Tuesday, January 26, 2010

Paradigm Shift

வேகமாக சென்றுகொண்டிருந்த அந்த புகைவண்டியின் சத்தத்தை ஒரம்கட்டிக்கொண்டிருந்தது வண்டியின் மத்தியில் இருந்த பெட்டியில் இருந்து கிளம்பிய குழந்தைகளின் விளையாட்டு சத்தம். வண்டியை குலுக்கி எடுத்துக்கொண்டிருந்த அந்த பெட்டியில் நான்கு பேர் அமரக் கூடிய கீழ் இருக்கையின் ஜன்னல் ஒரத்தில் இரண்டு குழந்தைகளும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார்கள். ஆரம்பபள்ளியில் படிப்பவர்களை போலிருந்தனர் இருவரும். அவர்களின் அடுத்தடுத்த இரண்டு இருக்கைகளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளம் அலுவலரும் அவரது நண்பரும் அலுவலக விஷயங்களை விவாதித்தபடி பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.

இவர்களின் எதிர் இருக்கையில் இரண்டு குழந்தைகளுக்கும் நேர் எதிராக ஜன்னல் ஒரத்தில் அவன் அமர்ந்திருந்தான். நடுத்தர வயது. சமீபத்தில் சவரம் செய்யப்படாத முகத்தில் முடிகள் கதிர்விடத் தொடங்கியிருந்தன. கலைந்த கேசமும் அழுக்கேறத் தொடங்கியிருந்த உடைகளும் சக பயணிகளிடமிருந்து அவனை வேறுபடுத்திகாட்டியது. அவனுக்கு பக்கத்து இருக்கையில் ஒரு சிறிய பெட்டியும் அதன் மீது ஒரு துணிமூட்டையும், கைப்பையும் வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு சொந்தமானவை அவை.

தன் மார்பில் புதைந்து உறங்கிக்கொண்டிருந்த சிறிய குழந்தையை அணைத்தபடி ஜன்னலில் தலைசாய்த்து கண்களை மூடியவாறு அமைதியாக அமர்ந்திருந்தான். அவ்வப்போது சரிந்து கொண்டிருந்த குழந்தையை கண்களை திறக்காமலே லேசான உறக்கத்துடன் ஒவ்வொரு முறையும் சரியாக அணைத்துக்கொள்ள முயற்சி செய்தபடியே தொடர்ந்து கொண்டிருந்து அவன் பயணம். இடையில் ஒரு முறை திடீரென விழித்தெழுந்து எதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்த இரு குழந்தைகளுக்கும் கைப்பையில் இருந்து பிஸ்கெட் பாக்கெட் எடுத்து கொடுத்தான். தண்ணீர் குடிக்க வைத்தான். வாஞ்சையுடன் அவர்களின் தலையை சிறிதுநேரம் தடவி கொடுத்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் மீண்டும் கண்களை மூடித் தூங்கத் தொடங்கினான். அயர்ச்சியும் களைப்பும் அவன் முகத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தன.

அவன் வைத்திருந்த பொருட்களுக்கு பக்கத்தில் அடுத்தடுத்திருந்த இரு இருக்கைகளிலும் அமர்திருந்த வயதான தம்பதியினர் செய்தித்தாள்களை வாசித்தவாறு அவ்வப்போது தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே பயணித்துக்கொண்டிருந்தார்கள். இந்த இரு இருக்கைகளின் மேற்புறத்தில் உள்ள இடங்களை யார் யாரோ தங்கள் பொருட்களை கொண்டு நிரப்பியிருந்தார்கள். பிரிக்கப்படாத USHA FAN பெட்டியின் பக்கத்தில் நெருக்கியபடி அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் தன் கால்களை எதிர்புறத்தில் உள்ள இருக்கையின் சிறிய இடைவெளியில் கிடத்தியாவாறு L போன்ற கோணத்தில் அமர்ந்திருந்தான்.

சமயங்களில் அவன் செய்த அல்லது செய்ய முற்பட்ட பாவனைகள் அநேகமாக அவன் பொட்டி தட்டும் கூட்டத்தை சேர்ந்தவனாக இருக்ககூடும் என்ற சந்தேகத்தை விதைத்துக்கொண்டேயிருந்தது. அவனோ அல்லது வெளிநாடு சென்று திரும்பிய அவனது நண்பனோ / நண்பியோ அளித்திருந்த I LUV NY பொறிக்கப்பட்ட மேற்சட்டை அணிந்திருந்தான். எங்கேயும் கிழிந்திராத டெனிம் முழுக்கால் சட்டை அணிந்து 21-ம் நூற்றாண்டு இளைஞர்களை அவமதித்துக்கொண்டிருந்தான். காதுகளில் வழிந்துகொண்டிருந்த ஐபாட்-டின் இசைக்கு அவன் தலையாட்டிய விதம் தெளிவாக சொல்லியது, அங்கே கச்சேரி செய்து கொண்டிருப்பது M.S.S அல்லது K.J.Y அல்ல என்று. சர்வ நிச்சயமாக எல்விஸ் ப்ரஸ்லியோ அல்லது பாப் மார்லோவாக இருக்கக்கூடும், குறைந்த பட்சம் பப்பி லஹரி.

கீழே அமர்திருந்தவர்களின் இருக்கைகளுக்கு பக்கவாட்டில் ஒருவர் மட்டுமே அமரக்கூடிய எதிர் எதிர் இருக்கைகளை இளம் தம்பதியினர் ஆக்ரமித்திருந்தனர். தன் கைகளில் இருந்த பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் தன்னை தொலைத்துவிட்டிருந்தாள் அந்த இளம் மனைவி. எதிரே கன்னத்தில் கைகளை குவித்தவாறு அமர்ந்திருந்த அவளின் கணவன், தன் மனைவியின் அழகை முதல் முறையாக பார்ப்பவன் போல அவளை ரசித்தபடி பயணித்துக்கொண்டிருந்தான்.

பெட்டியின் பிற இருக்கைகளில் அமர்ந்திருந்த மக்கள் அவரவர் சக்திக்கு ஏற்றபடி டெஸிபலை கூட்டியோ குறைத்தோ பேசியபடியோ பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முறுக்கு விற்பவர்களும் டீ விற்பவர்களும் பெட்டியில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் தூக்கத்தை கலைத்து தங்கள் பூர்வ ஜென்ம பாவத்தை கழுவிக்கொண்டார்கள். இயல்பாய் சென்றுகொண்டிருந்த பயணத்தில் திடீரென “பர்தேசி பர்தேசி ஜானா நஹின்” என உச்சஸ்தாதியில் பாடியபடி யாசகம் கேட்கும் ஒருத்தி அந்த பெட்டிக்குள் நுழைய அதுவரை இரைச்சலாக இருந்த பெட்டி முழுவதையும் அமைதி கைப்பற்ற தொடங்கியது. அவளின் பாடலுக்கு நடுவே சில்லரைகள் தட்டில் விழும் சத்தம் சந்தத்தை கூட்டிக்கொண்டே போனது. டிக்கெட் பரிசோதகரை பார்த்த ஒரு கணம் தன் குரலை தாழ்த்தியவள் பின்பு ஏதோ நினைத்தவளாய் உச்சஸ்தாதியில் பாட ஆரம்பித்துவிட்டாள். சில்லரை இல்லாதவர்கள், இருந்தும் கொடுக்காதவர்கள் அவள் பாடிக்கொண்டிருந்ததை உள்ளுக்குள் ரசித்தபடி அமர்ந்திருந்தார்கள்.

யாசகம் கேட்பவள் நெருங்குவதற்குள் அவளுக்கு கொடுப்பதற்கு தயாராக எல்லோரும் மறந்துபோன நாலாணாவை தங்கள் பாக்கெட்டுக்களில் தேடத்தொடங்கினார்கள் அந்த இளம் கணவனும் பொட்டி தட்டும் இளைஞனும். வயதான தம்பதியினர் அவளுக்கு கொடுப்பதற்காக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டார்கள். மார்போடு குழந்தையை அணைத்திருந்த அவன் இப்போது வாயை லேசாக திறந்தபடி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.

.ஜன்னல் ஓரத்தில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த இரு குழந்தைகளின் முகத்திலும் மெலிதான சந்தோஷம் பரவ தொடங்கியது. திடீரென சூழப்பட்ட இள அமைதியும் புரியாத மொழியில் பாடிக்கொண்டிருந்த யாசகம் கேட்பவளின் குரலும் அந்த இரு குழந்தைகளையும் வெட்கத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டார்கள். மறக்காமல் பிறர் தங்களை பார்க்கிறார்களா என்பதையும் ஒருவித வெட்கத்தோடு நோட்டம் விட்டுகொண்டார்கள். குறிப்பாக தங்கள் எதிரில் உள்ளவனை மெலிதான அச்சத்தோடும் குறைவான புன்னகையோடும் பார்த்துக்கொண்டார்கள்.

அவன் உறக்கம் கலையவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அந்த சிறுவன் மட்டும் மெல்ல தன் இருக்கையை விட்டு இறங்கி நேர்வாட்டில் நடப்பதற்காக இருக்கும் வழியின் தூரத்தில் பாடியபடியே வந்து கொண்டிருந்த அவளை பார்த்தபடி நின்று கொண்டான். பாடிக்கொண்டிருந்தவள் மெல்ல நடந்து முன்னேறி இவர்களின் இருக்கைக்கு அருகில் வர வர, சிறுவன் அவளைப்பார்ப்பது பின்பு ஒடிச் சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொள்வது என விளையாட ஆரம்பித்தான். பாடிக்கொண்டிருந்தவளின் தோற்றம் சிறுவனுக்கு பயத்தையும் வியப்பையும் ஒரு சேர கொடுத்தது.

ஒருகட்டத்தில் மெல்ல தன் தலையை மட்டும் வெளியே நீட்டி தங்கள் இருக்கைக்கு மிக அருகில் வந்துவிட்ட பாடுபவளை பார்த்தவுடன் சட்டென முகத்தை உள்ளிழுத்துக்கொண்டான். சிறுமியும் அவனை பாடுபவளை நோக்கி தள்ளிவிடுவதைபோல பாவனை செய்து அவனுடன் சேர்ந்து விளையாடத்தொடங்கினாள். பாடிக்கொண்டிருந்தவள் இவர்களின் இருப்பிடத்தை கடந்து சென்றவுடன் மீண்டும் சிறுவன் ஒடிச்சென்று அவளை ஒருமுறை பின்னால் இருந்து பார்த்துவிட்டு மறுபடியும் ஒடிவந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான் இந்த விளையாட்டினூடே அந்த இரு குழந்தைகளின் குதூகல குரலும் மெல்ல உயரத்தொடங்கியிருந்தது…எதிர் இருக்கையில் குழந்தையை அணைத்தபடியே தூங்கிக்கொண்டிருந்தவனின் உடலில் எந்த ஒரு சலனமும் இல்லை. மிக ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்டிருந்தான். திறந்திருந்த வாயின் ஒரங்களில் லேசாக எச்சில் ஒழுக ஆரம்பித்திருந்தது.

சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த குழந்தைகள் இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் தங்கள் முகபாவனைகளால் ஒருவரை ஒருவர் பயமுறுத்திக்கொண்டும் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த தொடங்கியிருந்தார்கள். அவ்வப்போது கிறீச்சிட்டு எழுந்த அந்த மழலைகளின் குரல் சுற்றியிருந்தவர்களுக்கு எந்த ஒரு இடைஞ்சலையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. மெர்க்குரிப்பூக்களும், பத்திரிகையின் பக்கங்களும், ஐபாட்-டும் வழக்கம்போலவே இயங்கிக்கொண்டிருந்தன.

