Tuesday, September 29, 2009

பொலிட்டிக்கல் சி.இ.ஒ – 2 : பகுதி 1

ஒரு சாமான்ய மனிதனுக்கு ஒன்பது மாதம் கால அவகாசம் கிடைக்கப்பெற்றால் அவரால் என்னவெல்லாம் செய்திருக்கமுடியும், ஒரு வீட்டை கட்டி முடிக்கலாம் அல்லது ஒரு புத்தகத்தை எழுதி இருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருக்கலாம். ஆனால் இவர் கொஞ்சம் அசாதாரண ஆசாமி, அதிரடி ஆசாமி. ஆட்டத்தின் முதல் பந்தை தொடவே தயங்கும் வீரர்களின் மத்தியில், அதை மைதானதுக்கு வெளியே அனுப்புவது எப்படி என யோசிக்கும் சச்சின், சேவாக், லாரா, ஜெயசூர்யா வகையறாவை சேர்ந்தவர்.

வெள்ளித்திரையில் தனக்காக விசிலடிக்கும் கூட்டம், நிஜவாழ்விலும் பின் தொடரும் என நம்பி அரசியலில் இறங்கி ஏமாந்த எத்தனையோ நாயகர்கள் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள்/இருக்கப்போகிறார்கள். திரையரங்குக்குள் கூட்டத்தை கட்டிப்போட்ட எத்தனையோ ஹீரோக்களால் அரங்கிற்கு வெளியே வெறும் பத்து பேரைக் கூட திரட்டமுடியாமல் திண்டாடியதுண்டு. தமிழ்நாட்டில் இதை மாற்றிக்காட்டிய எம்ஜிஆர் கூட தனக்கென ஒரு அரசியல் மேடையை வலுவாக அமைத்துக் கொண்ட பின்னரே தனிக்கட்சி என்ற விஷப்பரீட்சைக்கு தயாரானார்.

இதையெல்லாம் கூர்ந்து அவதானித்த பின்னும் மிக துணிச்சலாக நேரடியாக தனியாக கடையை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக மாற்றியும் காட்டினார் இந்த நிஜ ஹீரோ. எந்த அளவுக்கு மக்களை இவர் நம்பினாரோ அதை விட அதிகமாக மக்கள் இவரை நம்பி இருக்கவேண்டும். களத்தில் இறங்கிய முதல் ரவுண்டிலேயே இவரும் இவர் புதிதாக ஆரம்பித்திருந்த கட்சியும் அடித்து நொறுக்கிய தேர்தலின் தீர்ப்பே அதற்கு சாட்சி. கோல்கொண்டா கோட்டையில் இருந்து புறப்பட்ட இந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் டெல்லி செங்கோட்டையை குலுக்கி எடுத்துவிட்டது.

தங்களை விட்டால் ஆள்வதற்கு ஆளில்லை என்ற மனநிலையில் இந்த பிரதேசத்தையே ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்து ஏறக்குறைய ஜமீந்தார்களை போல ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பதே மாதத்தில் ஒய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு அட்டகாசமாக அறியணை ஏறியவர் இந்த கலர்புஃல் கதாநாயகன்.

நாட்டில் எப்போதெல்லாம் அதர்மம் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என போதித்த கிருஷ்ண பரமாத்வாவின் பாத்திரத்தை ஏற்று நடித்து, ஆந்திர மக்களின் மனதில் நிஜமாகவே கடவுளாக மாறிப்போன அந்த அசகாய மனிதர் நந்தமுரி தாரக ராமா ராவ் (aka) என்.டி.ஆர்

இரண்டு மிகப்பெரிய ஆறுகள், உலகப் பொருளாதாரமே சரிந்தாலும் வளமையில் புரண்டு கொண்டிருக்கும் மிகப் பெரிய கோவில், பாலிவுட்டிற்கு பிறகு மிக அதிகமாக பணம் புரளும் பிரம்மாண்டமான சினிமா உலகம் என எல்லாமே செழிப்பாக தோன்றினாலும் மக்களின் வறுமை மட்டும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது மணவாடு தேசத்தில். 1980 களின் துவக்கத்தில் தங்கள் ரத்தம் சுண்டிப்போகும் அளவிற்கு உழைத்து இந்த தேசத்திற்கே அரிசியை வழங்கிக் கொண்டிருந்த விவசாய மக்களை, மிகப்பெரிய விலையை கொடுத்து அரிசியை வாங்கி உண்ணும் நிலைக்கு தள்ளிவிட்டிருந்தார்கள் அப்போதைய ஆந்திர ஆளும் கட்சியினர். கடவுள் கண்டெடுத்த தொழிலாளி அடுத்த வேளை கஞ்சிக்கே கை ஏந்தி நிற்க வேண்டிய நிலை மாநிலம் முழுவதும்.

