Tuesday, March 15, 2011

அரசியலில் சொதப்புவது எப்படி By லோக் பரித்ரன்

இவ்வளவு கேவலமா விளையாடுறதுக்கு பதிலா பேசாம நம்ம டீமை கலைச்சிட்டு எல்லோரும் போய் “லோகு பவித்ரா” பார்ட்டியில சேர்ந்துடலாம். 2006-இன் துவக்கத்தில் BTM கிரவுண்டில் எங்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த எதிர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது நண்பன் ஒருவன் உதித்த டயலாக் தான் மேலே சொன்ன அந்த வரிகள். “லோகு பவித்ரா” என்ற வித்தியாசமான பேரைக் கேட்டவுடன், கோல்டன் டக்அவுட் ஆன களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எங்கள் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சிலிர்த்து எழுந்து உட்கார்ந்து கொண்டது. ஸ்கோர் கார்டை ஒரு பொடியனிடம் கொடுத்துவிட்டு “லோகு பவித்ரா” மேட்டர் பற்றிய விவாதத்தில் இறங்கினோம்.

ஐஐடி பிஸ்துங்க ஒரு ஆறேழு பேர் சேர்ந்து புது பொலிட்டிக்கல் பார்ட்டி ஆரம்பிச்சிருக்காங்க மச்சி..அந்த பார்ட்டி பேருதான் அது-ன்னு அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னொருத்தன் ரொம்ப சீரியஸாகி அருகில் இருந்த SG பேட்டை கையில் எடுத்து பேசிக்கொண்டிருந்தவனை பார்த்து முறைக்க ஆரம்பித்தான்…பிறகுதான் விவரம் தெரிய ஆரம்பித்தது…”லோக் பரித்ரன்” என்ற பெயரைத்தான் நண்பன் வேறு மாதிரியாக கலாய்த்துக் கொண்டிருந்தது புரிய வந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே நான் பி.இ. ECE மச்சி எனக்கு MLA சீட் கொடுப்பாங்களடா என அடுத்தவன் கேப்பில் கார் ஒட்டினான். மிகவும் போராடி மேட்ச்சில் வெற்றிகரமாக தோற்று வீட்டிற்கு திரும்பிய பின் செய்திதாள்களை துழாவியபோது இந்த Startup Party பற்றிய விவரம் கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது. இந்த கட்சியின் “Founding Fathers” Profile –ஐ பார்த்ததில் புருவம் உயர்ந்தது. ஐஐடி-க்குள் காலடி எடுத்து வைத்தவுடனே அடுத்த Hop ஹார்வர்டு / ஸ்டான்போஃர்டு / MIT / Virginia Tech / Princeton என முடிவு கட்டிவிடும் பசங்களுக்கு மத்தியில் இவர்கள் உன்னதமாக தெரிந்தார்கள். மொத்ததில் இவர்கள் கொடுத்திருந்த வாக்குறுதிகளையும் பில்டப்பையும் பார்த்தவுடன் Love @ First Sight feeling தான் வந்தது.

போதாத குறைக்கு அப்போது (2006) நடைபெறவிருந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவர்கள் போட்டியில் இறங்கப் போவதாக அறிவித்ததும் நண்பர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இவர்களை கவனிக்க ஆரம்பித்திருந்தோம். ஏனென்றால் இவர்களின் முக்கிய கோஷமே ஊழலையும் சாதி அரசியலையும் எதிர்க்கப்போவதாக இருந்த அறிவிப்புதான். இவர்களின் தேர்தல் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் கழுதை சின்னத்தில் நின்றாலும் அந்த பட்டனை அமுக்கிவிடுவது என தீராத வேட்கையில் இருந்தோம். ஆயிரம் பொற்காசு நமக்குதான் சொக்கா என சொல்லி முடிப்பதற்குள் நக்கீரர் போல வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை எங்கள் ஓட்டின் மூலமாக கொண்டு வந்துவிடுவது என்ற எங்கள் கனவில் விதி இங்கிலாந்திற்கெதிரான அயர்லாந்து அணியைப் போல விளையாட ஆரம்பித்துவிட்டது. முதல் சறுக்கல் இவர்கள் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த தொகுதிகளின் பட்டியல். லிஸ்டில் இருந்த தொகுதிகளில் மைலாப்பூர் தவிர்த்து பிற இடங்களில் இவர்களின் பிரதான டார்கெட்டே திமுக-தான். இத்தனைக்கும் திமுக அப்போதிருந்தது எதிர்கட்சி வரிசையில். சேப்பாக்கதில் வேட்பாளரை நிறுத்திய இவர்களின் இயக்கம் ஆண்டிப்பட்டியை கண்டு கொள்ளாமல் விட்டவுடன், இவர்களின் “Integrity” மீது சந்தேகத்தின் நிழல் விழ ஆரம்பித்தது. இரண்டாவது சறுக்கல், இவர்கள் களமிறக்கிய வேட்பாளர்களின் தேர்வும் அதையொட்டி நடந்த சம்பவங்களும். குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை மட்டும் ஏகத்துக்கும் முன்னிறுத்தி மற்றவர்களை லூசில் விட்டது, இவர்களின் குறிக்கோள் என்னவென்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. நம்மூர் கதர் சட்டைக்காரர்களே இவர்களின் இந்த உள்ளடி விளையாட்டைப் பார்த்து வெல வெலத்துப் போயிருப்பார்கள். அப்படி ஒரு அதகளம்.

பெங்களூரிலிருந்து கிளம்பிச் சென்று இவர்களுக்கு ஓட்டளிக்கலாம் என ஆரம்பத்தில் பேசிக்கொண்டிருந்த சில நண்பர்கள் இவர்களின் அதிபுத்திசாலித்தனமான அரசியல் சாணக்கியத்தனத்தைப் பார்த்து மெய் மறந்து, சாந்தி சாகரில் ஒரு பிஸிபேலா பாத் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல உதயசூரியனுக்கே குத்திவிடுவது என்ற முடிவுடன் ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். “Known Devil is better than an unknown Angel” பார்மூலா ரொம்ப சிம்பிள் பிரதர். இத்தனைக்கும் இந்த முடிவை எடுத்தவர்கள் அனைவரும் இருபதுகளின் மத்தியில் இருந்தவர்கள். சினேகா/பாவனா-வின் சமகாலத்தில் வாழ்ந்து தங்கள் பூர்வஜென்ம பலனை அடைந்துக் கொண்டிருப்பவர்கள். தீப்பொறி ஆறுமுகத்தையும், வெற்றிக்கொண்டானையும், நாஞ்சில் சம்பத்தையும் யாருன்னு கேட்கிற தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பெட்ரோலை “Gas” என்றும், தயிரை “Yogurt” என்றும் பிதற்றி திரியும் பிஞ்சுக் குழந்தைகள் :-)

2006 இல் ஒருவழியாக தேர்தல் முடிந்து கழகங்கள் செட்டில் ஆன பின்னும் இவர்கள் விடுவதாக தெரியவில்லை. அதுவரை புகைந்து கொண்டிருந்த உட்கட்சி (!) பூசலை வெளியே கொண்டுவந்து போட்டு உடைத்துவிட்டார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திமுக/அதிமுக இரண்டுமே ஊழலில் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. பாமக தன்னை ஒரு சாதிக்கட்சியாக முன்னிறுத்திக் கொள்வதில் எந்த தயக்கத்தையும் காட்டியதில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது இதற்கு மாற்றாக செயல்பட்டிருக்க வேண்டிய படித்த புத்திசாலிகள் ஒருவர் காலை ஒருவர் இழுத்து விட்டுக்கொண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கோவித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிடும் சம்சாரத்தைப் போல நடு ரோட்டிற்கு வந்துவிட்டார்கள். மூன்று மாதத்திற்குள் கட்சியை பை-டூ போட்டுவிட்டார்கள். சொல்லப்பட்ட காரணம், கட்சியின் வரவு/செலவில் நடந்த குளறுபடிகள் மற்றும் உறுப்பினர்களிக்கிடையேயான சமூக ஏற்றத்தாழ்வுகள். தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து மிக குறுகிய காலத்திற்குள் அதை தாங்களே உடைத்துக் காட்டிய சாதனை 2011 பிப்ரவரி வரை லோக் பரித்ரனிடமே இருந்தது. சில நாட்களுக்கு முன்னதாக “பெருந்தலைவர் மக்கள் கட்சி” என்ற பேரியக்கம் அந்த சாதனையையும் தட்டி பறித்துவிட்டது. சிறுவனாக இருந்தபோது எனக்குள் இனம் புரியாத வியப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்திய குமரி ஆனந்தனின் கா.கா.தே.க – கூட மூன்று மாதங்களுக்கு மேலாக உடையாமல் நிலைத்திருந்ததாக ஞாபகம். Sorry Guys :-(

அந்த தேர்தலில் தோற்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப்போல இவர்கள் விட்ட அறிக்கை அடுத்த தேர்தலில் இவர்களுக்கு ஒட்டளிக்கலாம் என கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்த என்னைப் போன்றவர்களை ஏகத்துக்கும் சூடாக்கியிருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. போதிய அனுபவம் இல்லாததல் தோற்றுவிட்டதாக ஏதோ காரணத்தை கூறினார்கள். அரசியலே தெரியாத விஜயகாந்த் கூட கொஞ்சம் Ground Work செய்த பின்னரே மதுரைக்கு வண்டியை திருப்பினார். Startup Ventures, Entrepreneurship என ஏகத்துக்கும் பேசுபவர்கள் போதிய Ground Work செய்யாமல் உள்ளே வந்தது யார் தவறென்று தெரியவில்லை. எல்லாவற்றிருக்கும் மேலாக சென்னையின் பன்னிரெண்டு தொகுதிகளைத் தாண்டி மற்ற தொகுதி மக்கள் எல்லாம் இவர்களின் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு தகுதியில்லாதவர்கள் என நினைத்து செயல்பட்டது எந்த அறிவாளி கொடுத்த ஐடியா எனத் தெரியவில்லை. தென் தமிழகத்தில் மட்டும் ஏதோ ஒரு தொகுதியில் ஒப்புக்கு யாரையோ நிறுத்தியதாக ஞாபகம்.

2006 ஏப்ரல்/மே மாத வெயிலில் ஜெ-வும், மு.க-வும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடி ஓடி பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கும்போது, லோக் பரித்ரன் டீம் மட்டும் ஆயுத எழுத்து சூரியா ரேஞ்சிற்கு செய்தித்தாள்களில் கம்பீரமாக நின்றபடியே போஸ் கொடுத்துவிட்டு ஓட்டு வாங்கிவிடலாம் என நினைத்து வெறும் Powerpoint Presentation –ஐ வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தது இவர்களுக்கு அரசியல் சுத்தமாக ஒத்துவராது எனத் தெளிவாக்கிவிட்டது. அண்ணா நகரில் ஐந்து இலக்கத்தில் ஓட்டு வாங்கியதை இவர்கள் கோடிட்டு பேசியதை படிக்க நேர்ந்தது. கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக கிணறு சின்னத்தில் நகரமன்ற உறுப்பினர் தேர்தலில் நின்று வென்று காட்டிய உறவினர் வாங்கிய ஓட்டுக்கள் நினைவில் வந்து போனது. இத்தனைக்கும் மனிதருக்கு ஐடிஐ-யே என்னவென்று தெரியாது…ஐஐடி எல்லாம் ஹூஹூம். மக்களை நேரிடையாக சந்தித்து குறைகளை புரிந்துகொண்டு வாக்குறுதி அளித்து சேர்த்த ஓட்டுக்கள்.

ஐஐடி Entrance தேர்வில் வெறும் பேப்பருடன் மல்லு கட்டுவதற்கே கடுமையான உழைப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தவர்கள் மக்கள் ஓட்டை மட்டும் எளிதாக பெற்றுவிடலாம் என நினைத்ததை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. போதாத குறைக்கு படிக்காத அரசியல்வாதிகூட தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் செய்யத் தயங்கும் ஊழலையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் தங்கள் இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே அனுமதித்துவிட்டு எந்த நம்பிக்கையில் மக்களை வழிநடத்த முன்வருகிறார்கள் எனத் தெரியவில்லை. யோசித்துப்பார்த்தால் பழைய ஆட்களே கொஞ்சம் பெட்டராக தெரிகிறார்கள். காமராஜர் போன்ற அப்பழுக்கற்றவர்களின் ஆட்சிக் காலத்தை நேரிடையாக கண்ட என் தாய்/தந்தையின் வயதை ஒட்டிய மனிதர்கள் மிகப்பெரிய புண்ணியவான்கள்.

நன்றி: காதலில் சொதப்புவது எப்படி என்ற தலைப்பை தங்கள் குறும்படத்திற்கு வைத்து, இந்த பதிவின் தலைப்பிற்கு வழிவகுத்தவர்களுக்கு :-)

2 comments:

புதுகை.அப்துல்லா said...

// எனக்குள் இனம் புரியாத வியப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்திய குமரி ஆனந்தனின் கா.கா.தே.க –

//

1984 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாசம் முன்னாடி ஆரமிச்சு, எலக்‌ஷன் முடிஞ்ச 2 மாசத்துல கட்சி கலைச்சாச்சு. அதேபோல அதேகாலகட்டத்தில் எஸ்.டி.எஸ்சின் நமது கழகம் :)

Rex said...

கொஞ்சம் பெட்டர்...கா.கா.தே.க. நாலு மாசம் தாக்கு பிடிச்சிருக்கு.