மெல்ல ஆரம்பித்த குழந்தைகளின் விளையாட்டு அவனுக்கு பக்கத்தில் இருந்த துணிமூட்டைக்கு பரவியது. தூங்கிக்கொண்டிருந்த அவனுக்கு தெரியாமல் லாவகமாக துணி மூட்டையை உருவிவிட்ட சிறுவன் அதை அந்த சிறுமியை நோக்கி வீசத்தொடங்கினான். அவளும் பதிலுக்கு அவன் மீது துணி மூட்டையை வீசி எறிந்தாள். ஒவ்வொரு முறை மூட்டையை அடுத்தவர் மீது எறியும்போது அவர்கள் எழுப்பிய ஆரவார கூச்சல் அந்த பெட்டியை லேசாக உலுக்கியது. அருகில் அமர்ந்திருந்த வயதான தம்பதியும், மெர்க்குரிப்பூவை வாசித்துக்கொண்டிருந்த பெண்மணியும் குழந்தைகளை பயமுறுத்துவதை போல பார்த்துவிட்டு மறுபடியும் தங்கள் வேலைகளில் மூழ்கத்தொடங்கினார்கள். அலுவலக நண்பர்கள் குழந்தைகளை நோக்கி ஒரு புன்முறுவலை வீசிவிட்டு தங்கள் விவாதத்தை தொடர்ந்தார்கள். மேலே அமர்ந்திருந்தவன் கொடுத்த சாக்லெட்டை வெட்கத்துடன் வாங்கிக்கொண்ட இரு குழந்தைகளும் தங்களை மறந்து அங்கும் இங்கும் ஒடி விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் கத்திக்கொண்டே துரத்துவது, மேலே விழுந்து புரள்வது, கீழே வைத்திருக்கும் பெட்டிகளின் மீது ஏறுவது என அந்த ரயில் பெட்டி முழுவதையும் தங்கள் வசப்படுத்திவிட்டார்கள்.

நேரம் செல்ல செல்ல படித்துக்கொண்டும், இசையை ரசித்துக்கொண்டும், நின்றுகொண்டும் வந்த மற்றவர்களுக்கு குழந்தைகளின் கூச்சலும், அங்குமிங்குமாக ஒடிக்கொண்டிருந்த அவர்களின் ஒட்டமும் லேசான தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்த சிறுவனை மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி மடக்கி பிடித்து ஒரு பொய்யான பயமுறுத்தலுடன் சத்தம் போடாமல் விளையாடுமாறு சொல்லிவிட்டு அவனை விடுவித்துவிட்டாள். அதன்பின் சிறிது நேரம் அமைதியாக விளையாடிய குழந்தைகள் மீண்டும் தங்களை அறியாமலேயே பெரும் சத்தத்துடன் விளையாடத் தொடங்கிவிட்டனர். ஒரு கட்டத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்த அந்த புகைவண்டியின் சத்தத்தை ஒரம்கட்டிக்கொண்டிருந்தது வண்டியின் மத்தியில் இருந்த பெட்டியில் இருந்து கிளம்பிய குழந்தைகளின் விளையாட்டு சத்தம். ஜன்னலோரம் தூங்கிக்கொண்டிருந்த அவன் லேசாக குறட்டைவிட ஆரம்பித்திருந்தான்.

பெட்டியில் இருந்தவர்கள் லேசாக பொறுமை இழந்து முணுமுணுக்க தொடங்கினார்கள். தங்கள் படிப்பிற்கும், இசைக்கும், தனிமைக்கும் குழந்தைகளின் விளையாட்டு இடைஞ்சலை ஏற்படுத்துவதாக எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்க தொடங்கியிருந்தார்கள். சிலர் குழந்தைகளிடம் நேரடியாகவே கடிந்து கொண்டார்கள், சிலர் லேசாக அதட்டல் போட்டார்கள்..அதட்டும்போது அடங்குவதும் சிறிது நேரத்தில் பழையபடி ஒடி விளையாடுவது என மாறி மாறி ரணகளபடுத்திக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள். ஜன்னல் ஒரத்தில் அமர்ந்திருந்தவன் லேசாக அசைவது போல் அசைந்து மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான். கூட்டம் வேகமாக பொறுமை இழக்கத்தொடங்கியது.

தூங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி குழந்தைகளை கண்டித்து அடக்க சொல்லலாமா அல்லது அவன் விழிக்கும் வரை காத்திருக்கலாமா என எல்லோரும் மனசுக்குள் பட்டிமன்றமே நடத்த ஆரம்பித்துவிட, எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் குழந்தைகள் தங்களின் பின்புறத்தில் இருந்த இருக்கைகளின் பக்கமாக சென்று இன்னும் ஆரவாரத்துடன் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துவிட்ட பயணிகள் சிலர் கூட்டமாக சென்று ஜன்னல் ஒரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவனின் தோள்பட்டையை தட்டி அவனை எழுப்பிவிட்டனர். லேசாக தலையை திருப்பி கண்களை திறந்தவன் எதிரில் குழந்தைகள் இல்லாததை கண்டு திடுக்கிட்டு எழ பெட்டியில் இருந்தவர்கள் இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அவன் மீது பாயத்தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளை இப்படி விளையாடவிட்டு விட்டு அப்படி என்ன தூக்கம், அவர்கள் போடும் சத்தமும் ஆட்டமும் தங்களை இடைஞ்சல் படுத்துவதாகவும் சொல்லிவிட்டு, அவர்களை கூப்பிட்டு கண்டித்து ஒரே இடத்தில் உட்கார வை என குதறி எடுத்துவிட்டார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பக்கத்து இருக்கை பக்கமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் தங்கள் இடத்தை நோக்கி ஓடி வர, விழித்த நிலையில் நின்று கொண்டிருந்த அவனை கண்டதும் மிரட்சியுடன் மெல்ல நடந்து அவன் அருகில் செல்ல, சடாரென ஒரு கையால் அவர்களை பிடித்து இழுத்தவன் முதுகில் ஒங்கி அறைந்துவிட்டு பின் ஒரு நொடி நிதானித்து அப்படியே குனிந்து குழந்தைகளை தன்னோடு அணைத்துக்கொண்டான். வலியாலும் பிறர் முன்னால் தங்களை அடித்துவிட்ட தாழ்வு மனநிலையாலும் அதுவரை சந்தோஷத்தில் பறந்துகொண்டிருந்த குழந்தைகளின் முகத்தில் வழிந்த கண்ணீர் அவன் சட்டையை ஈரமாக்கியது தன் தோளில் சாய்ந்து அழுத குழந்தைகளை அப்படியே அள்ளி தூக்கியவன் அவர்களை மார்போடு அணைத்தபடி தன் இருக்கையில் சரிந்தான். சில நொடிகளில் தலைகீழாக மாறிவிட்ட நிகழ்வுகளால் வாயடைந்து நின்றுகொண்டிருந்த ஒட்டு மொத்த கூட்டமும் அங்கிருந்து விலக மனமில்லாமல் நின்றிருக்க முதல் முறையாக மெல்ல பேசத்தொடங்கினான் அவன்….

என் குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட இடைஞ்சலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவர்களின் தாய் இரண்டு நாட்களுக்கு முன் இறந்துவிட்டாள். அவள் இறந்த சோகத்தில் இரண்டு நாட்களாக அழுதுகொண்டிருந்த குழந்தைகளுக்கு ரயில் பயணம் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு மாறுதலுக்காக அடுத்த நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அவர்களை அழைத்துகொண்டு போய்கொண்டிருக்கிறேன். சரியான தூக்கம் இல்லாததாலும் கடுமையான சோர்வினாலும் நான் சிறிது கண்ணயர்ந்து விட்டதால் குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட சிரமத்தை கவனிக்க இயலாமல் போய்விட்டது. என்னையும் என் குழந்தைகளையும் மன்னித்துவிடுங்கள். இனிமேல் இவர்களால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தயவு செய்து அவரவர் இருக்கைகளுக்கு செல்லுங்கள் என கூறிவிட்டு மூன்று குழந்தைகளையும் அணைத்தபடி ஜன்னலை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தான்.

அவனை கடிந்து கொள்வதற்காக கூடிய அத்தனை கூட்டமும் மெல்ல கலைந்து அவர் அவர் இருக்கைக்கு செல்ல தொடங்கினர். சில நிமிடத்திற்கு முன்பு வரை ஆரவாரமாக காணப்பட்ட அந்த பெட்டி சுடுகாட்டைப்போல அமைதியாக சென்றுகொண்டிருந்தது. பெட்டியில் இருந்த ஒவ்வொருவரையும் குற்ற உணர்ச்சி மெல்ல சூழத்தொடங்கியது. குழந்தைகளின் சந்தோஷ கூச்சலைவிட அப்போது நிலவிய மயான அமைதி ஒவ்வொருவரின் மனசாட்சியையும் பிடித்து உலுக்கத்தொடங்கியது. தங்கள் கவலைகளை மறந்து விளையாடிய குழந்தைகளின் மகிழ்ச்சி தங்களால் முடங்கிவிட்டதை நினைத்து மருகத்தொடங்கினார்கள். சில நிமிடத்திற்கு முன்பு வரை குழந்தைகளின் அட்டகாசத்திற்காக முகத்தை சுளுக்கியவர்கள் மீண்டும் அந்த குழந்தைகள் பழையபடி விளையாடமாட்டர்களா என ஏக்கத்துடன் காத்திருக்க……தன் மடியோடு சாய்ந்திருந்த குழந்தைகளை இறுக்கி அணைத்தபடி இருந்த அவன் தூக்கத்தை வலுக்கட்டயாமாக தவிர்த்து ஜன்னலை வெறித்தபடி பயணித்துக்கொண்டிருந்தான்.

Tuesday, October 13, 2009

பொலிட்டிக்கல் சி.இ.ஒ – 2 : பகுதி 2

கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த தெலுங்கு தேசத்தையும் அதன் தலைவரையும் வழிக்கு கொண்டுவர தலைகீழாக நின்று நீலு குடித்து பார்த்துவிட்டார்கள் லோக்கல் கதர் குல்லாக்கள்…பப்பு வேகவில்லை. இறுதியாக தங்கள் கடைசி தாக்குதலுக்கு டெல்லியில் இருந்து பிரம்மாஸ்திரத்தை இறக்குமதி செய்துவிட்டார்கள். நிலைமையை சமாளிக்க டெல்லியில் இருந்து பறந்து வந்து ஹைதையில் லேண்ட் ஆகிவிட்டார் இந்திரா பிரியதர்ஷினி…தேசத்தின் அப்போதைய பிரதமர். 1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஜனதா கட்சி காங்கிரஸை பந்தாடிய நிலையிலும் தங்கள் ஆதரவு கரத்தை காங்கிரஸுக்கே நீட்டி இருந்தார்கள் ஆந்திரவாடுக்கள். மீண்டும் அதே போன்றதொரு ஆதரவை வென்றெடுத்துவிடலாம் என மிகவும் நம்பிக்கையுடன் வந்திறங்கினார் இந்திரா. 1978 தொடங்கி 1983 முடிவதற்குள் ஆந்திராவில் நான்கு முதல்வர்களை மாற்றிய “மிகப்பெரிய” சாதனையுடன் மக்கள் முன் போய் மண்டியிட்டு நின்றது காங்கிரஸ். சுந்தரத் தெலுங்கில் மாட்லாடிய லோக்கல் காங்கிரஸ்காரர்களையே திரும்பி பார்க்காத மக்கள் டெல்லியின் இந்திக்கு மயங்கிவிடுவார்கள் என எதிர்பார்த்தது அபத்த கணக்கு.

திருப்பதியில் தனது பொதுக்கூட்ட கணக்கை ஆரம்பித்த என்.டி.ஆர் அதே மண்ணில் வைத்து அந்த தேர்தலுக்கான தனது கடைசி பொதுக்கூட்டத்தை நடத்த விரும்பியதை காங்கிரஸ் மோப்பம் பிடித்துவிட்டது. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க தயாரானது ஆந்திர காங்கிரஸ் கமிட்டி. இந்திரா தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுகூட்டத் திடல்….சாட்சாத் ஏழுமலையானின் அதே காலடிதான்..திருப்பதி. கடைசி பந்தில் எப்படியும் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் முடிவை மாற்றிவிடுவார் என எல்லோரும் இந்திராவை பார்த்துக்கொண்டிருக்க, மிக அழகாகவும், நேர்த்தியாகவும் சொதப்பி எடுத்து ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டார் நேருவின் வாரிசு. அன்றைய பொதுக்கூட்டத்தில் மைக்கை பிடித்த அனைவருமே தங்கள் தவறுகளுக்கு பரிகாரம் தேடாமல், என்.டி.ஆர் என்ற தனிமனிதரை தாக்க தொடங்கியது, மக்களுக்கு காங்கிரஸ் மீதிருந்த கடைசி நம்பிக்கையையும் தகர்த்தெறிந்தது. தூர்தர்ஷன் செய்தி போல இந்திரா மேடம் பேசிக்கொண்டிருக்க, தத்து பித்து என லோக்கல் கதர்கள் அதை மொழி பெயர்த்துக் கொண்டிருக்க, நெல்லூரிலும் குண்டூரிலும் இருந்த வந்திருந்த தியாகிகளின் வாரிசுகள் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு “கோவிந்தா” “ கோவிந்தா” என கூவியபடி இடத்தை கிளியர் செய்துவிட்டு திருப்பதி பீமாஸுக்குள் போஜனம் தேடி புகுந்துவிட்டார்கள்.

காங்கிரஸ்காரர்கள் இடத்தை காலி செய்த அடுத்த நொடி, மஞ்சள் சிவப்பு வர்ண கொடிகள் திருப்பதியை ஆக்ரமித்துக்கொள்ள, மிகுந்த ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்தது, சைதன்ய ரதமாக உருமாற்றம் செய்யப்பட்டிருந்த அந்த டெட்ராய்ட் மேக் செவர்லேட் வாகனம். அந்த தேர்தலுக்கான கடைசி பொதுக்கூட்டம் தெலுங்குதேசத்திற்கு, வாழ்வா சாவா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்….அடிபொடிகள் ஆடி அடங்கிய பின், சாந்த சொரூபியாக மேடை ஏறி மைக்பிடித்தார் என்.டி.ஆர். கிலோ அரிசி 2 ரூபாய்….தெலுங்கு மக்களின் சுய கெளரவம்….என மெல்லிய குரலில் சைக்காலஜிக்கலாக மக்களை சுண்டி இழுத்தவர்…..அப்படியே மெல்ல டெஸிபலை கூட்டி ஆளும் கட்சியின் பக்கம் தன் உஷ்ண பார்வையை திருப்பினார். சிதம்பர நடராஜரின் ருத்ர தாண்டவம் திருப்பதியில் அரங்கேற தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் ஊழலையும், நான்கு வருடத்திற்குள் நான்கு முதல்வர்களை மாற்றிய டெல்லியின் கபடி ஆட்டத்தையும் போட்டு கிழித்து எடுத்துவிட்டார் மனிதர். அந்த உரையை அவர் முடிக்கும்போது ஏறக்குறைய எல்லா எலிகளும் தயாராகிவிட்டன என்.டி.ஆர் பின்னாலே தெலுங்கு தேசம் என்னும் ஆற்றில் இறங்குவதற்கு. இறுதி உபதேசத்தை தொண்டர்யடியார்களுக்கு ஓதிவிட்டு அப்படியே மலையேறியவர் மொட்டை போட்டுக்கொண்டு பஞ்சரா ஹில்ஸ் நோக்கி புறப்பட்டுவிட்டார்..இரண்டு நாளில் ஒட்டு போட்டுவிட்டு அதற்கடுத்த நான்கு நாளில் முதல்வர் பதவி ஏற்பதற்காக.

1983 ஜனவரி 5, ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்திற்கான விதையை மிகவும் அமைதியாகவும் அழுத்தமாகவும் தங்கள் ஒட்டுக்களின் மூலமாக பதிய தொடங்கி இருந்தனர் ஆந்திர மக்கள். அமைதியாக நடந்து முடிந்தது வாக்குபதிவு…அந்த அமைதி காங்கிரஸ்காரர்களையும் தெலுங்கு தேச தொண்டர்களையும் அமைதியிழக்க செய்திருந்தது. 1983 ஜனவரி 6, அதிகாலை பொழுது அமைதியாகவே விடிந்தது.…ஆந்திர அரசியலை தலைகீழாக புரட்டி போடப்போகும் நாள் அது என தெரியாமலே. நாள் முழுவதும் யாருக்கும் எந்த வேலையின் மீதும் நாட்டம் செல்லவில்லை…..கை நகங்களின் மீது வன்முறை திணிக்கப்பட்டு கடித்து துப்பியபடியே காத்திருந்தார்கள் அந்த முதல் கணத்திற்காக. மெல்ல இருள் கவிழ ஆரம்பித்திருந்த அந்த நாளின் இறுதி மணித்துளிகளில் சுமார் பத்து மணி அளவில் முதல் தொகுதிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.….தொகுதியை வென்றது காங்கிரஸ்…ஷாஃத் நகர் தொகுதியிலிருந்து முதல் போணியை காங்கிரஸுக்கு சாதகமாக தொடங்கி வைத்தவர் டாக்டர். சங்கர் ராவ். காங்கிரஸ் தொண்டர்களின் முகத்தில் லேசான ஒளி பரவ, எதிர் முகாம் மெல்ல கலகலக்க ஆரம்பித்தது. என்.டி.ஆர் எந்த இறுக்கத்தையும் காட்டிக்கொள்ளாமல் அமைதிகாத்தார்….நாளை பொழுது தனக்கானது என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார். அந்த இரவு யாருமே தூங்கவில்லை……யாரையும் தூங்கவிடாமல் எழுப்பிக் கொண்டேயிருந்தது வேகமாக தனது தீர்ப்பை எழுத தொடங்கியிருந்த வரலாறு.

ஏழாம் தேதி அதிகாலை தென்னிந்திய மக்கள் பொங்கலை கொண்டாட ஆயுத்தமாகி கொண்டிருக்கையில் ஆந்திராவில் தீபாவளி கொண்டாட ஆரம்பித்திருந்தனர் தெலுங்கு தேச தொண்டர்கள். ஸ்ரீகாகுளம் தொடங்கி சித்தூர் வரை சிவகாசி தயாரிப்புக்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கியிருந்தன. தெலுங்கு தேசம் கட்சியின் ஒவ்வொரு தொண்டனின் கையையும் ஆந்திராவின் தினத்தந்தி “ஈநாடு” பத்திரிகை ஆக்ரமித்திருந்தது. அந்த பத்திரிகை அன்று வெளியிட்ட தலைப்பு செய்திதான் இந்தியா முழுவதிற்கும் அன்றைய தலைப்பு செய்தி…..“தெலுங்கு தேசம் சூப்பர்ஹிட்” அடித்து நொறுக்கி சர்க்குலேஷனை டாப்கியரில் போட்டு தூக்கிவிட்டார்கள். தெலுங்கு தேசத்தின் ஜனனம் முதல் தேர்தல் முடிவு வெளிவரும் வரை ஈநாடு பத்திரிகை தெலுங்கு தேசத்தின் “முரசொலி” போல் செயல்பட்டது….அதன் பிண்ணனி தனி வரலாறு. அனைத்து முடிவுகளும் வெளியாகி முடியும் தருணத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையை செங்கல் செங்கலாக பிரித்தெடுத்து தரைமட்டமாக்கிவிட்டார் பாதாள பைரவியின் நாயகன் என்.டி.ஆர்...வெறும் ஒன்பது மாதத்தில் நூறாண்டு பாரம்பரியமிக்க ஒரு கட்சியை, அந்த மாநிலத்தின் முதல்வர் பதவியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த கட்சியை, ஒரு சிறு கல்லை எடுத்து எறிவது போல வாரி சுருட்டி ஹுசைன் சாகருக்குள் தூக்கி எறிந்துவிட்டார் மனிதர். கர்நாடகத்தில் ஜனதாவும், தமிழ்நாட்டில் திமுகவும், கேரளத்தில் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸை பதம் பார்த்துவிட எஞ்சியிருந்த ஒரே தென் மாநிலமும் இறுதியாக ஆட்டத்தில் இணைந்துவிட்டது. காங்கிரஸ் தவிர்த்து நாட்டில் உருவான கட்சிகளில் பெரும்பான்மையானவை காங்கிரஸை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடனே தோற்றுவிக்கபட்டிருக்கின்றன என்பது காங்கிரஸ் உணரவேண்டிய கசப்பான உண்மை. சுதந்திரத்திற்கு முன்புவரை ஒட்டுமொத்த தேசத்தையும் தன் பின்னால் அணிதிரள செய்த கட்சியால் அதன்பிறகு குறைந்தபட்சம் பத்துவருடம் அதே நிலையை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது காலக்கொடுமை.

1983 ஜனவரி 9, ஆந்திர அரசியல் வரலாற்றில் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் என்ற பெருமையுடன் மிகுந்த ஆர்ப்பரிப்புக்களுக்கிடையே மகுடம் சூட்டிக்கொண்டார் என்.டி.ஆர். “மாயா பஜார்” கிருஷ்ணனை முதல்வராக்கி அழகு பார்த்துவிட்ட தெலுங்கு தேச தொண்டர்கள் தங்கள் பூர்வ ஜென்ம பலனை காசிக்கு செல்லாமல் ஹுசைன் சாகர் ஏரியின் கரையிலும், கோதாவரி-கிருஷ்ணாவின் ஆற்றுபடுகையிலுமே அடைந்துவிட்டார்கள். திருவிழா முடிந்து மக்கள் ஒருவழியாக தெளிய ஆரம்பிக்க, முதல்வர் அலுவலகத்தில் பைலை புரட்ட ஆரம்பித்திருந்தார் அதுவரை வெள்ளித்திரையில் வில்லன்களை புரட்டிக்கொண்டிருந்த இந்த முன்னாள் சூப்பர் ஸ்டார். வாக்குறுதிகளை நிறைவேற்ற கோப்புகளில் அதிரடியாக கையெழுத்திட ஆரம்பித்தார்….….முக்கியமாக அரிசி மேட்டரில் கொஞ்சம் ஓவர் ஸ்பீட்…வேற வழி…செஞ்சிதான் ஆகனும்… இல்லையென்றால் அடுத்த தேர்தலில் பிட்ஸ்பர்க் பெருமாளே வந்து இவருக்காக ஓட்டு கேட்டாலும் மக்கள் முதுகை திருப்பிக்கொள்வார்கள்.

சமத்துகுட்டியாக ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தவருக்கு, 1984 ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் செக்பாயிண்ட் வைக்கப்பட்டது. செக்பாயிண்ட் வைத்தவர் இவர் கூடாரத்திலேயே இவர் பக்கத்திலேயே இருந்தவர். எதிரியை எதிரில் வைக்ககூடாது பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சாணக்கியதனத்தை சரியாகதான் செய்திருந்தார் இந்த ராஜரிஷி, ஆனால் கணக்கு கொஞ்சம் பிசகி நிலைமை ஏடாகூடமாகிவிட்டது. பை-பாஸ் சர்ஜரிக்காக அமெரிக்காவுக்கு செல்ல ஜதராபாத்தை விட்டு கிளம்பும்போது ஏர்போர்ட்டில் கையசைத்து வழியனுப்பி வைத்த தனது நிதி அமைச்சர் பாஸ்கர் ராவ் தனக்கு எதிராக திரும்புவார் என்பதை நினைத்துகூட பார்த்திருக்கமாட்டர். துரோகம் தன் பாக்கெட்டுக்குள்ளே ஒளிந்திருப்பதை எப்படியோ கவனிக்க தவறிவிட்டார் தேவுடு. அமெரிக்காவில் இவருக்கு சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஐதராபாத்தில் தெலுங்கு தேசத்திற்கு வேறு மாதிரியான ஆப்ரேஷன் அண்டர் கிரவுண்டில் வைத்து ஆரம்பமாகி இருந்தது…..ஒவ்வொரு தெலுங்கு தேச எம்.எல்.ஏ-விற்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரம் ஜெகஜோதியாக தொடங்கி இருந்தது…..வேலையை ஆரம்பித்து வைத்துவிட்டு ஒரமாக நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ். சனிபகவான் காங்கிரஸை உக்கிரத்தோடும், தெலுங்கு தேசத்தை பரிவோடும் பார்த்திருப்பார் போல தெரிகிறது…..சந்திரபாபு நாயுடுவை உருவில் வந்து காங்கிரஸுக்கு தண்ணிகாட்ட ஆரம்பித்துவிட்டார். அன்றைய தேதிக்கு தெலுங்கு தேசத்தின் எம்.எல்.ஏ.க்கள் சிதறிவிடாமல் கட்டி காத்து என்.டி.ஆரின் இதயத்தில் பாலை வார்த்தவர், பின்னாளில் என்.டி.ஆருக்கு லட்டு கொடுத்த அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடுவே தான். இதில் மிகப்பெரிய காமெடி இந்த உள் அடி புரட்சியில் மூளையாக செயல்பட்ட பாஸ்கர் ராவும், அந்த புரட்சியை லாவகமாக கையாண்டு என்.டி.ஆரை காப்பாற்றிய சந்திரபாபு நாயுடுவும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் என்பது. பாம்பின் கால் பாம்பறியும்.

ஆகஸ்ட் 14 இல் சிகிச்சை முடிந்து வீல் சேரில் இந்தியா திரும்பியவருக்கு ரத்தின கம்பளத்திற்கு அடியில் தோண்டப்பட்டிருந்த குழி தெரிந்தே இருந்தது……எல்லா முன்னேற்பாடுகளையும் கச்சிதமாக செய்து முடித்துவிட்டு காத்திருந்த எதிரணி ஆகஸ்ட் 16 அன்று கொடியை உயர்த்தி விட்டார்கள்…..ஜெட்-லாகில் இருந்த என்.டி.ஆர் விழித்து பார்ப்பதற்குள் அப்போதைய ஆந்திர ஆளுநர் இராம்லால் தனது ஜனநாயக கடமையை வேகமாக முடித்துவிட்டார்….என்.டி.ஆர் தலைமையிலான அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு பாஸ்கர் ராவ் தலைமையில் புது அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துவிட்டார் ஆளுநர்….எப்படி கூட்டினாலும் பாஸ்கர் ராவிற்கு அந்த மேஜிக் நம்பர் கிடைக்கவே கிடைக்காது என தெரிந்தும் இந்திரா அவரை வைத்து ஆடிய அந்த ஆட்டத்தை இந்தியாவில் யாருமே ரசிக்கவில்லை என்பது உண்மையோ உண்மை……எந்த அளவிற்கு ஜனநாயகத்தை கேவலபடுத்த முடியுமோ அந்த அளவிற்கு அதை கேவலபடுத்தினார் அப்போதைய ஆளுநர், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் வந்து ஆளுநரை சந்திப்பதற்கு என்.டி.ஆருக்கு அனுமதி மறுக்கபட்டது. சட்டசபையை முடக்கி ஆகிவிட்டது..ஆளுநர் மாளிகையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அனுமதி இல்லை….வேறு வழியே இல்லாத நிலையில் ”டெல்லி சலோ” என அறிவித்துவிட்டு தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 161 பேரை விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அழைத்து சென்று ஜனாதிபதி முன்பு நிறுத்திவிட்டார் என்.டி.ஆர். ஒட்டுமொத்த இந்தியாவும் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தது…..எமர்ஜென்ஸி விவகாரத்தால் சரிந்திருந்த தன் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்கொண்டிருந்த இந்திரா இந்த நாடகத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை சறுக்கினார் என்பதை பாடிகாட் முனீஸ்வரனின் மீது சத்தியமிட்டு சொல்லலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை, இருதய சிகிச்சை செய்து திரும்பியிருந்த அந்த நிலையில் தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒருவரை அங்கு அமர்த்தி அவருக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க ஒரு மாத காலம் அவகாசத்தையும் கொடுத்து ஓட்டு போட்ட அத்தனை மக்களையும் ஒட்டு மொத்தமாக கோமாளியாக்கினார்கள் அப்போதைய ஆளுநர் இராம்லால், பாஸ்கர் ராவ் மற்றும் இந்திரா காங்கிரஸ் கட்சியினர். அதே கால அவகாசம் முதல்வராக இருந்த என்.டி.ஆருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.

வெறும் அறுபது எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை நம்பி புரட்சியில் இறங்கிய பாஸ்கர் ராவ், ஒரு மாத கால அவகாசத்தை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவதில் செலவிட்டு கொண்டிருக்க, காவி உடையிலிருந்து கறுப்பு உடைக்கு மாறியிருந்த என்.டி.ஆர். “தர்ம யுத்தத்திற்கு” செல்ல தயாராகி தனது பழைய செவர்லேட்டை கேரேஜ்லிருந்து தூசி தட்டி வெளியே எடுத்துவிட்டார். சைதன்ய ரதம் மீண்டும் ஒரு முறை மக்களை சந்திப்பதற்காக பஞ்சரா ஹில்ஸ்லிருந்து புறப்பட்டுவிட்டது……..இம்முறை ஒட்டு கேட்டு அல்ல….நியாயம் கேட்டு..தனக்கிழைக்கப்பட்டுள்ள துரோகத்திற்கு நீதி கேட்டு மக்களிடம் சென்றார் என்.டி.ஆர்….சிகிச்சையாலும் இழைக்கப்பட்ட அநீதியாலும் நொடிந்து போயிருந்த தங்கள் தலைவனின் அந்த கோலத்தை பார்த்த தெலுங்கு தேச தொண்டர்களின் கையில் யார் சிக்கி இருந்தாலும் கிழித்து எடுத்திருப்பார்கள் அவ்வளவு ஆக்ரோஷம் ஒவ்வொருவரின் முகத்திலும்…..மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் ஒருமுறை தனக்கு சாதகமாக கன்சாலிடேட் செய்துகொண்டார் இந்த ராஜரிஷி. ஆந்திர மக்களின் கோபத்தை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த டெல்லி, தங்கள் சாகச லீலைகள் எடுபடாமல் போவதை கண்டதும் சுதாரித்துக்கொண்டது. தங்களின் தலையை தற்காத்துக்கொள்ள ஆந்திர ஆளுநரை பலியிடவும், பாஸ்கர் ராவை கைகழுவி விடவும் தயாராகிவிட்டது நார்த் பிளாக்.,…இராம்லாலுக்கு கல்தா லெட்டரை அனுப்பிவிட்டு, சங்கர் தயாள் சர்மாவை பெட்டி படுக்கையோடு இந்தியன் ஏர்லைன்ஸில் ஏற்றி ஐதராபாத் ராஜ்பவனுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். கூடவே ஒரு செய்தியையும் அவர் காதில் ஒதிவிட்டிருந்தார்கள்….சத்தம் போடாமல் என்.டி.ஆரையே மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்திவிடவேண்டும் என்று.

(தொடரும்)

Sunday, October 11, 2009

கேட்பது கிடைப்பதில்லை - கேட்காதது கிடைத்துவிடுகிறது

தத்துவம், நிஜம் எப்படி வேனும்னாலும் எடுத்துக்குங்க அவங்க அவங்க வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏத்த மாதிரி….மேலோட்டமாக பார்க்கும் போது இயல்பாய் நிகழ்வது மாதிரி தோன்றினாலும் அம்மா மண்டபத்திற்கு அருகில் முறுக்கு சுடும் ஆயாவில் தொடங்கி அமெரிக்க அதிபர் வரைக்கும் எல்லோருக்குமே இதுதான் இன்றைய நிலை.. ஒருவாரம் முன்பாகதான் இருந்த வேலையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு ஷாட் ட்ரிப் கோப்பன்ஹேகன் வரைக்கும் போய் பிரமாதமான உரையெல்லாம் கொடுத்து ஒலிம்பிக் போட்டியை தன்னோட ஊருக்கு கொண்டுவர பகீரத முயற்சி செய்து பார்த்துவிட்டு கடைசியில் வெறும் கையுடன் திரும்பினார் ஒபாமா. அமெரிக்கர்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்களை தனது வசீகர பேச்சால் கவர்ந்திழுத்தவர் ஒலிம்பிக் கமிட்டியை கன்வின்ஸ் செய்ய முடியாமல் திரும்பியது சிகாகோவாசிகளுக்கு கொஞ்சம் ஏமாற்றமான நிகழ்வாகவே அமைந்து போனது.

ஒலிம்பிக் போட்டியை கொண்டு வருவதற்காக அதிபரே களத்தில் இறங்கியதெல்லாம் கொஞ்சம் ஒவர்பா என மீடியாக்கள் விவகாரத்தை கையில் எடுக்க…..வழக்கம்போல நேரிடையாக விளக்கம் அளித்து சூட்டை தணித்தார் ஒபாமா. கேட்டது கிடைக்காமல் போனதில் இருந்த வருத்தம் தொனித்தது அந்த உரையில்….இருந்தாலும் மூவ்-ஆன் என சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார் மனிதர். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் அதிபர் ஏன் நேரிடையாக களத்தில் இறங்கினார் என கூச்சலிடும் அதே மீடியாக்கள் அவர் போகமல் இருந்திருந்தால் அவர் ஏன் செல்லவில்லை என கேட்டிருப்பார்கள்…..எப்போதுமே இரண்டு வகையான கேள்விகளை தயார் செய்து வைத்திருப்பார்கள் போல தெரிகிறது..

சரி மேட்டருக்கு போவோம்…(இரண்டாம் தேதி) தான் கேட்டும் கிடைக்காமல் போனதில் எழுந்த ஏமாற்றத்தில் இருந்தவருக்கு சரியாக ஏழு நாட்களுக்குள் அதைவிட மிகப்பெரிய பரிசு அவர் கேட்காமலேயே கொடுக்கப்பட்டுவிட்டது. ஒபாமாவே எதிர்பார்த்திராத இன்ப அதிர்ச்சி அந்த அமைதிக்கான நோபெல் பரிசு பற்றிய அறிவிப்பு. கோப்பன்ஹேகன் ஏற்படுத்திய வலிக்கு ஒஸ்லோ மருந்திட்டுவிட்டது.

ஒலிம்பிக் போட்டி விவாதங்கள் போன்ற சிறிய மீன்களை வைத்தே அமோகமாக கல்லா கட்டிய மீடியாக்களுக்கு அமைதிக்கான நோபெல் பரிசு பற்றிய அறிவிப்பு பெரிய சுறா மீன். விடுவார்களா காலரை தூக்கிவிட்டுக்கொண்டு கேமரா அறையை அமளிதுமளிபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு வெளியான அடுத்த நொடியிலிருந்து தாறுமாறாக ஆள் ஆளாக்கு ஒரு கருத்தை சொல்லி அரங்கங்களை சூடேற்றிக் கொண்டிருக்கிறார்கள். விவாதத்தின் மையப்பொருள் வேறு யாருமல்ல..சாட்சாத் கமாண்டர்-இன்-சீஃப் ஒபாமாவேதான். இரண்டு வாரங்களாக மீடியாக்களுக்கு ஆக்ஸிஜன் இவர்தான்.

பரிசு கொடுக்கப்பட்டதிற்கான காரணத்தை நோபெல் கமிட்டி ஸ்பீக்கர் வைக்காமலேயே சத்தமாக சொல்லிவிட்ட பின்னும் மீடியாக்கள் விடுவதாக இல்லை. இண்டர்நேஷனல் மீடியாக்கள் தங்கள் சொந்த காரணங்களை / அனுமானங்களை தொடர்ந்து வெளியிட்டு தெளிய வைத்து தெளிய வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மூரில் புவனேஸ்வரி புண்ணியத்தில் இந்த செய்தி கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. நோபெல் செய்தியை விட அந்த மேட்டர் முக்கியம் இல்லையென்றால் சர்க்குலேஷன் படுத்துவிடும்….அவரவர் கவலை அவர் அவர்களுக்கு. இந்த களேபரங்களுக்கிடையில் விருதை ஏற்றுக்கொண்ட ஒபாமா “அமைதியாக” இது தனது சாதனைகளுக்கானது அல்ல ஆனால் இனிமேல் செய்ய வேண்டிய பணிகளுக்கானது, இதை மக்களோடு பகிர்ந்து கொள்வதாக சொல்லிவிட்டு அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார்.

இந்த பரிசு அறிவித்த நாளிலிருந்து இன்று வரை நிகழ்ந்த விவாதங்களில் ஆள் ஆளுக்கு ஒரு பெயரை குறிப்பிட்டு ஏன் அவருக்கு கொடுக்கவில்லை ஏன் இவருக்கு கொடுக்கவில்லை என குடைந்துகொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் இந்த விருதிற்கான தகுதி யாருக்கு இருக்கிறது யாருக்கு இல்லை என ஆராய்ச்சி எல்லாம் செய்ய தொடங்கிவிட்டார்கள். இதற்கு முன்னரும் இதே பரிசு பலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அப்போதெல்லாம் யாரும் இவ்வளவு விவாதங்களில் இறங்கியதாக தெரியவில்லை. ஒருவேளை இந்த வருடமும் இந்த விருது ஒபாமாவிற்கு வழங்கப்படாமல் வேறு யாருக்காவது வழங்கப்பட்டிருந்தால் இத்தனை விவாதங்கள் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. நம்மூரின் “நமக்கு நாமே” விருதுகளில் தொடங்கி நோபெல் விருது வரை ஒன்றையும் விடாமல் துரத்தி பிடித்து தர்க்கம் செய்ய மக்கள் கூட்டம் எப்போதுமே தயார் நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. குறைந்த வயதில் மிகப்பெரிய சிகரங்களை தொட்டுவிடுபவர்கள் நிறைய விலையை கொடுத்தே ஆகவேண்டும் போல தெரிகிறது. சச்சின், ஏ.ஆர். ரகுமான் தொடங்கி ஒபாமா வரை நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும் அதை உறுதி செய்தபடியே நகர்ந்து கொண்டிருக்கின்றன.