எல்லோரைப் பற்றியும் கவலைப்படுபவன் பொதுநலவாதி. தன்னைப்பற்றி மட்டும் கவலைப்படுபவன் சுயநலவாதி. யாரைப் பற்றியும் கவலைப்படாதவன் அரசியல்வாதி. வாழ்க்கையை புரிந்துகொள்ள போதி மரத்தை எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை. நம்மூர் ஆட்டோக்களின் பின்புறத்தில் எழுதப்பட்டிருக்கும் இம்மாதிரியான லேசான வாக்கியங்களை படித்தாலே போதும். புத்தி சித்தி அடைந்துவிடும். ஒரு வழியாக மக்களிடம் கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் தங்களுக்கு தேவையான ஒவ்வொரு ஓட்டையும் சாமர்த்தியமாக பெற்றுவிட்டார்கள் மக்கள் தேர்ந்தெடுக்கப்போகும் வேட்பாளர்கள். அடுத்த ஐந்து ஆண்டுக்கு தங்களை யார் சுரண்டவேண்டும் என்பதை வெறும் ஆயிரம் ரூபாயை கொண்டு தீர்மானித்துவிட்டார்கள் வாக்காள பெருமக்கள். முன்பெல்லாம் சிறியதாக ஒரு உணவுப் பொட்டலத்தையும் ஐந்து ரூபாயையும் கொடுத்தாலே ஒட்டை கமுக்கமாக போட்டுவிட்டுச் செல்லும் வாக்காளர்கள் இப்போது ஏகத்திற்கும் தங்கள் ஓட்டின் ரேட்டை உயர்த்தியிருப்பது இந்திய பொருளாதார வளர்ச்சியின் குறியீடாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எட்டு சதவீத வளர்ச்சியை எட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் நாட்டில் எல்லாவற்றின் விலையும் காரணமே இல்லாமல் தாறுமாறாக உயரும்போது ஓட்டின் விலை மட்டும் உயரக்கூடாது என எதிர்பார்ப்பது அறிவாளிகளுக்கு அழகல்ல.
மக்கள் அளித்துள்ள இந்த முடிவை மதிக்கிறோம். தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். மே-13 அன்று வாக்கு எண்ணிக்கை முடியும் தருவாயில் மு.க.வோ அல்லது ஜெ-வோ வெளியிடப்போகும் அறிக்கையில் இடம்பெறப்போகும் அரத பழசான இந்த வாக்கியங்களுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கண்ணாமூச்சி விளையாட்டு தமிழகத்தில் அமோகமாக ஆரம்பமாக போகிறது. எங்களால் தான் வென்றது அல்லது தோற்றது என அடிபொடிகள் சைடில் சைக்கிள் ஓட்டுவதும் நடக்கலாம். ஆறாவது முறையாக அரியணை ஏறும் ஐம்பெரும்காப்பியமே, மூன்றாவது முறையாக முடிசூடும் முப்பெருந்தேவியே என அவரவர் விருப்பத்திற்கேற்றபடி வித விதமாக போஸ்டர்களும், ப்ளக்ஸ் பேனர்களும் ஊரில் உள்ள முக்கிய தகவல்களை எல்லாம் மறைத்துக்கொண்டு உயர்ந்து நிற்கும். ஒரு Average Configuration லேப்டாப், ஐந்து லிட்டர் கிரைண்டர், மிதிவண்டி, ஆடு, மாடு என ஏதோ ஒரு வஸ்து உங்களைத் தேடி வரும். நீங்கள் போட்ட ஒரு ஓட்டிற்கு இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் என்ற மறைமுகமான கோரிக்கையுடன். குழந்தைக்கு போலியோ ஊசி போடுவது, வாக்காளர் அடையாள அட்டை விநியோகிப்பது போன்ற விஷயங்களைத் தவிர்த்து அரசாங்க ஊழியர் ஒருவர் உங்களைத் தேடி வருவது அநேகமாக இது ஒன்றிற்காக மட்டுமே இருக்ககூடும்.
