சென்ற அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தின் பிரபல வார இதழில் திரு. நல்லகண்ணு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போதைய ஆளும் கட்சியின் எதேச்சதிகார போக்கை கடுமையாக சாடியபடி வந்திருந்த அந்த பேட்டியில் எந்த இடத்திலும் அரசியல் நாகரீகம் சறுக்கிவிடாதபடி வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசியிருந்தார். மிகவும் அமைதியாக பேசியிருந்தாலும் சொல்லப்பட்ட விஷயம் முழுவதிலும் அனல் பறந்திருந்தது. அன்றைய தேதியில் தங்கள் ஆட்சிக்கு எதிராக யார் வாயைத் திறந்தாலும் அவர்களை மதுரைக்கும், வேலூருக்கும் பார்சல் செய்து அனுப்பிக்கொண்டிருந்த அரசியல் சூழ்நிலையில், திமுகவினரோ கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த வேளையில், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியிருந்தார் காம்ரேட். மிகவும் அருவருப்பாகவும் நம்பிக்கையற்றதாகவும் மாறிவிட்ட தமிழக அரசியல் சூழலில் இவர் மாதிரியான ஆட்கள் அவ்வப்போது நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்….Atleast for short span of time.
இனாமாக கிடைத்தால் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்ட தமிழக வாக்காளர்களின் மத்தியில், கட்சி தனக்காக அளித்த வாகனத்தைக்கூட கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டதாக இவரைப்பற்றி படித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. காலம் வேகமாக ஓடிவிட்டது. எதற்கும்/யாருக்கும் அஞ்சாமல் குரலை எழுப்பிய அதே சுயநலமற்ற தோழர், இக்கட்டான காலகட்டங்களில் தங்களோடு தோளோடு தோளாக நின்று போராடிய வைகோ-விற்கு இன்று ஏற்பட்டுள்ள அரசியல் துரோகத்தை அருகில் இருந்து பார்த்த பின்னும் அதற்கான தனது எதிர்ப்பை பதிவு செய்ய முடியாமல் நழுவுவதை காணும்போது இவரும் ஒரு சராசரி அரசியல்வாதிதானோ என்ற நினைப்பு மட்டுமே மிஞ்சுகிறது. தன் கண் எதிரே நடக்கும் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்தை கண்டும் காணாமல் இருந்துவிட்டு, தனக்களிக்கப்படும் அன்பளிப்பை நிராகரிப்பதால் மட்டுமே ஒருவர் முழுமையான சோஷலிஸ்டாக ஆக மாறிவிட முடியாது என்பதை திரு.நல்லக்கண்ணு நன்றாக அறிந்திருப்பார்.
இவரைத் தவிர்த்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பற்றி பேசுவதோ/எழுதுவதோ காலவிரயம். கழக கண்மணிகளுக்கு இணையாக ஸ்கார்ப்பியோ வண்டிகளில் வலம் வரும் தோழர்கள் தங்கள் சுயலாபத்திற்காக ஒரு நடிகரின் அலுவலகம் வரை ஓடியது தமிழகத்தில் உள்ள நடுநிலையாளர்களின் மனதில் எந்த வியப்பையும் ஏற்படுத்திவிடவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த அலுவலகத்திலிருந்து பத்துகிலோமீட்டர் எல்லைக்குள் முடங்கிக்கிடந்த தங்கள் கூட்டணித் தோழர் வைகோ-வை இவர்கள் வசதியாக மறந்துவிட்டதும் எந்த அதிர்வையும் ஏற்படுத்திவிடவில்லை. விளாடிமீர் இலிச் உல்யோனோவை யார் என்று கேட்கும் தோழர்களால் நிரம்பிவிட்ட ஒரு இயக்கத்திற்கு வைகோ-வை பற்றி யோசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லாமல் இருப்பதில் வியப்பேதுமில்லை. தங்கள் கட்சியின் மாநாட்டில் மணிரத்னத்தின் மகன் பிட் நோட்டீஸ் வினியோகதித்தைப் பற்றி சிலாகித்து கொண்டவர்களுக்கு முந்தைய நாள் இரவுவரை தங்கள் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த வைகோ திடீரென கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை. போகிற போக்கைப்பார்த்தால் இனி தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் இவர்களிடமிருந்துதான் பாடத்தை கற்கவேண்டும் போலத் தெரிகிறது.
