Monday, February 28, 2011

30+30+30≠117

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்குமென்றார்….அருமையான இந்த பாடல் வரிகளை தக்ஷ்ண பாரத் ஹிந்தி ப்ரச்சார சபாவில் ப்ராத்மிக் (அ) மத்ஃதிமா படித்துக் கொண்டிருக்கும் கதர் ஆசாமி யாரோ ஒருவர் தப்பு தப்பாக புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அதை மொழி பெயர்த்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் காதில் ஓதியும் விட்டிருக்கவேண்டும், இல்லையென்றால் அவர்களால் இந்த பதிவின் தலைப்பில் உள்ள லாஜிக்கே இல்லாத பார்முலாவை முன்வைத்து தொகுதி பங்கீட்டை ஆரம்பித்திருக்க முடியாது.

காங்கிரஸ்-90, பாமக-31, விசி+மற்ற கட்சிகள்-19, மொத்தம்-140. இதுபோக மீதம் உள்ள 94 தொகுதிகளில் திமுகவை போட்டியிடச் சொல்லி சொல்லாமல் சொல்கிறார்கள். என்ன கொடுமை சார் இது…மு.க மட்டுமல்ல அந்த கட்சியின் கடைசித் தொண்டன் கூட தங்கள் ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் மீறி ஒரு கணம் சிரித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இந்த தேர்தலில் உடன்பிறப்புகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். திமுகவும் அதிமுகவும் தங்களுக்கு ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாக நீண்ட காலமாக சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வாக்குகளை (தேர்தலில் தோற்றாலும்) வாங்கி அதை நிரூபித்துக் கொண்டும் இருக்கின்றன. இதே லாஜிக்கை எந்தக் கூட்டணிக்கு மாறினாலும் பாமக-வும் ஓரளவிற்கு நிரூபித்துக்கொண்டே தான் இருக்கிறது. அவர்கள் சொல்லும் வாக்கு சதவீதமும் பெரிய அளவில் இதுவரை சரிவை சந்திக்கவில்லை. சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஏறக்குறைய வாஷ்-அவுட் ஆகிய நிலையிலும் வாக்கு வங்கியில் பெரிய சேதாரம் இல்லை. மு.க-வும் இந்த கணக்கை பார்த்துதான் டாக்டரை தைலாபுரத்தில் இருந்து கிளப்பி கோபாலபுரத்துக்கு கொண்டு வந்துவிட்டார். அந்த பக்கம் அம்மா முதல்வர் கனவில் இருந்த விஜயகாந்தை தமிழக சிரஞ்சீவிV2.0 ஆக Downgrade செய்து சேதாரத்தை சாதுர்யமாக குறைத்துக்கொண்டார்.

அதிமுக+தேமுதிக+மதிமுக+பிறகட்சிகள் = திமுக+பாமக+விசி+பிறகட்சிகள்….இந்த போட்டி இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் போல கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும். இதில் காங்கிரஸ் எந்த பக்கம் போனாலும் அந்த கூட்டணிக்கு “எக்ஸ்ட்ரா லக்கேஜ்” நிலைமைதான். எம்ஜியார் மறைவிற்கு பின் நடந்த தேர்தலில் நான்கு முனை போட்டி என்பதால் காங்கிரஸ்காரர்கள் சைக்கிள் கேப்பில் கொஞ்சம் சீட்டை தேற்றிவிட்டார்கள்…ஆனால் அதிமுககூட்டணி Vs திமுககூட்டணி என களத்தில் நிலைமை மாறும்போது, காங்கிரஸ் மூன்றாவது அணியாக தனியாக நின்றால் கதர் சட்டைக்காரர்களின் வேட்டியை கருணையே இல்லாமல் உருவிவிடுவார்கள் தமிழக வாக்காளர்கள். இதுதான் உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக காங்கிரஸ் தனித்து நின்றால் பிரியும் வாக்குகள் எந்த அணிக்கும் பெரிய சேதாரத்தை கண்டிப்பாக ஏற்படுத்தாது ஏனென்றால் பெரும்பாலான தொகுதிகளில் சுயேட்ச்சை வேட்பாளர்கள் அவர்களைவிட அதிகமான வாக்குகளை பெற்றுவிடுவார்கள்.

சமீபத்தில் பல லகரங்களில் தங்கள் கட்சியில் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக செய்திகளை வெளியிடும் காங்கிரஸின் கணக்கைப் பார்த்தால் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை திமுக/அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் போலத் தெரிகிறது. இந்த லாஜிக் படி பார்த்தால் அவர்கள் தனியாகவே நின்று ஆட்சியைப் பிடிக்கலாம். இதற்காக மெனக்கெட்டு ராஜாவை ஊழல் செய்வதற்கு தெரிந்தே அனுமதித்துவிட்டு, அதையும் கள்ளத்தனமாக டேப் செய்து திமுகவை இந்த அளவிற்கு எல்லாம் நெருக்கியே இருக்கவேண்டாம். மிகவும் கடுமையாக உழைத்து ஊராட்சி ஒன்றிய அளவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்துக்கொண்டிருக்கும் அக்கட்சியின் மாநில/மாவட்ட தலைவர்களை இது கேவலப்படுத்துவது போல இருக்கிறது.

இன்று மு.க இருக்கும் நிலையில் ஜெயலலிதா இருந்திருந்தால் டெல்லியில் இருந்து கூட்டணியை Dictate செய்தபடி குரலை உயர்த்தும் இதே நபர்களால் இப்படி பேசியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. அப்படியே பேசியிருந்தாலும் எந்த மாதிரியான மரியாதை/பதிலடி ஜெ-விடம் இருந்து கிடைத்திருக்கும் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். டெல்லியில் இருந்து பிரணாப் முகர்ஜி மட்டும் அல்ல அவருடைய தாத்தாவே வந்தாலும் போயஸ் கார்டன் எல்லையிலேயே உட்கார வைத்து தண்ணி காட்டியிருப்பார் அம்மா. ஐவர் குழு, அறுபத்து நான்கு நாயன்மார்கள் குழு போன்ற சமாச்சாரங்களையெல்லாம் கார்டனின் இண்டர்காமில் இருந்தபடியே டீல் செய்திருப்பார். கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.

திமுக முன்னாள் அமைச்சர் செய்த ஊழலை வைத்து தொகுதி பங்கீட்டை பேசவில்லை என காங்கிரஸ் பாவ்லா காட்டினாலும் உண்மை என்னவென்று தமிழ்நாட்டு அரசியலை கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும். இதே பாணியை திமுகவும்/அதிமுகவும் கூட இனிமேல் தமிழகத்தில் பின்பற்றலாம். நாற்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சியிலே அமராமல், ஒரு வாரியத்தலைவர் பதவியை கூட வகிக்காமல் இன்றைய தேதிக்கு தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவருடைய சொத்து மதிப்பும் எவ்வளவு என்பது அந்தந்த தொகுதி மக்களை கேட்டுப் பார்த்தால் தெரியும். கிழிந்த பனியனையும் அழுக்கு வேட்டியையும் கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக பஸ்ஸில் பயணம் செய்த கக்கனும் காமராஜரும் இன்றிருந்தால் இன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் “வறுமை” நிலையைப் பார்த்து மனமொடிந்திருப்பார்கள். அந்தளவிற்கு ஏழைப் பங்காளர்களாக மாறி தங்கள் குடும்பத்தை வறுமையில் வாட விட்டு விட்டு நாட்டு மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி உழைப்பவர்கள் ஒரு 90 கேட்பதில் என்ன குறை இருக்க முடியும்.

மூன்று முறைக்கும் மேலாக தொடர்ந்து தமிழக சட்டமன்ற உறுப்பினாராக இருக்கும் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் சொத்து மதிப்பு இன்றைய சிட்டிங் மந்திரிகளின் சொத்தையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடக்கூடிய அளவிற்கு பெரியது. இன்றைய தேதிக்கு திமுக/ முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு இணையாக பஸ் கம்பெனிகளையும், கல்லூரிகளையும், குவாரிகளையும் நடத்தும் காங்கிரஸ் தலைகளை பார்த்தால் திமுக/அதிமுகவே கொஞ்சம் பெட்டராக தோன்றுகிறது. ஏனென்றால் உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போது மட்டுமே கஜானாவில் கை வைக்க முடியும் ஆனால் கதர்வாலாக்கள் தமிழகத்தில் ஆட்சியில் அமராமலே வித்தை காட்டத் தெரிந்தவர்கள். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவே முடியாது என்று தெரிந்தும் உள்கட்சி தேர்தலில் நடக்கும் கலாட்டாக்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உண்மை புரியும். கழகங்களுக்கு கொஞ்சமும் குறையாத சில்லரையை அவர்களும் அள்ளிக் கொண்டுத்தானிருக்கிறார்கள், சத்தமே போடாமல். ஊழலுக்கு எதிரான நியாயமான விசாரணை மேற்கொண்டால் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை தவிர மற்ற அனைவருமே திஹாரிலோ/பாளையங்கோட்டையிலோ/வேலூரிலோ வாசம் செய்வதற்கான அத்தனை தகுதியையும் கொண்டவர்களே.

ஆனால் தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் முன்வைக்கும் “ஊழலை ஒழிப்போம்” கோஷம் தான் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. வேண்டுமானால் ஊழலில் திமுக/அதிமுக-விற்கு சரிசமமான போட்டியில் இருப்பதை முன்வைத்து அதிகமான தொகுதியை கேட்கட்டும்..மக்கள் ஒன்றும் அதை ஆட்சேபிக்கப் போவதில்லை. ஏனெனில் அதில் ஒரு குறைந்தபட்சம் நியாயம் இருக்கிறது. இலட்சங்களில் நடந்து கொண்டிருந்த ஊழலை போபர்ஸ் மூலமாக கோடிகளுக்கு கொண்டு சென்ற ஒரு தகுதி போதும்….எவ்வளவு தொகுதியை வேண்டுமானலும் கேட்கலாம். அதைவிட்டு விட்டு சும்மானாச்சும் ஸ்பெக்ட்ரம் போன்ற வஸ்த்துக்களை எல்லாம் இழுப்பது வேலியில் போகிற ஓணானை இழுத்து வேட்டிக்குள் விட்டுக்கொள்கிற கதைதான். மத்தியில் அமர்ந்துக்கொண்டு காங்கிரஸின் நேர்முக/மறைமுக ஆதரவில்லாமல் ராஜாவால் இப்படி ஒரு மிகப்பெரிய தவறை செய்திருக்கமுடியுமா என்பது கேள்விக்குரியது. அப்படியே அவர் செய்திருந்தாலும் அவரைக் கண்காணித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தது அதைவிட கொடுமையான விஷயம். திமுகவை வழிக்கு கொண்டுவருவதற்காக மக்கள் பணம் விரயமாகிக் கொண்டிருந்ததை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்ததும் ஒரு வகையில் குற்றம்தான். இந்த ஊழல் நிரூபிக்கப்பட்டால் காங்கிரஸ், திமுக இரண்டு கட்சிகளுமே தண்டிக்கப்படவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக திமுக மட்டுமே ஊழலுக்கு காரணம் என காங்கிரஸ் நம்பினால் அவர்கள் முதலில் செய்திருக்க வேண்டியது தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளிவந்திருக்கவேண்டும். இரண்டாவதாக எக்ஸ்ட்ரா லார்ஜ் கொடுங்கள், அட்லீஸ்ட் ஒரு லார்ஜ் அல்லது ஸ்மால் கொடுங்கள் என கேட்டு பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தியிருக்ககூடாது..மூன்றாவது தேர்தலில் வென்றால் ஆட்சியில் பங்கு போன்ற ஐயிட்டத்தை எல்லாம் தொட்டே இருக்க கூடாது. ஊழல் செய்ததாக நம்பும் கட்சியிடம் சென்று ஏன் ஆட்சியில் பங்கெல்லாம் கேட்கிறீர்கள்….மக்கள் உங்களையும் சேர்த்தல்லவா சந்தேகப்படுவார்கள்…கறைபடாத உங்கள் கைகளுக்கு இது தேவையா…..அந்த பக்கம் அம்மாவும் ஊழல் வழக்கில் சிக்கியிருக்கிறார்கள்…So best option is தனியாக நிற்பதுதான்…இதில் நிறைய சவுகரியம் உண்டு…234-லும் போட்டியிடலாம்…யாரிடமும் சென்று பேச்சுவார்த்தையெல்லாம் நடத்த தேவையில்லை. கட்சிக்காக உழைக்க, வேர்வை சிந்த புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இளம் துருக்கியர்கள் இருக்கும்போது தயங்காமல் களத்தில் உடனடியாக இறங்குவது மிகப்பெரிய பலனைக் கொடுக்கும்.

மேற்சொன்னதெல்லாம் அரசியல் கணக்கு, அதைவிடுத்து மக்கள் நலனிற்காக காங்கிரஸ் என்ன செய்துள்ளது என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்துவிடுவது ச்சால பாக செயலாக இருக்கும். ஊழல், கூட்டணி மிரட்டல் போன்றவற்றை விட நாட்டிற்காக இவர்கள் செய்திருக்கும் பணிகள் ஏராளம். எதிர்கட்சிகளை சமாளிப்பதற்காக நாட்டு முன்னேற்றத்திற்கு தேவையான சேது சமுத்திர திட்டத்தை சத்தமே போடாமல் Shift+Del அடித்து தூரத் தூக்கி போட்டுவிட்டு பாராளுமன்றம் அமைதியாக செயல்பட வழிவகுத்தது மிகப்பெரிய மைல்கல். ஊழலுக்கு எதிராக உறுதியாக போரடப்போவதாக முழங்கும் இவர்கள் நாட்டு நலனுக்கான இந்த திட்டத்தில் அந்தர் பல்டி அடித்ததை இதுவரை எந்த நீதியரசர்களும் கேள்வி கேட்கவில்லை. அடுத்து நதிநீர் இணைப்பு என்ற அத்தியாவசிய உடனடி தேவையை திரு. உதயமூர்த்தி மற்றும் திரு. நம்மாழ்வார் தொடங்கி உயர்திரு. டாக்டர். அப்துல் கலாம் வரை விஷயம் தெரிந்த பலர் தொடர்ந்து வலியுறுத்தியும், அந்த திட்டம் சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் என காதில் ஐந்து முழப்பூவை சுற்றிவிட்டு ஒட்டு மொத்த தேசத்தையே இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுக்குள் பாலைவனமாக்கிவிடுவது என்ற நல்ல முடிவை எடுத்துவிட்டார்கள் டெல்லியில் இருந்து நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள். நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் இனிமேல் DRDO/ADA/ISRO வில் வேலை செய்யாமல் காங்கிரஸில் சேர்ந்துவிடுவது நலம். மிகப்பெரிய அளவில் விஞ்ஞானத்தையும் சுற்றுச்சூழலைப் பற்றியும் தெரிந்தவர்கள் அங்குதான் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோக நாட்டை அரித்தெடுத்துவிட்ட கறுப்புபணத்தை பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வரவே மாட்டோம் என தினந்தோறும் கற்பூரம் அடிக்காத குறையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அற்புதமான முடிவு…ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது அடுத்து வரப்போகும் தலைமுறையினருக்கு…நீங்க கேளுங்க சார் 90 என்ன ஒரு குவார்ட்டர் கூட கேளுங்க..I mean 180 Seats :-)

இதுபோக தமிழ்நாட்டில் பேருந்தே போகாத சிறிய ஊர்களில் கூட முன்பெல்லாம் திமுக/அதிமுக கொடிகள் மட்டுமே பறந்துக்கொண்டிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அங்கே காங்கிரஸ் கொடியை தவிர வேறு எந்த கொடியும் கண்ணில் படுவதேயில்லை. எழுபது சதவீத வாக்காளர்களை உள்ளடக்கியுள்ள தமிழக கிராமங்களில் திமுக/அதிமுக கரைவேட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருந்த முறுக்கு மீசை ஆசாமிகளுக்கு இப்போதெல்லாம் காங்கிரஸின் பனபாக லக்ஷ்மியையும், நவீன் ஜிந்தால் போன்றவர்களை மட்டுமே தெரிந்திருக்கிறது. ,மு.க மற்றும் ஜெ-வைப் பற்றி கேட்டால் ஏதோ “Alien” பெயரை கேட்டது போல திகைத்து நிற்கிறார்கள். இந்தளவிற்கு தமிழக அரசியலில் காலுன்றிய பின்னும் 90 எல்லாம் கேட்கக்கூடாது என துரைமுருகன் போன்றவர்கள் கூறுவது ஏற்ககூடியதாக இல்லை. ஆகவே நீங்கள் கேட்பதை நிறுத்தாதீர்கள், தொடர்ந்து கேளுங்கள்…காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டன் தனது கரைவேட்டியை மாற்றிக்கொண்டு ஏதாவது ஒரு கழகத்திற்கு Migrate ஆகும் வரை தொடர்ந்து கேளுங்கள்….நாளை நமதே…நாடாளுமன்றம் நமதே…சட்டமன்றமும் நமதே…..நமஸ்தே….சுக்ரியா.