மின்சார பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம் போன்ற சமாச்சராங்களை எல்லாம் இனி மக்கள் கேள்வி கேட்ககூடாது ஏனென்றால் அது தமிழகத்திற்கு மட்டும் உண்டான பிரச்சனையில்லை. Global Warming போல இது ஒரு அகில உலக பிரச்சனை. So, It’s not the responsibility of TN govt. to resolve those issues. மீறி கேட்டாலும் பக்கத்து மாநிலத்தின் மீதோ அல்லது மத்திய அரசின் மீதோ அல்லது முந்தைய ஆட்சியின் மீதோ கையை காட்டிவிட்டு ஒதுங்கிவிடலாம். ஆனால் மின்சார பில்லை செலுத்த ஒருநாள் கால தாமதம் ஆனாலும் உங்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டிப்பதற்கு லைன்மேன் கையில் கட்டிங் ப்ளேயருடன் கம்பத்தில் ஏறி விடுவார்..உஷார்..வெறும் மின்கம்பங்கள் நடுவதற்கும், Schedule போட்டு மின்சப்ளையை துண்டிப்பதற்கும் எதற்கு ஒரு அமைச்சகம்/அமைச்சர், ஆகவே புதிதாக அமையப்போகும் அரசாங்கத்தில் யாரவது ஒரு DEEE படித்த பையனை அந்த துறைக்கு தலைவராக நியமித்தாலே போதும், வேலையை சாமளித்துவிடலாம். Cost Cutting செய்த மாதிரியும் இருக்கும்.
தமிழகம் இதுவரை சந்திக்காத பல ஆச்சரியங்களை இந்த தேர்தல் முடிவுகள் ஒருவேளை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம். முக்கியமான ஒன்று..குதிரைப்பேரம். பிற மாநிலங்கள் இந்த விஷயத்தில் தமிழகத்தை எப்போதோ முந்தி விட்டாலும் தமிழக மக்கள் இதுவரை அளித்து வந்த தீர்க்கமான தேர்தல் முடிவுகளால் குதிரை பேரத்திற்கு வாய்ப்பில்லாமல் போயிருந்தது. நடந்து முடிந்த தேர்தல் கூட்டணி கலாட்டக்களைப் பார்த்தால் கூடிய சீக்கிரம் தமிழகமும் ஜோதியில் ஐக்கியமாகிவிடும் போலத் தெரிகிறது. போதாத குறைக்கு தன்னிச்சையாக செயல்படவேண்டிய நீதிமன்றங்கள் அரசியல் விளையாட்டில் மறைமுகமாக குதித்து தங்கள் நடுநிலையை கேள்விகுறியாக்கிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவைப் பொறுத்து தங்கள் தீர்ப்பை எழுதலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டபின் நீதிமன்றங்களின் மீது ஒரு சாரசரி குடிமகனுக்கு இனிமேல் எந்த விதமான நம்பிக்கையோ, மரியாதையோ இருக்கப்போவதில்லை. இப்படி ஒரு முடிவை கோர்ட் தன்னிச்சையாக எடுத்ததா அல்லது யாரவது அழுத்தம் கொடுத்தார்களா என்பது நீதி தேவதைக்கே வெளிச்சம். உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொன்றாக செயல் இழந்து இறுதியில் உயிரைப் பறிப்பது போல, நாட்டின் ஒவ்வொரு முக்கிய அமைப்பும் தன் அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்து வருவது நல்ல அறிகுறியாக தெரியவில்லை.
நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஒ.பன்னீர்செல்வம் இவர்களின் வரிசையில் தமிழகமும் நீண்ட நாட்களாக பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து இரண்டாம் இடத்திலேயே நீடிக்கிறது. முதலிடத்தைப் பிடிப்பதற்கு என்ன செய்யவேண்டும்/செய்யலாம் என அடுத்து வரப்போகும் ஆட்சியாளர்கள் யோசித்து செயல்படுவது நலம். தொழிற்சாலைகளை பெருக்குவது, விமான நிலையத்தை நிர்மானிப்பது, பாலங்களை கட்டிக்கொண்டே போவது (சென்னையில் மட்டும்) போன்ற விஷயங்கள் மட்டுமே மாநிலத்தை முதலிடத்திற்கு கொண்டுவரும் என்ற மூடநம்பிக்கையை கொஞ்சம் தூரமாக வைத்துவிட்டு அடிப்படை வசதியை எல்லா இடங்களிலும் செயல்படுத்துவதைப் பற்றி யோசித்துவிடுவது நலம். இன்றைக்கு தினந்தோறும் 100 டிகிரியை தாண்டிக்கொண்டிருக்கும் வெயில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை எப்போதாவது ஒருமுறை தான் எல்லையைத் தாண்டும். இருந்த பெரிய பெரிய மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டதின் விளைவு இது. வாகனப்பெருக்கம் என சப்பைக்கட்டு கட்டினாலும் வெட்டிய பெரிய மரங்களுக்கு பதிலாக இதுவரை ஒரு கீரைச் செடியை கூட அரசாங்கம் நடவில்லை என்பது தான் உண்மை. தமிழக நகரங்களைவிட அதிகமான வாகனங்களை கொண்டுள்ள சண்டிகரில் கிடைத்த இடத்தில் எல்லாம் மரங்களை நட்டு நிலைமையை அழகாக டீல் செய்துகொண்டிருக்கிறார்கள். அங்கே முடியும் போது இங்கே ஏன் இவர்கள் சறுக்குகிறார்கள் எனத் தெரியவில்லை.
