அரசியலில்
நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதை சில கட்சிகள் மேடைகளில் முழங்கி வந்தாலும் அதை அப்படியே இன்றுவரை பின்பற்றி நிறைவேற்றி வருவதில் பா.ம.க.தான் மேன் ஆப் த மேட்ச். ஒரு படத்தில் விவேக் சொல்வது போல லெஃப்டில் இன்டிக்கேட்டர் போட்டு, ரைட்டில் திரும்புவதை அரசியலில் அப்படியே செய்து காட்டி எல்லோரையும் மீண்டும் மீண்டும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று வரை ஆளும் கட்சியின் ஊழலை எதிர்ப்பதாக சொன்னவர்கள் இன்று அதே கட்சியுடன் கூட்டணி
அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
திராவிட
கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன போன்ற புளித்துப்போன பழைய சமாச்சாரத்தை தேர்தல் நெருங்குவதற்கு மூன்று மாதம் வரை கூவிவிட்டு பின்னர் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் தலைமையின் கீழ் அமையும் மெகா(!) கூட்டணியில் சேர்ந்துவிடுவது இம்மாதிரியான கட்சிகளின் தலைமைக்கு கை வந்தக் கலை. கேட்டால் தனியாக நின்றால் மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுவது இல்லை, எங்களால் வெல்ல முடியவில்லை என விளக்கம் தருகிறார்கள்.
கிரவுண்ட்
ரியாலிட்டி உங்களுக்கே தெரிகிறது இருந்தாலும் விமர்சனம் என்ற பெயரில் ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு மூன்று மாதம் முன் வரை எதையாவது சொல்லி மக்களையும் உங்கள் கட்சியின் கடைக்கோடி தொண்டனையும் ஏமாற்றுகிறீர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தலுக்கு தேர்தல் மரம் விட்டு மரம் தாவும் குரங்கைபோல் கட்சிகள் கூட்டணிக்கு தாவுவதற்கு அச்சாரம் போட்ட கட்சிகளில் பா.ம.க-வுக்கு தனியிடம் உண்டு என்பதில் யாருக்கும் மாற்று கருத்தே இருக்க முடியாது.
டாக்டருக்கு
படித்துவிட்டு
ஜாதி அடிப்படையில் கட்சி நடத்தினால் மக்களுக்கு உங்கள் மீது எப்படி நம்பிக்கை வரும். ஓட்டுப் போடும் மக்களை விடுங்கள், நோயாளியாக உள்ளவர்களுக்கு உங்களிடம் வந்து வைத்தியம் பார்த்துக் கொள்ள எப்படி நம்பிக்கை வரும். போதாத குறைக்கு வாரிசு அரசியலை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்காக தங்கள் கட்சியின் வாரிசுகளையே பேச்சுவார்த்தைக்கு அனுப்புவது. இதையெல்லாம் செய்துவிட்டு மக்கள் தங்களுக்கு
ஓட்டுப்போட வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்.
சென்ற
தேர்தலின்போது
திரு. அன்புமணி அவர்கள் மாற்று அரசியலை விரும்புபவர்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையை எழுப்பினார். அது ஓட்டாக மாறாமல் இருந்திருக்கலாம் ஆனால் முதல் முயற்சியிலேயே எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதற்காக அந்தர்பல்டி அடிப்பது திரும்பவும் பேக் டூ ஸ்கொயர் ஸ்டேடஸ்தான். கடந்த தேர்தலின் போது நடத்திய மாறுபட்ட பிரச்சாரத்தை ஒன்று தேர்தலுக்கு வெகு காலத்திற்கு முன்பாக தொடங்கி இருக்கவேண்டும் அல்லது அதே பிரச்சாரத்தை கடந்த தேர்தலுக்கு பிறகாவது தொடர்ந்து முன்னெடுத்து சென்றிருந்தால் மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும். வெறும் தேர்தலுக்காக தொண்ணூறு நாள் பிரச்சாரம் செய்துவிட்டு மக்கள் தங்களுக்கு ஓட்டளிக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய பிழை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே உக்கிரகதியில் பிரச்சாரம் செய்துவிட்டு முடிந்தவுடன் ஹைஃபர்னேட் மோடிற்கு சென்றுவிடுவது பரீட்சைக்கு முந்தின நாள் இரவு புத்தகத்தை திறந்து பார்க்கும் நிகழ்விற்கு சமமானது. அது ஒருவிதமான சோம்பல்தனம் கலந்த ஓவர் கான்பிடன்ஸினால் வரும் நிலை. ஒரு சில சமயம் மட்டுமே கைகொடுக்கும். இன்றைய காலகட்ட தேர்தல் பிரசாரத்திற்கு
எல்லாம் இந்த அப்ரோச் ஒத்துவராது.
இறுதியாக
இந்த திராவிட கட்சிகளால் தான் தமிழகம் உருப்படவில்லை என சில வட இந்திய அரசியல்வாதிகளும், டெல்லியில் ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு உளறிகொண்டிருக்கும் மீடியாக்காரர்களையும் அப்படியே காப்பி அடிக்காமல் சுயமாக சிந்தித்து பேசுங்கள். 1967-க்கு பிறகும் சரி அதற்கு முன்பும் சரி தமிழகம் தொழில் துறையிலும், முன்னேற்றத்திலும் சராசரியாக முதல் நான்கு இடங்களுக்குள்தான் இருந்து வந்திருக்கிறது. எந்த கட்சி ஆண்டாலும் முன்னேற்றம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது மக்களும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு மாறாக இரு பெரும் தேசிய கட்சிகளின் ஆளுகையின் கீழ் மாறி மாறி சிக்கிக் கொண்டிருக்கும் சில மாநிலங்கள் எல்லா திறமையும் தகுதியும் இருந்தும் இன்னமும் முன்னேற்றத்தை அடைய திணறிக் கொண்டிருக்கின்றன என்பது தான் கசப்பான உண்மை.