ஆட்சியில் இல்லாத நிலையில் ஜெயலலிதா செய்த/செய்துகொண்டிருக்கும் அரசியல் அநீதிகளையே தட்டிக் கேட்க திராணியற்ற செங்கொடித் தோழர்கள், நாளை அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் வீட்டை விட்டு வெளியே வருவார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு பெரிய மனிதர், தன்னை சுமந்து அழைத்து வந்த சைக்கிள் ரிக்ஷாகாரருடன் கடுமையாக தகராறு செய்து கொண்டிருந்தார். பேசிய தொகையைவிட இரண்டு ரூபாய் குறைவாகத்தான் கொடுப்பேன் என பெரிய மனிதர் பிடிவாதமாக சொல்லிக் கொண்டிருக்க, களைப்பில் இருந்த ரிக்ஷாகாரருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அதே ரோட்டில் இன்னொரு சைக்கிள் ரிக்ஷாவில் தனது வாடிக்கையாளருடன் சென்று கொண்டிருந்த மற்றொரு ரிக்ஷாகாரர் தனது ரிக்ஷாவை ஒரம் கட்டிவிட்டு சக ரிக்ஷாகாரரிடன் விவரம் கேட்டுவிட்டு, பெரிய மனிதரிடம் வாக்குவாதத்தில் இறங்க, ஒட்டு மொத்த தெருவே கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு ரிக்ஷாகாரர்களும் பெரிய மனிதரிடம் எவ்வளவோ பேசிப்பார்த்தும் அவர் வழிக்கு வருவதாக தெரியவில்லை. திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் இரண்டாவதாக வந்த ரிக்ஷாகாரர் தனது பாக்கெட்டில் இருந்த இரண்டு ரூபாயை எடுத்து தனது சக தொழிலாளியிடம் கொடுத்துவிட்டு அவரை கிளப்பி அனுப்பிவிட்டு தன்னுடைய ரிக்ஷாவில் இருந்த வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ரிக்ஷாவை நகர்த்தி கொண்டு போய்விட்டார். தகராறு செய்த பெரிய மனிதரை தெருவில் இருந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்க்க அவரால் தலை குனிந்து நிற்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலை. பழைய எம்ஜியார் படங்களில் வரும் செயற்கையான ஒரு நிகழ்வு தங்கள் கண்ணேதிரே நிஜமாகவே நடந்ததை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் தெருவில் இருந்த அனைவரும். முன்பின் அறிமுகமே இல்லாத தனது சக தொழிலாளியின் உரிமைக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது பணத்தை எடுத்து கொடுத்த அந்த ரிக்ஷாகாரரைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு தொழிலாளியிடம் இருந்த குறைந்தபட்ச கண்ணியம், சுயமரியாதை உணர்வு கூட அதே தொழிலாளர்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கத்தின் தலைவர்களுக்கு இல்லாமலிருப்பது காலத்தின் கோலம். கூட்டணிகள் வரும் போகும். ஆட்சிகள் வரும் போகும். சுயமரியாதையும் கொள்கைகளும் போனபின் இவர்களுக்கும் இரு கழகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.
இவர்களுக்கு கிடைத்துள்ள பத்து பதினைந்து தொகுதிகளில் அனைத்திலுமே வென்றாலும் அடுத்து வரப்போகும் ஆளும் அரசின் எந்தவொரு முடிவையும் இவர்களால் மாற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே…திமுகவும் சரி அதிமுகவும் சரி இவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதற்கு கடந்த கால நிகழ்வுகளே சாட்சி. அப்படி இருக்கும்போது குறைந்தபட்சம் தங்கள் இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளிலாவது சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக நின்றால் கொஞ்சம் உருப்படியாக இருக்கும். ஆளும்கட்சிகளின் தவறுகளுக்காக சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் நாடே அதிரும் வகையில் கர்ஜிக்கும் தோழர்கள் தங்கள் கூட்டணியில் இருந்த ஒருவருக்காக ஓங்கிக் குரல் கொடுக்கத் தயங்கியது மோசமான சோஷலிஸம். ஆளும் கட்சியின் தவறுகளை தவிர்த்து மற்ற எதையும் எதிர்த்து குரல் கொடுக்ககூடாது என பொலிட்பீரோ மீட்டிங்கில் தீர்மானம் எதையாவது நிறைவேற்றிவிட்டார்களா எனத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் மக்களுக்கு தெரிவித்துவிடுவது நலம்…அட்லீஸ்ட் அவர்களாவது இனிமேல் இவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருப்பார்கள். லால் சலாம்.
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
பந்தக்கால்
பதிவு நல்லாருக்கு.. சின்ன சின்ன பேராவா பிரிச்சு எழுதனும்.. படிக்க ஈசி
செந்தில் - நன்றி.
இன்னைய உலகப் பொருளாதாரச் சூறாவளியில் இந்தியா சிக்காமல் தப்பித்ததற்கு முழு முதற்காரணம் தோழர்களே. அன்று நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம் கொண்டு வந்த ஃபுல் கன்வர்ஷன் மெத்தட் முறை தீர்மானத்தை இவர்கள் தோற்கடித்ததால்தான் நாடு தப்பியது. ஆனால் தோழர்கள் திருத்திகொள்ள வேண்டியது நீங்கள் சொல்வதுபோல இன்னும் எவ்வளவோ உள்ளது.
Post a Comment