சில ஆண்டுகளுக்கு முன், பீகாரில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என காரணம் கூறி ராப்ரி தேவி தலைமையிலான அரசாங்கத்தை கலைக்கவேண்டும் என்ற அறிக்கை கவர்னர், மத்திய அரசு என எல்லா கண்டங்களையும் தாண்டி அப்போதையை குடியரசு தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்களின் ஒப்புதலுக்கு சென்றது. “ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்ட்ட அரசாங்கத்தை கலைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவும்” என்ற சிறு குறிப்புடன் அவர் அந்த கோரிக்கையை திருப்பி அனுப்பிவிட்டார். ராப்ரியின் அரசு தப்பியது.
1991-இல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஒரு அறிக்கையை தயார் செய்து அனுப்புமாறு அப்போதைய ஆளுநருக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. அப்போதைய தமிழக ஆளுநர் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார், இருந்தும் ”ஜனநாயக முறையில் மூன்று கோடி மக்கள் பங்கு பெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக கவிழ்க்கப்பட்டது. கவர்னரின் அறிக்கை இல்லாமலே அவசர அவசரமாக திமுக அரசை கலைக்கும் கோப்பில் கையெழுத்திட்டு அந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த மக்களையும் நகைப்புக்குள்ளாக்கினார் அப்போதைய ஜனாதிபதி திரு.வெங்கட்ராமன் அவர்கள்.
நேர்மையுடனும் நடுநிலைமையுடனும் செயல்பட்ட முன்னவரின் பதவிக் காலம் நீட்டிக்கபடவில்லை. பின்னவரின் பதவிக்காலம் இரண்டாம் முறையாக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஜனநாயகத்திற்கு வேறு அர்த்தம் என்பதை தெளிவுபடுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. எதிர்கட்சிகள் ஆளும் அரசாங்களைக்கூட Article-356-ஐ பயன்படுத்தி கலைப்பதை இதுவரை தீவிரமாக எதிர்த்துவரும் திமுக, அதே Article-356-ஐ தவறாக பயன்படுத்த முடியாது என தைரியத்துடன் நிராகரித்த திரு. அப்துல்கலாம் அவர்களின் பதவி நீட்டிப்பிற்கு குரல் கொடுக்காமல் ஒதுங்கியது காலத்தின் கோலம். மன்னிக்கவோ அல்லது மறக்கவோ முடியாத செயல்.
டி.என். சேஷன், ஜேம்ஸ் மைக்கேல் லிண்டோ போன்ற அதிகாரிகள் தேர்தல் கமிஷன் என்ற ஒரு அமைப்பு இந்தியாவில் இருக்கின்றது என்ற உண்மையை மட்டுமல்ல அதன் அதிகாரத்தை நேர்மையான முறையில் செயல்படுத்தினால் கிடைக்கும் பலன்களை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெளிச்சம் போட்டுக்காட்டினார்கள். நேர்மையாக செயல்பட்டதின் பலாபலனை டி.என்.சேஷன் பணியில் இருக்கும்போதே அனுபவித்துவிட்டார். தமிழகத்தில் அவர் மீது தாக்குதலை தொடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்டினார்கள் தமிழகத்தை அப்போது ஆண்டு கொண்டிருந்த அரசியல்வாதிகள். போதாத குறைக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பிய அவரை, இந்தியாவின் எந்த பெரிய கட்சியும் ஆதரிக்கவில்லை, சிவசேனாவை தவிர. ஒருவேளை இவர் ஜனாதிபதியாக வந்திருந்தால் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் உண்மையான அதிகாரம் என்ன என்பது இந்நேரம் மக்களுக்கு தெரிய வந்திருக்கலாம்.
பரத்வாஜ்..கர்நாடக முதல்வர் எதியூரப்பா கேட்க விரும்பும் கடைசிப் பெயர் இதுவாகத்தான் இருக்கும். திரு.அப்துல்கலாம், திரு.டி.என்.சேஷன், திரு. ஜே.எம்.லிண்டோ போன்றவர்கள் தங்கள் அதிகாரத்தை நேர்மையான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு நல்லதை செய்ய விரும்பிய தேசத்தில், இவரை மாதிரியான சில ஆளுநர்கள் மக்கள் முடிவுகளை மிக கேவலமாக கருதுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. தான் ஒரு வக்கீல் தனக்கு சட்டம் தெரியும் என்ற இவரின் ஒரு அறிக்கையை வாசித்தபோது, “So What?” என கேட்கலாம் போல தோன்றியது. இந்தியாவில் சட்டத்தைவிட அதில் உள்ள ஓட்டைகளை திறமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் மிகச்சிறந்த வக்கீல்களாக உள்ளனர் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆச்சரியமான விஷயம் இந்த ஓட்டைகளை அடைக்க எந்த ஒரு நீதிமானும் இதுவரை எந்த முயற்சியையும் எடுத்ததாக எங்கேயும் படிக்கவில்லை.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை சந்திக்க நேரம் ஒதுக்கும் திரு.பரத்வாஜ் அவர்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சந்திக்க சென்றால் “ஞாயிற்றுக்கிழமை, கடை விடுமுறை” என ஏதோ நாடார் கடை ரேஞ்சில் நடந்துகொள்வது குழந்தைதனமாக இருக்கிறது. இவர் சார்ந்திருக்கும் மத்திய அரசில் இருந்து கர்நாடக அரசிற்கு எதிராக அறிக்கை கேட்டால் இதே ஞாயிற்றுக்கிழமையை காரணமாக இவரால் சொல்ல முடியுமா? சொல்லிவிட்டு பெங்களூர் ராஜ்பவனில் திங்கள்கிழமை இவரால் பதவியில் இருக்க முடியுமா?..பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர்கள்கூட சில நேரங்களில் மிகவும் Mature ஆக நடந்துகொள்வதை பார்த்திருக்கலாம். ஆளுநர் போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது அருவருப்பாக இருக்கிறது. இவருக்கு ஆளும் அரசாங்கத்தை பிடிக்கவில்லை என்றால் அதை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு அதற்கான காரணங்களை மக்களிடம் நேரிடையாக விளக்கலாம், அதற்கான அத்தனை வாய்ப்பும் வசதியும் அவருக்கு அரசாங்கம் வழங்கியிருக்கிறது, அதைவிட்டு விட்டு ஏதோ மும்பை மாஃபியா ரேஞ்சில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டிக்கொண்டிருப்பது அநாகரிகமாக தெரிகிறது. Governers are not elected, but selected. இதை கொஞ்சம் மனதில் வைத்து செயல்படுவது நலம்.
எதிர்கட்சிகளின் அரசாங்கங்களை எல்லாம் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கலைத்துவிட்டு புதிது புதிதாக தேர்தலை நடத்தி இருக்கும் கொஞ்ச பணத்தையும் செலவழிப்பதால் இவருக்கோ அல்லது இவரின் மனநிலையில் செயல்படும் மற்ற மாநில ஆளுநர்களுக்கோ எந்த நஷ்டமும் இல்லை. இவர்கள் வழக்கம் போலவே சுகபோக வாழ்க்கையை தொடருவார்கள், ஆனால் சித்ரதுர்காவிலும், பெல்காமிலும் கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கும் சாமன்யன் இருக்கும் கொஞ்சத்தையும் இழந்துவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து கயிற்றிலோ அல்லது விஷத்திலோ தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வான். பிழைகளை திருத்தி மாநில அரசுக்கு வழிகாட்டியாக நடந்து கொண்டால் கொண்ட பதவிக்கு கொஞ்சம் அழகாக இருக்கும் அதைவிட்டு விட்டு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வது கேலிகூத்தாக உள்ளது.
இந்தியாவில் ஆளுநர் பதவி என்பது மாநில அரசுகளை வேவு பார்ப்பதற்காக மத்திய அரசால் திணிக்கப்பட்டிருக்கும் பதவி என்பது பால்வாடிக்கு செல்லும் பாப்பாவிற்கு கூடத் தெரியும். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது, ஓவியக் கண்காட்சிகளை திறந்து வைப்பது, குடியரசு தினத்தன்று மாநில தலைநகரில் கொடியேற்றுவது..இம்மாதிரியான விஷயங்களைத்தாண்டி, மத்திய அரசின் விருப்பத்திற்கேற்றபடி மாநில அரசை புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ அறிக்கை தயார் செய்து அனுப்புவது. இதைத்தவிர Day-to-Day அரசாங்க பணிகளை நிர்வகிப்பதில் இவர்களின் பங்கு ஒன்றுமேயில்லை. ஆந்திர முன்னாள் ஆளுநர் ராஜ்பவனில் அடித்து ஆடிய மற்ற ஆட்டங்கள் இதில் அடங்காது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திராத, மொகலாய மன்னர் அக்பர் ஆட்சியின் போதும், அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியின்போதும் அந்தந்த பிராந்தியங்களில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காகவும், கப்பம் வசூலிப்பதற்காகவும் இம்மாதிரியான பதவி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகின் மறுமுனையில் நடப்பதை online-இல் live telecast ஆக பார்க்கும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இன்னமும் இந்த பதவியை வைத்துக்கொண்டு வேவு பார்த்து விளையாடிக் கொண்டிருப்பது கொஞ்சம் ஒவராக இருக்கின்றது. வசதியற்ற மக்கள் இன்னமும் பிளாட்பாரங்களில் குடும்பங்களுடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநில தலைநகர்களிலும் பிரதான பகுதியில் ராஜ்பவன் என்ற இடத்தை ஒதுக்கி, ஏகப்பட்ட செலவினங்களை அதன் பராமரிப்பிற்காக செலவழித்துக்கொண்டிருப்பது இன்னும் எத்தனை நாளுக்கு நீடிக்கப்போகிறது எனத் தெரியவில்லை. இம்மாதிரி மக்களை ஏமாற்றி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த அமைப்புகளை எல்லாம் அரபு நாடுகளில் மக்கள் ஒவ்வொன்றாக தூக்கி எறிந்துகொண்டே இருக்கிறார்கள். அம்மாதிரியான ஒரு நிலைக்கு செல்லும்முன் தாமாகவே முன்வந்து தங்களை மாற்றிக்கொண்டால் எல்லோருக்கும் நல்லது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment