாக்குகளை அள்ளிய அதிமுகவின் முகாமில் வெடிகள் விண்ணைப்பிளக்க ஆரம்பித்தன.
திமுக கோட்டையில் ஒட்டை போட்ட திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி அதற்கு முன்னரே எம்ஜியார் அமைச்சரவையில் தன் இடத்தை பெற்றிருந்த நிலையில், இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒருமுறை தனது டிரேட் மார்க் “அமைச்சர்களின் தொகுதி” என்ற அந்தஸ்த்தை ஆயிரம் விளக்கு மறக்காமல் புதுப்பித்துக் கொண்டது.
கே.ஏ. கிருஷ்ணசாமி : எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். தொடர்ந்து இருமுறையும் மொத்தமாக மூன்று முறையும் ஆயிரம் விளக்கில் அதிமுகவின் கொடியை பறக்கவிட்டு திமுகவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கியவர். இவரை தவிர்த்து அதிமுகவின் சார்பில் இங்கு களம் இறக்கப்பட்டவர்கள் யாருமே இவர் ஏற்படுத்திய அளவிற்கு ஒரு மிகப் பெரிய நெருக்கடியை திமுகவிற்கு இதுவரை ஏற்படுத்தவே இல்லை என்பது நிதர்சனம்.
1984 இல் இந்திராகாந்தி அவர்களின் மறைவினால் ஏற்பட்ட அனுதாப அலை மற்றும் எம்ஜியார் உடல்நிலை ஆகியவற்றின் பிண்ணனியில் தேர்தலை சந்தித்த அதிமுக மீண்டும் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களையே இங்கு களத்தில் இறக்கியது. ஏற்கனவே தொகுதியை இழந்து நின்ற திமுகவிற்கு மேற்சொன்ன காரணங்களால் ஏற்பட்டிருந்த நெருக்கடியும் சேர்ந்துக்கொள்ள மிகப்பெரிய சவாலை எதிர்க்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறது. சவாலை சமாளிக்க கூடிய தகுதியான வேட்பாளர் யார் என தேடினார்கள், அதிமுகவும் அந்த வேட்பாளர் அறிவிப்பிற்காக காத்திருந்தது. காத்திருப்பவர்களுக்கு ஒரு சிறு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க திமுக சார்பில் முடிவு செய்யப்படுகிறது.
இம்முறை மிகப் பெரிய வேட்பாளரை அல்லது கூட்டணிகட்சி வேட்பாளரை திமுக நிறுத்தலாம் என யூகங்கள் கொடிகட்டி பறக்க, யாருமே எதிர்பார்த்திராத, மிகவும் வித்தியாசமான அதே சமயம் தைரியமான ஒரு முடிவை திமுக எடுத்துவிட்டது. ரத்தத்தின் ரத்தங்கள் மட்டுமின்றி உடன்பிறப்புக்களின் புருவத்தையும் உயர்த்திய அந்த முடிவு திமுகவில் ஒரு தனி அத்தியாத்திற்கான துவக்கம் என்பதை பலரும் மெல்ல உணரத்தொடங்கினார்கள்.
வரலாற்றை உற்று படித்தவர்களை/படிப்பவர்களை அடிக்கடி கடந்து போகும் ஒரு செய்தி, மிகப் பெரிய பேரரசுகள் தங்களுக்கு சோதனைகள் ஏற்பட்டபோதெல்லாம் தங்கள் இளவரசர்களை களத்தில் இறக்கி எதிரணியை கலங்கடிக்க செய்ததாக காணப்படும் செய்தி. மன்னர்களை காட்டிலும் இளவரசர்கள் களத்தில் இறங்கும்போது தெறிக்கும் வேகம் அபரிதமானது. சேர, சோழர்கள் தொடங்கி முகலாயர்கள் வரை வரலாறு இதை பதிந்திருக்கிறது. அந்த வரலாறுகளை அணு அணுவாக படித்து தெளிந்திருந்த திமுகவும் அதன் தலைமையும் தங்கள் அடுத்த தலைமுறையை களத்திற்கு அனுப்பி இப்போது எழுந்துள்ள சவாலை எதிர்நோக்குவது என முடிவுகட்டினார்கள்.
தன்னை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்தி திமுக முன்னிறுத்திய அந்த வேட்பாளர், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அதன் ஆக்ரோஷ அனலில் வெந்து மீண்ட ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களில் ஒருவரான திரு. மு.க. ஸ்டாலின். திமுகவின் இளைஞரணியை இயக்கிக்கொண்டிரு(ப்பவர்)ந்தவர். அதுவரை நேரடி அரசியலில் இறங்கி தேர்தலை/மக்களை சந்தித்திராதவர்.
வேட்பாளர் அறிவிப்பு சம்பிரதாயங்கள் முடிந்து போட்டி தொடங்கிவிட, தங்கள் இளைய தலைமுறை தலைவரை கொண்டு இழந்த கோட்டையை மீட்டெடுக்க முயன்ற திமுக தொண்டர்களின் ஆக்ரோஷமான உழைப்பு ஒருபக்கம், திமுகவின் அடுத்த தலைமுறைக்கு தடையை ஏற்படுத்த வேண்டிய கட்டயாச் சூழல், சென்ற முறை பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் என அதிமுகவின் போராட்டம் மறுபக்கம். இவை எல்லாம் சேர்ந்து 1980 தேர்தலுக்கு கொஞ்சமும் குறையாத விறுவிறுப்பை 1984 தேர்தலிலும் இந்த தொகுதியில் ஏற்படுத்தியிருந்தன. இந்த தேர்தலை பொறுத்தவரை இங்கு அதிமுகவிற்கு இருந்த அழுத்தம் திமுகவிற்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
விறுவிறுப்புடன் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் ஒருமுறை இரட்டை இலையைக் கொண்டு உதயசூரியனை மறைத்துக்காட்டினார் அதிமுகவின் திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி. திமுகவினரால் முன்னெடுக்கப்பட்ட அக்னிபரீட்சை ஒரு தற்காலிக பின்னடைவை எதிர்கொள்ள, திரு.மு.க. ஸ்டாலினின் முதல் அரசியல் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. சென்ற தேர்தலைப்போல் நூலிழையில் தப்பிக்காமல் கொஞ்சம் திடமாகவே கரையேறினார் திரு. கே.ஏ, கிருஷ்ணசாமி. இம்முறை இவர் பெற்ற வாக்கு வித்தியாசம் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானது. மிக ஆச்சரியமான விஷயம் இருகட்சிகளுமே தாங்கள் முன்பு பெற்ற ஒட்டுக்களை விட அதிகமான ஓட்டுக்களை இந்த தேர்தலில் பெற்றிருந்தன, அந்த ஒட்டு விவரங்கள் சொல்லிய செய்தி இதுதான் “போட்டி இன்னும் இந்த தொகுதியில் ஒய்ந்துவிடவில்லை என்பதே”, பின்னர் வந்த தேர்தல் முடிவுகள் அதை சரியாக பிரதிபலித்தன.
1984 தேர்தலை பொறுத்தவரை அதிமுகவிற்கு தொகுதியை தக்க வைத்துக்கொண்ட சந்தோஷம், திமுகவிற்கு அதன் எதிர்கால தலைவரை தமிழகம் முழுவதிற்கும் அறிமுகப்படுத்திவிட்ட நிலை. Win-Win Situation. இரு கட்சிகளுமே தங்கள் இலக்கை அடைந்துவிட்டன என சொல்லலாம். சிறிய தளர்வுக்கு பின் மீண்டும் புது வேகத்துடன் எழுகிறது திமுக, தோல்வியை பரிசாக ஏற்றுக்கொண்டு தனது அடுத்த அரசியல் பயணத்தை தொடர ஆரம்பிக்கிறார், தமிழகத்தின் எதிர்கால முதல்வராக இன்று பத்திரிக்கைகளால் வர்ணிக்கப்படும் திமுகவின் திரு. மு.க. ஸ்டாலின்.
மு.க. ஸ்டாலின்: இந்தியாவில் மிசா சட்டம் அமல்படுத்தப்பட்டு அப்போதைய (இந்திராவின்) காங்கிரஸ் அரசுக்கு எதிராக வட இந்தியாவில் பலமாக எல்லோரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்க இந்தியாவின் தென்கோடியில் தமிழ்நாட்டில் எழுந்த பலமான மிசா எதிர்ப்பு குரல் வட இந்திய அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமாக தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. அன்றைய தேதியில் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு மிசாவை எதிர்த்த திமுக அனைவரும் எதிர்பார்த்தது போலவே தன் ஆட்சியை இழந்தது.
அனைத்து திமுக பெருந்தலைகளுக்கும் இந்திரா & கோ குறி வைத்துவிட ஏறக்குறைய அனைவருமே சிறைக்கு தங்களை தயார் படுத்தி கொள்ள ஆரம்பித்து இருந்தார்கள், கலைஞர் உள்பட. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திரா & கோ தனது ஆட்டத்தை கொஞ்சம் மாற்றி ஆட ஆரம்பித்துவிட்டது. கலைஞரை தவிர்த்து, திமுகவின் முண்ணனி தலைவர்கள் அனைவரும் சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, வேலூர் என தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் ஐக்கியமாகிவிட, கலைஞருக்கு பதிலாக வெறும் இருபத்தி இரண்டு வயதே நிரம்பியிருந்த மு.க. ஸ்டாலினின் பக்கம் தன் பார்வையை திருப்பினார் இந்திரா. அடுத்த நிமிடம் அவரை அள்ளிக்கொண்டு சென்றது காவல் துறை. சென்னை மத்திய சிறையின் செல்கள் திமுகவின் வருங்கால தலைவரை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக்கொண்டன.
கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த மிசா கொடுமைகளின் தனலை சாட்சிக்கு வைத்து மு,க. ஸ்டாலினின் எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கு சென்னை மத்திய சிறையில் வைத்து அடிக்கல் நாட்டியது அப்போதைய இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அரசு. எல்லா எதிர்க்கட்சியினரை போலவே மிசா கொடுமைகள் மு.க. ஸ்டாலின் மீதும் பிரயோகிக்கபட அதையே தனது அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக மாற்றிக்கொண்டார். மிசா சட்டத்தின் பிடியில் இருந்து மீண்டு, சிறையில் இருந்து வெளிவந்த பின் திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட இளைஞரணிக்கு இவர் தலைமை தாங்க, முழு நேர அரசியல் இவரை மெல்ல விழுங்கத்தொடங்கியது. கால ஒட்டத்தில் சென்னை மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர் என படிப்படியாக முன்னேறி, தமிழக முதல்வரின் நாற்காலிக்கு மிக அருகில் இன்று பயணித்துக்கொண்டிருக்கிறார்.
1984 இல் இவரை புறந்தள்ளிய அதே ஆயிரம் விளக்கில் 1989 இல் மீண்டும் திமுகவின் சார்பில் களத்தில் இறக்கப்படுகிறார். காற்று இம்முறை திமுகவிற்கு சாதகமாக வீச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக (ஜெ) வேட்பாளரை சுமார் இருபதாயிரத்துக்கும் கூடுதலான ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியுடன் தன் முதல் தடத்தை தமிழக சட்டசபையில் பதிக்கிறார். சென்ற தேர்தலைக்காட்டிலும் இம்முறை திமுக இங்கு கூடுதலாக அள்ளிய வாக்குகள் சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகம். வலுவில்லாத எதிரணி, எம்ஜியார் இல்லாத அதிமுக என அனைத்து அம்சங்களுமே திமுக வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி இருக்க கிடைத்த சந்தர்பத்தை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டது திமுக.
இந்த வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்காமல் வழக்கமான இந்திய அரசியல் நாடகங்களின் ஒரு பகுதியாக சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிரம்பிருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் 1991 தேர்தல் அறிவிக்கப்படுகிறது. ஆட்சியை இழந்து நின்ற திமுக மீண்டும் மு.க. ஸ்டாலினையே இந்த தொகுதியில் நிறுத்த, ஜெயலலிதா தலைமையிலான ஒன்றுபட்ட அதிமுக சார்பில் மீண்டும் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் மூன்றாவது முறையாக இங்கு போட்டியில் குதிக்கிறார்.
அந்த தேர்தலின்போது ஏற்பட்டிருந்த அனுதாப அலையில் சிக்கி காணாமல் போனவர்களின் பட்டியலில் ஒட்டுமொத்த திமுக வேட்பாளர்களும் (கலைஞர் தவிர) இடம் பிடித்துக்கொள்ள. இரண்டாவது முறையாக கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களிடம் தன் வெற்றி வாய்ப்பை இழக்கிறார் மு.க.ஸ்டாலின். மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்காக ஆயிரம் விளக்கை மீட்டெடுத்த கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் வழக்கம்போல அமைச்சராக அமர்த்தப்பட்டு இந்த தொகுதியின் அமைச்சர் அடையாளத்தை தொடருகிறார்.
பின்னர் நடைப்பெற்ற 1996, 2001 மற்றும் 2006 தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வெற்றியை பரிசளித்து, சென்னை மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளில் அவரை அமர்த்தி அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது ஆயிரம்விளக்கு தொகுதி.
தங்கள் எதிர்கால தலைவரின் முதல் அரசியல் முயற்சி தோல்வியில் முடிந்ததை ஒரு சவாலாக ஏற்று முன்னிலும் முனைப்புடன் பணியாற்றுவது என உடன்பிறப்புக்கள் சபதமே எடுத்து இருப்பார்கள் என தோன்றுகிறது, அதைத்தான் 1984க்கு பிறகு இந்த தொகுதியில் நடந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. அதன்பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் நான்குமுறை மு.க. ஸ்டாலின் அவர்கள் இங்கு திமுகவின் கொடியை பறக்கவிட்டுள்ளார்.
இருமுறை பெற்ற தோல்விகளை துடைத்தெறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் எழுந்து நின்ற திமுக ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் தெளிவான தாக்குதல் யுக்தி எதுவும் இல்லாமல் தொடர்ந்து தொகுதியை இழந்து நிற்கிறது அதிமுக. கே.ஏ.கிருஷ்ணசாமிக்கு பிறகு ஒரு பலமான வேட்பாளரை இங்கு தயார்படுத்த தவறியது, எம்ஜியாரின் இழப்பு, தலைமையின் தவறான முடிவுகள் என இன்று வரை இழந்த தொகுதியை மீட்டெடுக்க இயலாமல் அதிமுக தள்ளாடிக்கொண்டிருக்க, சரியான நேரத்திற்காக காத்திருந்த திமுக கிடைத்த இடைவெளியில் இழந்த தங்கள் கோட்டையை மீண்டும் மிக பலமாக கட்டி எழுப்பிவிட்டார்கள்.
2001 இல் எந்த கட்சிக்கும் சாதகமான சூழல் இல்லாத நிலையில் இந்த தொகுதியில் நடைப்பெற்ற தேர்தலின் விவரங்கள் கீழே. (Thanks to PIB, Chennai)
மொத்த வேட்பாளர்கள் : 2,10,474
வாக்களித்தவர்கள் : 95,428
வேட்பாளர்: மு.க.ஸ்டாலின் (வெற்றி)
கட்சி : திமுக
பெற்ற ஓட்டுக்கள் : 49,056
வேட்பாளர்: எஸ். சேகர்
கட்சி : த மா கா (மூ)
பெற்ற ஓட்டுக்கள் : 41,782
எந்த நேரமும் தமிழக முதல்வராக பதவி உயர்வு அடையலாம் என்ற நிலையில் இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்கள் இனிவரும் தேர்தல்களிலும் இங்கு போட்டியிடும்பட்சத்தில், திமுகவை வெல்வது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதுதான் இன்றைய தேதிக்கு இந்த தொகுதியின் நிலை.
-------------------------------------------------------------------------------------------------
உப்பு சப்பில்லாத ஒருநாள் பந்தயத்தில் கூட சச்சின் ஆடுகிறார் அதுவும் சதம் அடிக்கும் நிலையில் இருக்கிறார் என்றால் அவர் ஆடி முடிக்கும் வரையிலாவது தொலைக்காட்சி முன் அமர்ந்திருப்போம். ஏறக்குறைய அதே நிலையில் தான் இருந்தது இந்த தொகுதியும் ஒரு குறிப்பிட்ட தேர்தலின்போது. இந்த தொகுதியில் இவர் ஆட்டத்தை ரசிப்பதற்கு அன்றைய தமிழகம் முழுவதும் மக்கள் காத்திருந்தார்கள், காத்திருந்தவர்களை ஏமாற்றாமல் இவர் ஆடிய ஆட்டம்தான் அந்த தேர்தலின் சரவெடி, அந்த வெடியை கொளுத்தி மகிழ்ந்த அந்த தொகுதி.....

Sunday, November 2, 2008
தமிழக தேர்தல் களங்களை திரும்பிப் பார்க்க வைத்த தொகுதிகள் - பகுதி 8
ஒருபக்கம் ஆனந்தம், இன்னொருபக்கம் அதிர்ச்சி, 1977 தேர்தல் முடிந்த நிலையில் எம்ஜியாரின் மனநிலை இதுவாகத்தான் இருந்திருக்கும். அந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்த எம்ஜியார் அவர்களால் கோட்டை இருந்த சென்னையை மட்டும் நெருங்க கூட முடியவில்லை. சென்னையின் 14 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 13 இல் வென்று எம்ஜியாருக்கு முதல் வேகத்தடையை ஏற்படுத்துகிறது.
ஆட்சியை இழந்து நின்ற திமுகவின் பின்னால் ஒட்டு மொத்த சென்னையும் எழுந்து நிற்க, சொல்லப்பட்ட செய்தியை திமுக உள்வாங்கிகொண்டது. அதிமுகவும் சுதாரித்துக்கொண்டது. தமிழக அரசியலில் ஒரு புது ஆட்டத்திற்கான விதை தூவப்படுகிறது.
அரசு ஊழியர்கள், மத்தியதர வர்க்கம் என பெரிய மற்றும் நடுத்தர நகரங்களை திமுக குறி வைக்க, புழுதியை கிளப்பினாலும் அப்பழுக்கில்லாமல் வெள்ளந்தியாக விளங்கி வந்த கிராமத்து கரைகளின் பக்கம் தன் கண்களை பதிக்க தொடங்குகிறார் எம்ஜியார்.
தங்கள் எஃகு கோட்டை எது என்பதை விரைவாகவே உணர்ந்து கொண்ட திமுகவும் அதன் தலைமையும், தங்கள் ஸ்டார் வேட்பாளர்களை முக்கிய நகரங்களுக்குள்ளே களம் இறக்க தொடங்குகிறது. குறிப்பாக அதன் முதல் கட்ட முக்கிய தலைவர்கள் கோட்டை இருக்கும் சென்னையின் ஏதாவது ஒரு தொகுதியிலேயே களம் இறங்கி அதிரடி ஆட்டம் ஆட ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் அதிரடி ஆட்டத்திற்கு பக்க பலமாக இன்று வரை தொடர்ந்து நிற்கும் தொகுதிகளில் இந்த தொகுதியும் ஒன்று.
அமைச்சர் பதவி, சபாநாயகர் சிம்மாசனம், மேயரின் செங்கோல் என அனைத்து பொறுப்புகளுக்கும் தங்கள் பட்டறையில் இருந்து வேட்பாளர்களை பட்டை தீட்டி அனுப்பிய பின்னும், கொஞ்சமும் தங்களின் ஆர்வத்தை அடக்கி கொள்ளாமல் தமிழக முதல்வரின் நாற்காலிக்கு குறி வைத்து ஒரு வேட்பாளரை தயார் செய்து அம்பில் பூட்டிவிட்டு சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் தொகுதி இது.
சிக்னல் கிடைக்க வேண்டியது மட்டும்தான் இப்போதைக்கு பாக்கி. அடுத்த நிமிடம் தங்கள் வேட்பாளரை தமிழக முதல்வர் அரியணையில் ஏற்றி சரவெடி கொளுத்த எந்த நேரமும் தயார் நிலையில் உள்ள தமிழகத்தின் 10வது சட்டமன்ற தொகுதி….அந்த தொகுதி….
ஆயிரம் விளக்கு: மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் இந்நாள் முதல்வரை அரியணையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்க, அதன் பக்கத்தில் உள்ள இந்த தொகுதியோ வருங்கால தமிழக முதல்வரை தயார்படுத்துவதில் மும்முரமாய் இருக்கிறது. தமிழகத்தின் எதிர்கால முதல்வராக வர்ணிக்கப்படும் திரு. மு.க. ஸ்டாலின் தான் இன்றைய தேதியில் இந்த தொகுதியின் தளபதி, நாயகன் எல்லாமே.
பல்வேறு முக்கிய வெளிநாட்டு தூதரகங்கள், புகழ்பெற்ற கல்லூரிகள், சினிமா நட்சத்திரங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என எங்கு திரும்பினாலும் கவனத்தை ஈர்க்கும் அம்சங்கள் ஏற்கனவே இந்த தொகுதியை சூழ்ந்திருக்க, இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல தமிழக அரசியலை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கும் இரு பெரும் தலைகளான முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா மற்றும் இந்நாள் முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களின் இல்லங்களும் இந்த தொகுதிக்குள் வர, ஒரு நிஜ ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை கொடுத்து மீடியாக்கள் இந்த தொகுதியை ஒரு வழி செய்து கொண்டிருக்கின்றன.
தமிழக அரசியலில் திமுக பெரும் பிரளயத்தை ஏற்படுத்த தொடங்கி இருந்த 1960 களின் தொடக்கம் மற்றும் இறுதியில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் இங்கு திமுக தொடர்ந்து வெல்ல ஆரம்பிக்கிறது. அதுவரை இந்த தொகுதியில் வாளை சுழற்றி வந்த காங்கிரசும் சுயேச்சைகளும் மெல்ல தங்கள் அடையாளத்தை இழந்து கொண்டிருக்க, மிகவும் நிதானமாக ஆனால் பலமான கோட்டையாக இந்த தொகுதியை கட்டி எழுப்ப ஆரம்பிக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.
மிகவும் உற்று நோக்க வேண்டிய விஷயம், தமிழகத்தின் முக்கிய தொகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என திமுக முடிவு செய்துவிட்டால் அதற்கு பொருத்தமான ஆட்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள் என்பதை தமிழகத்தின் மற்ற கட்சிகள் இவர்களிடன் இருந்து தாராளமாக கற்றுக்கொள்ளலாம். இன்று வரை இந்த விஷயத்தில் மற்ற கட்சிகளைவிட திமுகவே முந்தி நிற்கிறது.
ஆரம்பமே அதிரடியாக இருக்கவேண்டும், இதுதான் 1960 களில் இந்த தொகுதிக்கான திமுகவின் செய்தி. சொல்லவே வேண்டாம் இதை செய்வதற்கு அன்றைய தேதியில் திமுகவில் வேட்பாளர்கள் வரிசையில் வந்து நின்று இருப்பார்கள். சரியான ஆளை கனகச்சிதமாக தேர்ந்தெடுக்கிறார் அன்று திமுகவிற்கு தலைமை தாங்கிய அறிஞர் அண்ணா அவர்கள். 1962 தேர்தலில் அண்ணா அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு இங்கு களத்தில் இறங்கிய திரு. கே. ஏ. மதியழகன் அவர்கள், காங்கிரஸுக்கு பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி முதல் முறையாக இங்கு உதய சூரியனை உதிக்க செய்கிறார்.
திரு. கே. ஏ. மதியழகன்: திமுகவின் ஐம்பெரும் தலைவர்களின் வரிசையில் ஒருவராக கருதப்படுபவர், பெரியார்-அண்ணா கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, அண்ணாவின் பின்னால் நின்ற அவரின் நம்பிக்கைகுரிய அன்றைய தளபதிகளில் ஒருவர்.
திரு. அண்ணாதுரை, திரு. மு. கருணாநிதி அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகவும், சட்டசபை சபாநாயகராகவும் விளங்கியவர். 1962 இல் இருந்து 1971 வரை நடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் திமுகவின் சார்பில் இங்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த கால கட்டத்தில் நடந்த தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இவரை எதிர்த்து முட்டி மோதிப்பார்த்துள்ளது காங்கிரஸ். ஆனாலும் எந்த எதிர்ப்பும் திமுகவையோ அல்லது இவரையோ கொஞ்சமும் அசைத்ததாக தெரியவில்லை.
1961 இல் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கு வெற்றியை தவறவிட்ட காங்கிரஸ் 1971 தேர்தலில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.அவ்வளவும் வேகம், விடாப்பிடியான வேகம். உடன்பிறப்புக்களின் இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அன்று வீழ்ந்த காங்கிரஸ் இன்று வரை இந்த தொகுதியின் பக்கம் வராமலே தவிர்த்து வருவதாக தெரிகிறது.
மிகவும் சுவாரசியமான விஷயம் 1962 முதல் 1971 வரை ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் அதன் ஒட்டு வங்கியை தக்க வைத்தே வந்துள்ளது. சுமார் 25,000 ஒட்டுக்கள் அதன் பாக்கெட்டுக்குள் அலுங்காமல் குலுங்காமல் இருந்து வந்திருக்கிறது. ஆனால் அரசியலின் பால பாடத்தை சுதந்திரம் வாங்கி கொடுக்க போரடிய கட்சி கவனிக்க தவறிவிட்டது. தங்கள் கையில் இருக்கும் வாக்காளர்களை மட்டுமே சிந்தித்து வந்த காங்கிரஸ் புதிய வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் முடங்கிப்போக, பாடத்தை சரியாக புரிந்து கொண்ட திமுக புது வாக்காளர்களை தங்கள் வளையத்துக்குள் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். பலன் கைமேல் கிடைத்தது.
1962 இல் 27,000 வாக்கு வாங்கிய திமுக 1971 இல் கிட்டத்தட்ட 39,000 வாக்குகளை பெறுகிறது. பத்து வருட இடைவெளியில் சுமார் 12,000 புதிய வாக்காளர்ளை உதய சூரியனின் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டார்கள். ஐஐஎம்-ல் படிக்காமலே மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பதை திமுக படம் போட்டு விளக்கிக் கொண்டிருக்க, வழக்கம் போல காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இருந்து மந்திரக்கோலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
1971 தேர்தலுக்குபிறகு திமுகவில் எம்ஜியாரை முன்வைத்து நடத்தப்பட்ட விளையாட்டில் திரு. கே. ஏ. மதியழகன் அவர்கள் எம்ஜியாரின் பக்கம் ஒதுங்கிவிட, கொஞ்சமும் தளராத திமுக இந்த தொகுதிக்கான தனது அடுத்த தளபதியை தயார் படுத்தும் பணியை முடுக்கிவிட்டது.
1977 க்கு முன்புவரை காங்கிரஸை மட்டுமே களத்தில் சந்தித்து ஒரளவுக்கு ஒரு நல்ல பார்ம் இல் இருந்த திமுகவுக்கு இந்த தேர்தலில் ஒரு புதுசிக்கல் எம்ஜியார் வடிவத்தில். நேற்று வரை உடன்பிறப்பாய் இருந்தவர்கள் இன்று ரத்தத்தின் ரத்தமாக மாறி முறுக்கிக் கொண்டு எதிரில் நிற்க, அதுவரை இது மாதிரியான ஒரு சூழலை சந்தித்திராத திமுக கொஞ்சம் ஆடிப்போனது. ஆனாலும் சென்னையை தக்க வைத்துக்கொள்வதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என முடிவு எடுத்து மிக கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய இறங்கினார்கள் திமுகவினர்.
யாரை இறக்கினால் இந்த தொகுதியில் பொறி பறக்கும் என்பதை துல்லியமாக கணித்துவிட்டார்கள். இம்முறை இந்த கணிப்பை செய்தது கலைஞர் கருணாநிதி அவர்கள். கணக்கு தப்பவில்லை. அதுவரை சென்னைக்கு வெளியே போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருந்த அந்த வேட்பாளரை மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் 1977 தேர்தலில் திமுக சார்பாக இங்கு களம் இறக்குவது என முடிவு கட்டினார்கள். அவரும் இதற்காகவே காத்திருந்தவர் போல தன் ஆட்டத்தை தப்பாமல் ஆடினார். எதிர்பார்த்தது போலவே எதிரணியை கலங்கடித்து திமுக கொடியை இறங்காமல் பார்த்துக் கொண்டார். அந்த வேட்பாளர்…
திரு. சாதிக் பாட்ஷா: திமுக அமைச்சரவையில் திரு. அண்ணாதுரை மற்றும் திரு. மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் பணியாற்றியவர். திமுகவின் முக்கிய பொறுப்பான அந்த கட்சியின் பொருளாளராக விளங்கியவர். கலைஞரின் நம்பிக்கைகுரியவர்.
1977 க்கு முன்புவரை உடுமலைப்பேட்டையில் போட்டியிட்டு வந்த இவர், அந்த தேர்தலில் திமுகவுக்கு தோள் கொடுக்க வேண்டிய நிலையில் முதல் முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெல்கிறார். அந்த தேர்தலில் இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேட்சை வேட்பாளரை சுமார் 4800 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெல்ல ஆயிரம் விளக்கில் பிரகாசமாக மீண்டும் ஒருமுறை உதய சூரியன் உயிர்தெழுகிறது.
எல்லா எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி இந்த தொகுதியை கலக்கி வந்த திமுகவிற்கு அவர்கள் பாணியிலேயே வேகத்தடையை ஏற்படுத்த சரியான சந்தர்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தது எம்ஜியார் தலைமையிலான அதிமுக. 1980 தேர்தல் அறிவிப்பு வருகிறது. விழித்துக்கொண்ட எம்ஜியார் தன் படை பரிவாரங்களை இந்த தொகுதியில் உசுப்பிவிட, பதிலடி கொடுக்க திமுகவும் எழுந்து உட்கார்கிறது….மிக உக்கிரமான போட்டி…வென்றே தீருவது என அதிமுக முன்னேற, இறுதிவரை போராடுவது என திமுக மல்லுக்கு நிற்க….பொறி பறந்த தேர்தல் அது….
(தொடரும்)….

Subscribe to:
Posts (Atom)