முப்பத்து மூன்று வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் அல்லது என்ன செய்யப் போவதாக உத்தேசம்….பெரிதாக ஒன்றும் இல்லை என்பது விடையாக இருந்தால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது ஒரு டிக்கெட்..ஒரே ஒரு டிக்கெட்….குவஹாத்திக்கு….முப்பத்து மூன்று வயதில் ஒரு மாநில முதல்வராவது எப்படி என பாடம் எடுக்க உங்களுக்காக ஒரு நிஜ ஹீரோ காத்துக் கொண்டிருக்கிறார்
மணிரத்னம் ஆயுதஎழுத்து படத்தில் சூர்யாவின் பாத்திரத்தை யோசிப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்பாகவே இவர் அந்த பாத்திரத்தை நிஜத்தில் நடைமுறைப்படுத்திவிட்டு அடுத்த கட்டத்திற்கு சத்தமே இல்லாமல் தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.
தங்கள் தலைவனை வெள்ளித்திரையிலோ அல்லது அரசியல் குடும்பத்திலோ அல்லது சாதி சங்கத்திலோ தேடவில்லை அஸ்ஸாம் மக்கள்….இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ-க்கு என்ன வேலை…யோசிக்க தெரிந்த புத்திசாலிகள்…..மகுடம் சூட தகுதியானவரை மாணவர் கூட்டத்தில் தேடினார்கள்….தேடல் வீண்போகவில்லை...வெறும் முப்பத்து மூன்று வயது இளைஞரை, ஒரு சாதாரண மாணவர் சங்க தலைவரை, மாநில முதல்வர் நாற்காலியில் அமரவைக்க அசாத்திய துணிச்சல் வேண்டும்…அஸ்ஸாம் மக்களுக்கு அந்த துணிச்சல் இருந்தது…இந்திய அரசியல் வரலாற்றில் இன்றைய தேதிக்கு மிகச் சிறிய வயதில் மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட அந்த நாயகன்..பிரபுல்ல குமார் மகந்தா.
அஸ்ஸாம், தேசத்தின் வடகிழக்கு மாநிலம். 1975 முதல் 1985 வரை, ஒரு பக்கம் சீறும் பிரம்மபுத்திராவின் வெள்ளம் அலைகழிக்க, மறுபக்கம் எல்லை கடந்து வரும் மக்கள் என ஒட்டு மொத்த மாநிலமும் தத்தளிக்க, மாநில/மத்திய அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. தங்கள் வாழ்வாதார பிரச்சனைகளை முன்வைத்து போராட உறுதியான தலைமையோ கட்சியோ இல்லாத நிலையில், மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்துடன் தத்தளித்துக்கொண்டிருந்தது அஸ்ஸாம் அரசியல். தங்களுக்காக போராட ஒரு இயக்கம், ஒரு தலைவன்…இதுதான் அஸ்ஸாம் மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் முதல் தேவையாய் இருந்தது….
இதை புரிந்துகொள்ள வேண்டிய கட்சிகள் தூங்கிக்கொண்டிருக்க, மாணவர்கள் விழித்துக்கொண்டார்கள். புத்தகங்களை ஒரமாக வைத்துவிட்டு தெருவில் இறங்கி அரசியல் விளையாட்டை ஆட ஆரம்பித்தார்கள். அங்கும் இங்குமாக போராடிக்கொண்டிருந்த அனைத்து மாணவர் சங்கங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து “அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம்” உருவாக்கப்பட்டது. ஆட்டம் சூடுபிடித்தது. மக்களுக்கு இந்த புது அணியின் ஆட்டம் பிடித்துவிட…இன்னும் ஆக்ரோஷமாக போராட துவங்கினார்கள் அஸ்ஸாம் மாணவர் சங்கத்தினர்..கட்டுக்கோப்பான இந்த அணியை முன்னின்று வழிநடத்த தங்கள் தலைவனை தேடினார்கள் மாணவர்கள்..சிரமமே இல்லாமல் அடையாளம் கண்டுகொண்டார்கள் அவரை…..அவர் பிரபுல்ல குமார் மகந்தா. 1975-களில் சிறு பொறியாக கிளம்பிய இயக்கம் 1979 இல் கிட்டத்தட்ட ஒட்டு மொத்த அஸ்ஸாமையும் தன் பின்னால் இழுத்துக்கொண்டது. அந்த காலகட்டத்தில் இவர்கள் சொல்வததை கேட்பதற்கு மட்டுமே மக்கள் தங்கள் காதுகளை திறந்து வைத்தார்கள். அரசோ அல்லது வேறு அமைப்போ மக்களை நெருங்கக்கூட முடியவில்லை என்பது நிதர்சனம்.
ஒட்டுமொத்த மாநிலமும் இவர்கள் சொல்வதற்கு மறுபேச்சில்லாமல் தலை அசைத்தது, அந்த அளவிற்கு மக்கள் நம்பிக்கையை பெற்றிருந்தார்கள். 1980 இல் நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க இவர்கள் விடுத்த கோரிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஒருவர் அல்ல இருவர் அல்ல, ஒட்டுமொத்த மாநிலமும் தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்தது. இந்த தேர்தல் புறக்கணிப்பு கலவரத்தில் பள்ளி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுவிட, கொஞ்சமாக இருந்த மக்கள் ஆதரவையும் ஆளும் அரசாங்கம் இழக்க ஆரம்பித்தது. 1980 இல் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்ட காங்கிரஸ் அரசு போரட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவ, அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டது. பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக எரிவதில் எண்ணெய்யை ஊற்றினார் அப்போதைய பிரதமர் இந்திரா பிரியதர்ஷினி. வடகிழக்கில் குவஹாத்தி பற்றி எரிய அதன் சூடு புதுதில்லி வரை மெல்ல பரவ ஆரம்பித்தது.
தனிநபர் அல்லது குழுக்களின் போராட்டம் என்பது வேறு..மக்களின் போராட்டம் என்பது வேறு….அன்றைய மத்திய மாநில அரசுகள் இதை புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்தும் புறக்கணித்தார்களா என்பது தெரியவில்லை. அஸ்ஸாமின் ஜீவாதார பிரச்சனைகளை முன்வைத்து உக்கிரமாக நடைப்பெற்ற மாணவர்கள் போராட்டம் 1983 இல் ஏறக்குறைய உச்சத்தை அடைந்தது. 1983 இல் நடைபெற்ற அஸ்ஸாம் சட்ட மன்ற தேர்தல் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு கலவரங்களில் நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுவிட, பிரம்மபுத்திரா தன் நிறத்தை சிவப்பாக்கி கொண்டது.
எவ்வளவோ முயன்றும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் இறுதியாக 1985 இல் மத்திய அரசு இறங்கிவந்தது. மாணவர் அமைப்புக்கள், ஆளும் காங்கிரஸ் அரசு, மத்திய அரசு என அனைத்து தரப்பும் உட்கார்ந்து பேசத் தொடங்கின. பேச்சுவார்த்தைகளின் முடிவில் அப்போதைய மாநில காங்கிரஸ் அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அனைத்து அஸ்ஸாம் மாணவர் கூட்டமைப்பு கலைக்கப்பட்டு அஸ்ஸாம் கண பரிஷத்தாக புதிய அரசியல் பரிமாணம் பெற்றது. இந்த புதிய அரசியல் அமைப்பிற்கு தலைவராக ஒருமனதாக பி.கே. மகந்தா தேர்ந்த்தெடுக்கப்பட, இவரின் தலைமையில் முதல்முறையாக அஸ்ஸாம் மாணவர் அமைப்புகள் மாநில தேர்தலை சந்தித்தன.
1985 இல் மிகவும் இறுக்கமான நிலையில் நடந்த அந்த சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த அஸ்ஸாம் மக்களின் கோபமும் வெளிப்பட்டது….தங்கள் முதுகில் குத்திய தேசிய கட்சிகளையும், மாநில கட்சிகளையும் புறக்கணித்த மக்கள்….கிட்டத்தட்ட அரசியல் குழந்தையாக இருந்த அஸ்ஸாம் கண பரிஷத்தின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்தனர். ஒட்டு மொத்த கட்சியும் மகந்தாவை முதல்வராக தேர்ந்தெடுக்க, வெறும் முப்பத்து மூன்று வயதில் அஸ்ஸாமின் முதல்வராக முடிசூடிக் கொண்டார் இந்த முன்னாள் மாணவ சங்கத் தலைவர்.
எந்த ஒரு மிகப்பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் வெறும் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து போராடி ஒரு மாநில ஆட்சியையே தன் கைக்குள் கொண்டுவந்து இந்திய அரசியல் அரங்கையே தன் பக்கம் திரும்ப வைத்தார் இந்த நிஜ ஹீரோ. ஒரு சாதாரண மாணவர் கூட்டமைப்பை வலுவான ஒரு அரசியல் சக்தியாக மாற்றி தேர்தல் களத்தில் அதை வெற்றிகரமாக முன்னின்று வழிநடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இந்த இளம் மாணவர் தலைவர். 1985 க்கு பிறகு சகஜ நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அஸ்ஸாமை மீண்டும் கட்டியெழுப்பினார் இந்த ஜூனியர் முதல்வர்.
மக்கள் போராட்டங்களை புரிந்துகொண்டு செயல்பட்ட இவரால் புது தில்லியின் அரசியல் சதுரங்க விளையாட்டை புரிந்து கொள்ள முடியாமல் போனது துரதிருஷ்டமே. 1990-களில் இந்திய அரசியலில் நிகழ்ந்த கோமாளித்தனங்களால் குறி வைத்துக் கவிழ்க்கப்பட்ட மாநில அரசுகளில் அஸ்ஸாமும் சிக்கிக் கொள்ள தன் முதல் ஆட்சிக்காலத்தை முழுவதும் முடிக்காமலே பதவி இழந்தார் இந்த மாணவ முதல்வர்.
பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சியின் தோல்வி, கட்சியில் பிளவு என பல பின்னடைவுகளை சந்தித்தப்போதும், தன் போராட்ட குணத்தை தளரவிடாமல் மீண்டும் கட்சியை பலப்படுத்தி 1996 இல் ஆட்சியை கைப்பற்றினார். 1996-2001 வரை சிறப்பான ஆட்சியை வழங்கிய இந்த அணி பின்னர் நடைபெற்ற உள்கட்சி மோதல்களால் மக்கள் நம்பிக்கையை இழந்து இன்று வரை மீண்டும் அரியணை ஏற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது.
2001-க்குப் பிறகு அஸ்ஸாம் கண பரிஷத்தோ அல்லது மகந்தாவோ மக்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனதற்கு காரணம்..எந்த காரணங்களுக்காக அந்த இயக்கம் தோன்றியதோ அது தீர்க்கப்பட்டுவிட்டதா அல்லது அஸ்ஸாம் கண பரிஷத் ஒரு சராசரி அரசியல் கட்சியாக தன்னை மாற்றிக்கொண்டு விட்டதா அல்லது மாறி வரும் மக்களின் மன நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள மகந்தா தவறி விட்டாரா என்பதை வருங்காலத்தில் நிகழப்போகும் தேர்தல்கள் மட்டுமே உணர்த்த முடியும்.
ஆட்சியை இழந்தாலும் விடாமல் போராடி பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அரியணை ஏறிய கட்சிகளும், தலைவர்களும் இந்திய அரசியலில் ஏராளம். வருங்காலத்தில் மகந்தாவும் இந்த வரிசையில் இடம் பிடிக்கலாம், மக்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடும் பட்சத்தில்.
-----------------------------------------------------------------------------------
அடுத்து,
சிலருக்கு வார்டு கவுன்சிலர் ஆனால் போதும், சிலருக்கு எம்.எல்.ஏ ஆனால் போதும்…சிலருக்கு மந்திரி ஆனால் போதும்…இவரின் கனவு கொஞ்சம் பெரியது…நேரடியாக கோட்டையில் கொடியை ஏற்றிவிடுவது என முடிவெடுத்துவிட்டார்…முடிவெடுத்தபின் இவர் ஆடிய ஆட்டத்தின் வடுக்கள் இன்னமும் அந்த பிராந்தியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன…..அதிரடி சி.இ.ஓ இவர்…..
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
அசத்தல்
//எந்த காரணங்களுக்காக அந்த இயக்கம் தோன்றியதோ அது தீர்க்கப்பட்டுவிட்டதா //
இல்லை வைகை, அப்படி இருந்தாலும்கூட தொடர முடியும். அ.தி.மு.க தோன்றிய காரணம் எம்.ஜி.ஆர். முதல் முறை முதல்வர் ஆனபோதே நிறைவேறி விட்டது. இன்னும் சொல்லப் போனால் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதன் தோற்றத்திற்கான அர்த்தமே ஓவ்ர். அப்படியும் இன்னும் ஆட்டத்தில் இருக்கின்றதே.
(இனிமே இருக்காது.அதுவேறு சங்கதி)
:-)
Super. This is very informative. You could have written more on how the party failed and left space for Congress.
MMAbdulla.. The toughest portion of the game is winning alone but to keep the position. Winning is just a beginning and adds more burden.[ Like Roger Federar ].
-Toto
Film4thwall.blogspot.com
Toto,
Thank you.
Point taken. Will try to cover the failures part more on the parties article. This series is primarily to cover Individuals who made sensations on political grounds.
Typo...I think it should be "The toughest part of the game is NOT winning alone"..
Post a Comment