Friday, March 9, 2012

The Great Wall of India



ரவி சாஸ்திரியும், திலீப் வெங்க்சர்க்காரும் டொக்கு வைப்பதில் கில்லாடிகள் (டொக்கு வைப்பது என்பது மட்டைப் போடுவது அல்லது ரன்னே எடுக்காமல் கிரிக்கெட் பார்க்கும் அனைவரையும் கடுப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் நிகழ்வு) விக்கெட்டுகள் மள மளவென சரியும் போது டீமை பாஃர்முக்கு கொண்டு வருவதற்ககாக எல்லாப் ப்ளேயரும் அவ்வப்போது மட்டையை போடுவது ஒரு வகையான யுக்தி அல்லது சாணக்கியத்தனம். புலி பதுங்குவதை போன்ற சமாச்சாரம். ரன்னும் எடுக்காமல் அதே சமயம் விக்கெட்டையும் பறி கொடுக்காமல் எதிரணியை கொஞ்சம் காயவிடுவது என்பது 1980-களின் இறுதியில் ரொம்ப பிரபலம். இதில் மேற்படியாளர்கள் தில்லாலங்கடிகள். மட்டையைப் போட்டு நல்ல பாஃர்மில் இருக்கும் பெளலர்களை கொஞ்சம் டென்ஷனாக்கி பிறகு கிடைக்கும் கேப்பில் கொஞ்சம் ரன்னை தேற்றிவிடுவது இதுதான் அடிப்படை பார்மூலா.

அப்போதைய மேற்கிந்திய அணியை தவிர மற்ற எல்லா அணிகளுமே ஓரளவிற்கு இந்த பார்மூலாவை Adapt செய்து அவ்வப்போது ஜகா வாங்கி ஆடிக்கொண்டிருந்தார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ், கஸ் லோகி, ஜெஃப் துஜான் போன்ற வெஸ்ட் இண்டீஸ் முரட்டு காளைகளுக்கு இந்த டொக்கு வைக்கும் சடங்கில் உடன்பாடில்லாததல் கிடைத்த எல்லா பெளலர்களையும் கிழித்து தொங்க போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். உண்மையில் 1983 ப்ரூடென்ஷியல் கோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த பார்மூலாவை பயன்படுத்தி இருந்தால் கோப்பையை ஒருவேளை வென்றிருக்க கூடும்.…..மேட்சை விரைவாக முடிப்பதற்காக அவசரமாக ஆடிய விவியன் ரிச்சர்ட்ஸின் பேட்டிங்கும், கபில்தேவின் அந்த எவர்கிரீன் கேட்சும் அதிர்ஷ்ட தேவதையை அன்றைக்கு இந்தியாவின் பக்கம் திருப்பி விட்டுவிட்டது.

நம்மூர் ஸ்ரீகாந்த் ஏறக்குறைய விவியன் ரிச்சர்ட்ஸ் செய்வதைதான் பெரும்பாலும் செய்வார். ஆனால் ஓப்பனிங் இறங்கிவிடுவதால் இவருக்கு மிடில் ஆர்டரில் வந்து டொக்கு வைத்து மற்றவர்களை நோகடிக்கும் சந்தர்ப்பம் எல்லாம் கிட்டவேயில்லை என நினைக்கிறேன். கிடைத்திருந்தாலும் அவ்வளவு பொறுமை இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே கதி கலங்கும் அளவிற்கு ஓப்பனர் சுனில் கவாஸ்கர் அவ்வப்போது டொக்கு வைத்து எனிமா கொடுக்காமலே இந்திய ரசிகர்களுக்கு வயிற்றில் அவ்வப்போது கலவரத்தை உண்டு பண்ணுவார்…அது தனிக்கதை.

1990-களின் தொடக்கத்தில் இருந்து மத்தி வரை இந்த டொக்கு வைக்கும் கலாச்சாரம் ஏறக்குறைய இந்திய அணியை கரையானைப் போல மெல்ல அழித்துக்கொண்டிருந்தது….ஜிம்பாப்வே போன்ற சுமாரான டீமிடம் கூட (உண்மையில் ஜிம்பாப்வே அணி சில சமயம் மற்ற அணிகளைவிட பெட்டராக ஆடக்கூடியது) போராடி போராடி ஜெயிக்கவேண்டிய நிலையில் இருந்த டீமை நவ்ஜோத் சிங் சித்துவும், அசாருதினும், மனோஜ் பிரபாகரும் அவ்வபோது முட்டுக்கொடுத்து காப்பாற்றி வந்தார்கள்..இடையிடையே நரேந்திர ஹிர்வானி போன்றவர்கள் வந்த வேகத்தில் காணாமலும் போய்க்கொண்டிருந்தார்கள். சத்தமேயில்லாமல் சச்சின் வளர்ந்துகொண்டிருந்தது இந்த காலகட்டத்தில் தான்.

ஒருவழியாக இந்திய கிரிக்கெட் அணி மறுபடியும் கொஞ்சம் அதிரடியாக ஆட ஆரம்பித்திருந்த நிலையில் தான் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு வந்து சேர்ந்தார். முதல் சில ஆட்டங்களை பார்த்தவுடன் மனிதர் டொக்கு கலாச்சாரத்தை மீண்டும் அணிக்கு கொண்டு வந்துவிடுவாரோ எனத் தோன்றியது…ஆனால் குறுகிய காலத்திலேயே எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியப்படுத்த தொடங்கினார் இந்த இந்திரா நகர் ஹீரோ. ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து கிடைக்கும் கேப்பில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து இறுதியில் தனது ஆவ்ரேஜ் ஸ்கோரை கார்டில் கொண்டு வந்துவிடுவது இவரது தனி ஸ்டைல்.

சச்சினின் அதிரடியை கட்டுப்படுத்த எல்லா அணியும் வியூகம் வகுத்துக்கொண்டிருந்த நிலையில் சச்சினை கவிழ்த்தாலும் இந்திய அணி கவிழாது என்பதை ஒரு முறையல்ல பல முறை நிரூபித்துக் கொண்டேயிருந்தார் மனிதர், இதில் இவர் இறுதியாக ஆடிய இங்கிலாந்து போட்டிகளும் அடக்கம். அந்த டூரில் டபுள் டிஜிட் ஸ்கோரை ஒவ்வொரு மேட்சிலும் எட்டிபிடித்தது இவர் மட்டுமே தான் என நினைக்கிறேன். இதில் முக்கியமான விஷயம் ஒவ்வொரு கேமையும் சச்சினின் தோள் மீது ஏற்றிவைத்துவிட்டு எல்லா ப்ளேயரும் ரிலாக்ஸாக இருந்த காலகட்டத்தில் கூட சத்தமேயில்லாமல் சச்சினின் பாரத்தை குறைக்க பலமுறை தோள்கொடுத்தவர் டிராவிட் என்பதை கிரிக்கெட்டை அறிந்தவர்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள்.

Calm & Composed இதுதான் டிராவிடின் தாரக மந்திரம். சச்சின், ஷேவாக், கங்குலி மாதிரி பட்டையை கிளப்பாமலே ஸ்கோரை நைசாக உயர்த்துவதில் மனிதருக்கு நிகர் அவரேதான். இவரும் வி.வி.எஸ். லஷ்மனும் (வி.வி.எஸ் ஒரு குட்டி Wall, டிராவிடைப் போலவே நங்கூரம் பாய்ச்சி நின்று விடுவதில் இவரும் கில்லாடி) நின்று ஆடிய சில டெஸ்ட் போட்டிகள் இன்றைய 20-20 மேட்சுகளைவிட சுவாரசியமாக இருக்கும். ஒரு நாள் போட்டியை டெஸ்ட் போட்டி மாதிரி போட்டுத் தாக்கும் சிலருக்கு மத்தியில் டெஸ்ட் போட்டியை சில நேரங்களில் ஒருநாள் போட்டியைப் போன்ற சுவாரசியத்திற்கு கொண்டு சென்றவர்கள் இந்த இருவரும். கேப்டன், துணைக்கேப்டன், ஓப்பனிங்/மிடில் ஆர்டர், விக்கெட்கீப்பர் என எதை கொடுத்தாலும்
சராசரி இந்திய ரசிகனை ஏமாற்றாதவர் டிராவிட். எனக்கு தெரிந்தவரை மிக அதிகமான பெண் ரசிகைகள் இவருக்கு உண்டு என்பது மிகவும் சுவாரசியமான விஷயம். Down to Earth image, அந்த amul baby face என பல விஷயங்கள் இவரின் ப்ளஸ் பாயிண்ட் :-) கபில், ஸ்ரீகாந்தைப் போல இவரும் இந்திய கிரிக்கெட்டின் மார்கண்டேயன் தான்…எப்போது பார்த்தாலும் அதே பொலிவோடு இருப்பார் மனிதர்.

தனது ஆட்டத்தைப் போலவே அணியில் இருந்து ஓய்வு பெறுவதையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் செய்ததற்காக ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் உங்களை நிச்சயம் கொண்டாடுவான் டிராவிட். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய காலங்களில் உங்கள் சொந்த வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை பலமுறை நீங்கள் இழந்திருக்ககூடும் அதை எந்த ரசிகனாலும் நிச்சயமாக ஈடு செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. உங்களை இந்த நாள் வரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிக அழகான, நேர்மையான, திறமையான ஒரு கிரிக்கெட் வீரரை இனிமேல் களத்தில் காணப்போவதில்லை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இந்திரா நகரின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை பார்க்கும்போது இனி இயல்பாக உங்கள் முகம் நினைவில் வந்து போவதை எந்த ஒரு கிரிக்கெட் பித்தர்களாலும் தவிர்க்கமுடியாது.

We Miss You Dravid