ஏறக்குறைய இதே Tropical Weather நிலவும் மற்ற இடங்களில் வெயிலின் அளவு உயர்ந்தாலும் மழை சரியாக பெய்து ஓரளவு நிலைமையை சரிசெய்கிறது…காரணம் அந்த பிரதேசங்களில் இன்னமும் அழிக்கப்படாமல் இருக்கும் மரங்கள். தமிழகத்தில் மழை பெய்ய வேண்டும் என்றால் வங்காளவிரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வேண்டும், அதைமீறி இயற்கையாக அந்தந்த பருவத்தில் மழை பெய்வதெல்லாம் இனி நடக்குமா என்பது சந்தேகமே. மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தியதைப் போல வீட்டிற்கு ஒரு மரம் என்பதை கட்டாயமாக்கினால் கூட தவறே இல்லை. இதிலும் அரசியலை கொண்டுவந்து, ஓட்டு போய்விடுமோ என பயந்தால் இன்னும் 20-30 ஆண்டுகளில் ஓட்டு போட மக்களே இருக்கமாட்டர்கள். கர்நாடக முதல்மந்திரியாக திரு.இராமகிருஷ்ண ஹெக்டே அவர்கள் இருந்தபோது மாநிலம் முழுவதும் மரத்தை நடுவதற்கென்றே ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தி அதற்கு ஒரு அமைச்சரையும் நியமித்தது மிகவும் அசாதாரணமான ஒன்று. அதன் பலன் தான் இன்றைக்கு அங்கேயிருக்கும் நகரங்களில் கொழித்து வளர்ந்திருக்கும் மரங்கள். அவர் ஆட்சியின்போது செய்த எந்த விஷயத்தை மக்கள் மறந்தாலும் இந்த ஒரு விஷயத்தை மக்கள் இன்னமும் பெருமையுடன் நினைவு கூர்கிறார்கள். ஏறக்குறைய மெளரியப் பேரரசர் அசோகர் செய்ததை அப்படியே தன் மாநிலத்தில் செய்து காட்டிவிட்டார், கலிங்கத்துக்குச் சென்று போர் புரியாமலே. நம்மூரில் வனத்துறை அமைச்சராக இருந்தவர்கள் வனங்களையே இதுவரை ஒழுங்காக பராமரித்ததாக தெரியவில்லை. அவர்களிடம் இந்த பணியை ஒப்படைப்பதற்கு பதிலாக சும்மா இருப்பது நலம். காட்டில் உள்ள யானைகளுக்கே தண்ணியைக் காட்டாமல் தண்ணி காட்டுபவர்களிடம் இம்மாதிரியான முக்கியமான ப்ராஜெக்ட்களை ஒப்படைப்பது மிகவும் கேவலமான முடிவாக இருக்கும். யாரவது ஒரு சுற்றுச்சூழல் ஆசாமியிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அடுத்த தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வருண பகவான் ஆசிர்வதிப்பார்.
கரிகாற் சோழனுக்கும், பென்னிகுக்கிற்கும் இருந்த தொலைநோக்கு பார்வையில் குறைந்தபட்சம் ஒரு சதவீதம் இருப்பவர்களை பொதுப்பணித்துறைக்கு அமைச்சர் ஆக்கினால் அடுத்தமுறை எனது ஓட்டு அந்த கட்சிக்கே. அடுத்து வரப்போகும் பொதுப்பணித்துறை அமைச்சர் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கும், மழை நீரை சேகரிப்பதற்கும் மட்டும் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டால் இன்னும் ஐந்துவருடம் கழித்து இவர்களை எதிர்ப்பவர்கள் Appple iPad கொடுத்தாலும் டெபாஸிட் இழந்துவிடும் சாத்தியம் மிக மிக அதிகம். வசதிகளை ஏற்படுத்தி தருபவர்களைக்காட்டிலும் அடிப்படை தேவையை பூர்த்தி செய்பவர்களுக்கே மக்கள் எப்போதும் முன்னுரிமை தந்திருக்கிறார்கள் என்பது கடந்த காலம் சொல்லும் வரலாறு. எல்லா நன்மையையும் கொஞ்சமாக செய்துவிட்டு கொள்ளைப்புற வழியாக மிகப்பெரிய ஊழலை மட்டும் செய்யாமலிருந்தால் நல்லதோ நல்லது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment