வாத்தியாரை முதல் முதலாக எனக்கு அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் பகுதியில் வசித்து வந்த திமுக முரட்டு பக்தர்களையே சாரும். புரட்சிதலைவர் இறுதி வரை, சர்வ பலத்துடன் ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தாலும் எங்கள் தொகுதியில் மட்டும் இவரின் அதிமுக-விற்கு தொடர்ந்து கல்தா கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள் மக்கள். ஒட்டு மொத்த தமிழகமும் ஒரு வழியாக இவரை அரவணைத்துக் கொண்டபோதும் சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் ஒரு சில தொகுதிகளில் கடைசி வரை இவரது கட்சியால் வெற்றிக்கொடி நாட்ட முடியாமலே போனது.
1980-களில் அளவிற்கு அதிகமாக அடித்த திமுக வாடையினால் எங்கள் பகுதியில் இருந்த என்னையொத்த பொடியன்கள் அனைவருக்குமே வாத்தியாரைப் பற்றி ஒரு மாதிரியான வில்லன் இமேஜ் மனதில் பதிந்திருந்தது. ரஜினியும் கமலும் பிரதானமாகிவிட்டிருந்த நிலையில் எங்களைப் போன்ற பள்ளி சிறுவர்களுக்கு முதல்வராக மாறி விட்டிருந்த அப்போதைய எம்ஜிஆரின் மீது அவ்வளவாக பெரிய ஈர்ப்போ ரசனையோ இல்லாமல் போயிருந்தது..சினிமா மட்டுமே பிரதானமாக தெரிந்த அந்த வயதில் அரசியல் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டிருந்தது.
தேர்தல் வந்துவிட்டால் ஹனீபா உச்சஸ்தாதியில் திமுகவிற்காக பாடும் பாடல்களை மட்டுமே பெரும்பாலும் கேட்க நேரிடும். அத்தி பூத்தாற்போல எப்போதாவது “நீங்க நல்லாயிருக்கனும் நாடு முன்னேற” என வாத்தியாரின் பாடல் காதில் விழும். Funnel Speaker என்ற ஒரு பெரிய வஸ்துவை தெருவில் இருக்கும் எல்லா லைட் கம்பங்களிலும் கட்டிவிட்டு Full Volume இல் கட்சியின் கொள்கை பாடல்களை போட்டு இரு திராவிட கட்சிகளும் மாற்றி மாற்றி மக்களை கடுப்பேற்றிக் கொண்டேயிருப்பார்கள்.
ரஜினி அல்லது கமல் படத்திற்கு சென்று டிக்கெட் கிடைக்காதபோது, மறு ரிலீசாக வெளிவந்து ஒடிக்கொண்டிருக்கும் சில எம்ஜிஆர் படங்களுக்கு வேண்டா வெறுப்பாக சென்று வந்ததுண்டு. உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி போன்ற full pledge commercial படங்களின் மூலமாக தான் வாத்தியார் படங்களை பார்க்கும் பழக்கம் ஆரம்பித்தது. பழைய படங்களை போடுவதற்கென்றே சில திரையரங்குகள் எல்லா ஊரிலும் இருக்கும். இம்மாதிரியான திரையரங்கங்களுக்கு செல்லும் போதெல்லாம் தங்கள் ஆதர்சன புருஷனை தரிசிக்க வரும் முந்தைய Generation ஆட்களை பார்க்க பார்க்க த்ரில்லாக இருக்கும்.
சில நேரங்களில் புரட்சித்தலைவரின் மொக்கையான படங்களுக்கு கூட மக்கள் சலிக்காமல் க்யூவில் நிற்பதை காணும்போது ரொம்ப ஆச்சரியமாயிருக்கும். ஐம்பது வயதை கடந்துவிட்ட அம்மாக்களும், அய்யாக்களும் அடிமைப் பெண்ணையும், எங்க வீட்டுப் பிள்ளையையும் கைதட்டி ரசிப்பதை பார்க்கும்போது பக்கத்து தியேட்டரில் பாயும் புலியையும், காக்கி சட்டையையும் விசிலடித்து பார்த்த நினைவெல்லாம் வந்து போகும். சில வருடங்களுக்கு முன்பாக வாலண்டியராக இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை தியேட்டரில் சென்று பார்த்தபோது, தற்போதைய ரஜினி படங்களுக்கு இணையான விசில் பறந்ததை பார்க்க நேர்ந்தது. மனிதரை மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவே மாட்டார்கள் என்பது 100% உறுதியாகிவிட்டது.