இன்னொருபுறம் தங்கள் பகுதியின் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கருதி வந்த தெலுங்கானா மக்களின் கோபத்தை தணிக்க எந்த அரசியல்வாதியும் முயற்சி செய்யாத நிலை என எல்லா திசைகளிலும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, உச்சா போக கூட டெல்லியின் உத்தரவுக்காக காத்திருக்கும் லோக்கல் கதர் சட்டைகளின் மீதும் அவர்களின் நீண்ட ஆட்சியின் மீதும் பரவலாக சினத்தை ஏற்படுத்தி இருந்தது. மாற்றத்தை விரும்பிய மக்களை மீண்டும் மீண்டும் தங்கள் மோனோபோலி மனோபாவத்துடன் அடக்கி ஆளத்துடித்தது, மக்கள் சுதந்திரத்திற்காக ஒரு கால கட்டத்தில் போராடிய காங்கிரஸ் பேரியக்கம். இதையும் மீறி மாற்று சக்திக்கான நேரம் இது என தெளிவான சமிஞ்சைகள் தொடர்ந்து அனுப்பபட்டன..…சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கொக்கு விழித்துக்கொண்டது.

ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு சரியாக பதினான்கு மாதத்திற்கு முன்பாக, 1981 அக்டோபர் மாதம் முதல் கல்லை வீசிப்பார்த்தார் இந்த நாயகன்…..தனது அறுபதாவது வயதுக்கு மேல் மக்களுக்காக தன் நேரத்தை செலவிட விரும்புவதாக சின்னதாக ஒரு அறிக்கை….…அறிக்கை வெளியிடும்போது இவர் ஐம்பத்தெட்டை தாண்டிக்கொண்டிருந்தார் …… தான் எதிர்பார்த்ததைவிட சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே எட்டிப்பார்க்க, வேகமாக விவேகமாக தனிக்கட்சிக்கான ஏற்பாட்டை சத்தமே போடாமல் தொடங்கிவிட்டார். பக்கத்து மாநிலத்தில் ஒரு நடிகரின் எழுச்சியை கொட்டாவி விட்டு பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர், தங்கள் ஏரியாவில் உருவாகி கொண்டிருந்த புயலை கவனிக்க
தவறிவிட்டார்கள்….மக்களுக்காக நேரத்தை செலவிட போகிறேன் என பட்டவர்த்தனமாக விடப்பட்ட அறிக்கையின் ஆழத்தை கூட உணர்ந்து கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியினர் சோம்பல் முறிந்து எழுந்து பார்ப்பதற்குள் புயல் கரையை கடந்துவிட்டது. பலத்த சேதாரம் காங்கிரஸ் கூடாரத்தில். இன்றைக்கு வரைக்கும் ஆந்திர பிரதேசத்தில் அதற்கான விலையை காங்கிரஸ் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

தனது முதல் அறிக்கை வெளியாகி ஐந்து மாதம் முடிவதற்குள் 1982, மார்ச் 29, அன்று சுபயோக சுபதினத்தில் “தெலுங்கு தேசம்” என்ற நாமகரணத்துடன் சிங்கம் சிங்கிளாகவே கடையை திறந்துவிட்டது. தேர்தல் சூட்டில் தகித்துக்கொண்டிருந்த ஆந்திர அரசியலில் சரியான நேரத்தில் நெய்யை ஊற்ற ஆரம்பித்துவிட்டார் காட்பாதர் என்.டி.ஆர்…..அதுவரை உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த ஆந்திர அரசியல் காட்டுதீயாய் கொழுந்துவிட்டு எறியத் தொடங்கியது.….இதை .சற்றும் எதிர்பார்த்திராத காங்கிரஸ் கட்சி அனலுக்குள் சிக்கிக்கொள்ள ஆட்டத்தின் முதல் காட்சியிலேயே விசில் பறந்தது இந்த ஹீரோவின் ராஜ்யத்தில்.

கட்சி தொடங்கியாயிற்று அடுத்தது வேறென்ன…பொதுக்கூட்டம் தான்….கட்சி ஆரம்பித்து முழுதாக பதினைந்து நாட்கள் கூட முடிந்திராத நிலையில் நடந்த அந்த முதல் தெலுங்கு தேசகட்சியின் பொதுகூட்டம் ஆந்திராவை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் குலுக்கியது….1982 ஏப்ரல் 11, ஹுசைன் சாகர் வற்றிப்போகும் அளவிற்கு ஒட்டு மொத்த ஐதராபாத்தையும் உடன்பிறப்புக்களின் சின்னம் வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, காங்கிரஸ் கட்சியை கொத்து பரோட்டா போடும் முடிவோடு மனிதர் நிஜாம் கல்லூரி மைதானத்தை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்தார். முதல் நாள் முதல் காட்சி…ஜனதா தர்ஷன்…அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார் அவ்வளவு கூட்டத்தை...கிட்டத்தட்ட எழுபதாயிரத்துக்கும் கூடுதலான மக்கள் குவிந்துவிட்டார்கள்…..ஆந்திர ஆளும் காங்கிரஸ் கட்சியினரின் தூக்கத்தை ஒரே நாளில் கலைத்துப் போட்டுவிட்டார் மனிதர். தெலுங்கானா, ராயல் சீமா, ஆந்திரா என எல்லா திசைகளிலும் இருந்து வந்திருந்த தொண்டர்கள் பாரடைஸிலும், பாவர்ச்சியிலும் ஒரு பிடி பிடித்த பிரியாணியை விட மாநாட்டில் இவரின் உரையில் இருந்த காரம் தூக்கலோ தூக்கல்…..எந்த அரசியல் முன் அனுபவமும் இல்லாமலே தனது உரையில் நெடியை ஏற்றிக்கொண்டிருந்தார் இந்த புதுமுக அரசியல்வாதி. உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த டெல்லி பேகம்பேட் ஏர்போட்டுக்கு அடுத்து யாரை அனுப்புவது என யோசிக்க தொடங்கியது.

முதல் ஆட்டத்தை தெலுங்கானாவில் விளையாடியவர் அடுத்த ஆட்டத்தை ராயல் சீமாவில் வைத்து தொடர முடிவு செய்துவிட்டார்…..ஏற்கனவே இவரின் ஆட்டத்தை பார்த்து மூச்சு திணறிப்போய் இருந்த காங்கிரஸுக்கு கொஞ்சம் கூட கால அவகாசமே கொடுக்காமல் வந்த இவரின் அடுத்த ஆட்ட அறிவிப்பு கிட்டதட்ட மூச்சையே நிறுத்திவிட்டது….ஒவர் டூ திருப்பதி…கட்சியின் முதல் மாநாட்டை சென்டிமெண்டாக திருப்பதியில் வைத்து நடத்துவது என தீர்மானித்துவிட்டார்….ஐதராபாத்தில் காரமான பிரியாணி, திருப்பதியில் இனிப்பான லட்டு….மனிதர் அடித்து ஆட ஆரம்பித்துவிட்டார்……கிருஷ்ணாவையும் கோதாவரியையும் அப்படியே தெற்கு நோக்கி திருப்பிவிட்ட மாதிரி கூட்டம்…..அன்றைய தேதியில் இவர் நகரும் இடத்திற்கெல்லாம் ஒட்டு மொத்த ஆந்திராவும் நகர்ந்தது. சாதாரணமாகவே கூட்டத்தால் நிரம்பி வழியும் திருப்பதி, 1982 மே மாத இறுதியில் கூடுதலாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு தேச தொண்டர்களையும் சேர்ந்து தாங்கவேண்டிய நிலை. வெங்கடாசலபதியே கொஞ்சம் வெளியே வந்து எட்டிப்பார்திருப்பார்…அவ்வளவு உற்சாகம்…அவ்வளவு கூட்டம்….ஆந்திரா அரசியல் அதுவரை கண்டிராத கூட்டம். பத்துபேர் எதிரில் நின்றாலே சிலருக்கு டெஸிபல் எகிறிவிடும்….இங்கே ஒரு லட்சம் பிளஸ் தலைகள்….சிங்கம் சும்மா இருக்குமா…..ஆக்ரோஷமாக கர்ஜிக்க தொடங்கியது….ஒவ்வொரு கர்ஜனைக்கும் மக்கள் கரகோஷம் விண்ணைத் தொட்டது…..ஆந்திர மக்கள் ஆட்காட்டி விரலில் மை வைத்துக்கொள்ளப்போகும் அந்த நாளை எண்ணத் தொடங்கிவிட்டார்கள்.

பொதுக்கூட்டம், கட்சியின் மாநாடு என இரண்டு இடங்களில் மட்டும் புழுதியை கிளப்பிய புயல் சட்டென தடம் மாறி மாநிலம் முழுவதும் விசிட் அடிக்க ஆசைப்பட…..தெலுங்கு தேசத்தின் அத்தனை சாலைகளும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று வரவேற்க தொடங்கிவிட்டன. மாநாடு முடிந்த கையோடு மக்கள் தரிசனம் செல்கிறேன் பேர்வழி என்று அறிவித்துவிட்டு தனக்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட “சைதன்ய ரதத்தில்” ஏறி கோஸ்ட்-டூ-கோஸ்ட் யாத்திரை செல்ல ஆரம்பித்துவிட்டார் இந்த குறுநில மன்னர். கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்த கதைதான்…தேடித் தேடிப் போய் பார்த்த தங்கள் ஹீரோ தங்களை தேடி வருகிறார்…அதுவும் தங்களை மீட்பதற்காக ஒரு புது அவதாரத்துடன்…மக்கள் தங்களையே கிள்ளி பார்த்துக்கொண்டார்கள்….நம்பமுடியாத கனவு..ஆனால் நிஜம்…தரிசனத்துக்கு மக்களும் தயாராகிவிட்டார்கள்.……மக்களை தரிசிக்க செல்பவர் வெறும் கையுடன் செல்லலாமா அல்லது செல்லமுடியுமா….இவர் சென்றார்….அரசியல்வாதி வெறும் கையுடன் செல்லலாம் ஆனால் வெறும் வாயுடன் செல்லக்கூடாது…குறைந்தபட்சம் ஒரு வாக்குறுதியாவது நாக்கில் வைத்து இருக்கவேண்டும்….மனிதர் அரசியல் பார்முலாவை நன்றாக பிராக்டிஸ் செய்திருப்பார் போல தெரிகிறது. தன் கையில் மக்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் தான் ஆட்சிக்கு வந்தால் மக்கள் கை ஏந்த வேண்டிய நிலையே இருக்காது என்ற கோஷத்தை போகுமிடமெல்லாம் தூவிவிட்டு சென்றார்….இது ஒன்று போதாதா…தங்கள் சுமைகளையும் சோகங்களையும் ஒரமாக வைத்துவிட்டு இந்த நாயகனை தலை மேல் வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் ஆந்திர மக்கள்…..துரதிருஷ்டவசமாக தகுந்த பதிலடி கொடுக்கவோ அல்லது குறைந்தபட்சம் தங்களை தற்காத்துக் கொள்ளக்கூட ஒரு தகுதியான தலைமை இல்லாமல் ஆந்திர காங்கிரஸ் தடுமாறிக்கொண்டிருந்தது…….தன் வீடு பற்றி எறியும் போது டெல்லியில் இருந்து யாராவது தண்ணீர் கொண்டு வருவார்கள் என எதிர்பார்த்திருப்பது எவ்வளவு அபத்தம் என்பதை அவர்கள் உணராமல் போது ஏமாற்றமே.

1983 ஜனவரி 5…ஆந்திர காங்கிரஸ் கட்சி மறக்க விரும்பும் நாட்களில் ஒன்று, தெலுங்கு தேசத்திற்கோ அந்த கட்சி இருக்கின்ற வரை மறக்கவே முடியாத நாள் அது……

(தொடரும்)

3 comments:

வரதராஜலு .பூ said...

சூப்பராக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதம்.

கீப் இட் அப்

Toto said...

Excellent narration.. It's a fast paced writing style and it is good. You could have added more about what made him to start the first regional party in AP. The rejection of his Rajya sabha MP by Indira Gandhi, Insult at Kanagadurga temple etc., His other remarkable works are 2Rs rice and excelleent development in Tirumala. Keep up your good work.

Rex said...

நன்றி வரதராஜ்..

Thanks Toto.