ஒரே மாதிரியாக எப்போதுமே தொடர்ச்சியாக தன்னை மட்டுமே பரிசுத்த பரமாத்மாவாகவே சித்தரித்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்ததால் சிறு வயதில் கொஞ்ச நாளில் இவர் படத்தின் போஸ்டரை பார்த்தவுடனே படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் கணிக்கும் அளவிற்கு சென்றாயிற்று. ரிக்ஷாகாரன் என்றால் இவர் ரிக்ஷா ஓட்டியாக வருவார், படகோட்டி என்றால் இவர் படகு ஓட்டுவார்…. சில வருடங்களுக்குப் பிறகு விவரம் தெரிய தெரியதான் இவருடைய படத்தில் ஏன் எல்லா ரோல்களுமே இப்படி அமைக்கப்பட்டன என்பதின் பிண்ணனி புரிந்தது. மனிதருக்கு நாற்காலி கனவு ரொம்ப நாளாகவே மனதில் இருந்திருக்கிறது. இப்போது இருந்திருந்தால் சாப்ட்வேர் டெவலப்பராக (!) ஆன்சைட் ஆப்ஷன் கிடைக்காமல் அவதிப்படும் சூனா பானா ரோலில் நடித்து கதி கலங்கடித்திருப்பார் மனிதர். சரோஜாதேவி கேம்பஸ் செலக்டாக வந்து தலைவருடன் KT செய்தபடியே டூயட் பாடும் காட்சிகள் எல்லாம் வந்திருக்கும். எம்.என். நம்பியார் எடக்கு மடக்கான ப்ராஜெக்ட் மேனேஜர் ரோலில் வந்து தலைவருக்கு தலைவலியை கொடுத்திருப்பார்...காட்சிகளை நினைக்கும்போதே புல்லரிக்கிறது.
நானும் நண்பர்களும் பின்னாளில் (ஆள் மட்டுமே !!) வளர்ந்து அண்ணன் ராஜேஷ் கண்ணா படங்களையெல்லாம் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது வாத்தியாரின் சில படங்கள் பம்பாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொஞ்சம் மசாலா தூவி நம்மூரில் விற்கப்பட்ட தில்லாலங்கடி வேலைகள் எல்லாம். நம்நாடு, நினைத்ததை முடிப்பவன் எல்லாம் பம்பாய் சரக்குதான். நல்லவேளையாக தலைவர் அமர் ப்ரேம், ஆனந்த் போன்ற படங்களை எல்லாம் தொடவில்லை…தொட்டிருந்தால் தமிழ்நாடு ஒரே அதகளமாகியிருக்கும். ஆரம்ப காலத்தில் அநியாயத்திற்கு சோஷலிஸத்தை தனது படங்களில் தூக்கி பிடித்தவர் பின்னாளில் அம்மா (நிஜ அம்மாப்பா) செண்டிமெண்டை Adapt செய்து டிராக்கை மாற்றிக்கொண்டது புத்திசாலித்தனமான Move. தமிழ்நாட்டு தாய்க்குலங்களைக் கவர கம்யூனிஸம் எல்லாம் கதைக்கு ஆகாது என சரியான நேரத்தில் யாரோ ஒரு புண்ணியவான் இவர் காதில் ஓதி விட்டிருக்கவேண்டும். இவரும் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டாதால் பின்னால் ஜாக்பாட் அடிக்கும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.
இவருக்கு முன்பாகவும் பிறகும் பதவியில் இருந்த ஒரு சில முதல்வர்களைக் காட்டிலும் இவர் much better என்பதை அரசியலில் இவருக்கு எதிரணியில் இருப்பவர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள், அட்லீஸ்ட் மறைமுகமாவது. இவர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் புரட்சியை எல்லாம் ஏற்படுத்தாத போதும், மக்களை ஆளுங்கட்சிகாரர்கள் ரொம்ப படுத்தி எடுக்காமல் பார்த்துக் கொண்டதாகவே தெரிகிறது. இவர் காலத்தில் வாழ்ந்த இளங்காளைகளின் வாயைக் கிளறினால் வாத்தியார் ஒன்னும் அவ்வளவு மோசமாக தெரியவில்லை.
ரொம்ப சிறப்பான ஆட்சியை கொடுக்கவில்லை என்றாலும் கூட மிக மோசமான ஆட்சியை மக்களுக்கு வழங்கிடக்கூடாது என்பதில் ரொம்பவே உறுதியாக செயல்பட்டிருக்கிறார். கல்வி, உணவு என்ற இரண்டு விஷயங்களில் மக்களுக்கு எந்த குறையையும் இவர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தவில்லை என்பது பெரிய ப்ளஸ் பாயிண்ட். மறைந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பின்னும் இவர் காலத்து மக்கள் இன்னமும் இவரைப் பற்றி சிலாகித்து பேசுவது நிச்சயமாக செயற்கையானதாக இருக்க முடியாது. RIP வாத்தியாரே.
டிசம்பர் 24, 2011 எம்ஜியாரின் நினைவு நாளுக்காக…
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment